privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்"பூமராங் ஆனது இராமபாணம்!" - அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

-

ந்திய  தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), கரக்பூரில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஆனந்த் தெல்தும்டே குறித்து பு.ஜ. வாசகர்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர் – எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் அவர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார்.  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியும் வருகிறார்.

பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, இந்து மதவெறி அமைப்புகள் நாடெங்கும் பரவலாக முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீதும்; அறிவுத்துறையினர் மீதும் தாக்குதல் நடத்திவரும் சூழலில், சென்னை ஐ.ஐ.டி.-யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம், “மாட்டுக் கறி உண்பது மற்றும் இந்து எதிர்ப்பு மனோநிலை” (Beef Eating and Anti Hindu Psyche)  எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை 30-10-2015 அன்று நடத்தியது.  புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் “உணவு மற்றும் சமூக-பொருளாதார நிலை, சகிப்புத்தன்மை இன்மை” (Food and Socio Economic, Intolerance) எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை 31-10-2015 அன்று நடத்தினர்.

இவ்விரு கருத்தரங்குகளிலும் சிறப்புரையாற்ற வந்திருந்த பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேயிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. பிரிவு சார்பாக, இன்று நாட்டில் நிலவும் அசாதாரணமான பாசிச சூழல் குறித்து ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது.  அந்நேர்காணல் பு.ஜ. வாசகர்களுக்கு சுருக்கித் தரப்படுகிறது.

***

மோடியின் ஆட்சித்திறன் (Governance)  பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அது முந்தைய ஆட்சியைவிட எப்படி வேறுபட்டிருக்கிறது ?

அவரது ஆட்சித்திறன் பரிதாபகரமானதாக இருக்கிறது. இவர் அனைத்துத் தளங்களிலும் தடுமாறுகிறார்; அடுத்தடுத்து எவ்வளவு கீழே இறங்க முடியும் என்பதையே நிரூபிக்கிறார்; பல பொய்களையும் சொல்கிறார். அரசியல் வெற்றிடத்தின் பலனைப் பெற்றிருக்கிறார். குறைந்தபட்சம் நடுத்தரவர்க்கத்தையாவது கவர்வார் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவர் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இன்றைய சூழலில் அவர்களது நடவடிக்கைகள் அவர்களையே பூமராங் போல் திரும்பத் தாக்குகின்றன. அவர்களது செயல்கள் மூலம் அவர்கள் அவர்களையே தோற்கடித்துக் கொள்வார்கள். 14 மாதங்களுக்கு முன்பு இருந்தது போன்ற ஆதரவு அவர்களுக்கு தற்போது இல்லை.

இந்துக்களை ஒருங்கிணைப்பது தங்களது நோக்கம் என்று அவர்கள் கூறினாலும், பல்வேறு சாதிக் கட்சிகளை அங்கீகரிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். அது குறித்து …

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே

அகண்ட பாரதம் என்ற பொய்யைப் பரப்பி இந்துக்களை சனாதன தர்மத்தின் கீழ் ஒருங்கிணைத்து ஆட்சி செய்யவேண்டும் என்பது தான் அவர்களது இலக்கு. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மேலே ஆட்சி செய்யத் தகுதியானவர்கள். அவர்கள் மட்டுமே ஆள வேண்டும், மற்றவர்கள் அவர்களின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பதுதான் அவர்களது தத்துவம். ஆனால், அவர்களால் இதனை நேரடியாகப் பேச முடியாது. இது குறித்துப் பகிரங்கமாக எழுதியுள்ள கோல்வார்கரின் புத்தகங்களை, அவர்கள் விற்பனையில் இருந்து விலக்கிவிட்டார்கள். அப்புத்தகங்களின் பிரதியை நான்தான் இணையத்தில் வெளியிட்டேன். அவர்களின் நிலை இதுதான். இந்த நிலையை இவர்கள் பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாது. ஆகவே, அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் தாழ்த்தப்பட்டோர் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அப்படி வருபவர்கள் அனைவரும் ஆதிக்க படிநிலையை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களது உச்சகட்ட நிகழ்ச்சிநிரல்.

முற்போக்கு அறிவுஜீவிகளைக் கொலை செய்வது, அவதூறு செய்வது என உதிரி அமைப்புகள் செயல்படுகின்றனவே, அவை தானாகச் செயல்படுபவையா அல்லது வேறு ஏதேனும் முக்கிய அமைப்புகள் இதன் பின்னணியில் செயல்படுகின்றனவா?

முதலில் அவர்களை உதிரி அமைப்புகள் என்று ஊடகங்கள்தான் பரப்புரை செய்கின்றன.  அவர்கள் அனைவரும் சங்கப் பரிவாரத்தின் ஒரு பிரிவே. சிலர் அத்தகைய அடையாளத்துடன் இருப்பார்கள், சிலர் அத்தகைய அடையாளம் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸுடன் உள்ள தொடர்பை மறுப்பார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத்கூட முதலில் ஆர்.எஸ்.எஸ். உடனான தொடர்பை மறுத்தது; பின்னாளில் அவர்களும் சங்கப் பரிவாரத்தின் ஒரு பிரிவினர் என்பது பகிரங்கமாக வெளித் தெரிந்தது. ஆர்.எஸ்.எஸ்-இன் மொழியைப் பேசுகின்ற அனைத்து அமைப்புகளுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ சங்கப் பரிவாரத்துடன் தொடர்புடையவர்களே.

அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கக் கோருவது, ராமர் கோவில் போன்ற பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு, இப்போது இவர்கள் மாட்டுக் கறி பிரச்சினையை மட்டும் எடுத்திருப்பது குறித்து…

இப்பிரச்சினை நடுவில் வந்திருக்கிறது. ராமர் கோவில் பிரச்சினையை அவர்கள் கைவிடவில்லை. ஆள் பலம் சேர்த்த பிறகு ராமர் கோவில் பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். ராமர் கோவில் கட்டுவதுகூட அவர்களது நோக்கம் அல்ல. இன்னும் சொல்லப் போனால், விசயங்கள் அவர்களுக்குச் சாதகமான முறையில் சென்று கொண்டிருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக ராமர் கோவிலைக் கட்டமாட்டார்கள். இவை அனைத்தும் அவர்களது இந்து ராஜ்ஜிய இலக்கை அடைய, மக்களை முனைப்படுத்தும் ஒரு வேலையே.

1990-களில் ராமர் கோவில் பிரச்சினையை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல் வளர்ச்சியடைந்தது. அப்போது இங்கிருந்த சமூக நீதிக் கட்சிகள் மண்டல், கமண்டலத்தை எதிர்க்கும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். அதாவது மண்டல் கமிசனின் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கை, சாதிய பிரச்சினையைத் தீர்க்கும் என்று கூறினர். அது குறித்து உங்கள் கருத்து என்ன?.

மாட்டிறைச்சி தடை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இறைச்சிக்காக பசு மற்றும் காளை மாடுகள் வெட்டப்படுவதைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மும்பய் நகரிலுள்ள ஆஸாத் மைதானத்தில் இறைச்சி வியாபாரிகள் – தொழிலாளர்கள், மாட்டுத் தரகர்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

அனைத்து மண்டல்களும் கமண்டலத்துக்குள் அடங்கி விடும். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னையில் இருந்தபோது இங்குள்ள இடதுசாரி அமைப்புகளுடன் இது குறித்து விவாதித்துள்ளேன். இட ஒதுக்கீடு கண்டிப்பாக சாதிப் பிரச்சினையைத் தீர்க்காது. மண்டல் கமிசன் இந்துத்துவத்தின் அடிப்படையாக இருந்தது. மண்டல் கமிசனுக்கும் இந்துத்துவத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லையென்றாலும்கூட, அப்படி எண்ணுவதற்கான அடிப்படை இருந்தது.

மாடு வெட்டுவது தடை செயப்பட்டிருப்பது அதனை நம்பியுள்ள குரேஷி மற்றும் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களில் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

தடை இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் விளைவுகள் உடனடியாக வெளித்தெரியவில்லை. அதேசமயம், மாடு வெட்டும் தொட்டிகளில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலரும் வேலை செய்கின்றனர். மராட்டியத்தில் எருமைகள் வெட்டுவது இன்னமும் தடை செயப்படவில்லை என்பதால், மாடு வெட்டும் தொட்டிகளை முற்றிலுமாக மூடிவிட மாட்டார்கள். இதனால் சில தொட்டிகள் பிழைத்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். கடந்த ஆண்டு 34 மில்லியன் டன் இறைச்சி உற்பத்தி செயப்பட்டுள்ளது. இதில் 20 மில்லியன் டன் மாடுகளிலிருந்தும், 14 மில்லியன் டன் எருமைகளிலிருந்தும் பெறப்பட்டவை. இப்போது மாடு வெட்டுவது தடை செயப்பட்டுள்ளதால், 20 மில்லியன் டன் அளவிற்கான உற்பத்தி தடைபடும். இதன் காரணமாகப் பலர் வேலையிழப்பர்.

அமித்ஷா தேவேந்திரர் மாநாட்டில்
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து கடந்த ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்திய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் அமித் ஷா.

அருண் ஜெட்லி குற்றம்சாட்டுவது போல சாகித்ய அகாடமி விருதுகளைத் திரும்பத் தருவது திட்டமிட்டு நடப்பதாகக் கருதுகிறீர்களா?

அது அருண்ஜெட்லியின் கருத்துதானே ஒழிய, அதில் உண்மையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் எழுத்தாளர்கள் தங்களது எதிர்ப்பினைக் காட்டியுள்ளனர். இதற்கு யாராவது ஒருவர் முன்முயற்சியுடன் வந்து தொடங்கி வைக்க வேண்டியிருந்தது. நான் எழுதியுள்ளது போல நேற்றுவரை முதுகெலும்பில்லாமல் கிடந்தவர்கள் இன்றைக்குத்  தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்கின்றனர். இது நல்ல விசயம் தான். இது எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தாலும், எதிர்ப்பை வேறு எப்படிக் காட்டுவது? ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு வேறு மொழி புரியாது. அவர்களுக்கு புரியும் ஒரே மொழி துப்பாக்கியின் மொழிதான். காங்கிரஸ் காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நீடிக்கிறது.

இனி “தலித் விடுதலை” என்பது அடையாள அரசியல் முலம்தான் சாத்தியம் எனப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தலித் எழுத்தாளர்களும், செயல்பாட்டாளர்களும் இணைந்து வெளியிட்ட போபால் அறிக்கை தற்போதைய சூழலுக்குப் பொருந்துகிறதா?

போபால் அறிக்கை வெளியிடப்பட்ட அன்றும் சரி, இன்றும் சரி அது முற்றிலும் தொடர்பற்ற ஒரு முட்டாள்தனமான அறிக்கை. உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் அதன் மூலம் பயனடைந்த தலித் எழுத்தாளர்களில் சிலர் அதனை ஆதரித்து வந்தனர். அது என்னவென்றே தெரியாத காரணத்தால், மற்றவர்கள் மவுனம் சாதித்தனர். ஆனால், உலகமயம் என்றால் தனியார்மயம்தான் எனத் தெரிய ஆரம்பித்தபோது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கத் தொடங்கிய பிறகு, இடஒதுக்கீடு பறிபோகிறது என்ற அடிப்படையில் தலித் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. அந்த அதிருப்தியை மடைமாற்றி விடுவதற்காக ஆளும் வர்க்கத்தால் கொண்டுவரப்பட்டதுதான் போபால் அறிக்கை. காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங்தான் இந்த போபால் மாநாட்டிற்கு ஏற்பாடு செதவர். போபால் அறிக்கை, அடையாள அரசியல் பற்றி மட்டும் பேசவில்லை, தலித் விடுதலைக்கு நிலப் பகிர்வில் சில மாற்றங்கள், தலித் மூலதனம், தலித் முதலாளிகள், தனியார் துறையில் இடஒதுக்கீடு என உலகமயமாக்கலின் சந்தைப் பொருளாதாரத்தில் தலித்துகள் போட்டியிடுவதற்கு இவையெல்லாம் தேவை எனப் பல விசயங்களைப் பட்டியலிடுகிறது. இதன் மூலம் உலகமயமாக்கல் தலித்துகளுக்கு நல்லது செயும் என்பதை நிரூபிக்க முயன்றனர். “டிக்கி” (தலித் இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸ்) போன்ற நிறுவனங்கள் அப்போது தொடங்கப்பட்டவைதான். ஆனால், முன்னே கூறியது போல, அது அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி பொருந்தாத முட்டாள்தனமான அறிக்கைதான். ஒரு தலித் தொழிலாளியை ஆதிக்கசாதி முதலாளி சுரண்டுவதைவிட, இன்னும் ஒருமடங்கு அதிகமாகச் சுரண்டும் தலித் முதலாளிகளை உருவாக்குவதைத்தான் அவர்கள் தலித் விடுதலை என்று கூறுகிறார்கள்.

இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய வேண்டுமா?

இன்று இட ஒதுக்கீடு அதற்கான அவசியத்தை இழந்துவிட்டது. ஆனால், இதனை வெளிப்படையாகப் பேச முடியாது. ஏனெனில், இது ஒரு பெரிய மனத்தாங்கலான விசயமாகிவிட்டது. இப்போது ஐ.ஐ.டி. யில் அனைத்து சீட்டுகளும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால், தலித்துகளுக்கு உரிய இட ஒதுக்கீடு முழுமையாக அவர்களுக்குப் போ சேரவில்லை. ஏனெனில், இட ஒதுக்கீடு என்பது இங்கே பலனடைந்தவர்களுக்கு மீண்டும் பலனடையச் செயக்கூடியதாக இருக்கிறது.

சாதியை ஒழித்துக்கட்டுவதில் அம்பேத்கர் முன்வைத்த கருத்துகளின் தற்கால பொருத்தப்பாடு பற்றிய உங்கள் கருத்து…

சாதியை ஒழிப்பதற்காக அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகளை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும், அதைச் சீர்திருத்த முடியாது என்பதும் சரியானதே. அம்பேத்கர் இந்து மதத்தை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. இந்து மதத்தை இரண்டாகப் பார்க்கிறார்; ஒன்று, விதிகளை உள்ளடக்கிய மதம்; மற்றது, கொள்கைகளை உள்ளடக்கிய மதம். பெரும்பான்மை மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தாத உபநிடதங்கள் அடங்கிய, கொள்கைகளை உள்ளடக்கிய மதத்தை அவர்  எதிர்க்கவில்லை; ஆனால், ஸ்மிருதிகள், புராணங்கள் மற்றும் பார்ப்பனியம் உள்ளிட்ட சாதிய அமைப்பை நடைமுறைப்படுத்தும் வேர்களான, விதிகளை அடிப்படையாகக் கொண்ட மதத்தை எதிர்த்தார். அதனால்தான் தர்ம சாஸ்திரங்களை வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால், எக்காலத்திலும் ஒரு இந்து தன்னுடைய தர்ம சாத்திரங்களை எரிக்கவோ வீழ்த்தவோ தயாராக இருக்க மாட்டான், அதனால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். சாதி என்பது மதத்துடன் மட்டும் கட்டுண்டு கிடப்பதில்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறையில் பின்னிப் பிணைந்துள்ளது, அதனால் மதத்திலிருந்து வெளியேறுவது போன்ற அவர் முன்வைத்த கருத்துகள் ஒரு தீர்வைத் தராது!
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க