privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?

குற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?

-

மது அருந்திய பள்ளி மாணவிகள்: துரத்தப்பட வேண்டியது மாணவிகளா? ஊத்திக்கொடுத்த அரசா?

ரசே நடத்தும் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவந்த போதும், அனைத்துக் கட்சிகளும் கடைகளை மூடக்கோரி பல்வேறு வடிவங்களில் போராடியபோதும் ஆளுகின்ற அ.தி.மு.க அரசு டாஸ்மாக் கடைகளை மூட முடியாது எனத் திமிராக அறிவித்ததோடு, தீபாவளிக்கு ரூ 370 கோடி இலக்கு வைத்து சாராய வெள்ளத்தைப் பெருக்கோட வைத்தது.

மழை வெள்ளத்தில் கடலோர மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உடனடியாக மக்களின் துயர்துடைக்க வக்கற்ற அரசாக முற்றிலும் தோல்வியுற்ற வேண்டாத சுமையாகிப்போன இந்த அரசு, வெள்ளத்தினை சாக்கிட்டு 17 நாட்கள் பள்ளிகளை மூடிவைத்திருந்த அரசு, டாஸ்மாக் கடைகளை ஒரு நாள் கூட மூடச்சொல்லவில்லை. இதிலிருந்தே இது மக்கள் நல அரசல்ல; சாராய வியாபாரிகளின் சாம்ராஜ்யம்தான் என்பது தெளிவாகின்றது.

ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தையும் குடியால் சீரழிந்த நடமாடும் பிணங்களாக மாற்றிவிடும் இலக்கில் செயல்படும் மக்கள் விரோத அரசால், இரு தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு பள்ளி மாணவிகள் பலிகடா ஆக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர். அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் இவ்வாறு மது போதை காரணமாக பள்ளி மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

மாணவர்கள் போதைக் கலாச்சாரத்துக்கு செல்வதை நாமும் கண்டிக்கிறோம். ஆனால் அதே வேளையில் இச்சம்பவத்தில் மாணவிகள்தான் குற்றவாளிகள் என்பதை உறுதியாக மறுக்கிறோம். பள்ளிக்கூடம்/நூலகம் இல்லாத ஊர்களில் கூட டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து அரசு விற்பனை இலக்கு வைத்து வியாபாரம் நடத்துகிறது. கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மிக அருகில் கூட கடைகளை வைத்துக் கொண்டு, எதிர்கால சந்ததிகள் நாசமாகப் போக வேண்டும் என்றே மக்களை சாராய வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது, இந்த அரசு.

இதற்கெதிராக மனு கொடுத்தார்கள் மக்கள். உண்ணாவிரதம், மறியல் என எல்லா வடிவங்களிலும் போராடிப் பார்த்து விட்டார்கள். நீதிமன்றத்துக்கு சென்றால், மது விற்பது அரசின் கொள்கை; அதில் தலையிட முடியாது என்றது நீதிமன்றம். பள்ளிக்கு அருகே உள்ள சாராயக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் அரசு செயல்படுத்துவதில்லை. நெடுஞ்சாலை ஓரக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவு போட்டால், கடைகளின் சாலைப்பக்கமாக உள்ள வாயிலை மூடிவிட்டு அதே கடைகளுக்கு பின்பக்கமாக திறப்பு அமைத்து சாராய வியாபாரம் நடத்தும் போதை வியாபாரியாக அரசு மாறியுள்ளது. கடைகளை மூடினால், கள்ளச்சாராயமும், ரவுடிகளும் பெருகிவிடுவார்கள்; எனவே மூடமுடியாது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமிராக அறிவித்துள்ளார்.

குடிகெடுத்தே தீருவதென்ற ‘இலட்சிய’வெறியோடு அரசு, நீதிமன்றம் கூட்டு சேர்ந்து செயல்படும்போது, மாணவர்கள் பலியாவது ஆச்சரியப்படும் நிகழ்வல்ல. இச்சீரழிவுக்கு மாணவர்களும் பொறுப்பல்ல. தற்போது பள்ளிகளில் இருந்து துரத்தப்பட்டு 4 மாணவிகள் எதிர்காலத்தை இழந்துள்ளார்கள். ஊத்திக்கொடுத்த அரசுதான் உண்மையான குற்றவாளி. துரத்தப்பட்டு எதிர்காலம் அழிக்கப்பட வேண்டியது இந்த அரசுக் கட்டமைப்புதானே தவிர மாணவர்கள் அல்ல.

மாணவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது; எனவே கடைகளை மூடுங்கள் என்ற கெஞ்சலுக்கெல்லாம் அரசு பணியாது என்பதும், நீதிமன்றத்திலும் இதற்கு நீதி கிடைக்காது என்பதும் பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே இனி, நாம் செய்ய வேண்டியது, அரசமைப்பிடம் கெஞ்சுவது அல்ல; அதிகாரத்தைக் கையில் எடுத்து நாமே கடைகளை மூடுவதுதான் சாத்தியமான ஒரே வழி என்றும், அதற்காக அணிதிரண்டு அதிகாரத்தைக் கையில் எடுக்குமாறும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.

இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சு சாகணும்?
எத்தனை தாலி அறுந்து விழணும்
?
டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டியது
, இந்த அரசுக் கட்டமைப்புதான்.!!!
மாணவர்கள் அல்ல!!

மக்கள் அதிகாரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்