privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் - படங்கள்

மூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் – படங்கள்

-

மூடு டாஸ்மாக்கை : ஆர்ப்பாட்டங்கள் – 2

2. மதுரை

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரம் தென் மாவட்டங்களின் சார்பாக மதுரையில் நடைபெற்ற மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்

க்கள் அதிகாரம் தென் மாவட்டங்களின் சார்பாக மதுரையில் நடைபெற்ற மூடு டாஸ்மாக்கை மற்றும் காவல்துறை ஒடுக்கு முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், புதிய தமிழகம், தமிழ்ப்புலிகள் ஆகிய கட்சிகளும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கை திறந்து சாராயத்தை விற்க 12 மணி நேரம் சட்டவிரோதமாக அனுமதி

சுமார் 500 பேர் வரை கூடுகிற கூட்டங்களுக்கு மதுரையில் 3 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஓரளவுக்கு மக்கள் கூடுகிற இடங்களைக் கேட்டபோது அந்த இடங்களைப் போலீஸ் தர மறுத்து விட்டது. காரணம் அந்த இடங்களில் மூன்று சாராயக்கடைகள் இருக்கின்றனவாம். அது குடிமகன்களுக்கு இடையூறாக இருக்குமாம். அதனால் அங்கு அனுமதி இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத அண்ணாநகரில் அனுமதி. ஒலிபெருக்கியில் ஒலி அளவு கூட இவ்வளவு தான் இருக்கவேண்டும் என்ற கண்டிசனுடன்.

முந்தின நாள் இரவு 10 மணிக்குத்தான் அனுமதி கொடுத்தது. அதுவும் 11 முதல் 12.30 மணிவரை ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் அனுமதி. டாஸ்மாக்கை திறந்து சாராயத்தை விற்க 12 மணி நேரம் சட்டவிரோதமாக அனுமதி. குடித்துச் சாக 24 மணிநேரமும் எந்த இடத்திலும் அனுமதி. அதை எதிர்த்தால் ஒன்றரை மணி நேரம் மட்டும் அனுமதி.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்
கடந்த ஒரு வாரமாக மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் வீடுகளுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் உளவுத் துறையினர் சென்று விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்துள்ளனர்

 

பேரணி, ஆர்ப்பாட்டம் தான் எங்களது திட்டம் என்று ஊடகங்களைக் கூட்டித் தெளிவாகச் சொல்லிவிட்ட போதும் வேண்டுமென்றே பீதியூட்டும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது காவல்துறை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலரைக் கைது செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை அணிதிரளவிடாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்மதுரை , ஒத்தக்கடைப் பகுதியில் பட்டறைத் தொழிலாளர்களைத் தூங்கவிடாமல் டார்ச்சர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இராப் பகலாகக் காவல் காத்து மானம் கெட்டது போலீசு. மக்களிடம் நிதி வசூல் செய்யவிடாமல் தடுத்தது.

காலை 9.30 மணியளவில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்த போது 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் திரண்டு இருந்தனர். அக்கம் பக்கத்து மக்களுக்கு ஏன் என்றே புரியவில்லை. பின்னர்தான் மக்களுக்குத் தெரிந்தது சாராயக்கடைகளைக் காப்பாற்ற. அதை எதிர்க்கிறவர்களை மிரட்டத்தான் இந்தப் படை என்று.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்தேனி மாவட்டத்திலிருந்து 3 வேன்களில் சுமார் 100 பேர் வந்தனர். இதை மோப்பம் பிடித்த ”காவள்”துறை, வண்டிகளின் பதிவு எண்களைத் தெரிந்து கொண்டு ஆண்டிபட்டி கணவாய் சோதனைச் சாவடிக்குத் தகவல் கொடுத்து வேன்களை மடக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதைத் தெரிந்து கொண்ட மாவட்டச் செயலாளர் தோழர் மோகன் மாற்று வழியாக வந்து காவல் முகத்தில் கரி பூசினார்.

மூடு டாஸ்மாக்கை! மக்கள் போராட்டங்களை அடக்கு முறையால் தடுக்க முடியாது! பார்ப்பன பாசிஸ்டு ஜெயா அரசின் அவசரநிலை காட்டாட்சியை முறியடிப்போம் என்கிற முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்க தலைமையேற்ற தோழர் வாஞ்சிநாதன் பேசியது:-

“டாஸ்மாக்கை மூடு என்று கோரி போராடுகின்ற மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று காவல்துறை பெண்களை அச்சுறுத்துகிறது . ரேசன் கார்டை கேட்பது, புகைப்படம் எடுப்பது, புகைப்படத்தை வைத்துக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் போய் இவரைத் தெரியுமா? என்று தீவிரவாதிகளை, ரவுடிகளைத் தேடுவது போலத் தேடுவது என்று சட்ட விரோதமாக காவல் துறை அச்சுறுத்துகிறது.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி குன்காவை எதிர்த்து தமிழகத்தை அண்ணா திமுக காலிகள் ரணகளமாக்கினர். இதே காவல் துறை வேடிக்கை பார்த்தது. தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட குண்டர் படை கேவலமாக வெறியாட்டம் போட்டது. அதையும் வேடிக்கை பார்த்தது இந்தக் காவல்துறை.

சாராயக்கடையை எதிர்த்துப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினரைக் காட்டு மிரண்டித்தனமாகத் தாக்கி சிறையில் தள்ளியது போலீசு. தமிழ் நாட்டிலே அறிவிக்கப்படாத அவசர நிலை காட்டாட்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது . உளவுத் துறையின் சொல்படி அமைதி வழியில் போராடுகின்ற தே.மு.தி.க போன்ற கட்சிகளையும் வன்முறையை ஏவிஒடுக்குகிறது அரசு. எனவே டாஸ்மாக்கை எதிர்க்கிற அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் அ.தி.மு.க அரசின் அராஜகத்தை முறியடிக்க முடியும்.”

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மு.திருநாவுக்கரசு

“தமிழகத்தில் அன்றாடம் வெட்டுக்குத்து, கொள்ளை, கொலை, திருட்டு, பாலியல் வல்லுறவு என்று எத்தனையோ குற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய போலீசு அதற்கு மூல காரணமாய் இருக்கிற டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடுகிற சமூகப் போராளிகளை ஒடுக்கத் திரண்டு வந்திருக்கிறது.

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கைது செய்யப்பட்டு 1 மாதமாகப் பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கிறது கோர்ட். ஆனால் ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில் பொது சொத்துக்கு பலகோடி சேதம் விளைவித்த அ.தி.மு.க.வினர் மீது சின்ன நடவடிக்கையாவது உண்டா? டாஸ்மாக்கின் தீமைகளை விளக்கி துண்டு பிரசுரம் தருபவர்களைக் காவல்துறை கைது செய்கிறது.

டாஸ்மாக்கை மூடும் வரை தொடர்ந்து போராடும் உங்களோடு துணை நிற்போம்.”

பேச்சாளர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திமுக மாநில பொதுக்குழு உறப்பினர் வழக்கறிஞர் கருணாநிதி பேசும்போது “சாராயக்கடைக்குக் காவல் நிற்பது காவல்துறைக்கு தலை குனிவுதான். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற உங்களது நியாயமான கோரிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவேறும். தீச்சட்டி, காவடி தூக்க நேரம் ஒதுக்கும் காவல்துறை சாராயத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய குறைந்த நேரம் ஒதுக்குகிறது . அரசுக்கு ஜால்ரா போடுவதை காவல்துறை விட்டுவிடவேண்டும்” என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் நரசிம்மன் பேசியது.

“பெண்கள் தாலி அறுத்தாலும் கவலை இல்லை; வருவாய் வருகிறது என்று டாஸ்மாக்கை அரசு மூட மறுக்கிறது. சசி பெருமாள் சாவுக்கு அரசே காரணம். அவரைக் காப்பாற்ற காவல்துறை, அரசு மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெரும்பான்மை மக்கள் டாஸ்மாக் வேண்டாம் என்றால் மூடிவிட வேண்டியது தானே!

டாஸ்மாக்கை காக்கின்ற அரசை மக்கள் தூக்கி எறிவார்கள். மக்கள் அதிகாரம் முன்கை எடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து போராடும் .”

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சசி குமார்

“அறிஞர் அண்ணா மது விலக்கில் உறுதியாக இருந்தார். தாய்மார்களின் கண்ணீருக்குக் காரணமாகி விடக்கூடாது என்றார். தமிழ் நாடு எழுத்தறிவில் முதலிடத்தில் உள்ளது என்றால் பெருமைப்படலாம். ஆனால் மது விற்பனையில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதா?”

திராவிடர் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் வேங்கை மாறன்

“கூடங்குளம் அணு உலைக்குப்பின் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு போராடுகிறார்கள். அரசு விற்றால் நல்ல சாராயம். மற்றவன் விற்றால் கள்ள சாராயமா? குடிக்கிறவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிற போலீசு இனி குடிக்காதவனை ஏன் குடிக்கவில்லை என்று கேட்பார்கள் போல் தெரிகிறது. போலீஸ் நிலையங்களின் ஒரு ஓரத்தில் சாராயக் கடையையும் வைத்துவிட்டால் வேலை சுலபமாகிவிடும்.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ்

“வள்ளி திருமண நாடகம் நடத்துவதற்கு விடிய விடிய நேரம் ஒதுக்கும் போலீஸ் மக்கள் நலன் காக்கும் போராட்டத்துக்கு நேரம் வரையறுக்கிறது. அதிகாரம் மக்களுக்கு என்று சுபாஷ் சந்திர போஸ் சொன்னார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒரு குடிமகன் கைக்குழந்தையுடன் சாராயக் கடைக்குப் போய் குடித்து விட்டு வீட்டுக்குப் போக வழி தெரியாமல் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் வீட்டைக் கண்டு பிடித்துக் கொடுக்கச் சொல்லிருக்கிறான். போலீஸ் வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டுபோய் விட்டிருக்கிறது .

ஒரு புள்ளி விவரப்படி தமிழ் நாட்டில் மூன்று பேரில் ஒருவன் குடிகாரன். 10 லட்சம் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். ஆனால் கடைகளை மூட அரசு மறுக்கிறது.”

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு குழு அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் அ.சீனிவாசன்

“ஒரு தெருவில் 10 சாராயக்கடை இருந்தால் மக்கள் மக்களாக இருக்க முடியாது. மக்களைக் குடிக்க வைத்துதானா சிம்மாசனத்தில் அமர வேண்டும் . மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு மக்களைக் காக்கும் அருகதை இல்லை.

ஒரு தாய் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறி தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் குழந்தை பசியால் இறந்து விட்டது. அந்தத் தாய் மீது வழக்குப்போடுகிறது காவல் துறை . யார் காரணம்? அரசின் மீது அல்லவா வழக்குப் போடவேண்டும். பள்ளி, கல்லூரி அருகே சாராயக்கடை உள்ளது. மாணவர்கள் குடிக்கிறார்கள். வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பில் உள்ள பெஞ்சுக்களை உடைத்து கடையில் போட்டு காசு வாங்கி குடித்து இருக்கிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் அரசு பள்ளி அருகே சாராயக் கடையைத் திறக்கிறது. ஆசிரியர்கள் குடித்து விட்டுப் பள்ளிக்கு வருகிறார்கள்

குடிக்கக்கூடாது என்று சொல்வது குற்றமா? போராடும் மாணவிகளின் கைகளைப் பிடித்து இழுக்கிறார் ஒரு போலீசு. உங்களுடைய வீட்டுப் பெண்ணை இப்படிச் செய்தால் ஒத்துக்கொள்வீர்களா? உங்கள் வீட்டில் இப்படி நடக்காதா? படித்துமக்களுக்குத் தொண்டு செய்கிறவர்களை உருவாக்காமல் குடித்துக் கும்மாளம் போடும் கூட்டத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் டாஸ்மாக்கை உடனே மூடவில்லை என்றால் குடியிலிருந்து யாரும் தப்ப முடியாது.”

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஏ.கே. ராமசாமி

“மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லி அதை ஏன் விற்கிறாய் ? டாஸ்மாக்கில் வருமானம் கிடைக்கிறது என்கிறது அரசு. குடிப்பவர்கள் யார்?

எல்லா அதிகாரிகளும் குடிக்கிறார்கள். நீதிபதிகளும் குடிக்கிறார்கள், லஞ்சம் வாங்குகிறார்கள், டாஸ்மாக்கில் தஞ்சம் அடைகிறார்கள்.

டாஸ்மாக்கை மூடச் சொல்லத் துப்பில்லாத நீதிமன்றம் ஹெல்மெட்டை போடச் சொல்கிறது. அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டுள்ளது. மது பாட்டிலை வாங்கியதுமே குடித்து விடவேண்டும். உடனே பாருக்குள் போய் விடவேண்டும் . இடுப்பில் வைத்திருந்தால் குற்றம். அப்படியானால் குடித்து சாவதற்கு காரணமான அரசு மீது கொலை வழக்குப் போட வேண்டும் அல்லவா?”

சேவுகராஜா தே.மு.தி.க. வழக்கறிஞர்

“நல்ல விசயங்களைப் போராடிப் பெறுகிற அவல நிலை இங்கே உள்ளது. டாஸ்மாக் வருமானத்தில் மக்களுக்கு இலவசங்கள் தரப்படுவதாகச் சொல்கிறார்கள். அந்தப் பொருட்களை எல்லாம் பயன் படுத்த முடியாமல் குப்பையில் வீசுகிறார்கள் மக்கள். பிச்சைக்காரர்களை ஒழிக்கச் சட்டம் இருக்கிறது. ஆனால் குடிகாரர்களை , சாராயக்கடைளை ஒழிக்கச் சட்டம் இல்லை.”

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்

மூடு டாஸ்மாக்கை இயக்கம் கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. சசி பெருமாள் சாவையெட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் திரண்டு போராடினார்கள். ஒரு மாதமாகப் புழல் சிறையில் சித்திரவதை கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். பெண்கள் சிறைக்குள் புகுந்து சொல்லக் கூசும் வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள் மாணவிகளை.

இந்த அரசுக் கட்டமைப்பு நம்மை ஆளும் அருகதை இழந்து விட்டது. சட்டசபையில் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. எதற்கு சட்டசபை? உடனே அதை மூடு.”

தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நாகை. திருவள்ளுவன்

மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கம் எப்போது வந்ததோ அப்போதே அடக்குமுறை வந்துவிட்டது.

தேர்தல் நேரங்களில் நங்கள் மக்களின் ஊழியர்கள் என்கிறார்கள். ஆனால் மக்களுக்கு அதிகாரம் என்று சொன்னால் அடக்குகிறார்கள். கொலை செய்தவன், கற்பழித்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், சாராயக்கடையை எதிர்த்தவர்கள் சிறையில் உள்ளனர். ஜெயா குற்றவாளி. முதல்வராக இருக்கிறார்.

குடிகாரர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழகம் முதலிடம். காவல்துறை போஸ்டர் கிழிப்பது, சாராயக்கடைக்குக் காவல் இருப்பது போன்ற கேவலம் இங்கே தான் நடைபெறுகிறது. இதைத்தான் வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிறார்கள். ஆனால் தமிழகம் குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.

மக்கள் நலனுக்கு எதிராக இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிதான். ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் போல மக்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று கனவு காண வேண்டாம். டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் தான் கருணாநிதியை மதுவிலக்கைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது, மக்கள் போராட்டம் ஜெயாவையும் மாற்றும்.”

புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். தி.மு.க வழக்கறிஞர் கண்ணன், திராவிடர் கழக மாவட்டச் செயலளர் அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர் ராமலிங்கம் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உளவுத் துறையின் பல பிரிவுகளில் இருந்து பலர் வீடியோ காமிராக்களைத் தூக்கிக்கொண்டு வந்து கல்யாண வீட்டில் கவரேஜ் செய்வதப் போல கண்னும் கருத்துமாகப் படம் பிடித்தனர், ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்களை. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் அதைத் தடுத்து ஒதுக்கினர்.

இதுவெல்லாம் போதாதென்று கேமரா வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளிருந்து கம்ப்பியூட்டர் மூலம் இயக்கி வீடியோ எடுத்தது ஒளிப்பதிவு காவல் பிரிவு. ஓ ! இப்படித்தான் காவல்துறை நவீனமானதோ? இதற்கு மேலும் காவல்துறையை நவீனப் படுத்த ஜெ. அரசு துடிக்கிறது. மத்திய அரசிடம் நிதி கேட்கிறது.

ஜெயாவை எதிர்த்து மூச்சு, சூச்சூ விடுகிறவர்களைக் கூட கண்டுபிடிப்பதற்கு வீட்டுக்கு ஒரு கேமரா, பாத் ரூம் வரை வைத்துவிடுவார் போல் தெரிகிறது. அதற்கும் டாஸ்மாக்கை நம்பலாமாயிருக்கும்!!

தகவல்:

மக்கள் அதிகாரம்
மதுரை
தொடர்புக்கு:8508935536

3. தருமபுரி

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31 என்று கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரம், போராட்டங்கள் என்று மக்கள் அதிகாரம் அடுத்தடுத்து போராடி வந்தது. ஆகஸ்ட் 31 அன்று தருமபுரியில், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கோவை பகுதிகள் இணைந்து தருமபுரியில் நடத்தினர்.

மூடு டாஸ்மாக்கை - தருமபுரி ஆர்ப்பாட்டம்
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31

கெடுவிதிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 31-ல் தருமபுரியில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசு டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பாக நின்றனர். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் நூற்றுக்கும் அதிகமான போலீசை நிறுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் நான்கு வழிதடங்களிலும் தடுப்பு அரண்களை போட்டு ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்கள் வராது இருக்க பீதி ஏற்படுத்தும் வேலையை செய்தனர்.

காலை 8 மணிக்கே தோழர்களை அழைத்து பல நிபந்தனைகளை விதித்தனர். தோழர்கள் 10 மணிக்கு மைக்செட் கொண்டு சென்றனர். மைக்செட்டை வாகனத்தை விட்டு இறக்க விடவில்லை; 4 மணிக்கு பிறகே இறக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

மூடு டாஸ்மாக்கை - தருமபுரி ஆர்ப்பாட்டம்மறுபுறம் தோழர்கள் ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சார வேலைகள் செய்ய தொடங்கினர். தோழர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் வேறுவழியில்லாமல் மைக்செட் வைத்துகொள்ள அனுமதித்தனர்.

கோவை, ஈரோடு, கரூர் தோழர்கள் மதியம் ஒரு மணிக்கு தருமபுரி வந்து சுமார் 2 மணிநேரம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். சேலம் சாலையில் இருபுறத்திலும் 35 பேர் வீதம் பிரச்சாரம் செய்து நிதி திரட்டினர். அவர்கள் அனைவரும் மக்கள் அதிகாரம் டி சார்ட் தொப்பி அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். இது மக்களை வெகுவாக கவர்ந்து பிரச்சாரத்தை திரும்பி பார்க்கும் வகையில் ஊர்வலம் போலவும், அமைப்பை பிரச்சாரம் செய்யும் வகையிலும், நிதிதேவையை ஈடுகட்டும் வகையிலும் இருந்தது.

மூடு டாஸ்மாக்கை - தருமபுரி ஆர்ப்பாட்டம்அங்கு ஈ மொய்ததை போல மொய்த்த உளவு போலீசுகாரர்கள் காட்டி கொடுத்ததின் பேரில் போலீஸ் வந்தது. “கும்பலாக போக யார் அனுமதி கொடுத்தது தனித்தனியாக போங்கள்” என்று தடுத்தனர்.

“நாங்கள் கும்பலாக போக யார் அனுமதி தரவேண்டும். இது எங்கள் பேச்சுரிமை” என்று பதில் அளித்து பிரச்சாரத்தை தொடர்ந்தனர், தோழர்கள்.

திட்டமிட்டபடி 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் சுற்றி நின்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர்.

பத்து அடி உயரத்தில் மக்கள் அதிகாரம் பெயர் பொறித்த பேனரை பிடித்து கொண்டும், கையில் முழக்க அட்டை , கொடிகளை பிடித்துக் கொண்டும் நின்றது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

பேச்சாளர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலர் ராமன் (எ) எழிலன், திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் கிருஷ்ணன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிஆறுமுகம், பென்னாகரம் வழக்கறிஞர் சங்க பொருளாளர் டி.கே தேவேந்திரன், வ.உ.சி கட்டுமான தொழில்சங்க மாநில தலைவர் சிவாஜி, மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் ராமசாமி, சென்னை பகுதி தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் தோழர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு இடையிலேயே மூடு டாஸ்மாக்கை மூடு என்ற மக்கள் கலை இலக்கியக் கழக பாடலை சிறுவர்கள் பாடியது, அடுத்து பெண்கள் முழக்கமிட்டது அனைவரையும் கவர்ந்தது.

கண்டன உரையாற்றியவர்கள் பலரும் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழர்கள் செயல்பாடு பற்றி வாழ்த்தி பேசினர். டாஸ்மாக் வருமானத்தில் ஆட்சி நடத்தும் அவலநிலையை அம்பலப்படுத்தியும், பல போராட்டங்கள் செய்தும் அரசு கண்டுகொள்ளாததை பற்றியும் அம்பலப்படுத்தி பேசினர்.

குறிப்பாக தோழர் கிருஷ்ணன் பேசும் போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இருபத்தொரு வயது இளைஞன், “மச்சி மண்டபத்தில் சரக்கு ரெடியா? இல்லன்னா நான் இங்கியே இறங்கிடுவேன்” என்று மது அருந்துவதை பற்றி சர்வசாதாரணமாக பேசியதை குறிப்பிட்டார். “இந்த சமூகம் எங்கே போய்கொண்டு இருக்கிறது” என்று வேதனைப் பட்ட அவர், “ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை பார்த்ததும் புது தெம்பு வருகிறது” என்று குறிப்பிட்டார்.

நன்நெறி நல்கல் வேந்தர்க்கு கடனே என்று புறநானூற்று பாடலை குறிப்பிட்டு இந்த அரசு கடமையை செய்யாமல் அதற்கு எதிரான வேலைகள் செய்வதை அம்பலபடுத்தி பேசினார்.

கண்டன உரையாற்றியவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்போடு இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களை ஆள அருகதை இழந்தது இந்த அரசு கட்டமைப்பை தகர்த்து விட்டு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர்.

இவண்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தருமபுரி தொடர்புக்கு 81485 73417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க