privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

-

“நன்றி தெரிவிப்பது ஒரு பிரச்சனையா” என்று கேட்டால் சில நேரங்களில் அதுவும் கூட ஒரு பிரச்சனை ஆகத்தான் செய்கிறது. டாஸ்மாக் எதிர்ப்பு பாடலுக்காக கைது செய்யப்பட்ட தோழர் கோவன் பிணையில் விடுதலையாகி வெளிவந்த பிறகு அவரும் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்களும் தங்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.

kovan-kalaignar-meet-1நன்றி கூறியது மட்டுமல்ல “டாஸ்மாக்கை மூடு” என்றமுழக்கத்தில் கருத்தொற்றுமை கொண்ட இந்த எல்லா கட்சித் தலைவர்களையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கோரிக்கைக்காக ஒரு அணியில் திரளுமாறு ஒரு அறைகூவல் விடுத்தார்கள். இந்த வேண்டுகோள் ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன்னமே எழுத்துவடிவில் வினவு தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நடவடிக்கை.

இருந்த போதிலும் என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்றெல்லாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் யாரையுமே சந்திக்காமல் தி.மு.க தலைவரை மட்டும்தான் சந்தித்தார்கள் என்பது போலவும், அல்லது தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கும் போது “வளைந்தார்”, “குனிந்தார்”, “மண்டியிட்டார்” என்றும் வக்கிரமாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அவதூறு செய்யும் ஒரு விதமான உள்ளக் கிளர்ச்சியோடும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட முதியவரிடம் பேசும் போது அவருக்கு என்ன கேட்கிறது, கேட்கவில்லை என்பதெல்லாம் கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும். இது சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய விசயம். இவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பதை எல்லாம் நான் தள்ளி விடுகிறேன். அவை பதில் சொல்ல தகுதியற்றவை என்பது எனது கருத்து.

பிரச்சனை என்னவென்றால், தேர்தல் புறக்கணிப்பு அரசியலை இத்தனை காலமாக மேற்கொண்டு வருகின்ற நீங்கள், ஓட்டுக்கட்சிகள் என்று உங்களால் அழைக்கப்படும் கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களை அழைப்பதும் எப்படி சரி, அது கொள்கை பிறழ்ந்த செயல் ஆகாதா என்பதுதான் இவ்வாறு விமர்சனம் வைப்பவர்களின் மையமான கேள்வி.

டாஸ்மாக் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். “மூடு டாஸ்மாக்கை” என்ற இந்த முழக்கத்துக்கு பாட்டு எழுதி கோவன் கைது செய்யப்பட்டார். மக்கள் அதிகாரம், ம.க.இ.க என்ற இந்த அமைப்புகள் இந்த கோரிக்கையை எழுப்புவதற்கு முன்பே பலரும் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள். அதற்காக போராடியிருக்கிறார்கள். நடைபயணம் சென்றிருக்கிறார்கள், பிரச்சாரம் செய்திருக்கிறார்கள், மனு கொடுத்திருக்கிறார்கள். பல்வேறு வடிவங்களில் இதற்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடைசியாக, சசிபெருமாள் இதற்காக போராடி மரணமடைந்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் எல்லாம் “டாஸ்மாக்கை மூட வேண்டும்” என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள்; அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரிந்தார்கள். ஓரணியில் திரள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. சசிபெருமாளின் மரணத்திற்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்ற பா.ம.கவும் பங்கேற்கவில்லை, தி.மு.கவும் பங்கேற்கவில்லை. அதற்கு பல காரணங்களைச் சொன்னார்கள். சசிபெருமாளின் மரணத்திற்குப் பிறகு, இந்தக் கோரிக்கை எழுச்சி பெற்று ஒரு மக்கள் கோரிக்கையாக வந்து கொண்டிருந்த தருணத்தில், ‘ஆகஸ்ட் 15-ம் தேதி முதலமைச்சர் மூடுவதாக அறிவிப்பு செய்வார்’ என்றெல்லாம் ஊகம் வெளியிடும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், அ.தி.மு.க அரசு திட்டமிட்டே அந்தப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தை கிளப்பியது.

அதன் பின்னால் டாஸ்மாக் பிரச்சனை நீர்த்து போக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அது ஓய்ந்து விட்டது. பிறகு இப்போது கோவன் கைது விவகாரம். கோவன் கைதை எல்லோரும் கண்டித்த போதும், அவரது விடுதலையை எல்லோரும் கோரிய போதிலும் மதுவிலக்கு கோரிக்கையில் இவர்கள் ஒன்றுபடவில்லை என்பது யதார்த்தம். கோவன் விடுதலையாகி வந்து என்ன செய்ய வேண்டும்? இன்னொரு பாட்டு எழுதி, இன்னொரு முறை பாடி, இன்னொரு முறை கைதானால், அவர்கள் இன்னொரு முறை கண்டிக்க வேண்டுமா? அல்லது இந்த பாடலுக்காக அவருக்கு விருது கொடுக்கப் போகிறார்களா? அதற்குத்தான் அவர் பாடினாரா?

கோவனும், மக்கள் அதிகாரம் தோழர்களும் விடுதலைக்கு நன்றி தெரிவிக்கப் போனார்கள் என்று பார்ப்பது தவறு. அதுவல்ல விசயம் “என்னுடைய கைதை கண்டிப்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், உங்கள் தேர்தல் அரசியலுக்கு வெளியில் ஏன் ஓரணியில் நின்று போராடக் கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடு இருக்கிறது. நாங்கள் தேர்தல் அரசியலை புறக்கணிப்பவர்கள். நீங்கள் தேர்தல் அரசியலுக்கு உள்ளே இருப்பவர்கள். ஆனால், இந்த விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு நேர்மையானது எனில், அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் ஒரு அணியில் திரளக் கூடாது” என்று கேட்கத்தான் கோவனும் மக்கள் அதிகாரம் தோழர்களும் அங்கு போனார்கள்.

அவ்வாறு கோரிக்கை வைத்தது தவறா, அது அரசியல் வழியிலிருந்து தவறியதா என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதிவெறி, மதவெறி, கனிமவளக்கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க்கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவையனைத்தையும் விட,தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்கின்ற, எந்தப் பிரச்சினைக்கும் போராட இயலாத பதர்களாக தமிழ் மக்களை இளைஞர்களை மாற்றுகின்ற பிரச்சினை டாஸ்மாக் பிரச்சினை.

இயற்கை வளங்கள் கொள்ளை போவது உடனடிப் பிரச்சினையாக இருந்தாலும், மனித வளம் இவ்வாறு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவில்லையென்றால், தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ ம.க.இ.க.வோ யாரும் எந்த அரசியலுக்காகவும் மக்களைத் திரட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும். ஒரு பேரழிவை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை.

வினவு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அம்மாவின் மரண தேசம் என்ற ஆவணப்படத்தில் மேலப்பாளையூர் கிராமம் பற்றி ஒரு காட்சி வருகிறது. வயல்வெளியின் நடுவுல ஒரு டாஸ்மாக் கடை. அது சுற்றியுள்ள 7,8 கிராமங்களுக்குப் பொதுவானது. அந்த டாஸ்மாக் கடையினுடைய ஒருநாள் வியாபாரம் ஒரு லட்சம் ரூபாய். இந்த ஏழெட்டு கிராமங்களிலுள்ள மளிகைக் கடையினுடைய வியாபாரத்தை கூட்டினால் அதில் கால் பங்கு கூட வராது.

ஏழெட்டு கிராமங்களின் வருவாயை இது தின்கிறது. இது அந்த குடும்பங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? அந்த கிராமப்புற பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இதெல்லாம் மிகச்சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய விசயங்கள். அன்றாடம் நாளேட்டைத் திருப்பினால் சிறுவர்கள் குடிக்கிறார்கள்., பள்ளி மாணவிகள் திருச்செங்கோட்டில் குடிக்கிறார்கள் என்று செய்தி வராத நாளில்லை. டாஸ்மாக் தொடர்பான குற்றங்கள் குறித்து செய்தி வராத நாளில்லை. இந்த ஆய்வு தமிழ் இந்து நாளேட்டில் வந்திருக்கிறது. ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது. வசந்திதேவியின் ஆய்வு இருக்கிறது. ஆயிரம் ஆய்வறிக்கைகள் இருக்கின்றன.

நிதிஷ் குமார் மூடுவதாக அறிவித்திருக்கிறார். அங்கே ஆண்டு வருமானம் 4,000 கோடி என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28,000 கோடி. இதனுடைய பரிமாணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதை ஒழிக்கவில்லையென்றால், இந்த சமூகம் எதற்கும் பயனற்றதாக ஆகும். இதனை சீனாவில் நடந்த அபினி யுத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் சீனம் இருந்த போது, அந்த காலனியாதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்திற்கே மக்கள் வரக்கூடாது என்பதற்காக, இங்கே கஞ்சாவைப் பயிரிட்டு இந்தியாவின் தொழில்தந்தை என்று அறியப்படும் டாடா குடும்பத்தின் மூலம் அதை சீனத்துக்கு ஏற்றுமதி செய்தார்கள். சீன மக்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கினார்கள். அந்த கஞ்சா போதையிலிருந்து சீன சமுகத்தை விடுவித்த பிறகுதான், அபினி யுத்தம் நடத்தி கஞ்சா விற்பனையை நிறுத்திய பிறகுதான் காலனியாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டுமென்ற உணர்வுக்கே சீன மக்கட் சமூகத்தை அங்கே கொண்டு வர முடிந்தது. அதற்கு பிறகுதான் சீனப்புரட்சி நடக்கிறது..

ஆகையால், டாஸ்மாக் என்பது அத்தகையதொரு பிரச்சினை. இது சுனாமியைப் போன்றதொரு பேரழிவு. வழக்கமாக சொல்வார்கள். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நாம் தமிழ்நாட்டின் பொதுக்கோரிக்கை என்ற அடிப்படையிலே காவிரிப் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டும். முல்லைப் பெரியாறுக்காக ஒன்று திரளவேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டுமென்றெல்லாம் சொல்வார்கள். அவற்றையெல்லாம் விட மிக முக்கியமான பிரச்சினை இது. அப்படி ஒன்றுதிரள வேண்டுமென்று கோருவதற்குத்தான் போனோம். இது பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் பிரச்சினை அல்ல. “மூடு டாஸ்மாக்கை” என்பது இலக்கு வைத்து முடிக்கக்கூடிய கோரிக்கை.

அப்படி முடிப்பதற்கு இப்படியொரு அணிசேர்க்கை தேவை. பாடலிலே நீங்கள் கேட்டிருக்கலாம். “கடையை மூட எதுக்கு ஓட்டு? போடு ஒரு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு” என்று பாட்டு வரி வருகிறது. “என்னை முதல்வராக்கு நாங்கள் கடையை மூடுகிறோம் என்று கூறுகிறார்கள். நம் தெருவில் இருக்கிற கடையை மூடுவதற்கு யாரையும் முதல்வராக்கத் தேவையில்லை. நாம் நினைத்தால் மூடலாம். மக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கலெக்டரோ, அதிகாரிகளோ, போலீசோ யார் ? நாம் கடை வேண்டாம் என்றால், நாம் முடிவு செய்ய வேண்டும்” என்றுதான் நாங்கள் மக்களைத் திரட்டுகிறோம். அப்படி நடத்தப்பட்ட போராட்டங்களில் 5,6 இடங்களில் கடைகள் தகர்க்கப்பட்டன. கைது செய்யப்பட்டார்கள். கடை மூடப்பட்டது. அதற்காக கொடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

இது, ம.க.இ.க. மட்டுமோ, மக்கள் அதிகாரம் மட்டுமோ நடத்திய போராட்டம் அல்ல. அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில், டைஃபி., ஜனநாயக மாதர்சங்கம், எஸ்.எப்.ஐ., இன்னும் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் கட்சி சாராத அமைப்புகள் பலர் இதற்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், எங்களை மட்டும் தனிமைப்படுத்தி கூடுதலாகத் தாக்குதல் தொடுத்தது அரசு.

யார் இதற்காக போர்க்குணமாக, விடாப்பிடியாக போராடுவர்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ, யார் இந்த அரசு அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ அவர்களை ஒடுக்கினால், மற்றவர்களை அச்சுறுத்தி தலையெடுக்க விடாமல் செய்துவிடலாம் என்பதற்காக விசேசமாக அடக்குமுறையைத் தொடுத்தார்கள். அதை எதிர்கொண்டோம்.

ஒருவேளை, டாஸ்மாக் எதிர்ப்புக் கோரிக்கையிலே கருத்து ஒற்றுமை கொண்ட மற்றக் கட்சிகளை அணுகாமல் நாங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை எடுத்து செய்வது என்ற நிலை எடுத்தால் என்ன நடக்கும்? 2 காரியங்கள் நடக்கும். ஒன்று இதுபோல நசுக்கப்படுவது, தனிமைப்படுத்தப் படுவது. முன்னரே கூறியதைப்போல அது எங்களுக்கு மட்டும் ஏற்படப்போகும் பாதிப்பு அல்ல. இதைப்பார்த்து நாளைக்கு இதற்கு எதிராகப் போராடக்கூடாது என்ற அச்சம் இந்த சமூகத்தில் விதைக்கப்படும். அதுதான் அந்த தனிமைப்படுத்தப் படுவதனுடைய விளைவு.

அதனால்தான் கீழிருந்து மக்களைத் திரட்டிப் போராடுகின்ற அதே நேரத்தில் இந்தக் கோரிக்கையில் கருத்தொற்றுமை கொண்ட கட்சிகள் இயக்கங்களுடனும் மேலிருந்து ஒரு அணிசேர்க்கை அமைத்து இந்த கோரிக்கைக்குப் போராட வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக் கோரிக்கையை சாத்தியமாக்க முடியும். உடனடி சாத்தியமாக்க முடியும். என்பதனால்தான் இவர்களையெல்லாம் அணுகுகிறோம்.

ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க. அது மட்டும்தான் மூட முடியாதென்று நிற்கிறது. யார் செத்தாலும் சரி, சசிபெருமாள் இறந்ததற்குக் கூட இந்த அரசு இரக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அந்தக் குடும்பத்தினரை கைது செய்தது. இரங்கல் கூட்டம் நடத்தவிடாமல் தடுத்தது. அவ்வளவு திமிர்பிடித்து இந்த அரசு நடந்துகொள்ள முடிவதற்குக் காரணம். இதனை எதிர்ப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து கிடப்பது. உடனடிக் கோரிக்கையின் கீழ் அவர்களை ஒன்றிணைப்பது என்பதுதான் நாங்கள் எடுத்த முயற்சி.

இந்த முயற்சி தவறு என்று வைத்துக்கொள்வோம். இப்படி செய்திருக்கக் கூடாது என்றால், கடையை எப்படி மூடுவது என்று சொல்ல வேண்டும். இதைத் தவறு என்று சொல்பவர்கள், கடையை உடனே மூட வேண்டும் என்பதில், அவங்களுக்கு உடன்பாடா என்பதையும் சொல்ல வேண்டும். பிறகு கடையை மூடுவதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

நம்புகிறீர்களா? இது இந்த விமர்சனங்களுக்குள்ளே பொதிந்திருக்கிற மிக முக்கியமான ஒரு கேள்வி. தி.மு.க தொடங்கி மற்ற எல்லா கட்சிகளிலும் இந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சாராயம் சப்ளை செய்யும் நிறுவனங்கள். அல்லது கள்ளச்சாராயம் இருந்த காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் அவர்களுடைய புரவலர்களாக எல்லாக் கட்சிகளிலும் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் மதுவிலக்கை ஆதரிப்பதாக சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள். மக்கள் நம்பி ஏமாந்தால் பரவாயில்லை, நீங்கள் கூடவா நம்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த “நம்பிக்கை” என்ற விசயத்தை பொறுத்தவரைக்கும், நம்பவே முடியாத விவகாரங்கள் சில உண்டு. மதச்சார்பின்மையை அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கூறினால் அதை நம்புவதா? அல்லது தனியார்மயம் வேண்டாம், தப்பு என்று மன்மோகன் சிங் சொன்னால் அதை நம்ப முடியாது. அப்படி நம்ப முடியாதவை உண்டு. ஆனால், இந்தக் கோரிக்கையைப் பொருத்தவரை அப்படி அல்ல. இந்தக் கோரிக்கையின் வரம்பு குறுகியது.

நம்பிக்கை பற்றிய விஷயத்தை பற்றிப் பேசும் போது சமீபத்திய எடுத்துக்காட்டு ஒன்று சொல்ல வேண்டும். பீகார் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், தொடர்ந்து நீடிக்க முடியாது” என்று பேசினார். இது ஒரு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவின் தோல்விக்கு காரணமாக அமையும் என்ற அளவுக்கு அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடி இந்த ஓட்டையை மோடி அடைக்க வேண்டியதாயிற்று. அவர் அந்த இடத்தில் என்ன பேசியிருக்க வேண்டும்?

“யார் சொன்னாலும் நம்பதீர்கள், நான் சொல்கிறேன், என்னை நம்புங்கள், இட ஒதுக்கீடு நீடிக்கும்”னு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொன்னால் தன்னை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று மோடிக்கு தெரிகிறது. தான் வாக்குறுதி அளித்தாலும் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மோடி எப்படிப் பேசுகிறார்? “யார் நினைத்தாலும் இட ஒதுக்கீட்டை நீக்க முடியாது” என்கிறார். அதாவது, பெரும்பான்மை மக்களின் விருப்பம் – இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் போக முடியாது என்ற புறவயமான யதார்த்தத்தைச் சொல்லி “என்னை நம்பவில்லை என்றாலும் இந்த புறவயமான உண்மையை நம்புங்கள்” என்பதுதான் மோடி சொன்னது.

அதை இங்கே பொருத்திப் பாருங்கள். இன்றைக்கு மதுவிலக்கு கோருகின்ற கட்சிகள் எல்லாம் முதலில் இருந்தே இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்களா? மதுவிலக்குக்காக பலபேர் போராட்டம் நடத்தி, அல்லது இந்த டாஸ்மாக்கின் சீரழிவு கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து, மக்களின் வெறுப்பும் கோபமும் அதிகரித்த பிறகுதான் மதுவிலக்கு என்பதை ஒரு கோரிக்கையாக எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் வந்தால் மூடுவோம்” என்கிறார்கள்.

“துவக்கம் முதலே மதுவிலக்கை எங்களுடைய கொள்கையாக வைத்திருந்தோம்” என்று சொல்லக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்றைக்கும் கூட்டணிக்கான நிபந்தனையாக அந்தக் கொள்கையை வைத்ததில்லை. ஏன் வைத்ததில்லை? ஏனென்றால், அதை நிபந்தனையாக வைக்கும் அளவுக்கு டாஸ்மாக்கிற்கு எதிரான பொதுக்கருத்து வலிமை பெறவில்லை. மக்கள் போராட்டம் வலிமை பெறவில்லை.

இன்றைக்கு இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே “நீங்கதானே கடையை திறந்து விட்டீர்கள்” என்று குற்றச்சாட்டுக்கு தி.மு.க தலைவர் பதில் சொல்கிறார். “ஆமாம், ஒரு கட்டத்தில் திறந்தோம், இப்போ அது கட்டுக்கடங்காத பேரழிவாக மாறிவிட்டது. சமூகத்துக்கே பெரிய ஆபத்தாகி விட்டது. அதனால் நாங்கள் மூடுவது என்று முடிவு பண்ணியிருக்கிறோம்.” என்கிறார். “உங்க கட்சிக்காரர்களே வைத்திருக்கிறார்கள். பினாமி பேரில் வைத்திருக்கிறார்கள்” என்று குற்றச்சாட்டு வருகிறது. தான் சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்று அவர்களையே கொண்டு வந்து சொல்ல வைக்கிறார்.

“இவர்கள் சொல்லிவிட்டால் நீங்கள் நம்பி விடுவதா?” என்று கேட்கலாம். இவர்களை இவ்வாறு சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியது எது? இதில் அவர்களுடைய நேர்மை உணர்ச்சி எத்தனை சதவீதம், நிர்ப்பந்தம் எத்தனை சதவீதம் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. நமக்குத் தேவை ரிசல்ட் – பயன்.

ஏன் இப்படி ஒரு உத்தரவாதத்தை அவர்கள் தர வேண்டும்? மக்களுடைய பொதுக்கருத்து மற்றும் போராட்டத்தின் வலிமைதான் இதற்குக் காரணம். “அவருக்கு ஓட்டு போட்டு, அவர்கள் கொண்டு வருவார்கள் என்பதற்காக காத்திருக்க வேண்டாம். நாம் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு பூட்ட வேண்டும். அதற்கு போராட வா” என்பதுதான் மக்கள் அதிகாரம் அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம். அதில்தான் தங்கி நிற்கிறோம்.

இப்போது கட்சிகள் “ஆமாம், நாங்களும் மதுவிலக்குக் கொள்கையைத்தான் வலியுறுத்துகிறோம். இதை ஆதரிக்கிறோம்” என்று இந்தக் கட்சிகள் சொல்லும்போது, கோவன் கைதுக்கு அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடும்போது, “இதுதான் உங்கள் கோரிக்கை என்றால், பிரச்சாரம், கூட்டங்களில் வந்து பேச வாருங்கள். மக்களுக்கு அந்த உத்தரவாதம் கொடுங்கள். இதற்காக போராட்டம் நடத்துகிறோம், கலந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் அணிகளை, தொண்டர்களை ஈடுபடுத்துங்கள்.” இப்படி செய்வதன் மூலம் அவர்களை மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாக்குகிறோம். இப்படி செய்வதன் மூலம் இந்த கோரிக்கை நிறைவேறுவதை கீழிருந்து உத்தரவாதப்படுத்துகிறோம்.

ஒருவேளை வாக்கு தவறினால்? நீங்கள் நாங்கள் கேட்போம் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே கேட்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் இதில் உத்தரவாதம். கட்சிக்காரர்களை விட்டு விடுவோம். இங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை என்ற கோணத்திலிருந்து இந்த பிரச்சனையை பார்ப்பவர்கள் சட்டத்தில் இருக்கிறது, நாம் கவலை இல்லாமல் இருக்கலாம்” என்று சொல்ல முடியுமா? சாத்தியமில்லை.

தீண்டாமை ஒழிப்பு சட்டம் இருக்கிறது. அது கடுமையாக்கப்பட்ட பிறகு கூட எந்த இடத்திலும் அமல்படுத்தப் படுவதில்லை. எப்போது அமல்படுத்தப்படுகிறது? கடுமையாக போராட்டங்கள் நடந்தால் மட்டும்தான் வேண்டாவெறுப்பாக குறைந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் போடும் உரிமை இப்படிப்பட்ட அடிப்படை சிவில் உரிமைகளுக்கு தடை விதிப்பதற்குத்தான் போலீஸ் என்ற நிறுவனமே இருக்கிறது. உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்காக என்று சொல்லப்படும் அந்த நிறுவனம் அவற்றை தடுப்பதற்கு வேலை செய்கிறது. அதற்கெதிராக போராடுவதன் மூலம் மட்டும்தான் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடிகிறது.

“சட்டத்தில் சொல்லியிருக்கிறதே, அதை நம்புவோம்” என்பதால் அது நடப்பதில்லை. நீதிமன்றத்தை நம்பினால் காரியம் நடக்குமா? நடக்காது என்பதற்கு சசிபெருமாள் சமீபத்திய உதாரணம். எத்தனை டாஸ்மாக் எதிர்ப்பு தீர்ப்புகள், எதுவும் அமல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தை நம்புவது எப்படி? நீதிமன்றமும் கூட மக்கள் போராட்டம் எங்கு தீவிரமாக நடக்கிறதோ, அங்கு மட்டும்தான் அவர்கள் இறங்கி வர வேண்டியிருக்கிறது. தீர்ப்பளிக்க வேண்டியிருக்கிறது. உத்திரவாதம் என்பது எங்கே மக்கள் கோரிக்கை நிறைவேறாமல் விட மாட்டார்களோ அங்கு மட்டும்தான் இருக்கிறது.

ஆற்றுமணல் போராட்டமோ, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டமோ முடிந்தவுடன் போலீசை கொண்டு வந்து குவிக்கிறார்கள். போராட்டம் சிறிது தணிந்து விடுகிறது. அடுத்தது திரும்ப திறப்பதற்கு முயற்சி செய்கிறான். இல்ல, நாலு கடை தள்ளி புதுசா ஒரு கடை திறக்க முயற்சி பண்ணுகிறான். அதை எதிர்த்து போராடுவதற்கு எங்கே மக்கள் அணியமாக இருக்கிறார்களோ, எங்கே தயார் நிலையில் இருக்கிறார்களோ அங்கேதான் ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த முடியும், அங்கேதான் டாஸ்மாக் கடையை மூட முடிகிறது.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வந்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு என்ன உத்தரவாதம்? போலீஸ் இருக்கும் வரையில் கள்ளச் சாராயம் இருக்கும். கள்ளச்சாராயம் விற்காது என்பதை உத்தரவாதப்படுத்துவது யார்? மக்கள்தான் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டம் இல்லாமல் முடியாது. அது சாத்தியப்படாது.

அதனால்தான் “ மீட்பர்கள் யாரும் இல்லை” என்று சொல்கிறோம். நீங்கள் ம.க.இ.க-வின் மீதும், மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால், மீட்பர்களாக யாரையும் கருதிக் கொள்ளாதீர்கள். அப்படி கருதக் கூடாது. மக்கள் தங்கள் சொந்த கரங்களால் விடுதலை பெற வேண்டும், தங்கள் சொந்த கரங்களில் அதிகாரத்தை ஏந்த வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம்.

ஆகவே, இவர்களை எல்லாம் சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

– தொடரும்..

  1. தமிழகத்தின் மீது நடைபெறும் அபினி யுத்தத்தில் கருணாநிதியின் பங்கு உண்டா? இல்லையா?
    உருப்படியா பதில் சொல்லுங்க..

  2. //ஒருவேளை வாக்கு தவறினால்? நீங்கள் நாங்கள் கேட்போம் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே கேட்பார்கள். .// super comedy

  3. ஓட்டுக்கட்சிகளின் உண்மையான மதுவிலக்கு நிலைப்பாடு என்ன என்பது வினவுக்கு தெரியாதா?
    தங்களின் இருப்பை உறுதி செய்ய அவ்வப்பொழுது நிலவும் விடயங்களின் மீது அக்கறை கொண்டதாக காட்டிக்கொள்வது ஓட்டுக்கட்சிகளின் வழக்கம்.
    ‘கருத்தொற்றுமை’ போன்ற சாக்குபோக்குகளை தவிர்த்து வினவு தனது தவறை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    வினவின் மீதான எங்களின் நம்பிக்கையை நீங்களே சிதைக்காதீர்கள்.

  4. “இவர்களை எல்லாம் சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது” என்கிறீர்களே மக்கள் வாக்கு அளித்து தானே இவர்களை ஆட்சிக்கு வைத்தார்கள் அப்பொழுது என்ன ஆனது “மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை”, வீனாக சப்பை கட்டு கட்டாதீர்கள், வினவின் மீதான எங்களின் நம்பிக்கையை நீங்களே சிதைக்காதீர்கள்.

  5. மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று நீங்கள் அழைத்தால் சரி அதுவே மற்ற மக்கள் பிரச்சனைகளுக்கு CPM அல்லது CPi, மற்ற கட்சிகளை அழைத்தால் ஓட்டுப்பொருக்கிகளா?

  6. மதிப்பிற்குரிய தோழர் மருதையன் அவர்களுக்கு வணக்கம்!!!
    கருணாநிதியை சந்தித்தது பற்றிய கேள்விகளுக்கு தாங்கள் அளித்த பதிலைப் படித்தேன். தேர்தல் பாதையை நீங்கள் ஏற்பீர்கள் என்று நான் நிச்சயம் கருதவில்லை. தேர்தலை சட்டமன்றத்தை,பாராளுமன்றத்தை பயன்படுத்துவது போன்ற துணிச்சல் உங்களிடம் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். அந்த விடயத்தில் தோழர் லெனின் குறிப்பிடுவதைப் போல “சொந்த நிழலைக் கண்டு அஞ்சி ஓடுபவர்கள்” தான் நீங்கள்.
    கருணாநிதியை சந்திப்பதை நீங்கள் கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். இது ஒரு அரசியல் தவறு என்றே நான் கருதுகிறேன். உங்களை நோக்கி நெருங்கி வருவற்கு அணியமாக இருந்த பல ஆற்றல்களை நீங்கள் இழந்து விட்டீர்கள்.
    நன்றி தெரிவிப்பது கூட பிரச்சனையாகுமா என்று எழுதத் தொடங்கிய நீங்கள் நன்றி தெரிவிக்க மட்டுமல்ல ‘டாஸ்மாக்கை மூடு’ வேலைத்திட்டத்திற்கு அவர்களையும் இணைக்கச் சந்தித்ததாக தெரிவித்துள்ளீர்கள்.
    நீங்கள் நன்றி தெரிவித்ததற்காக எவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்க வாய்ப்பில்லை. சாரயத்தை ஒழிக்க அவர்களை அழைத்ததற்கு தான் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நன்றி தெரிவிக்கச் சென்றதற்கு எதிர்க்கிறார்கள் என்பது போல் தாங்கள் எழுதுவது எப்படி சரியாக இருக்கும். எதிர்ப்பளர்களின் நடுவமான வாதத்தை சின்னதாக மாற்றும் தந்திரமாக எனக்குப்படுகிறது. நீங்கள் அவர்களை நம்பலாமா! என்பதும் விடயமல்ல. நீங்கள் அவர்களை நம்பமாட்டீர்கள் என்பது மட்டுமல்ல யாரையும் நம்ப மாட்டீர்கள் என்பது உங்களின் கடந்த கால வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
    கீழிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய எத்தனை கூட்டு நடவடிக்கைகளை நீங்கள் புறக்கணித்திருப்பீர்கள் என்பது அரசியல் அரங்கில் முன்னணியில் பணிபுரியும் பலரும் அறிந்திருப்பார்கள். நீங்கள் அவர்களை நம்புகிறீர்களா என்பதல்ல விமர்சனம்- டாஸ்மாக் விடயத்தில் மட்டுமல்ல எந்த ஒரு மக்கள் போராட்டத்திலும் கீழிருந்து எதையும் செய்யத் தகுதியில்லாத ஒரு கட்சி தான் தி.மு.க. கீழிருந்தும் மேலிருந்தும் செயல்படக் கூடிய இயக்கங்களுடன் சேர்ந்து ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற ஒற்றை முழக்கத்துடன் நீங்கள் இணைந்து செயல்படுவதே சரியான அணுகுமுறை. சரியாகச் சொன்னால் கீழிருந்து-அதாவது மக்களைச் செயல் களத்திற்குள் கொண்டு சென்று பணியாற்றுவதே ‘மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான முதன்மையான அணுகுமுறையாகும். அதே சமயம்- கீழிருந்து செயல்படும் இயக்கங்கள் மேலிருந்து ஒன்றுபட்டு செயல்படுவது என்பதே மேலிருந்து செயல்படுவது என்பதாகும். கீழிருந்து செயல்படாத ஒரு கட்சியுடன் சேர்ந்து மேலிருந்து திட்டமிட்டு செயல்படுவது பற்றி நீங்கள் பேசும் அரசியல் தான் தவறானது-இதைத்தான் உங்களுடைய அரசியல் தவறு என்று நான் குறிப்பிட்டேன். மேலிருந்து செயல்படுவது என்பதன் பொருள்-உண்மையில் கீழே மக்களை அணிதிரட்டி களத்தில் செயல்படும் இயக்கங்களுடன் மேலே ஒரு திட்டமிட்ட வகையில் ஒன்றுபடுவதே மேலிருந்து செயல்படுவதாகும். அப்படியான வேலைத்திட்டத்தில் இன்று பெருவாரியான ஓட்டுக்கட்சிகள் இல்லை, என்ற போதும் அதற்கான வாய்ப்புள்ளவர்கள் என்ற நிலையில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் – சி.பி.ஐ.,சி.பி.எம். விடுதலைச் சிறுத்தைகள், ஓரளவு ம.தி.மு.க, தமிழ்த்தேசிய இயக்கங்கள், புரட்சிகர சக்திகள், பல நூறாக சிதறுண்டுள்ள ஜனநாயக சக்திகள், இசுலாமிய இயக்கங்கள்-இவை போன்றவை எல்லோரையும் இணைத்து மேலிருந்து ’டாஸ்மாக்கை மூடு’ என்ற இயக்கத்தை நீங்கள் கட்டியிருந்தால்-அது மக்கள் அதிகாரம் பெறும் நிகழ்விற்கான பயிற்சியாக அமைந்திருக்கும். கருணாநிதி, வாசன் போன்றோரையெல்லாம் வைத்துக் கொண்டு மேலிருந்து செயல்படுவது என்பது அடிப்படையிலேயே தவறான ஒரு முடிவாகும். மேலிருந்து செயல்படுவது என்பதற்கான உங்கள் விளக்கம்-ஒரு வேலைத் தேர்தல் பாதைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.
    ’டாஸ்மாக்கை மூடு’ என்ற போராட்டத்திற்கு களம் தயாராக இருக்கிறது என்பதை சசிபெருமாளின் மரணம் நிரூபித்து விட்டது. உண்மையில் பெரிய ஓட்டுக்கட்சிகள் எதுவும் கீழிருந்து போராட்டங்களை நடத்தவில்லை. சிறு சிறு அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், தமிழ்த்தேசிய இயக்கங்கள் மட்டுமே அத்தகைய போராட்டங்களை நடத்தின. இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில்- நீங்கள் மேலிருந்து முயற்சி எடுத்தால் அது மக்களை செயல் களத்தில் பயிற்றுவிக்க பயன்பட்டிருக்கும்-நீங்கள் விழுப்புரம் பகுதியில் செய்ததை-தமிழகம் முழுவதற்குமாக மேலிருந்து செய்திருந்தால் அது பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கும். இப்போதும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. நீங்கள் முன்கை எடுத்தால் ஒரு மாற்று அரசியல், வேலை முறையும் முன்வரும் என்று கருதுகிறேன். இடது சந்தர்ப்பவாத அரசியல் எப்போதும் வலது சந்தர்ப்பவாதத்திற்கு செல்ல வாய்ப்புக் கொண்டதே என்பது இ.பொ.இயக்கம் வரலாறு நமக்குத் தெரிவிக்கும் பாடம். எனவே உங்கள் இடது சந்தர்ப்பவாத வறட்டுவாத அரசியலின் தவிர்க்க முடியாத பின்விளைவே கருணாநிதியை நீங்கள் சென்று சந்தித்தது என நான் உறுதியாக நம்புகிறேன்.
    இனியாவது -விழுப்புரம் பகுதியில், மேலப்பாலையூரில் அனைத்து அரசியல் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையை மூடுவதில் வெற்றி கண்டது போல-தமிழகம் முழுவதும்-தனிநபர்களாக, ஜனநாயக, முற்போக்கு ஆற்றல்களாக-அதாவது மக்களை அணிதிரட்டும் ஆற்றல்களாக உள்ள சக்திகளை அடையாளம் கண்டு டாஸ்மாக் எதிர்ப்பு முன்னணி ஒன்றை மேலிருந்து கட்ட முயற்சி செய்யுங்கள். அதுவே மக்கள் அதிகாரம் நிறுவுவதற்கான வழிமுறையாக அமையும்.
    நன்றி
    இவண்
    திருமொழி

  7. இவ்வளவு பின்னூட்டங்கள் வந்த பிறகும் எங்க அந்த புரட்சித் தலைவர் அனானியன் காணோம்.

    • கருணாநிதியை சந்தித்தது பற்றிய தோழர் மருதையன் அவர்களின் விளக்கத்தின் மீதான விமர்சனம் – 2
      மதிப்பிற்குரிய தோழர் மருதையன் அவர்களே, கீழிருந்து மக்களை அணிதிரட்டிப் போராட பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் தயாராக இல்லை என்பது ஈழப் பிரச்சனையில் இந்த இயக்கங்கள் செயல்பட்டதிலேயே எவரும் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் சொல்கிறேன் எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் பங்கேற்காமல் மாணவர்கள், சிறு சிறு ஜனனாயக இயக்கங்கள், இசுலாமிய இயக்கங்கள் ஓட்டுக் கட்சிகளில் இ.பொ.க., இ.பொ.க.மா வின் மாணவர் மற்றும் மகளிர் அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க போன்றவை தான் சசிபெருமால் மரணத்திற்குப் பிறகு பெரியளவு சாராய எதிர்ப்பு வீச்சை உண்டு பண்ணின. இவ்வமைப்புகளின் – உங்கள் அமைப்பு உட்பட- ஒருங்கிணைப்பே டாஸ்மாக்கை மூடச் செய்யும். மக்களை நம்புவதாகச் சொல்லும் நீங்கள் நிலைமைகளைப் பற்றி மதிப்பிடுவதில் தவறு செய்வதுடன், தி.மு.க போன்ற இயக்கங்களை செயல்களத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எழுதுவது எப்படி சரியென்று தெரியவில்லை. அ.தி.மு.க விற்கு வாக்களிக்கும் நிலையில் உள்ள பெருவாரியான உழைக்கும் மக்களே பல இடங்களில் டாஸ்மாக்கை எதிர்த்த போராட்டத்தில் முன்வந்தனர். கீழே செயல் களத்தில் கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றுபட்டனர். ஏனென்றால் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்ற தேவையோ, இதை செய்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற தேவையோ அவர்களுக்கு இல்லை. ’எல்லோரையும்’ இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது கீழே பொருந்தும் மேலே பொருந்தாது. மக்களைத் திரட்டி டாஸ்மாக்கை மூடவோ பூட்டுப் போடவோ அவர்கள் (தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான ஓட்டுக் கட்சிகள்) வரவே மாட்டார்கள். நீங்கள் ஜனநாயக ஆற்றல்களை-டாஸ்மாக் எதிர்ப்பு ஆற்றல்களை- தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய வாரியாக ஒருங்கிணைத்தால்-இதுவும் மேலிருந்து செயல்படுவது தான்-டாஸ்மாக்கை மூடு என்ற உங்களின் முழக்கம் வெற்றி பெரும்.
      தனியாக போராடினால் இரண்டு விஷயங்கள் நடக்கும் என்று தவறாக மதிப்பீடு செய்கிறீர்கள். 1. உங்கள் மீது அடக்குமுறை வரும். மற்றொன்று 2. போராட முன்வருபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எழுதுகிறீர்கள். போராட்டத்தை ஒடுக்கும் ஆட்சியாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதையே நீங்களும் வெளிப்படுத்திகிறீர்கள்.உண்மையில் ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள். எதிர் கட்சிகளும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் சாராயத்திற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். ஊடகங்களும் செய்திகளை மறைக்க முடியாமல் முன்வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாயினர். எண்ணற்றோர் போராட அணியமாயினர். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் நேர்மறை விளைவு இதுதான். திட்டமிட்ட வகையில் பணியாற்றியதில் உங்களின் பங்கு முக்கியமானதே. எதிர்மறையை மட்டும் தொகுத்துக் கொண்டு புறநிலையில் எழுந்து வந்த சக்திமிகு எழுச்சியை நீர்த்துப் போகச் செய்யும் அணுகு முறையை நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதுவே உங்களின் மீதான முதன்மையான குற்றச்சாட்டு.
      ஓட்டுக் கட்சிகள் புளித்துப்போன கதைக்குதவாத போராட்டங்களில் ஈடுபடவே புறநிலை நிர்பந்தம் தேவைப்படுகிறது. உண்மையில் நீங்கள் வைத்த முழக்கம் மக்கள் செயல்பாட்டிற்கான முழக்கமாகும். அந்த திசைவழியில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் டாஸ்மாக் எதிர்ப்பு ஆற்றல்களையும் இணைக்கும் பணியை முன்வைப்பதற்கு பதில் மீண்டும் மக்களை பின்னுக்கிழுக்கும் வழியை முன்வைக்கிறீர்கள். இதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
      மக்கள் மீதான நம்பிக்கையில் தான் நீங்கள் ஓட்டுக் கட்சிகளை அணுகியதாக எழுதுகிறீர்கள். உண்மையில் மக்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையும், ஓட்டுக்கட்சிகளைப் பற்றிய தவறான மதிப்பீடுமே உங்களின் இந்த அரசியல் தவறுக்குக் காரணம். உடனடியாக வெற்றி கொள்வதற்கு வாய்ப்பான ஒரு விஷயம் தான் டாஸ்மாக்கை மூடுவது. கீழிருந்து மக்களைத் திரட்டித் தான் இதை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் பெருவாரியான உழைக்கும் மக்கள் போராட அணியமாகவே உள்ளனர். சரியான வழிகாட்டுதலும் திட்டமிட்ட வேலைமுறையும் அனைத்து ஜனநாயக முற்போக்கு மற்றும் டாஸ்மாக்கை மூடுவதில் உண்மையான அக்கறை கொண்ட சக்திகளையும் ஒருங்கிணைத்தால் தி.மு.க உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளின் பங்களிப்பு இல்லாமலேயே டாஸ்மாக்கை மூடுவது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான்.
      கலைஞர் உங்களைச் சந்திக்க ஒப்புக் கொண்டது அவரது இராஜதந்திரம். அவருக்கு எந்த இழப்பும் இல்லை. உங்களைச் சந்தித்ததன் வழியில் அவர் தனது ’இமெஜை’ கூட்டிக் கொண்டார். ஆனால் சாராய எதிர்ப்புக்கு அவர்களை அழைத்ததன் மூலம் நீங்கள் உங்கள் இமெஜை சற்றே இழந்திருக்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன். டாஸ்மக்கை மூடு என்று சொல்வதில் அவர்கள் எத்தனை சதவீதம் நேர்மையாக இருக்கிறார்கள் என்ற ஆய்வு தேவையில்லை, ரிசல்ட் தான் முக்கியம் என்கிறீர்கள். ஓட்டுக் கட்சிகள் குறிப்பாக தி.மு.க 100% அதில் நேர்மையாக இருக்கப் போவதில்லை என்னும் போது, ரிசல்ட்டை மட்டும் பார்க்கச் சொல்லும் உங்கள் நேர்மையின் மீதுதான் சந்தேகம் வருகிறது. மாற்றுக் கருத்து உடையவர்கள், கொள்கை வேறுபாடு உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் மீது கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியானதே. ஆனால் பிழைப்புவாதமே கொள்கையாக கொண்ட கட்சிகளுடன் மேலிருந்து கூட்டுநடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தே மக்களை படுகுழியில் தள்ளுவதாகும். கீழிருந்து மக்களை செயலுக்குக் கொண்டு செல்லும் வேலைமுறையில் குறிப்பாக தி.மு.க ஒருபோதும் ஈடுபடாது. அப்படியான வேலைமுறையில் அவர்கள் ஒரு சக்தியே கிடையாது. கீழிருந்து வலுவான இயக்கத்தை நாம் கட்டியமைத்தால் அவர்கள் ஒருவேளை இப்போது கோவனை விடுதலைச் செய்யச் சொன்னது போல் குரல் கொடுத்து ஆதாயம் தேட முயற்சிக்கலாம். போராட்டம் புரட்சிகர வீச்சைப் பெற்றால் இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றுகூட அறிவிக்கலாம். இது தான் தி.மு.க மற்றும் பெரும்பாலான ஓட்டுக் கட்சிகளின் நிலை. தவறிழைத்து விட்டால் சுயவிமர்சனம் செய்வது தான் கம்யுனிஸ்ட் பண்பு-தவறை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் விளைவாக மீண்டும் தவறான கோட்பாடுகளுக்குள் விழும் வேலையைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.
      டாஸ்மாக்கை மூடும் உங்கள் வேலைமுறையில் அவர்கள் ஒரு சிறு ஆணியைக் கூட புடுங்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்கள் ஒத்துக் கொண்டு செயல்படாவிட்டால் நீங்கள் நாங்கள் எல்லோரும் கேட்கலாம் என்றெல்லாம் கற்பனையில் கதையளக்கிறீர்கள். அவர்கள் எல்லோரும் வராவிட்டால் நாம் தனிமைப்பட்டு விடுவோம் என்று ஏன் அஞ்சுகிறீர்கள் என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டு அஞ்சி நடுங்கியே, டாஸ்மாக் விஷயத்தில் மக்களின் உணர்வு நிலையிலிருந்து தனிமைப்பட்டு விடுவோம் என்று அஞ்சியே ஓட்டுக் கட்சிகள் நான் தான் முதலில் செய்தேன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று டாஸ்மாக் எதிர்ப்புணர்வை அறுவடை செய்ய வந்துவிட்டார்கள். எனினும் எந்த கட்சியும்- அறிக்கை அளவில் நிறுத்திக் கொண்டார்களே தவிர மக்களைத் திரட்டி போராடத் தயாராக இல்லை-என்பதையும் வெளிப்படுத்தினார்கள். சிறிய கட்சிகள் இயக்கங்கள் அதிகபட்சம் ஆர்பாட்டத்துடன் நிறுத்திக்கொண்டார்கள்.
      தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் ஒப்பீட்டளவில் சிறியது தான். ஆனால் மக்களின் உணர்வு நிலை என்ற வகையில் அது பெரிய வீச்சைப் பெற்றிருந்தது. சிறிய அளவிலான போராட்டமே பெறும் வீச்சை தருகிறது என்றால் திட்டமிட்ட முறையில் தமிழகம் தழுவிய வகையில் உண்மையான சக்திகளை இணைக்க முயன்றால் டாஸ்மாக் உடனடியாக மூடக்கூடிய சிறிய இலக்கு தான் என்பதில் ஐயமில்லை. உங்களின் தவறான வேலைத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, கைவிட்டு மேலிருந்து தமிழகம் தழுவிய டாஸ்மாக் எதிர்ப்பு முன்னணி ஒன்றைக் கட்ட முயற்சி செய்யுங்கள். அது கீழிருந்து மக்களை அணிதிரட்டி நிச்சயம் வெற்றி வாகை சூடும். அது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடக பாணியிலான போராட்டங்களுக்கு முடிவு கட்டட்டும். இதற்கான வாய்ப்பும் தகுதியும் உங்களுக்கு இருப்பதாக இவ்வளவிற்குப் பிறகும் நான் நம்புகிறேன்.
      நன்றி
      திருமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க