privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !

தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !

-

அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

ங்கிலேய காலனியாதிக்கத்தின் போது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்ற தொழிலுறவு சட்டங்களை பரிந்துரை செய்தது, ராயல் கமிசன். இந்த கமிசனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி, இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கு விழிப்புணர்வை ஊட்டினார், பகத்சிங். கேளாத செவிகளை கேட்க வைக்க பகத்சிங் தூக்கு மேடை ஏறினார்.

ndlf-labour-laws-bannerஇது போன்ற எண்ணற்ற தியாகிகளது இரத்தத்தில் எழுதப்பட்டவைதான் தற்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் அனுபவத்து வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்கள். இந்த சட்டங்கள் அனைத்தையும் முதலாளிகளின் நலனுக்காக காவு கொடுத்து வருகிறார், மோடி. இதன் உச்சகட்டம்தான் ஏப்ரல் மாத இறுதியில் மோடி அரசு கொண்டு வந்த தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா, 2015 (Labour Code on Industrial Regulations, 2015).

இந்தியாவில் இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனவாம். இந்த சட்டங்களைப் பார்த்து இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் பயந்து நடுங்குகின்றனராம். எனவே, மேற்படி 44 சட்டங்களையும் கலைத்துப் போட்டு, ஒவ்வொரு சட்டத்திலும் உள்ள சில பிரிவுகளை முதலாளிகளுக்கு சாதகமான முறையில் வடிவமைத்து, ஒரு தொகுப்பாக கொண்டு வந்தால், நாட்டின் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்ந்துவிடும் என்கிறார், மோடி!

தொழில் வளர்ச்சி என்று மன்மோகன் சிங் – சிதம்பரமும் என்ன சொன்னார்களோ அதைத்தான் மோடி சொல்கிறார். ஆனால், வெறித்தனமாக அமுல்படுத்துகிறார். அந்நிய, பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும், இந்தியாவின் தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டிக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கின்ற எல்லா சட்டங்களையும் திருத்த வேண்டும அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும். இங்கு உள்ள இயற்கை வளங்களையும் தொழிலாளார்களையும் சுரண்டி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு வரிச்சலுகையோடு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரசு கட்சி அமல்படுத்தி வந்தது. அப்போதுதான் இந்தியாவில் பல லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பைத் தந்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, இன்சூரன்ஸ், மின் தயாரிப்பு போன்ற தொழில்களில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கபட்டன. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, காண்டிராக்ட் மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அதே நேரத்தில், விவசாயமும், கைத்தொழில்களும் அழிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் நகர்ப் புறங்களை நோக்கி துரத்தப்பட்டனர். இவர்கள் தினக்கூலி வேலையாவது கிடைக்காதா என்று பரிதவித்து வருகின்றனர்.

நிரந்தர வேலை என்பதே இல்லை என்கிற நிலையில் வேலை நிரந்தரம், உழைப்புக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, பாதுகாப்பான வேலை நிலைமை, தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை என்பதெல்லாம் பெயரளவிலும் இருக்கக் கூடாது என்கின்றனர், முதலாளிகள். இதனடிப்படையில், “தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டு” என்று அரசுக்கு உத்தரவு போடுகின்றனர் முதலாளிகள்! இதைத்தான் விழுந்து விழுந்து நிறைவேற்றுகிறார், மோடி!

இதன் முதல் கட்டமாக தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தகராறுகள் சட்டம், தொழிலக நிலையாணைகள் சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளை தொகுப்பாக்கி மேற்படி மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையையும், தொழிற் சங்கத்துக்கு வெளித் தலைவர்களை வைத்துக் கொள்கின்ற உரிமையையும் பறித்துக் கொள்கிறது. முதலாளி நீட்டுகின்ற பேப்பரில் கையெழுத்து போடுபவனை வைத்து ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டி மூலமாகவே தொழிலாளர்களது வாயை அடைக்க வழி செய்கிறது, புதிய சட்டம்.

முதலாளிகள் தங்கள் நிறுவனங்களின் நிலையாணைகளுக்கு சான்று பெறுவதற்கு இனி தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, அதனிடம் அனுமதி பெறவோ தேவையில்லை. தொழிலாளர்களின் ஏஜெண்ட் என்கிற பெயரில் ஒருவரை முதலாளிகளே நியமித்து அவரது ஒப்புதல் பெற்றால் போதுமானது. இதனால், தொழிலாளி அல்லது தொழிற்சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, தொழிலாளியின் ‘விதி’யை முதலாளி தீர்மானிக்க முடியும்.

இனிமேல் ஏழு பேர் சேர்ந்து சங்கத்தை ஆரம்பிக்க முடியாது. குறைந்த பட்சம் 100 பேர் அல்லது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் தொழிலாளர்கள் இருந்தால்தான் சங்கத்தை துவங்க முடியும். அவ்வாறு துவங்கப்படுகின்ற சங்கத்தின் பதிவும் நிரந்தரமானதல்ல. அதை எப்போது வேண்டுமானாலும், எந்த ஒரு அற்ப காரணத்தைக் காட்டியும் ரத்து செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. சங்கத்தின் முகவரியைக் குறிப்பிடும் போது, கதவு எண் தவறுதலாகப் போடப் பட்டாலோ, உறுப்பினர் எண்ணிக்கையில் கூட்டல் கழித்தல் பிழை இருந்தாலோ, ஒரு உறுப்பினரின் இனிஷியல் தவறாக இருந்தாலோ கூட தொழிற்சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்படும். அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகள் உரிய காலத்திற்கு அனுப்பாவிட்டால் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேலை நிறுத்தமும் செய்ய முடியாது. எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசு அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சட்ட விரோதமான வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியே அபராதம் விதிக்கப்படும். தொழிற்சங்கத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். நிதி உதவி அளித்தவர்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்து தண்டனை அளிக்கும்.

வேலை நிறுத்தம் என்கிற போராடும் உரிமைக்கு சமாதி கட்டுகின்ற அரசு, முதலாளிகள் ஆலை மூடல் செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. 100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் தற்போதுள்ள சட்டப்படி அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அந்த எண்ணிக்கையை 300 ஆக உயரித்தியுள்ளது, புதிய சட்டம். தற்போதுள்ள பெரும்பலான ஆலைகளில் 300-க்கும் குறைவான தொழிலாளர்களே இருப்பதால், ஆலைமூடல் என்கிற மிரட்டலை வைத்தே தொழிலாளர்களை அடக்குவது சுலபமாகிவிடும்.

முதலீட்டாளர்களின் நலன் தான் நாட்டின் நலன், முதலாளிகள் எல்லையற்ற இலாபம் சம்பாதிக்க வேண்டும். அவர்களின் முதலீடு நாடு முழுவதும் தங்கு தடையின்றி பாய வேண்டும். இதற்கு தடையாக உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. உண்மையில் சொல்லப்போனால், தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. எத்தனை கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் போ என்றுதான் தொழிலாளர்களை விரட்டுகின்றனர். வேலை நிரந்தரம் கேட்காதே; கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடிப் போ என்று தொழிலாளியை நைச்சியமாக மிரட்டுகிறது, தொழிலாளர் துறை. தொழிலாளர் நீதி மன்றங்களோ வாய்தாக்களைப் போட்டே தொழிலாளியின் ஆயுளைப் பறித்துவிடுகின்றன. ஆனாலும், பெயரளவில் கூட சட்டப் பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கழுத்தைப் பிடிக்கின்றனர், முதலாளிகள்!

“தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்ததே” என்று இந்த அரசிடம் கையேந்தி நிற்க முடியுமா? அப்படித்தான் கையேந்தி நிற்கின்றன, பிற தொழிற்சங்க அமைப்புகள். இதன் பொருட்டு எதிர்வரும் செப்டம்பர் 2-ம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஒன்றையும் அறிவித்துள்ளனர். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி-யும், பா.ஜ.க.வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்காளிகள்! இதுவரை ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைப் பறித்தது. தற்போது மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இரட்டிப்பு வேகத்தில் அதையே செய்து வருகிறது.

காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகள் மட்டும் தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமானதல்ல. அவற்றின் தொழிற்சங்கங்களும்தான். இவர்களுடனான பகை சாதாரண பகை அல்ல, இணக்கம் காணவே முடியாத வர்க்கப் பகை! இதையெல்லாம் மறைத்துவிட்டு தொழிலாளர்களது உரிமைக்காகப் போராடுவதைப் போல நடிக்கின்றனர். “மானோடு சேர்ந்து ஓடுவது, புலியோடு சேர்ந்து வேட்டையாடுவது” என்கிற கபட வேடதாரிகளே பி.எம்.எஸ்.-ம், ஐ.என்.டி.யு.சி.-யும்.

இந்த கபட வேடதாரிகளுக்கு ‘இடதுசாரி’ சங்கங்கள் வால் பிடிக்கின்றன. ‘இடதுசாரி’ தொழிற்சங்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற பொதுத்துறைகளில் தனியார்மயம் புகுத்தப்பட்ட போது, வேலை பாதுகாப்பு இருந்தால் போதும் என்று துரோகம் செய்தார்கள். காண்டிராக்ட், தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்த போது அவர்களது முதுகில் சவாரி செய்து சுகம் தேடிக் கொண்டனர். தற்போது வர்க்கப் பகைவர்களான காங்கிரசு, பி.ஜே.பி. கும்பலுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். துரோகம், கயமை, பித்தலாட்டம், இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ஆகிய அனைத்தும் இங்கே ஒளிந்துள்ளது. துரோகிகளான ஐ.என்.டி.யு.சி.-யையும் பி.எம்.எஸ்.-ஐயும் விரட்டியடித்தாக வேண்டும். சமரசவாதிகளான ‘இடதுசாரி’ சங்கத் தலைமைகளைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

தாங்கள் போட்ட சட்டத்தினை கிஞ்சிற்றும் மதிக்காமல் தொழிலாளர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பே செயல்படும் நிலையில் இனியும் நம் பிரச்சனைகளை இந்த அரசு அதிகாரம் தீர்த்து வைக்கும் என நம்ப முடியுமா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வக்கற்ற நிலையில் உள்ளது, இந்த அரசு கட்டமைப்பு. தானே வகுத்த சட்டங்கள், விதிமுறைகள், நீதி பரிபாலன நடவடிக்கைகள் என அனைத்திலும் தோற்றுப்போய், அதற்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில், ஆளும் அருகதையற்றுப் போய்விட்டது, இந்த அரசமைப்பு!

உரிமை கொடு என போராடிய காலம் போய்விட்டது. நமக்குத் தேவை அதிகாரம். தொழிற்சாலைகளையும், நாட்டையும் நிர்வகிக்கும் அதிகாரம். தொழிலாளர் அதிகாரக் கமிட்டிகளை நாம் உருவாக்குவோம். நம்மை ஒடுக்கும் அரசு அதிகாரத்திற்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் சவால் விடுவோம். தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டங்களை பரவச் செய்வோம். இதன் முன்னோட்டமாக, செப்டம்பர் 2-ல் தொழிலுறவு சட்டத் தொகுப்பினை தீயிட்டுக் கொளுத்துவோம்! தீ பரவட்டும்!!

 

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தொழிலாளர்களே…!

☀ தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!

☀ முதலாளிகளது காலை நக்கிப் பிழைக்கின்ற பி.ஜே.பி. – மோடி கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!

☀ துரோகக் கூட்டணியான பிழைப்புவாத தொழிற்சங்கங்களது தலைமையை விரட்டியடிப்போம்!

☀ செப்.2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!

முதலாளித்துவம் கொல்லும்!                                                                                                     கம்யூனிசமே வெல்லும்!

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!
2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்

ndlf-labour-laws-posterபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள், பதிவு எண்: 24/KRI,
முகவரி: L 416 ASTC பழைய அட்கோ, ஒசூர்.
தொடர்புக்கு: 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க