privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு

ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு

-

kamas-vectra-posterசூர் கமாஸ் மோட்டார்ஸ் என்ற கனரக ஆலை கடந்த 1-ம் தேதி அன்று காலை முதல் புதுவிதமான முறையில் கதவடைப்பு செய்துள்ளது. இவ்வாலையில் நிரந்தரத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் 47 தொழிலாளர்களையும் ஆட்குறைப்பு செய்துள்ளதாக தன்னிச்சையாக சட்டவிரோதமாக அறிவித்து, ஆலையை மூடியுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை என்பது கமாஸ் ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. ஒசூரில் உள்ள பிற ஆலைகளுக்கு புதிய வகையில் சட்டவிரோதமாக தன்னிச்சையாக செயல்படுவதற்கு கமாஸ் ஆலையின் இந்த அடக்குமுறை என்பது முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கமாஸ் ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்றால், ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில தொழிலாளர்கள் அப்பாவித்தனமாக பேசினர். உண்மை நிலைமை என்ன? தனியார்மயத்தை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது கார்ப்பரேட் அடியாளான மோடி அரசு. ஆகையால், அரசே ஏற்று நடத்து என்ற கோரிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது.

கமாஸ் நிர்வாகம் படுகிரிமினலாக நடந்துள்ளது. இதனைப் பார்க்கும் யாரும் கமாஸின் கயவாளித்தனத்தை உணரமுடியும். அதனால், நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுக்கும் என்றும் சிலர் பேசுகின்றனர்.

இதேபோன்று நியாயமான கோரிக்கைதான், நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கை. உயர்நீதிமன்றமோ, நெய்வேலி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்டவிரோதம் என்கிறது.

மாருதி தொழிலாளர்களின் கோரிக்கையும் இதே போன்று நியாயமானதுதான். ஆனால், நீதிமன்றம் என்ன சொல்கிறது, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாருதி சங்க நிர்வாகிகளை பிணையில் விட மறுக்கிறது. அதாவது, விசாரிக்காமலே தண்டனை வழங்குகிறது. இது என்ன வகை நீதி?

கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் ஒரு பகுதியாக உள்ள நீதிமன்றத்தின் சந்துகளில் இருந்து என்றைக்கோ ஒரு நாள் தப்பிப் பிழைத்து வரும் என்ற நம்பிக்கையில் நீதிக்காக அதன் வாயிலில் பிச்சை எடுப்பதா? அல்லது தொழிலாளர் வர்க்கமே நீதியை நிலை நாட்டுவதா? இதில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த அரசு கூறி வந்த எல்லா தொழிற்சங்க உரிமைகளையும் சட்டபூர்வமாக பறித்துவிட்டது. மிச்சமிருக்கும் உரிமைகளை அதிகார வர்க்கம் அமுல்படுத்தாத வகையில் அதன் கட்டமைப்பு சீரழிந்துவிட்டது. இந்த உண்மையின் தெளிவான வெளிப்பாடுதான், கமாஸ் நிர்வாகத்திற்கு எதிராக, அதன் சட்டவிரோத, கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் போடப்பட்ட 23-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திலும், தொழிலாளர் துறையிலும் தூங்குகின்றன; கமாஸ் ஆலையில் அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களும் ஆட்குறைப்பு (!) செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தொழிலாளர் வர்க்கத்தைச் சூழ்ந்துள்ள கார்ப்பரேட் கார்மேகங்களும், பிழைப்புவாத தொழிற்சங்க போதையும் தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையை உணர்த்தாமல் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் வாயிலில் பிச்சை எடுப்பதை மட்டுமே தீர்வாக முன்வைக்கின்றன.

தற்போது உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் சர்வாதிகார ஆட்சியில், தொழிலாளர்களின் குறைந்த பட்ச உரிமைகள் எல்லாம் மோடி அரசால் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை ஒரு ஆலையின் வரம்பிற்குள், அந்த ஆலை நிர்வாகத்திடம் போராடி உரிமைகள் பெறுவதற்கான வரம்புகள் குறைந்துவிட்டன.

தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் என்ற வரம்பைத் தாண்டி இப்போராட்டம் போக வேண்டியதை அத்தொழிலாளர்களும் உணர்ந்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள், குடும்பத்தினர், அருகில் உள்ள கிராம மக்கள், நகர மக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி, அப்பகுதி முழுவதும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலமே இந்த அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உரிமைகளை தக்க வைக்க முடியும்.

இதனை தனது சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளது கமாஸ் தொழிற்சங்கம். இங்கு சங்கம் கட்டப்பட்ட 5 ஆண்டுகளில் இவ்வாலை தொழிலாளர்கள் சில வெற்றிகளைப் பெற்று, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு சில அடி கொடுத்துள்ளனர் என்றால் புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு. தலைமையில் ஒசூர் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றதால்தான்! தற்போது கமாஸ் நிர்வாகம் தொடுத்துள்ள தாக்குதலையும் இந்த வழிமுறையில்தான் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

“தொழிலாளர்களுடைய போராட்டங்களது மெய்யான பலன் அதன் உடனடி விளைவில் அல்ல, தொழிலாளர்களது இடையறாது விரிவடையும் ஒற்றுமையில் காணக்கிடக்கிறது” என்று பேராசான் காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிடுவது போல, தொழிலாளர்கள் தங்கள் மீது விழும் ஒவ்வொரு அடக்குமுறையிலிருந்தும், முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் எந்த அளவிற்கு தொழிலாளர்களின் ஒற்றுமையை வளர்த்தெடுத்துள்ளோம், விரிவுபடுத்தியுள்ளோம், உறுதிப்படுத்தியுள்ளோம் என்பதைக் கொண்டு அளவிட வேண்டும். பொருளாதார ரீதியான இலாப நட்டத்திலிருந்து அல்ல!

தற்போது கமாஸ் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இந்த திசையில் வளர்த்தெடுக்கப்படவேண்டும்! வளர்த்தெடுக்கப்படும்!

இதனை ஒசூர் தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரசுரத்தின் உள்ளடக்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சூர் கமாஸ் மோட்டார்ஸ் ஆலையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆலைமூடல் செய்துள்ளது ஆலை நிர்வாகம். ஒசூர் தொழிற்சங்க வரலாற்றில் இந்த ஆட்குறைப்பு தொழிலாளர் வர்க்கத்தின் மீதான புதுவித அடக்குமுறை!

ஒரு ஆலை ஆட்குறைப்பு செய்ய வேண்டுமென்றால், ஆலை நட்டத்தில் இயங்குவதை நிரூபிக்க வேண்டும்; நட்டத்தை சரி செய்ய பிற முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும்; தொழிலாளர்கள் உபரியாக இருப்பதை அரசுக்கு காட்டியிருக்க வேண்டும்; இதற்கு ஆட்குறைப்புதான் தீர்வு என விளக்கி அரசிடம் அனுமதி பெற வேண்டும்; இந்த அனுமதி கிடைத்த பின்னர்தான் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், கமாஸ் நிர்வாகமோ, இந்த வழிமுறைகள் எவற்றையும் பின்பற்றவில்லை.

அதுமட்டுமல்ல, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னை தொழிலாளர் ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாலை நிர்வாகத்தின் மீது சங்கத்தின் மூலம் தொடுக்கப்பட்ட 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், எந்தவித சட்டபூர்வ வழிமுறைகளையும் பின்பற்றாத ஆலை நிர்வாகம், சட்ட விரோதமாக கடந்த 01-08-2015 அன்று காலை முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் (47 பேர்) அனைவரையும் ஆட்குறைப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசு சொல்லி வருகின்ற சட்டம், நீதி போன்றவற்றையெல்லாம் கழிப்பறை காகிதம் போல தூக்கியெறிந்துவிட்டது.

இதற்கு முன்னர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது கமாஸ் நிர்வாகம். 2010-ம் ஆண்டு பணியிட மாற்றம் என்ற பொய்யான காரணத்தைக் கூறி 32 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. 14 தொழிலாளர்களை வடமாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது. அதன் பின்னர் 2013-ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆலையை மூடி 13 நிரந்தரத் தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தது.

முக்கியமாக, சங்கத் தலைவர், செயலர் உள்ளிட்ட 3 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. நிரந்தர உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்திவருகிறது. இவை மட்டுமின்றி, 2013-ம் ஆண்டு நிறைவடைந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர், இன்றுவரை ஊதிய உயர்வு வழங்க முன்வரவில்லை. 68 தொழிலாளர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய உற்பத்தியை 21 தொழிலாளர்களைக் கொண்டு செய்ய சொல்லி, 5 மடங்கு அதிகமாக உற்பத்திப் பளுவைத் திணிக்க முயல்கிறது. இவையெல்லாம் சட்ட விரோதமானவை என்று தொழிலாளர் துறையில் சங்கத்தின் மூலம் கொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

வெக்ட்ரா, டெட்ரா, கமாஸ் என்று ஆலையின் பெயரை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வந்த நிர்வாகம் தான் கமாஸ் நிர்வாகம். இதன் இந்திய முதலாளியான ரவி ரிஷி ஏற்கனவே இராணுவம் தொடர்பான ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் தயாரிப்பில் ஊழல் செய்தார் என்பதற்காக இந்த அரசால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான வி.கே.சிங்குக்கு 14 முறை இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்தான் இந்த ரவிரிஷி!

இவ்வாலையில் 2010-க்கு முன்னர் பணி புரிந்த 66 தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆலை நிர்வாகத்தின் இலக்கு. பு.ஜ.தொ.மு. தலைமை யில் சங்கம் கட்டியதன் மூலம் இதனை முறியடித்து முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அடி கொடுத்தனர் கமாஸ் தொழிலாளர்கள். ஆனால், அதன் பின்னர், சதித்தனமாகவும் சட்ட விரோதமாகவும் தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.

2010 முதல் 2015 வரையில் ஆலையின் கிரிமினல், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் தொடுத்த அனைத்து வழக்குகளும் தொழிலாளர் துறை அதிகாரிகள் அனைவரின் ஒத்துழைப்பில் இழுத்தடிக்கப்பட்டன. ஆகையால், ரசிய கம்பெனியான காமாஸ் ஆலை நிர்வாகம், ஆட்குறைப்பு என்ற இந்தத் தாக்குதலை தனியாக நின்று தொடுக்கவில்லை. இந்திய முதலாளி ரவிரிஷி கூட்டுடன், தொழிலாளர் துறை, போலீசு, கலெக்டர், நீதிமன்றம் என்ற அரசின் அனைத்து அங்கங்களின் ஒத்துழைப்போடுதான் செய்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலியான மோடி அரசு, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்து, தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றிவருகிறது. அதன் ஒருபகுதிதான் கமாஸ் முதலாளியின் இந்த அடக்குமுறை. நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக நடத்திவரும் போராட்டமும் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரானவையே.

ஆகஸ்டு 15 ‘சுதந்திர தின’த்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் நெய்வேலி தொழிலாளர்கள்! சட்டபூர்வமான இந்த போலி சுதந்திரத்தை புறக்கணிப்பது மட்டுமல்ல, இந்த சட்டத்திற்கு வெளியே தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதுதான் தீர்வு! அந்த வகையில், ஒசூர் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

  • கமாஸ் ஆலையின் ஆட்குறைப்பை முறியடிப்போம்! முதலாளித்துவ பயங்கர வாதத்திற்கு மீண்டும் அடி கொடுப்போம்!
  • எல்லா ஆலைகளிலும் நிரந்தர வேலைக் காகப் போராடுவோம்! ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! தொழிலாளி வர்க்க அதிகாரத்தை நிறுவுவோம்!

கமாஸ் ஆலையில் சட்டவிரோத ஆட்குறைப்பு: தீர்வு எங்கே?
சட்டத்திற்கு உள்ளே அல்ல
, வெளியே!
தொழிலாளர் வர்க்கமே
, ஒன்றிணைந்து போராடுவோம்!

என்ற தலைப்பில் ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு 12-08-2015 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் வகையில் ஒசூர் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கி, பு.ஜ.தொ.மு. தலைமையில் கமாஸ் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்! ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மீண்டும் அடி கொடுக்கப்படும்! அந்த நாளை வேகமாக நெருங்கி கொண்டுவர வைத்த கமாஸ் ஆலை நிர்வாகத்திற்கு நன்றி!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்
பதிவு எண்: 24/KRI
கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம்.
தொடர்புக்கு: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க