privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

-

கடலூர் வெள்ளம்
வெள்ளத்தால் பாழானது பயிர்கள் மட்டுமல்ல…

டந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் நான்காவது முறையாகப் பெரும் பாதிப்பை, இழப்பைச் சந்தித்திருக்கிறது, கடலூர் மாவட்டம். 2004-ல் சுனாமி, 2005-ல் நீலம் புயல், 2011-ல் தானே புயல், இப்பொழுது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் ஏற்பட்ட கனமழை-வெள்ளம். இக்காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக கடந்த நவம்பர் 7 தொடங்கி 10 முடிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெய்வேலியில் மட்டும் 48 செ.மீ. மழையும், அம்மாவட்டத்தின் சிதம்பரம், சேத்தியாதோப்பு, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 30 முதல் 35 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தமிழகம் பெறும் சராசரி மழை அளவு 44 செ.மீ.தான் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கடலூர் மாவட்டத்தில் மூன்றே நாட்களில் பெதிருப்பது அசாதாரண மழை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அம்மாவட்டத்தில் இம்மழையின் காரணமாக 50 பேர் மட்டுமே இறந்து போனதாக அரசு கணக்கு காட்டுகிறது. “இதுவொரு மோசடி” என்கிறார், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன். இறந்தவர்களின் எண்ணிக்கை 160-ஐத் தொடக்கூடும் என்கிறார்கள் அம்மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.

இந்தச் சாவுகளை எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட அகால மரணங்களாக வகைப்படுத்துவது இன்னுமொரு மோசடி. அரசு கணக்கு காட்டும் அந்த ஐம்பது பேரில் சரிபாதி பேர் தாழ்த்தப்பட்டோர். மற்றொரு பாதி அன்றாடங் காச்சிகள். சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்கள் எந்தளவிற்கு புறக்கணிக்கப்பட்டு, நிர்க்கதியாய் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் “கொலைகள்” எடுத்துக் காட்டுகின்றன.

இந்த உயிரிழப்புகளுக்கு அப்பால், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட 9 வட்டங்களில் 40,000 ஹெக்டேரில் (ஏறத்தாழ ஒரு இலட்சம் ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். (23.11.2015, பக்.5) அதேசமயம், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அம்மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பு ஏறத்தாழ மூன்று இலட்சம் ஏக்கராகும் எனக் கூறுகிறார். (புதிய தலைமுறை, நேர்படப் பேசு, 12.11.2015)

கடலூர் வெள்ளம்
பண்ருட்டியை அடுத்துள்ள விசூரில் வெள்ளத்தால் வீடே சேறும் சகதியுமானது.

மேலும், வீராணம், பெருமாள் ஏரிகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும், கெடிலம் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தாலும் வயல்களில் மண் படிந்து, அவை உடனடியாகப் பயிர் செய்ய இலாயக்கற்றதாகிவிட்டன. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களிலும்; குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள பூதம்பாடி, கல்குணம், கொத்தவாச்சேரி, அந்தராசிப்பேட்டை, அரங்கமங்கலம் ஆகிய கிராமங்களிலும் 3 அடி உயரத்துக்கு வீடுகளிலும், வயல்களிலும் மணல் சேர்ந்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பயிர் இழப்பு ஒருபுறமிருக்க, மணல் குவிந்துள்ள வயல்களைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்தி அமைக்க ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் தேவைப்படும் என வேதனையோடு குறிப்பிடுகிறார்கள், விவசாயிகள்.

இதற்கு அப்பால், வெள்ளத்தால் வயல்களிலிருந்த ஆழ்துளைக் கிணறுகள், ஆயில் இன்ஜின்கள், சூரியசக்தி பம்புகள் அனைத்தும் சேதாரமாகிவிட்டன. 1,000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளும், ஒரு இலட்சம் கோழிகளும் இந்த மழை-வெள்ளத்தால் இறந்து போனதாகக் கூறுகிறார், கே.பாலகிருஷ்ணன். ஏறத்தாழ 11,000-க்கும் மேற்பட்ட குடிசைகள் வெள்ளத்தால் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாகவும், 50 படகுகள் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவற்றுள் 10 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். ஒட்டு மொத்தமாகச் சொன்னால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், பிற உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் உடைமை இழப்பின் மதிப்பு 1,000 கோடி ரூபாயைத் தொடும் எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசும், என்.எல்.சியும்தான் குற்றவாளிகள்

நியாயமான நிவாரண உதவிகளைக் கேட்கத் துணியும் மக்களை போலீசைக் கொண்டு ஒடுக்கியும், சால்ஜாப்பு வார்த்தைகளைச் சொல்லியும் துரத்திவிடும் அ.தி.மு.க. அரசு, மக்கள் சந்தித்துள்ள இழப்புகளுக்கு மழையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது. “மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்து தீர்த்துவிட்டதால்தான் வெள்ளம் ஏற்பட்டதாக” ஜெயா கூறிவருவது பொய்யும், புரட்டும், கயமைத்தனமும் நிறைந்தது என்பதை ஏராளமான சான்றுகள் முகத்தில் அறைந்தாற்போல எடுத்துக் கூறுகின்றன.

“பருவ மழை தொடங்குவதற்கு முன்பே கடலூர் மாவட்ட நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். அப்படியான கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முயலவேயில்லை என்பதோடு, அதிகாரிகளுக்கு மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் என்பதுகூடத் தெரியவில்லை” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.

“இரண்டாம் நாளும் நிற்காமல் மழை பெய்யும்போதே கெடிலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்; பரவனாறில் நெய்வேலி சுரங்க உபரி நீர் வெளியேறும் என்பதைக் கணித்திருக்க முடியும். குறைந்தபட்சம் அக்கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும்” என்கிறார்கள் பொதுமக்கள்.

கடலூர் வெள்ளம்
கடலூர் மாவட்டம் கல்குணம் கிராமத்தில் என்.எல்.சி வெளியேற்றிய நீரால் மண்ணோடு மண்ணாகிப் போன குடிசை

மழை வருவதற்கு எட்டு நாட்கள் முன்னதாகவே வீராணம் ஏரிப் பாசன சங்கத்தின் செயலர் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேலாக உள்ள தண்ணீரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் கொடுக்கிறார். அக்கடிதம் கண்டுகொள்ளப்படவில்லை. இக்கடிதத்திற்கு முன்னதாகவே, வீராணம் ஏரி நீரைப் பாசனத்திற்குத் திறந்துவிடுமாறு கோரிப் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. இப்படி நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல வீராணம் ஏரித் தண்ணீரைப் பிடித்து வைத்திருந்த அரசு, மழை கொட்டியவுடன் 18,000 கன அடி நீரை அந்த ஏரியிலிருந்து வெளியேற்றியது. ஜெயா அரசின் முட்டாள்தனமும் அகங்காரமும் கொண்ட இந்தக் குற்றச் செயல்தான் திருநாரையூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, கீழவன்னீயூர் உள்ளிட்ட 50 கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இன்னொருபுறம் வெள்ளாற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் அள்ளூர், பூதங்குடி, ஒரத்தூர், பரதூர் உள்ளிட்ட 50 கிராமங்களை மூழ்கடித்தது. “50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல்லும், வாழையும், வெற்றிலையும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்பேரழிவுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள்தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” எனக் குமுறுகிறார், கீழவன்னீயூரைச் சேர்ந்த விவசாயி ரவி.

வீராணம், பெருமாள் ஏரிகளிலிருந்தும், வெள்ளாற்றிலிருந்தும் உபரி நீரைத் திறந்துவிட்டதாக அதிகார வர்க்கம் கூறிவருவது மற்றுமொரு மோசடி. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பருவ மழை தொடங்கு முன்பு ஏரியில் 44 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், இந்த உத்தரவை அரசே மதிப்பதில்லை.

சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்
சி.பி.எம் கட்சியின் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஏரியில் 46 அடி வரை நீரைத் தேக்குவதை வாடிக் கையாக வைத்திருக்கிறது, அதிகார வர்க்கம். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே வீராணத்தில் 44 அடிக்குக் கூடுதலாகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை வேண்டுமென்றே வெளியேற்றாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியது, கடலூர் மாவட்ட மக்களைக் கடுமையான வெள்ளத்திற்குள் சிக்க வைத்தது.

இந்த அலட்சியம் ஒருபுறமிருக்க, வீராணம் ஏரி கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூடத் தூர்வாரப்படவில்லை. 2013-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையின்பொழுது, வீராணம் ஏரியைத் தூர்வார 40 கோடி ரூபாயை ஒதுக்குவதாக 110 விதியின் கீழ் அறிவித்தார், ஜெயா. அந்த அறிவிப்பு அவரின் மற்ற அறிவிப்புகளைப் போலவே காற்றோடு போவிட்டது. வீராணம் ஏரி முறையாகத் தூர் வாரப்பட்டிருந்தால் அந்த ஏரியில் 1,465 மில்லியன் கன அடி நீரைத் தேக்கியிருக்க முடியும். ஆனால், தூர்வாரததால் அந்த ஏரியின் கொள்ளளவு 906 கன அடியாகச் சரிந்துவிட்டது. இதனால் அந்த ஏரியில் சேமித்திருக்க வேண்டிய 500 மில்லியன் கன அடிக்கும் ( 1/2 டி.எம்.சி.) மேலான தண்ணீர் வெள்ளமாக வெளியேற்றப்பட்டது.

அழிக்கப்பட்ட அரண்களும் காகித வாக்குறுதிகளும்

கடலூர் வெள்ளம்
காட்டுமன்னார் கோவில் வட்டம் வீரந்ததம் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடிசை.

கடலூர் மாவட்டம் என்பது புவியியல்ரீதியாக இயற்கையாகவே அமைந்த வடிகால் பகுதியாகும். இதற்கேற்ப இயற்கையாகவே இம்மாவட்டத்தில் கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணை, பரவனாறு, உப்பனாறு, கொள்ளிடம் ஆகியவை வடிநீர் ஆறுகளாக அமைந்துள்ளன. மேலும், இந்த இயற்கை அமைப்பைப் புரிந்துகொண்டுதான் நமது முன்னோர்கள் மழை நீரைச் சேமிக்கவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அம்மாவட்டப் பகுதியில் வீராணம், பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளிட்டு மூவாயிரத்துக்கும் அதிகமான ஏரி, குளங்களை அமைத்திருந்தனர். அவை ஆக்கிரமிப்புகளால் இன்று 267 ஏரி, குளங்களாகச் சுருங்கிப் போனதும்; எஞ்சியிருக்கும் அந்த ஏரி, குளங்களையும், அம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டுகளையும் தூர் வாராமலும், பராமரிக்காமலும் புதர்களும், சேறும் மண்டவிட்டிருப்பதும்தான் இந்தப் பேரழிவுக்கான முதன்மைக் காரணமேயொழிய, அதிகமாகப் பெதுவிட்ட மழை காரணமல்ல.

கடலூர் மாவட்டத்தில் வீராணத்துக்கு அடுத்த பெரிய ஏரி பெருமாள் ஏரி. அந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ள மேல்பூவானிக்குப்பம் கிராமத்தில் பெருமாள் ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்காக 20 வடிகால்கள் இருந்தன. அவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் மேல்பூவானிக்குப்பம் பகுதி வெள்ளக்காடானது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு பெரிய ஏரியான வாலாஜா ஏரியின் ஒரு பகுதி புதர் மண்டிக்கிடக்கிறது. பொதுமக்களின் முன்முயற்சியாலும், கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடியின் உதவியாலும் மீட்டெடுக்கப்பட்ட அந்த ஏரியின் இன்னொரு பகுதியில் மட்டும்தான் தற்பொழுது மழைநீர் நிரம்பியிருக்கிறது. புதர் மண்டிக் கிடக்கும் பகுதியில் சேர வேண்டிய நீர் வெள்ளமாக வெளியேறிவிட்டது.

2011 டிசம்பரில் தானே புயல் தாக்கிய பிறகு கடலூர் மாவட்டத்தை வெள்ள அபாயத்திலிருந்து மீட்கப் போவதாகக் கூறி, “புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படும்; மின்சார இணைப்புகள் தரைவழியில் உருவாக்கப்படும்; 300 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரியில் இருக்கும் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்; 120 கோடி ரூபாய் செலவில் வீராணம் ஏரி வெள்ள நீர் சேகரிப்புத் திட்டம் உருவாக்கப்படும்” என்றெல்லாம் பல்வேறு திட்டங்களை டாம்பீகமாக அறிவித்தார், ஜெயா. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவற்றுள் ஒன்றுகூட நிறைவேறவில்லை.

கடலூர் வெள்ளம்
வெள்ளநீர் சூழ்ந்துள்ள சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வைரங்குப்பம் கிராம மக்கள் ஒரு குடம் குடிநீருக்காகப் படும் துயரம்.

கடலூரை சுனாமி தாக்கியபொழுது, கெடிலம் ஆற்றின் கரையிலிருந்து 6 கி.மீ. தூரத்திற்குத் தண்ணீர் உள்ளே புகுந்தது. எனவே, முகத்துவாரத்திலிருந்து அந்தத் தொலைவுக்கு கான்கிரீட் சுவர் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் வைத்த கோரிக்கையைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்கிறார், கடலூர் அனைத்துக் குடியிருப்பு சங்கச் செயலர் மருதவாணன்.

இப்படி வெள்ள அபாயத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அரசு, விரைவுச் சாலைகள் அமைப்பதற்காக ஆறு அடி உயரத்துக்கு இருந்த கெடிலம், பெண்ணையாற்றுக் கரைகள் சாலை மட்டத்துக்கு ஏற்ப குறைக்கப்பட்டதால் வெள்ள அபாயத்துக்கு வழி வகுத்தது என்கிறார், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கு.பாலசுப்பிரமணியன்.

“வீராணம் ஏரியைத் தூர்வாரியிருந்தால் மேலும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்திருக்க முடியும்; கடலூர் மாவட்ட வடிநீர் ஆறான கொள்ளிடத்தில் ஏழு தடுப்பணைகள் கட்டியிருந்தால் ஏழு டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்திருக்க முடியும்” என்கிறார், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.

“கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணை ஆறுகளில் தடுப்பணைகளை உருவாக்கியிருந்தால், பெரிய வடிகால் ஆறான கொள்ளிடத்தில் கதவணைகளைக் கட்டியிருந்தால் பல டி.எம்.சி. தண்ணீரையும் சேமித்திருக்க முடியும். வெள்ள அபாயத்தையும், மக்களின் இழப்புகளையும் மட்டுப்படுத்தியிருக்க முடியும்” என்கிறார் காவிரி டெல்டா பாசன விவசாயிகள்-விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.வி.கண்ணன்.

தமிழக அரசு இந்த நீர் மேலாண்மை யில் அக்கறை செலுத்தாததால், கடலூர் மாவட்டத்தில் சேமித்திருக்கக்கூடிய 51 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகம் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் மக்களைச் சிக்கவைத்து, அவர்களின் உயிரையும் உடைமைகளையும் பறித்த குற்றத்துக்கு இணையானது இது.

மு ரஹீம்

***
கடலூர் நகரம் வெள்ளக்காடானது ஏன்?

கடலூர் வெள்ளம்
கடலூர் – நாகை கடற்பகுதியில் இயற்கை அரணாக அமைந்திருந்த மணற்குன்றுகளை அழித்து உருவாக்கப்பட்ட சிப்காட் தொழில் வளாகத்தின் ஒரு பகுதி.

நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது கடலூரின் பெய்த மழையின் அளவு குறைவுதான் (11 செ.மீ.). ஆனாலும், கடலூர் நகரம் வெள்ளக்காடானதற்கு அந்நகரின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள உப்பனாற்று முகத்துவாரமும், கெடிலம் ஆற்று முகத்துவாரமும் கடந்த ஆறாண்டுகளாக தூர் வாரப்படாததுதான் காரணம். இந்த இரண்டு முகத்துவாரங்கள்தான் 108 கடலோர கிராமங்களுக்கு வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. இந்த இரண்டு முகத்துவாரங்களும் அரசால் தூர்வாரப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதால், இவற்றின் வழியாகக் கடலுக்குள் செல்ல வேண்டிய வெள்ள நீர், கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் கடலூருக்குள்ளும், கடலோர கிராமங்களுக்குள்ளும் புகுந்துவிட்டது. மேலும், கடலூர் நகரில் இருந்த 21 குளங்களில் தற்பொழுது எஞ்சியிருப்பது 3 குளங்கள் மட்டும்தான். மற்ற குளங்களும் அந்நகரில் 21 கி.மீ. தூரத்திற்கு அமைந்திருந்த வடிகால்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக்கப்பட்டுவிட்டன. இவையெல்லாம் சேர்ந்துதான் கடலூர் நகரை வெள்ளத்திற்குள் மூழ்கடித்துவிட்டது.

இவை ஒருபுறமிருக்க, கடலூர் தொடங்கி நாகை வரை கடலோரமாக 57 இடங்களில் 15 மீட்டர் உயரத்தில் மணற்குன்றுகள் இயற்கையாகவே அமைந்திருந்தன. இந்த மணற்குன்றுகள் கடலூர் பகுதியைப் புயலில் இருந்த தடுக்கும் இயற்கை அரணாக விளங்கின. கடலூர் நகரில் சிப்காட் வளாகத்தை அமைப்பதற்காக இந்த மணற்குன்றுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டன. ‘தொழில் வளர்ச்சி’ க்காக அரசே முன்நின்று செய்த இந்த அழிவு, கடலூரை அடிக்கடி புயல் தாக்கும் களமாக மாற்றிவிட்டது.
***

சுரங்கங்கள் தப்பித்தன, கிராமங்கள் மாண்டன!

கடலூர் வெள்ளம்
ஆறுதல் நாடகத்தை நடத்த பெரிய காட்டுப் பாளையத்திற்கு வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடியை முற்றுகையிடும் கிராம மக்கள்.

அந்த மூன்று நாட்களில் நெய்வேலியில் மட்டும் 48 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலக்கரி சுரங்கங்களில் தேங்கிய தண்ணீரை பரவனாற்றில் திறந்துவிட்டது, என்.எல்.சி. நிர்வாகம். இதனால் பூதம்பாடி, அந்திராசம்பேட்டை, ஓணாண்குப்பம், காடாம்புலியூர், மேல்பாதி, கீழ்பாதி உள்ளிட்ட பல கிராமங்களில் வீடுகளிலும் வயல்களிலும் வெள்ளம் புகுந்து தனித்தனி தீவுகளாக மாறின. மின்சாரம் இன்றி, குடிநீர் இன்றி, தங்க இடமின்றி, வெளியேற வழியின்றி அக்கிராம மக்கள் அடைந்த துன்பமும், சந்தித்த அபாயமும் சொல்லி மாளமுடியாது. நீரை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை விடுத்து, பரவனாறு செல்லும் வழியாக உள்ள கிராம மக்களை அப்புறப்படுத்தி வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க என்.எல்.சி. நிர்வாகமும் அக்கறை கொள்ளவில்லை; தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

“நெய்வேலி சுரங்கத் தண்ணீர் நிலக்கரி கசடுடன் சென்று பரவனாறு மேடாகிவிட்டது. இதனைச் சுத்தம் செய்யச் சொன்னது யார் காதிலும் விழவில்லை” என்கிறார்கள் பாதிக்கப்பட்ட கிராம மக்கள். என்.எல்.சி. வெளியேற்றிய நீரால், போரினால் நிர்மூலமாக்கப்பட்ட ஊர் போல பூதம்பாடி கிராமம் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். “என்.எல்.சி. நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ பரவனாற்றில் வடிகால் பாலங்கள் கட்டிக் கொடுத்திருந்தால், இந்தப் பிரச்சினை வந்திருக்காது. இனிமேலாவது அதைச் செய்யணும்” எனக் குமுறுகிறார்கள், அக்கிராம மக்கள்.

பொதுமக்களுக்குத் தெரிந்துள்ள இந்த எளிய தீர்வுகள் மெத்தபடித்த அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது தற்செயலானதா?

***

இது கொலைக் குற்றமாகாதா?

கடலூர் வெள்ளமா
பெரிய காட்டுப்பாளையத்தில் பத்து உயிர்கள் வெள்ளத்திற்குப் பலியான பிறகு, அங்குள்ள ஓடையை அவசர அவசரமாகத் தூர் வாருகிறது அரசு : பாவத்திற்கு பரிகாரமா?

பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் கடந்த 9-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீரமணி என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர் மாண்டு போனார்கள்.

பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை ஒட்டி இருக்கும் இந்தப் பகுதி ஒரு நீர்வழிப் புறம்போக்காகும். கல்வராயன் மலையில் தொடங்கி விழுப்புரம் வரை பெய்யும் ஒட்டுமொத்த மழைநீரும் பெரிய ஓடை, சின்ன ஓடை வழியாகச் சென்று கெடிலம் ஆற்றில் சேருகிறது. இந்த ஓடை புறம்போக்கில் 10 குடும்பத்தினர்தான் வசித்து வருகிறார்கள். அனைவரும் ஏழைகள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள்.

காட்டாற்றின் ஓட்டத்தைத் திசை திருப்பி ஆக்கிரமிக்கப்பட்ட மேட்டிலும், கரையிலும் காலனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது அரசாங்கம். ஆற்றுப் பாதையும் காலனி வீடுகள் அமைந்திருந்த தெருவும் கிட்டதட்ட ஒரே மட்டத்தில் அமைந்துள்ளன. வீட்டையே மூழ்கடிக்கும் அளவிற்கு வந்த வெள்ளம் 10 பேரை விழுங்கிச் சென்றுவிட்டது.

நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் தங்கி இருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கி இருந்தால், இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி.இதழ். (22.11.15, பக்.39) இத்துணை ஆண்டுகளாக அதனைச் செய்ய மறுத்துவந்த தமிழக அரசு, இப்பொழுது தனது பாவத்தைக் கழுவ வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீரமணிக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு, ஆற்றுப் பாதையைத் தூர்வாரிக் கொண்டிருக்கிறது.

***

இதுவா மக்கள் நல அரசு?

நீர்நிலைகளைப் பாதுகாக்கவில்லை, ஏரி, முகத்துவாரங்களைத் தூர்வாரவில்லை என்பதை மட்டுமல்ல; வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு உதவக்கூடிய சில எளிய, அத்தியவாசியமான தேவைகளைக்கூட அரசும் அதிகார வர்க்கமும் செய்ய மறந்துவிட்டன, மறுத்துவிட்டன எனப் பொதுமக்கள் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்கள்.

“இவ்வளவு பெரிய புயல் வரும்பொழுது மின்சாரம் துண்டிக்கப்படும்னு எல்லோருக்கும் தெரியும். அதற்கு மாற்றாக மொபைல் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செதிருக்க வேண்டும். ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால், மெழுகுவர்த்திகளையாவது வாங்கி ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். அதனைச் செய்யாததால் 5 ரூபாய் மெழுகுவர்த்தி 75 ரூபாய்க்கு விற்றது. முன்கூட்டியே டாங்கர்களில் குடிநீரைச் சேமித்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போன்று பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே கலெக்ட் செய்து விநியோகித்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களைக் கொண்டுபோ தங்க வைக்க தனி மையங்கள் அமைத்திருக்க வேண்டும். அவை இல்லாததால், மக்கள் பள்ளிக்கூடங்களில்தான் தங்க வைக்கப்பட்டார்கள் ” என அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், இவை அனைத்தும் எங்களுக்கு தானே” புயல் கற்றுக்கொடுத்த பாடம் எனக் குறிப்பிட்டுச் சொல்லவும் தவறவில்லை.
______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க