privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மழைவெள்ளம் - நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்

மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்

-

சென்னை : வெள்ளச் சேதம் – தோல்வியுற்று, வக்கற்றுப் போன அரசுக் கட்டமைப்பு

டந்த ஒரு வாரமாக சென்னை மாநகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தினால் கடும் சீரழிவைச் சந்தித்துள்ளன. சென்னை வேளச்சேரி, வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மக்களை வெள்ளம் காவுகொண்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி பள்ளிக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏரிகள் உடைப்பெடுத்து, சாக்கடை, கழிவுகள் எல்லாம் மழைநீரோடு கலந்து குடியிருப்புகளை மூழ்கடித்து ஒருவாரகாலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையை, சொல்லொணாத் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது.

மணலி பகுதியில் வெள்ள பாதிப்பு


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வெள்ள நீரை வடியச் செய்ய அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனம், மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராடியுள்ளனர். மக்களின் இந்த கோபமெல்லாம் ஆளும் கட்சியினரையும் அவர்களின் அடிமைகளையும் ஒன்றும் செய்துவிடவில்லை. “இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூறக் கூடாது” என்று இரண்டு சீட்டுகளுக்காக அ.தி.மு.க.வை நம்பியுள்ள ஜவாஹிருல்லா கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் கொத்தடிமை சி ஆர் சரஸ்வதி “இவ்வளவு மழை பெய்யும்ன்னு வருண பகவான் போனா செய்தார்?” எனத் திமிரோடு கேட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், விஜய்காந்த் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து சில உதவிகளைச் செய்த பின்னர்தான், போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்தார், ஜெயலலிதா. தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு விஜயம் செய்த அவர், வெள்ள நிவாரணத்தைக் கூட ஓட்டுப் பொறுக்கும் காரியத்துக்குத்தான் செய்கிறார் என்பதை, ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசியதில் இருந்தே தெரிந்துகொண்டார்கள் மக்கள்.

மூன்றுநாட்கள் மட்டுமே பெய்த கனமழை, அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட்வாசிகள் வரை, நரகவேதனைக்குள் தள்ளியுள்ளதற்கு, இயற்கைதான் காரணமா? “முப்பது நாட்கள் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்ததுதான் இவ்வளவு பேரழிவிற்கும் காரணம்” என தமிழக அரசு சொல்கிறது. ஊடகங்களும் இவ்வாறுதான் மக்களை நம்பச் சொல்கின்றன.

நிவாரணம் வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனத்தை மட்டுமே குறையாகக் கூறிக்கொண்டு தங்கள் பங்குக்கு உணவுப்பொட்டலங்கள், போர்வைகளை வழங்கியதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன, எதிர்க்கட்சிகள்.

அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், இயற்கையின் சீற்றம் மட்டுமே வெள்ளச் சேதத்தை உருவாக்கியதென்றும், அதற்கு உடனடியாக நிவாரணம் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இவைகளே தீர்வு என்றும் கருத்துப் பிரச்சாரம் செய்துவருகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் ஏரிகளையும், குளங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பல அடுக்கு மாடி குடியிருப்புகளும், ஐ.டி. நிறுவனங்களும்தான் இன்று பல்லாயிரக் கணக்கான மக்களை நரகவேதனைக்குள் தள்ளியுள்ளன. இயற்கை தரும் கொடையான மழை நீரைத் தேக்கி வைக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் உருவாக்கிவைத்துப் பாதுகாத்து வந்த நூற்றுக்கணக்கான ஏரிகளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள் சி எம் டி ஏ, அரசுத் துறை அதிகாரிகளின் துணையோடு அழித்துக் குடியிருப்புகளை உருவாக்கியதன் விளைவைத்தான் மக்கள் இன்று சந்திக்கின்றனர்.

ஜேப்பியார் முதல் ஏ சி சண்முகம் வரை கல்விக் கொள்ளையர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிய கல்லூரிகளும், குளோபல் டிரஸ்ட் மருத்துவமனை போன்ற மருத்துவத் துறை மாபியாக்களும் அரசுத்துறையும் சேர்த்துதான் இந்த அழிவை உருவாக்கியுள்ளனர்.

வேளச்சேரியை ஒட்டியுள்ள சதுப்புநிலங்களைக் கூட விட்டுவைக்காமல் இயற்கை வடிகால்களை கடந்த பதினைந்து ஆண்டுகளில் சூறையாடியுள்ளனர். பல ஏரிகளை தூர்த்தும், வடிகால்களை தூர்வாராமலேயே பல கோடிகளை சுருட்டியுள்ளனர்.

இவை ஏதோ பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டல்ல. இந்த நிலக்கொள்ளையர்களுக்குள் நடந்த உள்குத்துக்கள் கூலிப்படைகள் மூலம் தீர்க்கப்பட்டன. ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் சண்டைகளே காரணமாய் இருந்தன என ஊடகங்களே எழுதியிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித்துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம், ஆகியவற்றின் அதிகாரிகள் துணையோடு இயற்கையை சூறையாடிய கல்விக்கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாபியாக்களும்தான் சேர்ந்துதான் மக்களின் வாழ்வைச் சூறையாடி அவர்களுக்கு வெள்ளச் சேதத்தை உருவாக்கினார்கள்.

இந்தக் கிரிமினல்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டாமல் மக்களுக்கு ரொட்டிப்பொட்டலங்களை வீசி விளம்பரம் செய்கின்றது, புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதன் உரிமையாளர் பச்சமுத்துவோ, ஏரிகளைக் கொள்ளையிட்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கல்வி ‘வள்ளல்’. இவரின் விளம்பரங்களை போட்டு கல்லாக் கட்டும் ஊடகங்கள் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்தப் போவதில்லை.

ஓட்டுக்கட்சிகளில் அ.தி.மு.க, தி.மு.க தொடங்கி வி.சி.க வரை ரியல் எஸ்டேட் கிரிமினல்களின் ஆசி பெறாத கட்சிகளே இல்லை எனும்போது, இவர்கள் எந்த அதிகாரிகளைக் கூண்டில் ஏற்றுவார்கள்?

நிவாரணப் பணிகளைச் செய்யாத அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராடுவதும், அப்போராட்டங்களை தடியடியால் மட்டுமே அரசு சந்திப்பதும், மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத, கையாகாலாத அரசாக அது மாறிப்போய்விட்டது என்பதை நிரூபிக்கின்றது. இயற்கைப் பேரிடரை கையாளக் கூட அரசு எந்திரத்துக்கு வக்கில்லை என்பதும் அதன் உறுப்புகள் அனைத்தும் இற்றுப்போய்விட்டன என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இயற்கை அழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இயற்கை வளத்தை சூறையாடும் கிரிமினல் கும்பலையும் துணைபோகும் அதிகாரிகளையும் தண்டிக்கவும் இந்தக் கட்டமைப்பு உதவாது. இவற்றை மக்களே, அதிகாரத்தைக் கையில் எடுத்துத்தான் சாதிக்க முடியும் என்பதுதான் இன்றுள்ள ஒரே சாத்தியமான வழியாகும். மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு மக்கள் அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எழும்பூரில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

கடலூர் – பருவமழையால் இழப்பு,தோல்வியடைந்த அரசு கட்டமைப்பு.

ழக்கமாக இந்த ஆண்டு அக்டோபர் 20 முதல் பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவ மழை கடந்த 9, 10 ஆகிய தேதியில் கால தாமதமாக துவங்கியது. இந்த மழை பற்றி வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும் கோடநாட்டில் ஓய்வு எடுத்த அம்மாவின் அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு மனித உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் மக்கள் வாழ தகுதியற்றதாய் மாறி இருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதும் 18-ம் தேதி வரை 180 பேர் செத்து மடிந்துள்ளனர். இந்த மனித படுகொலைக்கு, தான் ஏற்றுக்கொண்ட வேலையை செய்ய தவறிய தோற்றுபோன இந்த அரசு கட்டமைப்பு தான் முக்கிய காரணம். ஆனால், இந்த துயரங்களுக்கு 3 மாதம் பெய்ய வேண்டிய மழை 3 நாளில் பெய்ததுதான் என்று ஆளும் ஜெயா தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பருவ மழை தமிழக மக்களை சொந்த மண்ணில் அகதிகளாய் மாற்றியுள்ளது, உண்மையில் மக்கள் தனது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாய நிலங்களை இழந்து நிற்கின்றனர். இருந்த துண்டு துக்காணி நிலத்தையும், தண்ணீர் விழுங்கி மணலை இழுத்து விட்டதால் ஒரு ஏக்கருக்கு ரூ 3 லட்சம் செலவு செய்தால்தான் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் என கவலையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், தட்டு முட்டு சாமான்கள், மாடுகள், ஆடுகள், இன்னும் பிறவற்றையும் சேர்த்தே தின்று தீர்த்துவிட்டது மழைவெள்ளம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தத் துயரங்களை தீர்க்க மக்கள் அதிகாரம் அமைப்புடன் புதிய ஜனநாயகம் பத்திரிகை குழுவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவி செய்யச் சென்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் தனது பணியை தொடங்கி தொடர்ந்து செய்து வருகின்றது. இதில் கடலூர் மாவட்டம் விசூர் மற்றும் பெரிய காட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

அந்த ஊருக்கு அருகில் மேலிருப்பு கிராமத்தில் உள்ள கால்வாய், ஏரி வாய்க்கால் மூலமே வெள்ளம் புகுந்து வீடுகளை நாசமாக்கியுள்ளது. எனவே இந்த வாய்க்காலில் குறுக்கே 360 அடி நீளத்திற்கு அணைகட்ட வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டோம். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை பார்த்து பேசிவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று சந்தித்து பேசியதில் மக்கள் அதிகாரம் என்றவுடன் உசாரானார். “வேண்டாம் சார் இதை நாங்களே ஏற்பாடு செய்து சரிசெய்துக்கொள்கிறோம் நீங்க உதவி செய்யறதா இருந்தா பக்கத்து ஊருக்கு போங்க” என்று நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அரை மணி நேரத்தில் 6 ஜெ.சி.பி வரவைத்து வேலை ஆரம்பமானது, தோழர்களுக்கு ஒரு டாட்டா ஏஸ் வண்டி ஏற்பாடு செய்தார் அதற்கு பின்புதான் தெரிந்தது.நமது வேலை தொடங்குவதற்கு முன்பே அதிகாரவர்க்கம் விழித்து கொண்டது என்று.

கடலூர் வெள்ளச் சேதம்பிறகு அதிக பாதிப்பு ஏற்ப்பட்ட வீசூரில் சிதைந்த வீடுகள், வீட்டுக்குள் குவிந்த மண் குவியல்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டோம். அதன் படி நாமே வேலையை திட்டமிட்டபடி செய்யலாம் என முடிவு செய்து கொண்டனர். அங்குள்ள நிறையக் குடும்பங்கள் ஊரிலிருந்து அருகில் உள்ள காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒருசில குடும்பத்தினர் மட்டும் வீடு வாசலை சுத்தம் செய்ய வந்திருந்தனர் அவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் உங்களுக்கு உதவிசெய்ய வந்துள்ளோம் என்று அவர்களுடன் நிவாரண பணியில் இறங்கினர் மக்களுக்கு மிகவும் ஆச்சரியமும் ஒரு புதிய நம்பிக்கையும் தெம்பும் வந்ததுபோல் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த உதவிகளை பார்த்த ஒருவர் ”தம்பிகளா நீங்க யார் பெத்த புள்ளையோ தெரியல எங்களுக்கா இவ்வளவு சிரமப்படுரீங்களே நீங்க நல்லா இருக்கணும் தெய்வம்மாதிரி வந்துகிறிங்க உங்க அமைப்பு வளரணும். ஊரு நல்லா இருக்கும், நாங்களும் இந்த அமைப்பில் சேர்ந்துகிறோம்பா” என்றும் கிராமத்திற்கே உரிய எதார்த்த வார்த்தையில் உணர்வுபூர்வமாக மக்கள் அதிகாரம் அமைப்பை வாழ்த்தி வேலையில் ஈடுபட்டார்.

அடுத்து பெரியகாட்டுப்பாளையம் என்ற ஊருக்கு தனது பணியை தொடங்க விசூரிலிருந்து அந்த ஊர் இளைஞர் ஒருவர் டிராக்டரில் ஏற்றி வந்து பெரியக்காட்டுபாளையத்தில் விட்டுச்சென்றார் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஓட்டு கட்சிக்காரர்கள் படைப்படையாய் சென்று அரிசி, துணி, பணம் என முடிந்த பொருளை கொடுத்து விட்டு சென்றிருந்தனர்,

மக்கள் அதிகாரம் அமைப்பு ஓட்டுக்கட்சிகள் கொடுத்த எதையும் தரவில்லை மக்கள் வாழ்வதற்கு அடிப்படையான வீட்டை சுத்தம் செய்துகொடுத்தனர். ஒரு வீட்டின் பீரோ ஆற்றில் கிடந்தது. வீட்டக்காரர்கள் என்ன செய்வது எப்படி எடுப்பது என கலங்கி நின்ற நேரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆற்றில் இறங்கி அந்த பீரோவை கழுவி தூக்கி வந்து கொடுத்தனர். இன்னொரு வீடு மண்ணோடு மண்ணாக அழுத்திக்கொண்டது. அந்த அழுந்திய வீட்டை மக்கள் அதிகாரம் தோழர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர். அதே போல ஒரு டிராக்டர் சேற்றில் பள்ளத்தில் சிக்கி கொண்டது இதை எடுக்க முடியாமல் தவித்தனர். இதையும் மக்கள் அதிகாரம் அமைப்பினரே மீட்டனர். இப்படி முடியாமல் வேறு வழி தெரியாமல் தயங்கி இருந்த மக்களுக்கு முடியும் என்று வேலை செய்து காட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் பாராட்டும் இப்படிப்பட்ட அமைப்பும் இருக்கா என ஆச்சரியமும் இருந்தது.

ஒரு பெண்மணியிடம் “உங்களுக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டது” என்றதும்,

“என் உயிரும் இந்த தண்ணியோடு போயிருந்தா பரவாயில்ல என தோணுதுங்க” என்றார்.

“ஏன் இப்படி சொல்றீங்க”

“வீடும் இல்ல, புள்ளீங்க படிக்க புத்தகமும் இல்ல, இனி என்னாங்க செய்யிறது. அதிகாரிங்கள கேட்டா அங்கேயே போங்க. பிறகு ஏற்பாடு செய்கிறோம் என்கின்றனர். வரவங்க எல்லாம் அரிசி துணி கொடுத்துட்டு போராங்க இதை எல்லாம் வாங்கி எங்க வக்கிறது, எங்களுக்கு இது எதுவும் வேண்டாங்க என் புள்ள படிக்க புத்தக்மும் வீடும் ஏற்பாடு செய்தால் போதும்” என்று ஆத்த முடியாத துயரத்தை கொட்டிதீர்த்தார்.

பெரிய காட்டுப்பளையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே வேறு எங்கெல்லாம் பாதிப்பு இருக்கு என ஊரை தேடி சென்ற போது குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஓணாங்குப்பம் என்ற ஊரில் மிகப்பெரிய பாதிப்பு என போகும் வழியில் விசாரிக்கும் போது ஒருவர் சொன்னார். உடனே ஓணாங்குப்பத்திற்க்கு சென்றோம். ஓணாங்குப்பத்திற்கும் குறிஞ்சிப்பாடிக்கும் ஐந்து கிலோ மீட்டர், அங்கு போகும் வழி நெடுக்கிலும் ரோடு உடைந்து போகமுடியாத அளவிற்கு சிதைந்திருந்தது,

ஓணாங்குப்பம் 600 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் இங்கு கூரை, கல் வீடு என 143 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் 540 ஏக்கர் உள்ளன. விவசாய நிலங்களுக்கு பாய்ச்சலாக ஊரின் அருகில் தட்சணா ஏரி ஓடுகிறது.

ஓணாங்குப்பம் கிராமமே வெள்ளம் சூழ்ந்து கொண்டு தனி தீவு போல் காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பரவனாறு அணை உடைந்தது தான். ஆற்றின் கரையோரம் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு உள்ளதாலும், கூடுதலாக என்.எல்.சி-ல் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றியதும் தான்.

இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகியது ஒனாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி ஆகிய கிராமங்கள்… இதன் காரணமாக கடந்த எட்டு நாட்களாக ஓணான்குப்பம் கிராமத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்களும் கிராமத்திலேயே முடங்கி கிடந்தனர். பக்கத்து ஊருக்கு கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

ஓணாங்குப்பம் ஊரில் உள்ளே நுழைந்ததும் கடலில் மூழ்கிய தீவு போல் காட்சியளித்தது, மக்கள் முகம் முழுவதும் வாடி இருந்தது.

மக்களை சந்திக்கும் முன் எதிரே 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவனைப் பார்த்தோம். அவன் குரல் “எங்கள் ஊருக்கு உயிர் கொடுங்கள்” என்று ஏங்குவதாய் இருந்தது. அந்த மாணவன் ஊரின் பாதிப்பையும் மக்களின் துயரத்தையும் கூறினான்.

“சார் உயிர் சேதம் இல்லை ஆனால் அதற்கு சமமான மெல்ல மெல்ல சாவுற மாதிரி வீடு இழந்து ராத்திரியில் பணியில் குளிரில் பாம்பு பூச்சி இத்தனைக்கும் பயந்து தூக்கமே வராது. இந்த ஐந்து நாளா, கஷ்டபடுரோம்” என்றார்.

“அரசியல் கட்சிக்காரங்க யாரும் வரவில்லையா”

“வராஙக மூணு வேள சோறு தராங்க. ஆனா இன்னிக்கு மதியம் 2:30 வரைக்கும் சாப்பாடு வரல. 2.30 மணி ஆகுது சார்”.

இது போன்று அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் இந்த வட்டாரமே பாதிக்கும். இதைப் பற்றி யாரும் கவலைபடுவதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை என ஊர் மக்கள் அரசின் மீது கோபமாக இருக்கிறார்கள். பிறகு மற்ற ஊரின் பாதிப்புகளை தேடி வரும் போது குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கன்னிதமிழ்நாடு முதல் பாலூர் வரை வாழை பயிர்கள் அனைத்தும் காற்றடித்தும் மழை வெள்ளத்திலும் பாழாய்போய் விவசாயிகளின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வெள்ளத்தால் சுமார் 400 ஏக்கர் சம்பா சாகுபடியான நெற்பயிர் முற்றிலும் நீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது. அந்த நீரை அப்புறபடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமை தான் நீடிக்கிறது..

மக்கள் அதிகாரத்தை பார்த்து பாதியில் ஓடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்…..

போக்குவரத்து சாலை வெள்ளத்தில் அறுத்துக் கொண்டு சென்றதால் அதிகாரிகளோ, அமைச்சர்களோ 17-ம் தேதி வரை பார்வையிடவோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியவோ முன்வரவில்லை.. ஆனால், 18-11-2015 அன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதனால் அவசரம் அவசரமாக சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சரியாக மாலை 5 மணியளவில் ஒனாங்குப்பம் ஊருக்கு பார்வையிட வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான குழு , மக்கள் அதிகாரம் அமைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை உளவுப்பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததால் அவசரம் அவசரமாக பாதியிலேயே திரும்பி சென்று விட்டனர்….

இதுகுறித்து அந்த கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவரை கேட்டதற்கு, “கடந்த 9-ம் தேதியில் இருந்து எங்க ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. VAO மட்டும் தான் வந்து பார்த்துள்ளார். மற்றபடி அரசுக்கு எங்கள் பிரச்சனைகளை தெரியபடுத்த வில்லை.. இன்று ஆளுங்கட்சியில் இருந்து அமைச்சர் வருகிறார் என்ற சொன்னதால் அதிகாரிகளை எதிபார்த்து நாங்கள் அரை மணி நேரமாக காத்து கிடந்தோம்.. ஆனால் ஊருக்குள் வராமல் பாதியிலேயே திரும்பி போய்விட்டனர். யார் வந்தாலும் அப்படி தான் செய்கிறார்கள்…

தற்போது மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தான் எங்கள் ஊருக்கு வந்து கூட பிறந்த தம்பி போல ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றுசென்று , வீட்டை சுத்தம் செய்வது, பொருட்களை வெளியில் கொண்டு வருவது என்று எல்லா வேலையும் நண்பனை போல செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதே வேளையில் “ ரிலையன்ஸ் அறக்கட்டளை தமிழ்நாடு மருத்துவ கழகமும் இணைந்து நிவாரண பொருட்களை வழங்க வந்திருந்தனர். மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்துவிட்டு குளிர்பானம் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.. அதை வாங்க மறுத்த தொண்டர்கள் “நாங்கள் பன்னாட்டு குளிர்பானம் குடிப்பதும் இல்லை, தொண்டு நிறுவனத்தை ஏற்றுக்கொள்வதும் இல்லை” என்று முகத்தில் அறைந்தார்போல் கூறியதால் அமைதியாக சென்று விட்டனர்.

தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் தொண்டர்கள் அப்பகுதி இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்…

மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்