privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

-

teaநீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.

வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.

எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்!   பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.

ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது.  கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.

அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு.  நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.

Cycle tea 2கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார்.  ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.

அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.

இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன்.  கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.

பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.

இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.

tea boyபல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.

ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.

“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.

அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.

ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!

– சாக்ரடீஸ்

  1. அருமை. ஒரு சிறுகதை படிட்த உணர்வு. சக தொழிலாளியை நேசிக்க தூண்டும் பதிவு.

  2. அது தான் இப்போ trending.
    பிரபலங்களின் பொன்மொழிகளை பேஸ்புக்கில் like,share பண்ணுவது somehow give them a feeling of satisfaction of being contributor of something good for the society.

    வெள்ளைக்காரன் எங்கு மேய்த்து கொண்டு போக விரும்புகிறானோ அங்கு நாமாகவே இப்போ செல்ல தொடங்கியாச்சு. எவ்வளவு நல்ல செல்ல ஆடுகள். can’t beat.

  3. // அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.//
    ஒருநாடகம் எல்லொரும்.
    ண்ம் மக்கள் அப்படித்தான்.

  4. Sad Indeed. He may have been tricked by LIC to get endowment policy and his family will get very little amount to move on with their life without bread winner. Did he have a policy provided by Bank account enrollment scheme?

  5. Like Ganapathi,we have Kalimuthu serving tea to our company staff for more than 30 years.Our company management used to give reasonable price for his tea.Kali is more than a tea supplier to our company.He is regarded as a fellow worker by our colleagues as well as our management.Festivals will not be celebrated without Kali.Unlike Ganapathi,Kali is not a young
    man.He is about 55 and has two sons and one daughter.He got his elder son and daughter married recently.He is from a village near Karaikudi and has small piece of agricultural lands there.He is a lively person who provides lots of local news to our colleagues.Whenever he goes to his native village,we used to miss his tea.We could not find alternative supplier even during such brief absence.Our day in office is not complete without Kali”s tea.

  6. ஒரு புகைப்படத்திற்கு முயற்சி செய்திருக்கலாம்…. செய்யலாம்… செய்யவும்…தலைவர்களின் வாழ்வி்ல் மட்டுமல்ல எளிய மக்களின் வாழ்க்கையிலும வழி, வலி, வரலாறு இருக்கும். பலருக்கு கவனிக்க ஆர்வம் இருப்பதி்ல்லை. காரணம் நாடறிந்தவர்களை புகழ்ந்தால்தான், பேசினால்தான் நாலு பேர் நம்மையும் கவனிப்பார்கள் என்பதை தெரி்ந்து வைத்திருப்பதுதான்.

  7. உழைக்கும் மக்கள் மீது மதிப்பு,மரியாதை,அன்பு,ஆதங்கம்,அரவணைப்பு போன்றவை இருக்கிறவர்களுக்குத்தான் கணபதிகளின் இறப்பு வருத்தத்தை தரும். வடுவாகவும் மாறும்.மனம் நெகிழும் பதிவு.பலருக்கு இருக்கும் இது போன்ற அனுபவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

  8. நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு. இதபோன்ற எண்ணற்ற கணபதிகள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். நம்முடைய அவசர வேலைகளை சற்று ஒதுக்கிவைத்து விட்டு ஊன்றிக் கவனித்தால் அவர்களின் சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம். குடியரசுத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டவுடன் நிருபர்களிடம், எது நடந்ததோ…….Blah…Blah…. என்ற தலைவிதித் தத்துவத்தை உதிர்த்ததால்தான் அவர் தற்போதைய மத்திய அரசால் கொண்டாடப்படுகிறார். இதுபோன்ற கைக்கடக்கமான சிறுபான்மையினரை கொண்டாடுவதன் பின் உள்ள Carrot and Stick பாலிசியை அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். Mass hysteria தமிழகத்திற்கு ஒன்றும் புதிய விஷயமல்ல.

Leave a Reply to Murthy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க