privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

-

அரசியலிலிருந்து மக்களை விலக்கும் மறுகாலனியாக்கம்-அதனை அமலாக்கும் தேர்தல் ஆணையம்!

டுத்ததாக, அதிகார வர்க்கத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் அதிகாரிகளும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நேரடியாகப் பங்கேற்கும் அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் தடுப்பதற்குத்தான் தேர்தல் ஆணையமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் கடுமையான நன்னடத்தை விதிகளும், அவற்றை அமலாக்க அது எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளும், ஓட்டுக் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்தும் என்ற பிரமையை மக்களிடையே உருவாக்குவதற்கான ஏமாற்று வித்தைகளே!

தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களைத் தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர, அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்! ஏனென்றால், மறுகாலனியாதிக்கச் சித்தாந்தப்படி மக்களை அரசியலிலிருந்தே விலக்கி வைக்கவேண்டும்; மார்க்சியம், காந்தியம், தேசியம் போன்ற எந்த இசங்களிலும், அறநெறிகள், சமூக மதிப்பீடுகள் எதிலும் நம்பிக்கையோ, மதிப்போ, அக்கறையோ அற்றவர்களாகவும் அவற்றைப் பிற்போக்கானதாகவும் பத்தாம்பசலித்தனமாகவும் கருதி முகம் சுளித்து ஒதுக்கித் தள்ளுபவர்களாகவும் மாற்ற வேண்டும்.

10-1மறுகாலனிய சித்தாந்தம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் அரசியல் குடிமகன் என்ற அம்சத்தையே ஒழித்துவிட்டு, குடிமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே கருதி நடத்துகிறது. இதற்கேற்பவே அரசும் அரசியலும் மாற்றப்பட்டுள்ளது. “குடிமகனான உனது பணி ஒழுங்காக வேலைக்குப் போவது; கடுமையாக உழைத்து பணம் ஈட்டுவது; அதை வைத்துக் கொண்டு வகைவகையான நுகர்பொருட்கள், புதிதுபுதிதாக நவீனமாக வந்து கொண்டிருக்கும் செல்போன் போன்ற நுகர்பொருட்களை வாங்கி அனுபவி; விதவிதமான உணவுப் பொருட்களையும் நொறுக்குத் தீனிகளையம் வாங்கி ருசித்து இன்புறு; மலிவாகக் கிடைக்கும் டி.வி.டி.-க்களை வாங்கி வந்து கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்களைப் பார்; பாடல்களை ரசித்துக் கேள்; கிரிக்கெட் பார், நன்றாக தண்ணி போட்டு ஜாலியாக இரு. கும்பலாகச் சுற்றுலா சென்று அனுபவி; திருவிழா கொண்டாடு; சமூக சேவை, அரசியல் என்று போய் இவ்வளவையும் இழக்காதே; இளமையை, வாழ்க்கையை வீணடிக்காதே” என்றுதான் மறுகாலனிய சித்தாந்தம் கற்பிக்கின்றது. இத்துடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஒரு சாக்கடை; அந்தப் பக்கம் போகாதே என்றும் பரப்புரை செய்கிறது.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து அறநெறிகளைக் கற்பிக்கும் பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. மாற்றாக, நடனம், யோகா, தற்காப்பு கலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன்,” சுயமுன்னேற்றக் கண்ணோட்டத்தில் படித்து வேலைக்குப் போகவேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதற்கு எந்தவித முறையையும் கையாளலாம். வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்க வேண்டும்” என்ற மனோபாவத்தையும், சுயநல போட்டி மனப்பான்மையையும் உருவாக்குவதன் மூலம் மாணவப் பருவத்திலேயே வளரும் தலைமுறையினர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் தடுக்கப்படுகிறார்கள். இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் தடை செய்யப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் ஊராட்சி, நகராட்சித் தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோரைப் பங்கேற்க வைப்பது; குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட குழுக்களில், மக்களில் சில முக்கியமானவர்களையும் மேலே சொன்னவர்களையும் பங்கேற்க வைப்பது; இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக, தங்கள் மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை வேர்மட்ட அளவில் ஏற்படுத்தி, அவர்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கியின் திட்டமும் அமல்படுத்தப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை; நடத்த அனுமதித்தாலும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரண்டு, மூன்று இடங்கள் தவிர, பிற இடங்களில் நடத்த அனுமதி மறுக்கப்படுவது; பேரணிகள் நடத்த, சுவரொட்டிகள் ஒட்டத் தடை போடப்படுகிறது. புதுப்புது அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

இவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான்; ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் அரசியலையே வெறுத்து ஒதுக்க வேண்டும்; அரசியலில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. அவர்களின் ஒரே அரசியல் நடவடிக்கை தேர்தல் வரும்போது ஓட்டுப் போடுவது மட்டுமே. இவ்வாறு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது, அரசியல் தீண்டாமையை அவர்கள் மீது ஏவி விடுவது என்பதுதான் மறுகாலனியாதிக்கக் காலகட்டத்தின் நடைமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் தேர்தல் ஆணையம் இம்சை அரசனைப் போல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றது.

தொகுப்பாக,

இதுவரையில் நாம் விவரித்ததைத் தொகுத்து சாராம்சமாகச் சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது, சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம். மேல்நிலை வல்லரசுகளின்-ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே இந்திய அரசும் அதன் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் மாற்றப்பட்டுள்ளன.

10-2மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளாலும் சர்வதேச நிதிமூலதனக் கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசைக் கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனியச் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் – தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல இவற்றின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு, அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இந்தியாவில் நிலவுகின்ற அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டிக் குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக, சுயேச்சையாக தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும், பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கியத் திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950-களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990-களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் – வருடங்களுக்குள் மீண்டும் கட்சித் தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

10-3மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு, மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மயச் சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப் பருவத்தில், அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும் சலுகைகள் – கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது.

இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக, மேல்நிலை வல்லரசுகள்-அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச-தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாகக் கையாண்டுவரும் நிலைமையில், ஜனநாயகமும் தேர்தலும் வெட்டிச் சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள், நாடாளுமன்ற அராஜகம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள் – நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் “நீயா, நானா” விவாத மன்றங்களாக்கிவிட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர், நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும், கிரிக்கெட், திரைப்படம், செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை – இலட்சியங்களோ அற்ற, நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் புகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின் மீதே அருவருப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் – மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்துவிட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது? என்று நொந்து கொள்வது மட்டுமல்ல; வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.

எனவே, மக்கள் தங்களது அடிமனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள், மக்களது துயரத்தைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். இதை நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

முற்றும்

முந்தைய பகுதிகள்

_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க