privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்லைட்விண்டு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை !

லைட்விண்டு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை !

-

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 27-11-2015 மாலை 5 மணிக்குக் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் மோகன்பாபு, கிளையின் உறுப்பினர் தோழர் முனுசாமி இருவரும் கண்டன உரையாற்றினர்.

ndlf-tvlr-meeting-1தோழர் சதீஷ் தனது தலைமையுரையில், “சாராயம் விற்கக்கூடாது என்றால் தேசத்துரோக வழக்கு போடுகின்றனர். சாராயத்தால் உழைக்கும் மக்களுக்கு ஏதேனும் நன்மை உள்ளதா? அரசே சாராயம் விற்பது சரியா? உரிமைக்காக போராடினால் அரசு எப்படி ஒடுக்குகிறதோ அதுபோன்றே போராடும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். லைட்விண்டு முதலாளிக்கு எதிராக நாம் கண்டனக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இதே நாளில் தான் மாருதி சுசுகி தொழிலாளர்களும் உரிமைப்பறிப்புக்கு எதிராகப் இந்தியா முழுவதும் தொழிலாளர்களை அணிதிரட்டி மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆலையில் உரிமைக்காக சங்கம் துவக்கியதற்காக 147 தொழிலாளிகள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் உரிமை என்று பேசினால் கூட அது முதலாளிகளுக்கு எதிரானது என்பது தான் நமது நாட்டில் எழுதப்படாத விதியாக உள்ளது.

ndlf-tvlr-meeting-2அதே போல இங்கும் லைட்விண்டு ஸ்ரீராம் ஆலையில், முதலாளியைக் காட்டிலும் அவர்களின் எடுபிடிகள் தான் தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதில், புரட்சிகர சங்கத்தை ஒழித்துக்கட்டுவதில் தீவிரமாக செயல்படுகின்றனர். குறிப்பாக, அனைத்து திட்டங்களையும் போட்டுக் கொடுத்து தொழிலாளர்களுக்கு விரோதமாய் நடந்து கொள்வதில் மூளையாகச் செயல்படும் HR அதிகாரி நாகேஸ்வரன் மற்றும் கார்ப்பரேட் HR ரமேஷ், 5 தொழிலாளிகளை சஸ்பெண்டு செய்யச் சொல்லி நிர்வாகத்தை தூண்டிய கலையரசன், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, தற்போது தொழிலாளிகளுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொல்லிக்கொண்டிருக்கும் செக்யூரிட்டி ஆபிசர் ஆறுமுகம், வடமாநில தொழிலாளிகளை மிரட்டி பணியவைக்க துடிக்கும் அனந்தராமகிருஷ்னன் ஆகியோர். லைட்விண்டில் பணிபுரியும் போது ஆட்களை வேலையில் அமர்த்துவதற்கு புரோக்கர் கமிஷன் வாங்கியதால் துரத்தப்பட்ட புரோக்கர் கோபாலகிருஷ்ணனும் HR நாகேஸ்வரனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தொழிலாளர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் வேலையை விளைவித்து வருகிறார்.

ndlf-tvlr-meeting-3இந்த அடியாள் படையும், இவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள INTUC சங்கமும் தான் நமது சங்கத்துக்கு எதிரான வேலையைச் செய்து வருகின்றனர். இந்த துரோகிகளை ஒழித்துகட்டி தொழிலாளர்களின் உரிமையைப் பெற வேண்டுமெனில் தொழிலாளி வர்க்கமாக நாம் அனைவரும் ஒன்று சேர்வது தான் தீர்வு” என்ற தொழிலாளிகளை அறைகூவி அழைத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

கண்டன முழக்கத்துக்கு பின் புரட்சிகரப் பாடல் பாடப்பட்டது.

தொடர்ந்து கண்டன உரையாற்றிய லைட்விண்டு ஸ்ரீராம் கிளை உறுப்பினர் தோழர் முனுசாமி, “நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் தொழிலாளிகள் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டும் தொழிலாளர்கள் உறுதியோடு நின்று ஜெயித்த போராட்டங்கள் பல உள்ளன. நமது உரிமையைப் பறிக்கும் நமது நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி நாமும் வெல்ல வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

ndlf-tvlr-meeting-4லைட்விண்டு கிளைத்தலைவர் தோழர் மோகன்பாபு, தாங்கள் பணியில் சேர்ந்தது முதல் சங்கம் துவக்கும் வரை சந்தித்த அடக்குமுறைகளையும், சங்கம் துவக்கிய பின் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், அதைச் சங்கமாக நாம் எதிர்கொண்டு வருவதையும் எடுத்துரைத்தார். அடிபட்டுக் கிடக்கும் தொழிலாளியைக் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டிய நிர்வாகத்தை சாடினார். இறுதியாக, போராடிப் பெற்ற உரிமைகளை இழக்காமல் இருக்கவும், பாதுகாத்துக்கொள்ளவும் தொழிலாளிகள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என உரையை முடிவு செய்தார்.

ndlf-tvlr-meeting-5கண்டன உரையாற்றிய மாவட்டத் துணைத் தலைவர் தோழர் நாகராஜன், “இன்று அரசு யாரெல்லாம் மக்களின் உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை பயங்கரவாதிகள் தேசதுரோகிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குமுறையை ஏவுகிறது. ஆனால் உண்மையிலேயே அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி, வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. முதலாளிகளின் இந்த பயங்கரவாதச் செயல்களை நாம் தட்டிக்கேட்கக் கூட உரிமை மறுக்கப்படுகிறது.

ndlf-tvlr-meeting-6இந்த சட்டவிரோத நடவடிக்கையின் தொடர்ச்சியைத் தான் கும்மிடிப்பூண்டி லைட்விண்டு ஸ்ரீராம் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது ஏவிக் கொண்டிருக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளும் தொழிலாளர் விரோதப் போக்கும் இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் நடக்கிறது. இது குறித்து ஓட்டுக்கட்சிகள் சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொண்டு முடங்கிக் கொள்கிறார்கள். இந்த கட்டமைப்புக்குள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தொழிலாளர் வர்க்கத்தை நம்ப வைத்து துரோகம் இழைக்கிறார்கள். இந்த அரசமைப்புக்குள் நமது பிரச்சனையைத் தீர்க்க முடியாது. ஏனெனில் இது ஆளும் தகுதியை இழந்து விட்ட தோற்றுப்போன அரசமைப்பு. இந்த அரசமைப்பின் தோல்வி அதன் நடவடிக்கையில் தினந்தோறும் வெளிப்படுகிறது.

ndlf-tvlr-meeting-7டாஸ்மாக் பிரச்சனையாகட்டும், மழை வெள்ளத்தால் மக்கள் சாவதாகட்டும், ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிராணைட் கொள்ளையாகட்டும், சிவகங்கைச் சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாகட்டும், ஊழல் நீதிபதிகளுக்கெதிரான போராட்டமாகட்டும், இவையனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது என்னவென்றால், இந்த அரசமைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்க வக்கற்றதாகவும், ஆளும் தகுதியை இழந்து விட்டது என்பதுமாகும். உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த தகுதியிழந்துவிட்ட அரசைத் தூக்கியெறிந்து, மக்களுக்கு அதிகாரம் உள்ள அரசமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இதற்கு புரட்சி ஒன்றுதான் தீர்வு” என கண்டன உரையாற்றினார்.

கூட்டம் துவங்கும் முன்னரே, ஏதோ சினிமா ஒளிப்பதிவு செய்வதைப் போலவே “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்” சகிதமாக, கேமராக்களை தயார் செய்து கொண்டும், ஒத்திகை பார்த்துக் கொண்டும் நின்றிருந்தனர், உளவுப் பிரிவினர். நாம் கண்டனக் கூட்டம் திட்டமிட்ட தேதியிலேயே அன்புமணி ராமதாஸும் மக்களுக்கு “மாற்றத்தையும், முன்னேற்றத்தையும்” எப்படித் தர போகிறார் என விளக்க பொதுக்கூட்டம் நடத்தியதால் கியூ பிரிவு போலிசுக்கு கடும் கிராக்கி. அதனால் நாம் நடத்திய கண்டனக் கூட்டத்துக்கு இரண்டு புதிய போலிசு இரண்டு கேமராக்களில் பதிவு செய்தனர். ஒன்று உளவுத் துறைக்கும் மற்றொன்று நிர்வாகத்துக்கும் பதிவு செய்யப்பட்டதா? அல்லது புதிதாக பதிவு செய்வதால் தவறு நேர்ந்துவிடும். அதனால் இரண்டு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. எப்படியோ ஏதோவொன்றை பார்த்தாவது, தாங்கள் மக்களுக்கெதிராக செயல்படுகிறோம் என போலிசு உணர்ந்தால் சரி..!

மாவட்ட இணைச் செயலாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 944 538 9536

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க