privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிழுப்புரம் SVS 'மருத்துவக் கல்லூரி' மாணவர்கள் தற்கொலை முயற்சி !

விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

-

கள்ளக்குறிச்சி SVS இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை முயற்சி!

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் வட்டம், பங்காரம் அருகில் சேலம் மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது SVS எலக்ட்ரோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இவை தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி கவுன்சில் அனுமதியுடனும், SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக்கல்லூரி 2008–ல் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் அனுமதியுடனும் துவங்கப்பட்டன. பின்னர் 2014-ம் ஆண்டு SVS ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று தொடங்கப்பட்டது. இந்த மூன்று கல்லூரிகளும் ஒரே இடத்தில், ஒரே கட்டிடத்தில் தான் அமைந்துள்ளன.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
உப்புமா மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை

இந்தக் கல்லூரிகளின் நிறுவனர் டாக்டர் சுப்ரமணியன் என்பவர் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் அரசு நியமன உறுப்பினாராம். இவர் மனைவி தாளாளர் ‘டாக்டர்’ வாசுகி சுப்ரமணியன் எந்த மருத்துவக்கல்லூரியிலும் படிக்காமலே மருத்துவராம். இவர்தான், இவரேதான், இவர் மட்டுமேதான் கல்லூரியில் வகுப்புகள் எடுப்பவராம்…

இந்த மூன்று கல்லூரிகளுக்கும் கட்டுமானம் சம்பந்தப்பட்ட எந்தத் துறையிலும் அனுமதி வழங்கப்படவில்லை. தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையும் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கவில்லை. மேற்கண்ட ஏதேனும் ஒரு துறையின் அனுமதி இல்லை என்றாலே கல்லூரியின் அங்கீகாரத்தை சட்டப் படி ரத்து செய்யவேண்டும். ஆனால் மூன்று துறையின் அனுமதியும் இல்லை. மொத்தத்தில் இந்த மூன்று கல்லூரியும் இயங்குவதற்கு சாத்தியப்படும் அனைத்து வகையிலும் நிர்வாகம் முறைகேடு செய்துள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பல்கலைக் கழகத்தின் நேர்முகத் தேர்வு அல்லது நிர்வாகத்தின் தரப்பில் சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சரியான கற்பித்தல், கட்டமைப்புகள் இல்லாமலும், நிர்வாகத்தின் கல்விக்கட்டண தொந்தரவுகளாலும், பல மாணவர்கள் இடையில் நின்றுள்ளனர்

இக்கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை. பல்கலைக் கழகத்தின் நேர்முகத் தேர்வு அல்லது நிர்வாகத்தின் தரப்பில் சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் சரியான கற்பித்தல், கட்டமைப்புகள் இல்லாமலும், நிர்வாகத்தின் கல்விக்கட்டண தொந்தரவுகளாலும், பல மாணவர்கள் இடையில் நின்றுள்ளனர். தற்போது இக்கல்லூரியில் 25 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏழை எளிய சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2008-ல் இருந்து படித்து வந்தனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை கல்விக்கட்டணமாக கல்லூரி நிர்வாகம் கொள்ளையடித்து உள்ளது. ஆனால், இன்று வரை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்டம் வாங்கிய பேராசிரியர்களை வைத்து பாடம் நடத்தியதே கிடையாது. 2008-ல் இருந்து கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்ரமணியம் ஒருவர் மட்டும் தான் பயிற்றுவித்தார். பின்னர் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிலையில் தான் மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.

மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் விதிகளும் நடைமுறைகளும் இந்தக் கல்லூரியில் அமுல்படுத்துவது கிடையாது. நவீன ஆய்வகமோ, பல்கலைகழகம் சொல்லுகின்ற 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையோ, மாணவர்களின் செய்முறை ஆய்வுகளுக்கான பிணவறையோ இங்கு கிடையாது. மருத்துவமனையும், ஆய்வகமும் இல்லாமல் மாணவர்கள் செய்முறை பயிற்சிகள் செய்வதற்கும் வழி இல்லை.

உப்புமா மருத்துவக் கல்லூரி - எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பல்கலைகழகம் குறிப்பிட்டுள்ள மூலிகை பூங்கா, நடந்து செல்ல புல் தரைகள், உணவு விடுதி, அரங்கம் , நீச்சல் குளம், நூலகம், விளையாடுவதற்கான இடம் எதுவும் இல்லாமல் இந்தக் கல்லூரி இயங்கி வருகின்றது.

மேற்படி இந்தக் கல்லூரியில் பல்கலைக் கழகத்தின் தரப்பில் ஆய்வு என்றால் மட்டுமே, இரண்டு நாட்கள் படுக்கைகளுடன் நோயாளிகளை பிடித்து வந்து சிகிச்சை அளிப்பது, பேராசிரியர்களை அழைத்து வந்து சொல்லிக்கொடுப்பது போல் நடிப்பார்கள். மேலும் பல்கலைகழகம் குறிப்பிட்டுள்ள மூலிகை பூங்கா, நடந்து செல்ல புல் தரைகள், உணவு விடுதி, அரங்கம் , நீச்சல் குளம், நூலகம், விளையாடுவதற்கான இடம் எதுவும் இல்லாமல் இந்தக் கல்லூரி இயங்கி வருகின்றது.

மாணவிகளுக்கான விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, உணவும் தரமானதாக இல்லை. மாணவிகளுக்கே இந்த நிலைமை என்றால், மாணவர்களுக்கு விடுதியே இல்லை.

2011-ம் ஆண்டு நீதிபதி என்.வீ.பாலசுப்ரமணியன் அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக்கல்லூரிக்கு 25,000 ரூபாய் என கல்வி கட்டணம் நிர்ணயிக்க, இக்கல்லூரி நிர்வாகமோ ஏழை மாணவர்களிடமிருந்து ரூ. 1,20,000 என்ற அளவில் கல்விக்கட்டணம் வசூலித்து வருகிறது.. முதலாம் ஆண்டு 2–ம் பருவத்திற்கு கல்விக்கட்டணம் இல்லை என்ற விதி இருந்தும் மாணவர்களிடம் ரூ 80,000 வசூலித்துள்ளது. மேலும் புத்தக கட்டணம், தேர்வு கட்டணம், நூலகக்கட்டணம், உணவுக் கட்டணம் எனப் பலபெயர்களில் கட்டணக் கொள்ளையை மாணவர்களிடம் இக்கல்லூரி நிர்வாகம் அடித்துள்ளது.

இந்தக் கொள்ளையை எதிர்த்து கேட்கும் மாணவர்கள் மேற்படி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை அழைத்து வந்து சண்டை போட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையும் உள்ளது. மேலும், தமிழக அரசால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிற கல்வி உதவித்தொகையை இக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கொடுத்ததே இல்லை.

கல்லூரி நடத்துவதற்கே லாயக்கற்ற இவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்தால் போதும் என்ற எண்ணத்தில் மாற்றுச் சான்றிதழ்களை பெற மாணவர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களிடமும் முழுத் தொகையும் கட்டினால் தான் சான்றிதழ் கொடுப்பேன் என்று நிர்வாகம் சட்டவிரோதமாக கெடுபிடி செய்கிறது.

கல்லூரியின் இந்த முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து கீழ்காணும் துறைகளுக்கு மாணவர்களே முன் நின்று புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

  1. தமிழக மனித உரிமை ஆணையம் – வழக்கு எண்- 8805/2013
  2. தேசிய ஆதிதிராவிட ஆணையம் – சென்னை – எண் – 4/32/2013
  3. மக்கள் சுகாதார துறை – க.எண் . 40884/இம 1-2/2013-1
  4. தமிழக ஆதிதிராவிட நல இயக்குனரகம் – அய்4/34339/2013
  5. தமிழக சட்டப்பணிகள் துறை – 3003/G/2014
  6. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- CC/13/15407
  7. இந்திய மருத்துவம் & ஹோமியோபதி துறை – 12666/திவ2/2013
  8. சுங்க வரி துறை – சி.எண்.11/39/123/2013
  9. தமிழக கவர்னர் – எண்.4910/U2/2013
  10. தமிழ்நாடு டாக்டர் மருத்துவ பல்கலை கழகம் – பல புகார் மனுக்கள்.
  11. தமிழக ஊழல் தடுப்பு பிரிவு – எண்.1341/2014/MED/VPM
  12. விழுப்புரம் ஆதிதிராவிட அலுவலகம் – எம4/2281/2014 பதில் ஏதும் இல்லை.
  13. முதலமைச்சரின் தனி பிரிவு- இது வரை பதில் ஏதும் இல்லை.
  14. உயர்நீதிமன்ற பதிவாளர் – பதில் ஏதும் வரவில்லை.
  15. தமிழக ரகசிய புலனாய்வு துறை – பதில் ஏதும் வரவில்லை.

உள்ளடங்கிய துறைகளுக்கு புகார் மனுவினை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும்,  “கல்லூரியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன” என பொய்யான அறிக்கையை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியுள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம்.

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் 07-09-2015 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் 14-09-2015 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் 8 மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார் மாவட்ட ஆட்சியர் லட்சுமி. அதனைத் தொடர்ந்து ஒப்புக்கென்று கல்லூரியை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை மாணவர்கள் கேட்டதற்கு தர முடியாது என்று கூறி மறுத்து விட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் மனமுடைந்த மாணவர்கள் 05-10-2015 திங்கள் அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கண்ணதாசன், ரவீந்திரன், ஐயப்பன், மாணவிகள் பானுப்பிரியா, கோமலா, பிரியா ஆகியோர் விஷ மருந்தை குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் அவர்களை சந்தித்து பேசுகையில், தற்கொலைக்கு முயன்ற கண்ணதாசன், ரவீந்தரன் மற்றும் ஐயப்பன் கூறியதாவது…

“2011-ல் கல்லூரியில் சேர்ந்தேன். அரசுக்கட்டணம் 25,000 சேர்த்து மொத்தம் 55,000 கட்ட வேண்டும்” என்றார்கள். “ஏன்” என்று கேட்டதற்கு, “ஹாஸ்டல் பீஸ்” என்றார்கள். “இங்கு ஹாஸ்டலே இல்லை” என்றதற்கு, “ஸ்டடீஸ் மட்டும் தான். இங்கு ஹாஸ்டல் கள்ளக்குறிச்சியில் உள்ளது” என்றார்கள். “சேர முடியாது” என்ற என்னை எனது பெற்றோரிடம் பேசி சேர்த்தார்கள்.

பொதுவாக பணக்காரர்களுக்கு அட்மிசன் போடுவது இல்லை. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தான் அங்கு சீட் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான். முதலில் ரூ 55,000 என்றார்கள். பிறகு ரூ 1,40,000 கட்டச் சொல்லி மிரட்டினார்கள்.

யோகா என்ற பெயரில் காலை 5 மணிக்கே தொடங்கி விடுவார்கள், இதில் கர்மயோகா என்ற பெயரில் எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி துன்புறுத்துவார்கள். மரம் வெட்டுவது, சமையல் செய்வது, காரை துடைப்பது என அனைத்து வேலைகளையும் செய்வோம்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின் போது +2 மாணவர்களை சந்தித்து கல்லூரியின் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு எங்களைத் தான் திருச்சி, பாண்டி என பல இடங்களுக்கு அனுப்புவார்கள்.

முதலாமாண்டு, இரண்டாவது செமஸ்டருக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் கட்டணம் வசூலித்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு 3 மாதம் என்னை சஸ்பென்ட செய்தார்கள். இதற்கு அபராதம் ரூ 50,000 கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

கல்லூரியில் நூலகமே கிடையாது. அங்கு ஒரு புத்தகம் காணாமல் போய்விட்டது என்று கூறி ரூ 25,000 கட்டச் சொல்லி எங்களை மிரட்டினார்கள். அதையும் கட்டினோம். இதனை ஒரு புகாராக RDO-விடம் கொடுத்தோம். கள்ளக்குறிச்சி அழகுவேல் MLA-விடம் முறையிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 15 முறை கொடுத்தோம்.

விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா
விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா

மேலும் ஸ்காலர்ஷிப் பணம் வந்தது. அதனையும் “டிரஸ்ட்” பெயரில் எழுதிக்கொண்டு எங்களிடமே கொடுத்து இந்தியன் வங்கியில் மாற்றி வரச் சொன்னார்கள்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அவர்களுக்கு பட்டுத் துணி எடுத்து வர எங்களையே சிறுவந்தாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

ஒரு மாணவன் கல்லூரி கேட் அருகில் விழுந்து இறந்து விட்டார். அப்பொழுது கூட எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டார்கள்.

இவ்வளவு மோசடியாக கல்லூரியை நடத்துகிறார்கள். இவர்களை நம்பி எங்கள் வாழ்க்கையே தொலைத்து விட்டோம். ஊருக்குள்ளும் அவமானப்படுத்துகிறார்கள். எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை” என்றார்.

இது குறித்து மாணவிகள் தரப்பில் கோமலா பேசிய போது…

“2010-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே அனைத்து பணத்தையும் கட்டச் சொன்னார்கள். எங்களை அவர்கள் கல்லூரியில் சேர்த்துக் கொண்டதே அந்த கல்லூரியை மேம்படுத்ததான். எங்களிடம் பணம் வசூலித்து கட்டிடம் கட்டிக் கொண்டார்கள். எங்களை அவர்கள் அடிமைகள் போலத்தான் நடத்தினார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் கூட இப்படி நடத்தியிருக்க மாட்டார்கள்.

முதலில் கல்லூரியில் ஆசிரியர்களே இல்லை. பாடமும் எடுப்பது இல்லை. ஹவுஸ் கீப்பர் கூட கிடையாது. சமைப்பது தொடங்கி வகுப்பு எடுப்பது, புல் தரையை சுத்தப்படுத்துவது வரை சீனியர் என்ற முறையில் நான் தான் அனைத்தையும் செய்வேன். இன்றைக்கு அவ்வளவு பெரிய கட்டிடம் உள்ளது என்றால் அதற்கு முழு காரணம் எங்கள் உழைப்பு தான்.

குடிக்க தண்ணி கூட இல்லை. கல்லூரிக்கு அருகில் 100 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில் இறங்கி தான் தண்ணீர் பிடிப்போம். நாங்களும் போகாத அதிகாரிகள் இல்லை. செய்யாத போராட்டம் இல்லை. எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி தெரியவில்லை..” என்றார் கண்களில் நீர் வழிந்தபடியே..

இது குறித்து மருத்துவமையில் இருந்த மாணவி பானுப்பிரியாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது…

“என் பொண்ண காலேஜில சேர்க்கும் போது ரூ. 60,000 கேட்டாங்க. மறு வருஷம் ஒரு லட்ச ரூபா கட்டச் சொன்னாங்க. ஹாஸ்டல் பீசு 2000-னு சொன்னாங்க. ஆனா வாங்கும் போது மூவாயிரமா வாங்கிகிட்டாங்க. ஒரு சாப்பாடு வாங்கினு வந்து அஞ்சி பேரு சாப்டறத என் கண்ணால பார்த்தேன் சார். ஒரு நாள் கையெழுத்து வாங்கணும்னு வரச் சொல்லி நாள் முழுக்க நிக்க வச்சிட்டாங்க. அன்னிக்கு கொத்தனார் வேலை செய்யும் போது இந்த பசங்க தான் கலவை எடுத்துனு போய் தந்தாங்க. இத பார்த்ததும் என் வயிறு எரியுது. இன்னா பண்றது சார். இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டோம். எங்களால ஒன்னும் பண்ண முடியல… ஆனா அந்த காலேஜ மூடனும். எங்க புள்ளங்களுக்கு சர்டிபிகேட்ட திருப்பித் தரனும்” என்றார் கோபமாக…

விஷம் குடித்த மாணவி ஒருவரின் அம்மா
விஷம் குடித்த மற்றொரு மாணவியின் அம்மா

அடுத்ததாக கோமலாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது,

“என் பொண்ணு SVS காலேஜ் ல தான் படிக்கிறாங்க. அங்க சேர்ந்த பிறகு தான் காலேஜ் மோசமான காலேஜ்’னு சொன்னாங்க. திரும்ப காலேஜிக்கு போயிட்டு நர்சிங் சேர்க்க போறேன்’னு சர்டிபிகேட் கொடுங்கன்னு கேட்டதுக்கு உங்க பொண்ணு டாக்டர் படிக்கிறாங்க. நர்சிங் விட பெரிய படிப்பு’னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க. ஆரம்பத்துல 25,000 கட்ட சொன்னாங்க. அப்புறம் ஹாஸ்டல் பீசு அது இதுன்னு 75,000 வாங்கிக்கிட்டாங்க. இது வரைக்கும் எதுக்குமே பில்லே கொடுக்கல. கால்ல விழாத குறையா கேட்டோம். எங்கள கழுத்த புடிச்சி வெளில தள்ளிட்டாங்க” என்றார் அழுது கொண்டே..

“ஒரு முறை ஹாஸ்டலை விட்டு இவர்களே வெளியே போக சொல்லிட்டு, பிரேக் பீசு 50,000 கட்டச்சொல்றாங்க. இப்படி விதவிதமா கொள்ள அடிக்கிறானுங்க. TC கேட்டாலும் தர மாட்றாங்க. 5 வருஷம் முடிஞ்சிடுச்சி. ஒரு வேலைக்கு போகணும்னா கூட சர்டிபிகேட் கேக்குறாங்க. எங்க போறது. படிச்ச படிப்பும் இல்லாம இப்ப நடுத்தெருவுல நிக்குறோம். இதனால் தெனம் தெனம் வீட்ல சண்ட தான் வருது.. இப்ப கூட கலக்டர் ஆபிஸ் போறேன்’னு சொல்லிட்டு தான் வந்து இப்படி பண்ணிக்கிட்டா.. நாங்க பட்ட கஷ்டம் இனிமே எந்த புள்ளைங்களுக்கும் வர கூடாது. அந்த காலேஜ இழுத்து மூடனும். கட்டின பணம், சர்டிபிகேட் திருப்பி தரனும்” என்று கதறுகிறார் அந்த ஏழைத்தாய்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பு கூறிய புகார்கள், மேலும் நடந்துள்ள சட்ட மீறல்கள், இந்த சட்டவிரோத போலி மருத்துவக்கல்லூரி மீது அரசமைப்பின் எந்த உறுப்பும் நடவடிக்கை எடுக்காதது போன்ற விசயங்களை உற்று நோக்கினால் அப்பட்டமாக இந்த கட்டமைப்பு சீரழிந்துள்ளதை நம்மால் உணரமுடிகிறது. இதை அனுபவத்தில் மாணவர்களும் உணர்ந்துள்ளனர். இதை எதிர்த்து நின்று அம்பலப்படுத்தி தான் முறியடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

svs-issue-rsyf-posterஇந்த டுபாக்கூர் உப்புமா கல்லூரியை மூடக்கோரியும், இத்துணை கிரிமினல்தனங்களில் ஈடுபட்ட திருட்டு நிறுவன கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த நிறுவன பிராடுகளுக்கு பச்சைக் கம்பளம் விரித்து, கிரிமினல் வேலைகளுக்கு துணை நின்று மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடிய மருத்துவ கவுன்சில் அதிரிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு: 99650 97801