privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகோவன் பாடல் : தி.மு.க ஆதரவா ?

கோவன் பாடல் : தி.மு.க ஆதரவா ?

-

பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – நான்காம் பாகம்

கேள்வி: நக்சலைட்டுகள் பத்தி நான் கேட்ட கேள்விக்கு நீங்க அரசியல் ரீதியா விளக்கம் சொன்னீங்க. ஆனா உங்களுடைய பாதையில ஜனநாயகத்தை நிராகரிச்சிட்டு ஒரு வன்முறையான வழியில மக்களை தூண்டுற போக்குதானே அரசியல் ரீதியா இருக்கு? வார்த்தைகளிலும் சரி, மக்களை திரட்டுவதிலும் சரி வன்முறையாத்தானே இருக்கு. அரசு அதைத்தானே டார்கெட் பண்ணுகிறது?

slider 1பதில்: அரசு அதைத்தான் சொல்கிறது. அல்லது, இந்த அ.தி.மு.க.. பி.ஜே.பி., எல்லாம் அதைத்தான் சொல்றாங்க. அதாவது அவங்களுக்கு ஜனநாயகப் பாதையில நம்பிக்கை இருக்கிறதாகவும், எங்களுக்கு ஜனநாயக பாதையில நம்பிக்கை இல்லை. வன்முறையிலதான் நம்பிக்கை இருக்குதுங்குற மாதிரியும் சித்தரிக்கிறாங்க. இப்போ இதுல ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

ஜனநாயகப் பாதையில நம்பிக்கை உள்ளவர்கள், கடந்த பத்தாண்டோ, இருபது ஆண்டோ, முப்பது ஆண்டோ எடுத்துக்குங்க… முப்பது ஆண்டுகளில அவங்க ஈடுபட்டிருக்கிற கொலை, கொள்ளை, குண்டுவைப்பு, சூறையாடல், தீவைப்பு போன்ற நடவடிக்கைகள் எவ்வளவு? அவங்க கட்சிக்காரங்க மேல – அவங்களே ஆட்சியிலயும் இருந்திருக்காங்க – எவ்வளவு கேசு இருக்கிறது? மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் அல்லது இவங்க சொல்ற எல்லா நக்சலைட் அமைப்புகள் மேல இந்தமாதிரி குண்டு வச்சாங்க மக்களைப் படுகொலை செய்தார்கள், தீ வைத்தார்கள். இப்படி எவ்வளோ கேசு இருக்கு… அப்படின்னு ஒரு கணக்கு பண்ணுவோம். இதுல யார் குற்றம் அதிகமா இருக்குதுன்னு பார்த்து அவங்கள தடை பண்ணிடலாமா? அவங்கதான் பயங்கரவாத அமைப்புனு ஒரு முடிவுக்கு வரலாமா? அதுக்கு இப்படி பேசுறவங்கல்லாம் ரெடியா? அவங்க பதில் சொல்லணும்.

வன்முறையப் பற்றி பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் பேசுறாங்க. பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு தீர்ப்பு வந்தது. மூணு விவசாயக் கல்லூரி மாணவிகள் அவங்களை தீ வச்சு கொளுத்தலையா? கொளுத்துனது குற்றம். கட்சித் தொண்டன் செஞ்சது தப்புன்னு இந்த அம்மா என்னைக்காவது சொல்லியிருக்காங்களா? சுப்ரீம் கோர்ட் வரைக்கும் அவங்க தண்டனைக்கு எதிராக கேசு நடத்திட்டிருக்காங்க. அவங்க குடும்பத்தை பராமரித்து அவங்களை படிக்க வைக்க செலவு பண்ணிட்டு இருக்காங்க.  இந்த வக்கிரப்புத்தி படைத்தவர்கள் வன்முறையப் பற்றி பேசுவதா? சந்திரலேகா மூஞ்சியல ஆசிட் வீசினது யாரு? எத்தனை வன்முறைகளை பட்டியலிடணும் இந்த ஆட்சிக் காலத்துல?

பி.ஜே.பி.க்கு என்ன யோக்கியதை இருக்குது.? தாத்ரி படுகொலையை எடுத்துக்குங்க, கல்புர்கி படுகொலை எடுத்துக்கிங்க. பன்சாரே கொலையை எடுத்துக்குங்க. இதெல்லாம் என்ன? அல்லது குஜராத் படுகொலையை எடுத்துக்குங்க. இவங்களுக்கு வன்முறையப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வன்முறையின் உருவம் ரெண்டு பேரும். அதனால இவங்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒண்ணுதான். இந்த வன்முறைக்கு எதிராக எதிர் வன்முறைக்கு மக்கள் தயாராக வேண்டும். இதை சகித்துக் கொண்டு போகக்கூடாது. என்பது மட்டும்தான் இதுல நாம சொல்ல வேண்டிய செய்தி.

கேள்வி: பொதுவா ஜனநாயகம் அப்படின்னா தேர்தல்ல பங்கெடுக்கக்கூடிய அமைப்புகள சொல்றாங்க. இந்த கொலை கொள்ளை இந்த மாதிரி விசயங்கள் இருந்தாகூட, தேர்தல்ல பங்கேற்கக்கூடிய ஒரு அமைப்பு  ஜனநாயக அமைப்பு அப்படிங்கிற ஒரு பார்வை ஒரு அரசியல் புரிதல் மக்கள் கிட்ட இருக்கு. உண்மையிலே நீங்க அரசியல் ரீதியா போராடணும்னா தேர்தல்ல பங்கேற்று உங்களுடைய உணர்வை வெளிப்படுத்தலாமே?

பதில்: அதாவது கொலை கொள்ளை செஞ்சாக்க அந்த பாவங்கள் எங்க கழுவப்படும்னா., தேர்தல்ல நின்னா கழுவப்படும். அதான் இப்ப இருக்கிற ஏற்பாடு. அதனாலதான் பார்லிமென்ட்டுல, சட்டசபையில, எங்க எடுத்தாலும் பாதி பேரு கிரிமினல். அதுல ஒன் தேர்டு கொலை கேசு இருக்குது. திருட்டு கேசு இருக்கு, இலஞ்ச ஊழல் கேசு இருக்கு. இதெல்லாம் பார்க்கிறோம். அப்ப எங்களோட இந்த கூட்டத்துல சேர்ந்திருன்னு கூப்பிடுறாங்க.

இது ஜனநாயகமில்லை., இந்தக் குற்றக் கூட்டத்துல நாங்க சேர முடியாது அதனால நாங்க வெளியே நிற்கிறோம். இப்ப அதுதான் இவங்களுக்கு பிரச்சினையா இருக்குது. இது ஜனநாயகமா என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்கே, இவர்களுடை நடவடிக்கைகளை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  உண்மையான ஜனநாயகம் வேணும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

மக்கள் அதிகாரத்தினுடைய டாஸ்மாக்கை எதிர்த்தப் போராட்டத்தை ஒரு எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்குங்க. டாஸ்மாக்கை மூடணும்னா என்ன செய்யனும்? சசிபெருமாள் மாதிரி கால்ல விழுந்து குடிக்க போறவன் கிட்ட மன்றாடணும். இல்லைன்னா கலெக்டருக்கு மனுக் கொடுக்கணும். முடியலைன்னா கோர்ட்டுக்குப் போகணும். கோர்ட்ல ஒரு ஆர்டர் வாங்கினா கூட, அரசாங்கம் அதை அமல்படுத்தாது. அமல்படுத்தலைன்னா அத அமல்படுத்துன்னு சொல்லி அதுக்கு ஒரு உண்ணாவிரதம் இருக்கனும். அதை இந்த அரசாங்கம் மதிக்காது. மதிக்காதபோது டவர்மேல ஏறணும்,  இல்லைனா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்கனும். இதெல்லாம் ஜனநாயகப் பூர்வமான வழியாம். சசிபெருமாளுக்கே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைன்னுட்டாங்க. அந்த ஆளு எப்படி, டவர்ல ஏறினாரு? அவர் காந்திய வாதி கிடையாதுன்னாங்க.

மக்கள் அதிகாரம் முன்வைக்கும் வழி என்ன? இந்த அரசுதான் டாஸ்மாக்கை நடத்துது. இந்த அரசுதான் மணற்கொள்ளையை நடத்துது. இந்த அரசுதான் கிரானைட் கொள்ளையை நடத்துது. அதுவும் அதிகார வர்க்கத்தின் துணையோடு, பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் ஆதரவோடு இது நடக்குது. அப்போ, யார் இதை நடத்துறாங்களோ அவங்க்கிட்டயே போயி கேக்கிறதுல என்ன பொருள் இருக்கிறது?

ஜனநாயகம் என்பது மக்களின் அதிகாரம். எங்க ஊர்ல கடை கிடையாதுன்னா நான்தான் முடிவு பன்னனும். எங்க ஊர்ல ஆத்துமணல் எடுக்கக்கூடாதுனா நான்தான் முடிவு பன்னணும்.  விவசாயிகளை மீறி முடிவு செய்ய, கலெக்டர் யார்? ஆர்.டி. ஓ..யார்? அரசு யார்? அப்படிங்கிறதுதான் கேள்வி. இது ஜனநாயகப் பூர்வமான கேள்வியா இல்லையா? அல்லது அவங்க கடை திறந்திட்டே இருப்பாங்க, நாம கலெக்டர்கிட்ட மனு போட்டுகிட்டே இருக்கணும்கிறதுதான் ஜனநாயகமா என்பதை மக்கள் முடிவு பண்ணிக்கட்டும்.

கேள்வி: இன்னொரு ஆறேழு மாசத்துல தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இதில பிரதான கட்சிகளான தி.மு.க.., அ.தி.மு.க., ரெண்டுபேருமே போட்டியிடுறாங்க. நீங்க ஜெயலலிதாவை மட்டுமே தொடர்ந்து டார்கெட் பன்றீங்க, அவங்களை மட்டுமே விமர்சிக்கிறீங்க என்றக் குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறது.

பதில்: அதாவது ரெண்டுவிதமான மடமைகள் இருக்கிறது. ஒண்ணு, இந்த பாராளுமன்ற அரசியல்தான் அரசியலே, என்று கருதும் மடமை. இன்னொண்ணு, உலகத்தில்  தி.மு.க., அ.தி.மு.க.ன்னு ரெண்டுதான் இருக்கு. இதை தவிர வேற ஒண்ணுமில்லை என்று கருதுவது. அப்படிக் கிடையாது.

ஆளும்கட்சியைத் தான் நாம விமரிசிக்க முடியும்? இப்போ மன்மோகன்சிங்கை எதிர்த்து அரசியல் பேசிட்டு இருக்க முடியுமா, மோடி ஆட்சியில் இருக்கும்போது?  இப்ப ஜெயலலிதா ஆட்சி. ஜெயலலிதா ஆட்சி என்ன செய்கிறதோ, என்னக் குற்றங்களை இழைக்குதோ அதை எதிர்த்துதான் பேச முடியும்.

டாஸ்மாக் பிரச்சினையல் நாங்கள் பிரச்சாரம் பண்ணுவது தி.மு.க.வுக்கு ஆதரவாக முடிந்து விடும் என்று ஜெயலலிதா அரசு அஞ்சினால், அல்லது அவர்களது ஆதரவாளர்கள் அஞ்சினால், டாஸ்மாக்கை மூடுகிறோம்னு அவங்களே சொல்லிவிடலாமே.  மூட மறுத்து,  தி.மு.க.வின் வெற்றிக்கு இவங்க ஏன் துணை போறாங்க அப்படிங்கிறதுதான் எம்முடைய கேள்வி. எங்களை விடுங்கள். இவர்களே ஏன் அவர்களுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறார்கள்? மூடி விடட்டுமே, யார் வேண்டாம்னது?