privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்

ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்

-

வீரப்பன் இராஜா சென்னை நகரின் பகுதியொன்றில் கடந்த நான்கு ஆண்டுகளாக சலவைத் தொழில் செய்து வருகிறார். மனைவி மற்றும் இருக் குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்.

அன்றாடம் 50 முதல் 100 அல்லது 150 துணிகள் வரை சலவை செய்யும் இராஜாவிற்கு உதவியாக அவரது மனைவி துணிகளை மூட்டைக் கட்டி எடுத்து வருவது மற்றும் சலவை செய்த துணிகளை வீடுகளில் ஒப்படைப்பது போன்ற வேலைகளை செய்கிறார். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இராஜாவிற்கு அன்றாடம் 300 முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும்.

ஊரில் சொந்தமாக வீடு கட்டியதன் பின்னணியை விளக்கும் போது அவரது கண்கள் கலங்குகின்றன. அவரைப் பொறுத்த வரை அது ஒரு மலரும் நினைவல்ல, கசக்கும் நினைவு! ஏழ்மையான பெற்றோர்கள் சொந்த ஊரான தேவக்கோட்டையில் 2 ஏக்கரில் “வானம் பார்த்த”  விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்பச் சூழல் காரணமாக  9 வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இராஜா சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் செல்ல அவரது குடும்பம் முடிவெடுக்கிறது. ஏற்கனவே அவரது அக்காவின் கணவர் அங்கே இருப்பதால் இவர் அங்கே போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குடும்பத்தினர் கருதினார்கள்.

1995-ம் ஆண்டில் ஒரு ஏஜென்ட் மூலம்  1.85  லட்சம் ரூபாய் செலவு செய்து சிங்கப்பூர் சென்றார். அங்கே கட்டிடம் கட்டுவது, ரோடு போடுவது ஆகிய வேலைகள் செய்து  மாதம் சம்பளமாக 250 வெள்ளியைப் பெற்று வந்தார். இருந்த போதிலும் தனது சொந்தத் தேவைகளை பூர்த்தி செய்து வீட்டிற்கும் பணம் அனுப்புவது சிரமமாக இருந்ததால் அதிகப்படியான நேரம் வேலைப் பார்த்து  அந்த வருமானத்தையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

‘பையன் சிங்கப்பூரில் வேலை செய்கிறான். எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் அங்கே வேலை செய்வான். பிறகு திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல வீடு வேண்டும்’ என்றெண்ணிய அவரது பெற்றோர்கள் சொந்தமாக ஒரு நல்ல வீட்டை கட்ட ஏற்பாடு செய்தார்கள். இதற்க்கு மகன் இராஜா அனுப்பிய 1 லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொண்டார்கள்.

அதே நேரத்தில் சிங்கப்பூரில் முதலிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த இராஜா வீடு கட்டி முடிக்க இன்னும் அதிகப்படியான பணம் தேவைப்படுவதை உணர்ந்து வேறொரு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். ஆனால் அவரது கடவுச் சீட்டு பழைய ஒப்பந்ததரரிடமே இன்னும் இருக்கிறது. ஊருக்கு செல்ல வேண்டுமானால் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வேறு ஒப்பந்ததாரர்களிடம் வேலைக்கு செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் அவர்களிடம் சொல்லாமல் வேறொரு ஒப்பந்ததாரரிடம் வேலைக்கு சேர்ந்தார்.

வேலை அதே அளவிற்கு கடுமையாக தான் இருந்தது. ஆனால் சம்பளம் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தது. வீட்டிற்கும் கொஞ்சம் அதிகப்படியாக அனுப்ப முடிந்தது. ஆயினும் அது அவர்களது பெற்றோர் ஆசைப்பட்ட அந்த ‘நல்ல’ வீட்டைக்  கட்டி முடிக்க போதுமானதாக இல்லை. இப்படியே இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. இதனிடையில் ஒரு நாள் கடவுச் சீட்டு இல்லாததால் சிங்கப்பூர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

குடும்பச் சூழல் காரணம் என்றாலும் சொந்த நாட்டை விட்டு சொந்த பந்தங்களை விட்டு சிங்கப்பூரில் சிறையில் இருப்பது அவரது மனதை சுக்கு நூறாக்கியது.

பின்னர் காவல் துறை விசாரணையில் அவரது கடவுச் சீட்டு பழைய ஒப்பந்ததாரரிடம் இருப்பதை அறிந்து மீண்டும் அவர் மீண்டும் இந்தியா திரும்ப தேவையான சான்றிதழ்களை ஏற்பாடு செய்து கொடுத்து போலீசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.

சிங்கை தொழிலாளர்கள்
சிங்கப்பூர் வந்தாரை நோகாமால் வாழ வைக்காது.

இது ஏதோ தனக்கு மட்டும் நேர்ந்த அனுபவம் அல்ல என்றும் பெரும்பான்மையான ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை இதுதான் என்றும் ஏதாவது ஒரு கட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்றும் கூறினார். சொந்த நாட்டை விட்டு குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் இப்படியான பிரச்சினைகளை சந்திக்கும் தொழிலாளர்கள் இதை தம் வீட்டிற்கு கூட தெரிவிப்பதில்லை.

தமது பெற்றோர் தான் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகத்தான் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்கள். தான் ஏஜென்டிடம் கொடுத்த பணத்தை கூட சம்பாதிக்க முடியாத நிலை தான் அவருக்கு வாய்த்திருந்தது. சிங்கப்பூர் வந்தாரை நோகாமால் வாழ வைக்காது.

அவரது அனுபவத்தின் படி நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் அவரைப் போன்ற உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.

ஒப்பந்தத் தொழிலாளிகளைப் பொறுத்த மட்டில் சிங்கப்பூரோ இந்தியாவோ, கிடைக்கும் கூலியில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறுகிறார். இன்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் அவர், குடும்பத்தை சொந்தபந்தத்தை இழந்து அங்கே சிறை செல்வதை விட இங்கேயே பிழைக்க வழி தேடலாம் என்று அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.

இறுதியில் ஊரில் அவரது சொந்த வீடு என்பது சிங்கப்பூர் காசின்றி கடன் பெற்று முடிந்திருக்கிறது. அவலம், நெருக்கடி, சிறை இன்ன பிற கசப்புக்களே சிங்கப்பூர் செல்லும் பெரும்பான்மை தொழிலாளிகளின் அனுபவம் என்றாலும் அது வெளியே எதிர்மறையாக மாறி பொய் வேடம் போட்டிருப்பதற்கு காரணம் என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க