privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !

-

மேலைப்பாளையூர் டாஸ்மாக் கடை ஒழிப்பு போராட்டம் – சிறை சென்றவர்கள் பிணையில் விடுதலை

மூடு டாஸ்மாக்கை மூடு! நிறுவு மக்கள் அதிகாரத்தை!
மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! தடுக்க வரும் போலீசிற்கு அஞ்சாதே! மக்கள் அதிகாரத்தை நிறுவு!

எனும் மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாத 4-ம் தேதியன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ள மேலைப்பாலையூர் டாஸ்மாக் கடை பூட்டி போராட்டம் செய்தபோது மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ உட்பட 13 முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம்
மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம் (கோப்புப் படம்)

இவர்களில் ராஜூ, மற்றுமொரு தோழர் தவிர 11 பேருக்கு உயர்நீதிமன்ற ஜாமின் பெற்று கடந்த 31-08-2015 அன்று மாலையில் பிணையில் விடுதலையாகினர்.

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னணியாளர்கள் அனைவரும் வெளியே வந்தவுடன் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் சிறைவாசலில் குவிந்து முழக்கமிட்டு வரவேற்றதுடன் அனைவருக்கும் புத்தாடை உடுத்தி மாலை அணிவிக்கப்பட்டது. மாலை 6.45 மணியளவில் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களும், தோழர்களும், பத்திரிகையாளர்களும் குவியத் தொடங்கினர். விண்ணதிரும் முழகத்துடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது போலீசு பட்டாளத்துடன் வந்திறங்கிய விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் செந்தில்குமார் “ஏய்! யாரும் இங்க கூட்டமா நிக்க கூடாது. அம்பேத்கர் உனக்கு இன்னா புடுங்கினாரு. இங்கு வந்து சிலைக்கு மாலை போடுறீங்க, கோஷம் போடாதே” என்று மிரட்டி, “கலைந்து போகவில்லை என்றால் உங்கள் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுன்னு கேஸ் போட்டு மீண்டும் உள்ளே தள்ளிடுவேன். பெயில் ஆர்டரை-டிஸ்மிஸ் பண்ணிடுவேன்” என்று மிரட்டினர்.

இந்த சலசலப்புக்கு அஞ்சாமல் மக்களுடன் தோழர்களும் முழக்கமிட்டு மாலை அணிவித்தனர். இதன் பின் அங்கிருந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்ல முயன்றபோது, “நடந்து போகக்கூடாது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கேஸ் போட்டு விடுவேன்” என்றார் செந்தில்குமார்.

மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம்
மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம் (கோப்புப் படம்)

இதன்பின் ஆத்திரமடைந்த உறவினர்களும், தோழர்களும், “ஏன்யா நாங்க இனி உன்னை கேட்டுத்தான் மூச்சு விடணும், நடக்கணும், சாப்பிடணும், ஆயி இருக்கணுமோ? நீ என்ன விருத்தாசலத்தையே விலைக்கு வாங்கிட்டியா? நாங்க உன் அடிமையா? அல்லது பக்கத்து நாட்டின் அகதிகளா? பயங்கரவாதிகளா? அப்படித்தான் செய்வோம் உன்னால் முடிந்தால் பார்” என்று நடக்கத் தொடங்கினர்.

திட்டமிட்டு சண்டை வாங்கி நிகழ்ச்சியை சீர்குலைத்து மீண்டும் தோழர்களை சிறையில் தள்ள வேண்டும் என்கிற சதித்திட்டத்துடனே வந்து அது நிறைவேறாமல் போனதால் பாலக்கரையில் நான்கு புறமும் சுத்திக்கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார். இவரது சேட்டைகளை பார்த்து பொதுமக்கள் “ச்சீ இவர் இன்னும் இங்கிருந்து போகலையா” என்று எரிச்சலடைந்தனர்.

இதன்பின் நீதிமன்ற வளாகத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சைமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் அணிதிரண்டு விடுதலையானவர்களை வரவேற்று மாலை அணிவித்து, கதராடை போர்த்தி, வெடிவெடித்து முழக்கமிட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

மேலைப்பாலையம் டாஸ்மாக் போராளிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது
மேலைப்பாலையம் டாஸ்மாக் போராளிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது (கோப்புப் படம்)

இரவு 9.15 மணி மேலப்பாலையூர் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிக்குமார் தலைமையில் ஊர் மக்கள் கூடி வெடிவெடித்து வரவேற்றனர். அங்கிருந்து தலித் பகுதியில் கைது செய்யப்பட்ட தலைவர்களுடன் வெடிவெடித்து முழக்கமிட்டபோது சுமார் 200 பேர் ஆண்களும், பெண்களும், மாணவர்களுமாய் திரண்டு விட்டனர்.

இங்கு சுமார் அரை மணிநேரம் நிகழ்ச்சி நடந்தது.

வெல்லட்டும்! வெல்லட்டும்!
மக்கள் அதிகாரம் வெல்லட்டும்

வருகுது பார்! வருகுது பார்!
மேலப்பாலையூர் டாஸ்மாக்கடையை பூட்டிக் காட்டி
மக்கள் அதிகாரத்தை நிறுவிய
வெற்றி பெற்ற படையணி
வருகுது பார்! வருகுது பார்!

வருக வருக வருகவே
டாஸ் மாக்கடை ஒழிப்பு போராட்டத்தில்
சிறை சென்ற போராளிகளே
சிறையில் பூத்த மலர்களே
போராளிகளே தோழர்களே
தன்மானம் காத்த தலைவர்களே
வருக! வருக! வருகவே!

எனும் முழக்கமிட்டு,

“அவர்கள் சிறைக்கு சென்ற தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கற்றுக்கொண்டு வழி நடப்போம். மேலும் வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் இப்போது டாஸ்மாக்கையும் ஒழித்து கட்டியுள்ளோம்.

மேலப்பாலையூர் டாஸ்மாக் போராளிகள்
மேலப்பாலையூர் டாஸ்மாக் போராளிகள்

வெள்ளாற்று கரையோரம் உள்ள இந்த மண் சுயநலம், காரிய வாதம், பிழைப்பு வாதத்தை தூக்கி எறிந்து போலிசின் பொய் வழக்கு, சிறை அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராடி மக்கள் அதிகாரத்தை நிறுவிய வரலாற்றை படைத்துள்ளது” என்று பேசியபோது மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதேபோல் கிரனூரில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் திரு ராஜவன்னியன் கிராம மக்கள் புடை சூழ வெடி முழக்கத்துடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இரவு 10.30 மணிக்கு பவழங்குடியில் போராட்டத்தில் முன்னிலை வகித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சிறுதொண்ட நாயனார் மற்றும் தெய்வக்கண்ணு, ராஜேந்திரன் ஆகியோரை வாகனங்களில் தெருவெல்லாம் வலம் வந்து ஆர்ப்பரிக்க வெடிவெடித்து முழக்கத்துடன் வீடுவரை அழைத்துச் சென்று அவர்களின் தியாகத்தையும், வருங்காலத் தலைமுறையினர் கற்றுக்கொண்டு சமூகத்திற்காக போராட வேண்டும் என்று உணர்த்தப்பட்டது.

மக்கள், “இனி இவ்வட்டாரத்தில் டாஸ்மாக் இருக்கக் கூடாது” என்று உறுதி ஏற்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் கூடி சிறை சென்றவர்களின் நெற்றியில் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் குடிகாரர்கள். இவர்கள் போராட்டம் நடந்த அன்று போதையோடுதான் போலிசிடம் தகராறு செய்தனர். “நான் குடிகாரன்தான், நானே சொல்றன், எங்க ஊருக்கு இந்தக் கடை வேணாம் மூடு! எங்க வீட்டுக்கு பக்கத்தல இருக்கறதால நாங்க மூணுவேளையும் குடிக்கிறோம், குடும்பமே அழியுது” என்று பேசியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், அவர்களோ சிறைக்கு சென்ற பின் மாற்றப்பட்டு சிறையில் பார்க்க வந்த மனைவியிடம் “இனி நான் குடிக்கமாட்டேன். குடும்பத்தை பொறுப்போடு பார்ப்பேன். இனி என்னை குடிகார கணவன் என்று சொல்லாதே, எனக்கு அசிங்கமாக உள்ளது. இங்கு தோழர்களும், வக்கீல்களும் ரொம்பவே மாத்திட்டாங்க. நாங்கள் திருந்திட்டோம், மாறிட்டோம்” என்று கண்ணீருடன் அன்போடு பரிமாறிக்கொண்டனர்.

ஆம்! குடிகாரர்கள், அடங்காதவர்கள், ரவுடிகள் என்று தூற்றப்பட்டவர்கள் இன்று பொறுப்புள்ள மனிதர்களாக இதோ மக்கள் அதிகாரத்தின் போராளிகளாக மாறியுள்ளனர். மக்கள் அதிகாரம் நிறுவப்பட்டு வருகிறது.

“குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை” என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி மட்டுமல்ல “போராடினால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவேன் போராட்டத்தை சீர்குலைத்து நசுக்குவேன்” என்று உளறும் போலீசு, ஆர்.டி.ஓ, நீதிபதி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பி மக்கள் அதிகாரத்தை நிறுவும் தருணம் தொடங்கி விட்டது.

தோற்று போனது அரசு அதிகாரம்! இதோ வருகுது மக்கள் அதிகாரம்!

இவண்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்
8110815963