privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகோவனை விடுதலை செய் ! நெல்லை - கோவை போராட்டங்கள்

கோவனை விடுதலை செய் ! நெல்லை – கோவை போராட்டங்கள்

-

1. நெல்லை மக்கள் அதிகாரம்

“மூடு டாஸ்மாக்கை” என்று பாடல் பாடிய மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழு தோழர் கோவனை கைது செய்ததை கண்டித்தும், “தோழர் கோவனை உடனே விடுதலை செய்!” என்ற கோரிக்கையை முன்வைத்தும் 09-11-2015 காலை 10.30 மணிக்கு நெல்லையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவன் கைது நெல்லை ஆர்ப்பாட்டம்09-11-2015 அன்று நடத்துவதற்கு 05-11-2015 அன்று காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அனுமதி கொடுக்காமல் பல முறை வரச்சொல்லி இழுத்தடித்து காவல்துறை. அதன் பின்பு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞருடன் சென்று நேரில் கேட்டபோது 08-11-2015 தேதி மதியம் 1 மணி அளவில், “அனுமதி கொடுப்பதாகவும் அதற்கு நாங்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்” என்று கூறி, “உங்களை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் பார்க்க வேண்டும்” என்று அழைத்துச்சென்றனர். அவர் “நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்துவதாக உறுதி அளித்து எழுதிக்கொடுத்தால் அனுமதி கொடுக்கிறோம். இல்லையென்றால் இப்போதே கூறுங்கள், அனுமதியை மறுத்துவிடுகிறேன்” என்றும் மிரட்டும் தொனியில் கூறினார். மேலும், “நாங்கள் விதிக்கும் அனுமதி கடிதத்தில் கூறியது போல், கண்டிப்பாக ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. 1 மணி நேரத்திற்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. அதை மீறினால் வழக்குப்போடுவோம்” என்று மிரட்டினார். தோழர்கள் காவல் ஆய்வாளரிடம் மெகா போன் வைப்பதற்கு கேட்டதற்கு, “நாங்கள் கூறுவதுபோல் நடந்துகொண்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்படும்” என்று கூறினார்.

கோவன் கைது நெல்லை ஆர்ப்பாட்டம்திட்டமிட்டபடி 09-11-2015 அன்று பாளை ஜவஹர் திடலில் வைத்து அரசுக்கு எதிராக விண் அதிரும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஆதிலிங்கம் தலைமையில் நடந்தது.

சி.பி.ஐ.எம்.எல். கட்சியின் தோழர் ரமேஷ் பேசும் போது, “தோழர் கோவன் கைது சட்டவிரோதம். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காத காவல்துறையின் அராஜகத்தை கண்டிக்கிறோம். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினால் தேச துரோகம் என்றால், மக்கள் அனைவரும் அதே செய்வோம்” என்றும் கூறினார்.

சி.பி.ஐ.கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.காசி விஸ்வநாதன், “மூடு டாஸ்மாக்” பாடலை தனது கைபேசி மூலம் மெகா போனில் போட்டு அனைவரையும் கேட்கும்படி செய்தார். “கோவன் பாடலுக்கு தேச துரோக வழக்கு போடப்பட்டது கோவனை ஒடுக்கும் செயல் மட்டுமல்ல, எதிர்காலத்தில் என்னநடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். கம்யூனிஸ்ட்டுகள் ஹிட்லரின் பாசிசத்தை விழ்த்தியவர்கள். ஜெயாவின் பாசிசத்தையும் வீழ்த்துவோம். டாஸ்மாக் மூடும் வரை எமது போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

கோவன் கைது நெல்லை ஆர்ப்பாட்டம்மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச்செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் பேசும் போது, “தோழர் கோவன் கைதை கண்டிக்கிறோம். அவர் பாடிய ஊத்திக்கொடுத்த உத்தமி என்ற பாடலில் போயசிஸ் உல்லாசம் என்ற வரியில் எந்த தவறும் இல்லை. உல்லாசம் என்பதற்கு ஜெயா வகையறா உல்லாசமா? இல்லையா? ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின்போது அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான கடிகாரம், செருப்பு, புடவை, நகைகள் எடுக்கப்பட்டது. அது உல்லாசம் இல்லையா? மக்கள் அல்லும் பகலும் கஷ்டப்படும்போது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பும் போது 1000 கோடிக்கு சொத்து வாங்கியது உல்லாசம் இல்லையா? போராட்டத்திற்கு கட்டுப்பாடு போடும் உளவுத்துறை, டாஸ்மாக்கால் எத்தனை பெண்கள் தாலி அறுத்துள்ளார்கள், குடும்பம் சீர் அழிந்துள்ளது என்று ரிப்போட் போடமுடியுமா? மக்கள் கருத்துக்களை பாசிச சட்டத்தினால் ஒரு போதும் தடுக்கமுடியாது” என்றார்.

சி.பி.எம். மாவட்ட செயலாளர் தோழர். பாஸ்கரன், “தோழர் கோவனை நடு இரவில் கைது செய்தது சட்ட விரோதம். முத்துக்குமாரசாமி விஷ்ணுபிரியா போன்றவர்களை தற்கொலைக்கு தூண்டியவர்களை போலீஸ் எப்படி பாதுகாப்புடன் நடந்தது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கோவன் கைது ஜெயா அரசின் தோல்வியின் அறிகுறி, கோவன் கைது பாசிசத்தின் குரல், கருத்து உரிமைக்கு நெறிக்கும் பாசிதத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்களை திரட்டி போராடுவோம்” என்று கூறினர்.

கோவன் கைது நெல்லை ஆர்ப்பாட்டம்வி.சி.கட்சி மா.செயலாளர் எம்.சி.கார்த்திக் பேசும் போது, “கோவன் பாடலை அ.தி.மு.க. வினரும் கேட்கிறார்கள். இந்தப் பாடலை உலகளவில் மாற்றி விட்டார்கள். எங்கள் அமைப்புபிரச்சாரத்தில் கோவன் பாடிய அனைத்து பாடலையும் மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் அதிகாரம் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுத்தும்” என்று பேசினார்.

ஆதித் தமிழர் கட்சி மா.செயலாளர் கலைக்கண்ணன் பேசும் போது “மக்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் பாடல் பாடுபவர்க்கு தேசிய விருது. மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து பாடல் பாடிய கோவனுக்கு தேச துரோகமா? இந்த அரசு மக்களை கொல்லும் கொலைகார அரசு மக்களை குடிக்க வைத்து குடிகாரன் ஆக்குகின்றது” என்றார்.

ம.தி.மு.க. இலக்கிய அணி செயலர் ராமகிருஷ்ணன் பேசும் போது, “நாட்டை குட்டிச் சுவராக்கிய டாஸ் மாக்கை பற்றி பாடலை படியதற்கு தேச துரோகமா? தீபாவளிக்கு ரூ 350 கோடி இலக்கு, இந்த அரசு விளங்குமா? நம்ம குடும்பம் குழந்தைகள் நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் போராட வேண்டும்” என்றார்.

தமிழ் புலிகள் அமைப்பின் மா.செ.தமிழ்மாறன், “தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கை கருத்துரிமை நசுக்கும் செயல். மக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை அடித்து நொறுக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் குருசாமி நன்றி கூறி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

[பத்திரிகை செய்திகளை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம்
திருநெல்வேலி – 8015246753

2. கோவை கருத்துரிமைக்கு ஆதரவான கூட்டியக்கம்

கருத்துரிமையைப் பறிக்காதே

தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ள ம.க.இ.க பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்!
பொய் வழக்குகளை திரும்பப் பெறு!

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம் : செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை

நாள் : 13-11-2015 வெள்ளி மாலை 5.00 மணி

டந்த 30-10-2015 அன்று நள்ளிரவில் டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக தோழர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்தோடு நிற்காமல் அப்பாடலை வினவு இணையதளத்தில் வெளியிட்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பனை கைது செய்ய தனிப்படை போலீசு இன்றுவரை தஞ்சையில் முகாமிட்டுள்ளது. இதன் மூலம், “என்னைப் பற்றியோ, என் அரசைப் பற்றியோ எழுதினாலோ, பேசினாலோ, பாடினாலோ அவர்கள் மீது அரசு அடக்குமுறை கட்டவிழ்த்து விடுவேன்” என்ற கொக்கரிக்கிறது பாசிச ஜெயா கும்பல்.

தோழர் கோவன் கைதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது பாசிச ஜெயாவின் அடக்குமுறையை மீறி ம.க.இ.க-வின் பாடல் மக்கள் பாடலாக உலகம் முழுவதும் காற்றோடு காற்றாக சுவாசிக்கப்படுகிறது.

கருத்துரிமை பறிப்பு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, இன்று நாடுமுழுவதும் இந்துமதவெறி பாசிஸ்டுகள், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் செய்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளான கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர் ஆகியோரை படுகொலை செய்ததோடு ஒருபடி மேலே சென்று மாட்டுக்கறி உண்பவர்களை “இந்து” தர்மத்தின்படி கொலை செய்வோம் என்று பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். மேலும், அறிவிக்கப்படாத அவசர நிலையை கட்டவிழ்த்து விடும் இந்துமதவெறி பாசிஸ்டுகளையும், அதற்கு இணையான பாசிச ஜெயா கும்பலையும் முறியடிக்க வேண்டுமானால் புரட்சிக அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதே தீர்வாகும்.

தலைமை : தோழர் மணிவண்ணன், மக்கள் அதிகாரம், கோவை

உரைவீச்சு
தோழர் கு. ராமகிருட்டிணன், மாநில பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு

தோழர் கே சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர்
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்.

தோழர் செங்கோட்டையன், எம.பி, பொதுச் செயலாளர்,
தலித் விடுதலைக் கட்சி, தமிழ்நாடு

தோழர் வெண்மணி, பொதுச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி, தமிழ்நாடு

தோழர் மு.கார்க்கி, பொதுச் செயலாளர்,
சமூக நீதி இயக்கம், தமிழ்நாடு

தோழர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்,
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்.

தோழர் அப்துல் கரீம்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கோவை

தோழர் ப.பா ரமணி,
கலை இலக்கிய பெருமன்றம், கோவை

தோழர் முருகன்,
சி.பி.ஐ (மா.லெ), ரெட் ஸ்டார்

தோழர் கருணாநிதி,
சாதி ஒழிப்பு சமத்துவ முன்னணி

தோழர் ராஜகோபால்,
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சி

தோழர் தினேஷ்,
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்

தோழர் மோகன்,
மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம்

தோழர் ஜோ. இலக்கியன், மாநகர் மாவட்ட செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் தாமோதரன், மாநில குழு உறுப்பினர்
சி.பி.ஐ.எம்.எல் லிபரேசன்

தோழர் நேரு தாஸ்,
திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் சந்திரன், வழக்கறிஞர், தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம், தமிழ்நாடு

தோழர் சித்தார்த்தன், மாவட்ட செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை

தோழர் விளவை இராமசாமி, மாநில துணைத் தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

நன்றியுரை
தோழர் சம்புகன்,
ம.க.இ.க, கோவை.

தகவல்

கருத்துரிமைக்கு ஆதரவான கூட்டு இயக்கம்
கோவை தொடர்புக்கு : 95858 22157

3. திருச்சி பு.மா.இ.மு சுவரெழுத்து பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு