privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் - செய்தி, படங்கள்

மூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்

-

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்

மூடு டாஸ்மாக்கை! ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள்  இணைந்து திருப்பெரும்புதூரில் 31-08-2015 காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“டாஸ்மாக்கை மூட ஆகஸ்டு 31 கெடு” என மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்திருந்ததால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் சென்னையில் அனுமதி கேட்டபோது கொடுக்கமுடியாது என கூறிய போலிசு, திருவள்ளூர்  மாவட்டம் கும்மிடிபூண்டியில் அனுமதி அளித்தது. பின்னர் அந்தப் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் சத்தீஸ்குமார் என்பவரை நேரில் காவல் நிலையம் அழைத்து  அவரை சூழ்ந்துகொண்ட போலீசார் அவரை கட்டாயப்படுத்தி அனுமதி மறுப்பு கடிதத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு வெளியே விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் அனுமதி கோரி தொடர்ந்து  போராடிய பின்னரே இறுதிநேரத்தில் ஆர்ப்பாட்ட அனுமதியை வழங்கினார்கள். அதிலும் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி என அறிவித்திருந்தது. இப்படி இறுதிவரை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை சீர்குலைக்க முயன்றனர். இதை முறியடித்து திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஏற்கனவே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் நடத்திய போராட்டத்தால் மாதம் முழுக்க தமிழகம் கொந்தளித்திருந்தது. ஆங்காங்கே மாணவர்களை பின்பற்றி கடைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது வேறு அவர்களின் கெடு முடிவடைகிறதே கண்டிப்பாக எந்தக் கடையையாவது அடித்து நொறுக்கி விடுவார்களோ என பீதியடைந்த அரசு, இன்றும் போலிசுக்கு டாஸ்மாக் வாட்ச்மேன் வேலை அளித்திருந்தது. சென்னை முழுக்க அனைத்து டாஸ்மாக் சாராயக்கடை வாசலிலும் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் வருவதற்கு முன்பாகவே வெகு சீக்கிரமாக வந்துவிட்டது போலிசு. அவர்களுடன் பாதுகாப்பிற்காக சிறப்பு அதிரடிப் படையினரை ஒரு வண்டி நிறைய அள்ளிக்கொண்டு வந்து போராட்டச்சூழலை உருவாக்கிக்கொடுத்தது போலிசு.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்
போலிசின் கூட்டமே துவக்கத்தில் அதிமாக காணப்பட்டது

போலிசின் கூட்டமே துவக்கத்தில் அதிமாக காணப்பட்டது. மூலைக்கு மூலை, சந்துக்கு சந்து உளவுப்போலிசு சுற்றிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் வாகனங்களில் வந்தபோது பின்தொடர்ந்து வந்து வழிமறித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். அனைவரையும் அருகிலிருந்த ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கவும் முயன்றுள்ளனர். இது தெரிந்த அங்கு சென்ற பு.மா.இ.மு சென்னை மாநகர செயலர் ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்தும், அனுமதி வாங்கி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல மறுத்தால் இங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்த பின்பே அங்கிருந்து மாணவர்களை விடுவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு  அனுமதியளித்துவிட்டு அதற்கு செல்வோரை அச்சுறுத்தி தடுக்கும் சதியில் ஈடுபட்டனர். ஆனால் இவையனைத்தையும் முறியடிக்கும் வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அணிதிரண்டனர்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு வெள்ளையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனி செயலர் திரு இளஞ்சேகுவேரா, திராவிட கழக மாணவரணி செயலாளர் திரு பிரின்ஸ் என்னாரெசு பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் நகர செயலர் தோழர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தலைமை உரையாற்றிய தோழர் அமிர்தா, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு, “டாஸ்மாக்கிற்கெதிராக போராடிய மாணவர்கள் மக்கள் மீது இந்த அரசு ஒடுக்குமுறையை செலுத்துகிறது. ஆனால் இந்த ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது. நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு பார்ப்பன பாசிசத்திற்கெதிராக போராடவேண்டும்” என பேசினார்.

ஒசூர் அசோக் லேலாண்டின் முறைகேட்டை எதிர்த்த SMP தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உரை

அவரை தொடர்ந்து திரு வெள்ளையன் பேசுகையில், “சாராயத்திற்கெதிரான இந்தப் போராட்டம் நாடு முழுக்க நடைபெற வேண்டும். ஐயா சசிபெருமாளை தமிழக அரசு திட்டமிட்டே படுகொலை செய்தது. ஈழப்போராட்டத்தில் முத்துக்குமார் மரணத்திற்கு பிறகு மாணவர்கள் கொதித்தெழுந்து போராடியது போல, ஐயா சசிபெருமாளின் மரணம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட அலையை உருவாக்கியுள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசு மதுவுக்கெதிராக போராடும் மாணவர்களை, மக்களை மிகக்கொடூரமாக ஒடுக்கி வருகிறது. அதற்கெதிராக போராடும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் தமிழநாடு வணிகர் சங்கங்களின் பேரவை எப்போது துணை நிற்கும்” என பேசினார்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்
தி. க மாணவர் அணி செயலர் திரு. பிரின்ஸ் என்னாரெசு பெரியார்

அவரை தொடர்ந்து பேசிய தி. க மாணவர் அணி செயலர் திரு. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பேசுகையில், “தமிழகத்தில் நடப்பது பாசிச ஆட்சி. சாதாரண கருத்துரிமைக்கு கூட இங்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே இப்போது பாசிச ஆட்சிதான் நடக்கிறது. நேற்றைய தினம் கர்நாடகாவில் முற்போக்கு பேராசிரியர் ஒருவர்
கொல்லப்பட்டுள்ளார். இந்த பாசிசத்தை எதிர்க்க சிவப்பு சட்டையுடன், கருப்பு சட்டையும், நீலச் சட்டையும் இணைந்து போராட வேண்டும். அதற்கு தி.க எப்போதுமே தயாராகவே உள்ளது” என பேசி அமர்ந்தார்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்
வி.சி.க தனிசெயலர் திரு. இளஞ்சேகுவேரா

அதற்கடுத்து கண்டன உரையாற்றிய வி.சி.க தனிசெயலர் திரு. இளஞ்சேகுவேரா பேசுகையில், “தமிழகத்தில் நிலவும் பாசிசத்திற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் பெருகி வரும் சாதி, மத அரசியலை வேருடன் அழிக்க வேண்டும். இதைப் போன்றதொரு கூட்டணி டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டுமல்லாது அனைத்து போராட்டங்களுக்குமாக அமைய வேண்டும். இப்போது புரட்சிகர அமைப்புகளுக்கு வேலை வந்துவிட்டது. அந்த வேலையை மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பு செய்து முடிக்கும், அதற்கு என்றும் வி.சி.க துணை நிற்கும்” என பேசி அமர்ந்தார்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி செயலர் தோழர் சுப்ரமணியன்

அடுத்தபடியாக இரத்தின சுருக்கமாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி செயலர் தோழர் சுப்ரமணியன், “ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது என்ற தலைப்பே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை உணர்த்திவிட்டது. இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒரு கூட்டமிது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போது ஆதரவளிக்கும்” எனக் கூறினார்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்

இறுதியாக பேசிய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், “இன்று தமிழகத்தில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. டாஸ்மாக்கிற்கெதிராக போராடும் மக்கள், மாணவர்களை மட்டுமல்லாது சாதாரண அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்களின் மீது அரசு கடும் ஒடுக்குமுறை செலுத்துகிறது. தேர்தல் பாதையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களை கூட பார்ப்பன பாசிச ஜெயா அரசு மிகக் கடுமையாக ஒடுக்கி வருகிறது. இத்தகைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பார்ப்பன பாசிசத்திற்கெதிராக அணிதிரளவேண்டுமென” என்று மற்ற ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைத்தார்.

மூடு டாஸ்மாக்கை - பூந்தமல்லி ஆர்ப்பாட்டம்இறுதிவரை ஏதேனும் கலவரம் ஏற்படும் என்பதை போலவே பீதியூட்டிக் கொண்டிருந்தது போலிசு. உண்மையில் போலிசு மிகவும் பீதியடைந்திருந்ததால்தான் இப்படி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் இடையே ஜெயாவை போன்று வேடமிட்டுக் கொண்டு சாராயத்தை மாணவர்களுக்கும், மக்களுக்கும் கொடுப்பது போன்றும், அ.தி.மு.க அடிவருடிகள் குனிந்து தரையில் விழுந்து கும்பிடுவது போன்றும், ஜெயாவால் பாதிக்கப்பட்ட தமிழக பெண்கள் தலைவிரி கோலமாக ஜெயாவை தூற்றுவது போலவும்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரால் நடித்து காட்டப்பட்டது. இந்தக் காட்சி விளக்கம் பொது மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றது. சாலையில் போவோர் வருவோரெல்லாம் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதனால் கடுப்பானது அங்கிருந்த அ.தி.மு.க.வினரை விட போலிசுதான். இதனை தடுக்க வழி தெரியாமல் உடனடியாக மேலதிகாரிகளை தொடர்பு கொண்ட போலிசு, அதன் பின்னர் அவர்களுக்குள் ஆலோசித்து ஒரு புது சட்ட நியாயத்தை கண்டறிந்தனர். அனுமதி
ஆர்ப்பாட்டத்திற்குத்தான், நாடகத்திற்கு இல்லை என கண்டறிந்து வந்து தோழர்களை நிறுத்தமாறு மிரட்டினர். ஆனால் அதற்குள்ளாக இந்த காட்சி விளக்கம் அனைவரையும் சென்றடைந்து விட்டது. பின்னர் அதில் நடித்திருந்த தோழர்களை படம் பிடித்து மிரட்டியது போலிசு.

அதேபோல் பள்ளி மாணவர்கள் சிலர் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் சாராய பாட்டிலையும் பிடித்துக் கொண்டு படிக்கவா? குடிக்கவா? என வினவியதைப் போன்ற காட்சியும் மக்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூட்டத்திற்கு முதலில் ஒரு வண்டி நிறைய அதிரடிப்படையினரை வைத்திருந்தனர். கூட்டம் ஆரம்பித்து சிறிது தாமதமாகவே சென்னை புமாஇமு மாணவர்கள் சுமார் 200 பேர் அளவில் படையாக முழக்கமிட்டவாறே திரண்டு வந்து கூட்டத்திற்குள் புகுந்தனர். இதைக் கண்டு பீதியடைந்த போலிசு மேலும் இரு வாகனங்கள் நிறைய அதிரடிப்படையினரை வரவழைத்து ஆளுயர கொம்புகளை தயார் செய்து வைத்துக் கொண்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை திருப்பெரும்புதூர் நகர் மக்கள் ஆர்வமாக கூடி நின்று கவனித்தனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் திரளாக கலந்துகொண்டது அப்பகுதி இளைஞர்களை வெகுவாகவே ஈர்த்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க