privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா - PRPC பத்திரிகை செய்தி

சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர்,
மதுரை – 20, தொடர்புக்கு 9865348163

பத்திரிகை செய்தி

  • டாஸ்மாக்கிற்கு எதிராக பாடல் இயற்றிப் பாடிய புரட்சிகர மக்கள் பாடகர் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் திருச்சி கோவன் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!
  • டாஸ்மாக்கை நடத்துவது தேசப்பற்று எதிர்ப்பது தேசத் துரோகமா?
  • சாராய ஆலை அதிபர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஜெயலலிதா அரசின் மாபெரும் மனித உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

தமிழகத்தில் அரசே திட்டமிட்டு மக்களிடம் குடிவெறியைத் திணித்து, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து பெண்களின் தாலியறுத்து, சமூகத்தை சீரழிப்பதற்கு எதிராக “மூடு டாஸ்மாக்கை!” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த நான்கு மாதங்களாக தமிழகமெங்கும் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து போராடி வருகின்றனர். டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடியதை மிகப்பெரிய குற்றமாகக் கருதிய தமிழக அரசு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து ஒரு மாதம் சிறையில் அடைத்தது.

கோவன் கைதுடாஸ்மாக்கிற்கு எதிரான இயக்கத்தில் “மூடு டாஸ்மாக்கை மூடு“, “ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்கள் மக்கள் அதிகாரம் அமைப்பால் வினவு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேற்கண்ட பாடல்களைப் பாடிய பாடகர் திருச்சியைச் சேர்ந்த திரு.கோவன் ஆவார். கோவன் அவர்கள் தமிழக மக்கள் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் புரட்சிகர முற்போக்கு இசைக் கலைஞர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சமூக அநீதிகளுக்கு எதிராக தனது பாடல்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி வருபவர்.

30-10-2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் உள்ள புரட்சிகரப் பாடகர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை சைபர் கிரைம் பிரிவு போலிசார் அவரைத் தர தரவென்று இழுத்து கடத்திச் சென்றுள்ளனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தபின் பாடகர் கோவன் மீது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய 124- ஏ (தேசத்துரோகம்), 153-அ சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். புரட்சிகரப் பாடகர் கோவனைக் கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல மறுத்து தமிழ்நாடு போலீசு அலைக்கழித்துள்ளது. வழக்கறிஞர்கள், உறவினர்கள் பாடகர் கோவனைச் சந்திக்க முடியவில்லை. இதுதவிர, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலர் திரு.காளியப்பன் அவர்களின் வீட்டிற்கு நள்ளிரவு 2 மணிக்குச் சென்ற போலீசு அவரது மனைவியை மிரட்டியுள்ளது. இணையதளத்தில் டாஸ்மாக் பாடலை பதிவேற்றியவர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக அச்சுறுத்துகிறது.

கொடநாட்டில் ஓய்வெடுத்தாலும் டாஸ்மாக்கையும், சாராய ஆலை அதிபர்களையும் பாதுகாப்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டி வரும் அக்கறை தனித்துவமானது. 17-வயதான சிவகங்கைச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், ஆய்வாளர் சிவக்குமார், கோகுல்ராஜைக் கொலை செய்த யுவராஜ், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா மரணத்துக்குக் காரணமான எஸ்.பி.செந்தில் குமார் ஆகியோரைப் பிடிப்பதில் தமிழக முதல்வரும், காவல்துறையும் காட்டும் ‘பிரமிப்பான வேகம்’ மக்களால் ‘பாராட்டப்பட்டு’ வரும் நிலையில் தனது ”ஆபரேசன் டாஸ்மாக்” நடவடிக்கையைத் தொடங்கியுள்ள தமிழக போலீசு புரட்சிகரப் பாடகர் கோவனை பயங்கரவாதியைப் போல் நள்ளிரவில் கடத்தி,ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க தேச துரோகப் பிரிவின் கீழ் வழக்கும் பதிந்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது.

டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும். நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் அரங்கேற்றி வரும் தாக்குதல்களும், கொலைகளும்- மாற்றுக் கருத்துக்கள், விமர்சனங்களை முடக்கிவரும் சூழலில் தமிழகத்தில் அரசே கருத்துரிமையின் மீது நடத்தியுள்ள இத்தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது; மாபெரும் பாசிச நடவடிக்கை..

காலம் காலமாக தேசத் துரோகப் பிரிவு அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் கருவியாகவே பயன்பட்டுள்ளது. 1908-ல் வ.உ.சி, 1922-ல் காந்தி, பின் பகத்சிங் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2010-ல் மருத்துவர் பிநாயக்சென்னிற்கு இதே பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் 1950-ல் அமலுக்கு வந்து, கருத்துரிமை அடிப்படை உரிமையாக்கப் பட்ட பின்பும் இக்காலனியாதிக்கப் பிரிவின்கீழ் போலீசு வழக்குப் பதிவு செய்வது தொடர்கிறது. தனக்குப் பிடிக்காத ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க தேசத் துரோகம் போன்ற கடும் சட்டப் பிரிவுகள் உதவுகின்றன. இதோடு தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது தடுப்புக் காவல் சட்டமாகும். இதன்மூலம் விசாரணை, ஜாமீன் இல்லாமல் ஓராண்டுவரை யாரையும் சிறையில் வைக்கலாம்.

பாடகர் கோவன் டாஸ்மாக்கிற்கும், அக்கடைகளை நடத்தும் தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராகப் பாடினார் என்பதே குற்றச்சாட்டு. பாடுவது கருத்துரிமை எனும் நிலையில் தமிழக போலீசின் செயல் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. கேதர் நாத் சிங் (AIR 1962 SC 955 Kadar Nath Singh – Vs – State of Bihar)-பல்வந்த்சிங்(1995) 3 SCC 214-பிலால் அகமது கால்(1997) 7 SCC 431-வழக்குகளில் உச்சநீதிமன்றம், “ஒருவரது பேச்சு, எழுத்து, செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் மட்டுமே தேசத்துரோகப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது. புரட்சிகரப் பாடகர் கோவனின் டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல் எந்த வகையில் பொது அமைதியைக் குலைக்கிறது என்பது தமிழக காவல்துறைக்கே வெளிச்சம்.

இன்று நாடு முழுவதும் இந்து மத வெறியர்கள் நிகழ்த்திவரும் பாசிசத் தாக்குதலும் அதற்கு மோடி அரசு துணை நிற்பதும் நாம் அறிந்ததே. நாட்டின் பன்முகத்தன்மை, கருத்துரிமையை அழிக்கும் செயல்களுக்கு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கலைஞர்களின் கருத்துரிமை, மக்களின் இணையதள மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடும் ஜனநாயக உரிமை ஆகியவற்றிற்கெதிரான பாசிச நடவடிக்கையை ஜெயலலிதா அரசு பாடகர் கோவன் கைது மூலம் தொடங்கியுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கடுமையாக ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடவும் முன்வர வேண்டும். மக்களுக்காக டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் பாடிய புரட்சிகரப் பாடகர் கோவன் விடுதலைக்கு மக்கள்தான் போராட வேண்டும். அக்கிரமம், அராஜகமாக நடக்கும் ஜெயலலிதா அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். இதோடு டாஸ்மாக்கிற்கு எதிராக மீண்டும் தமிழக மக்கள், மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடுவதே நம்முன் உள்ள முக்கியப்பணி, கடமை.

சே.வாஞ்சி நாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்