privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசு“மூடு டாஸ்மாக்கை” கோவை கண்ணப்பன் நகர் ஆர்ப்பாட்டம் !

“மூடு டாஸ்மாக்கை” கோவை கண்ணப்பன் நகர் ஆர்ப்பாட்டம் !

-

கோவை, கண்ணப்பன் நகர் நாற்சந்தியில் 29-01-2016 அன்று “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

kovai-kannappan-nagar-demo-2கண்ணப்பன் நகர் டாஸ்மாக் கடையின் கேடு கெட்ட வரலாறு சற்றே பெரியது. கண்ணப்பன் நகர் கோவை மாநகரத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று மட்டுமல்ல தொழில் நகரான கோவையின் குறும் பட்டறைகளும் உழைப்பை விற்கும் தினக்கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் இன்றியமையாத பகுதிகளில் ஒன்று. ஒரு தேர்ந்த வழிப்பறித் திருடன் போல் சிந்திக்கும் ஜெயா அரசும் டாஸ்மாக் கடையை திறப்பதும் இது போன்ற இடங்களின் நடுவில் தான். இதே கோவையின் மேன்மக்களாக தங்களை கருதிக் கொள்வோர்களின் வசிப்பிடமான ஆர்‌.எஸ் புரத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் குடியிருப்புகளின் நடுவிலோ கொண்டு வைப்பதை கனவிலும் அவர்கள் சிந்திக்கப் போவதில்லை.

இந்தக் கடையை அகற்றக் கோரி பல கட்சிகள், அமைப்புகள் (இந்து மத வெறி அமைப்புகள் நீங்கலாக.. ஏனெனில் அவர்கள் அமைப்பின் எரி பொருளே இதுவென்பதால்) ஏராளமான முறை மனு கொடுத்தும் பயன் இல்லை. கண்ணப்பன் நகர் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டால் அந்த ஆர்ப்பாட்டத்தை கண்ணப்பன் நகருக்கும் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் நடத்த அனுமதி தருவதாக காவல் துறை கறார் காட்டியது. இதுவொன்றும் புதிதல்ல. தன்னியல்பில் பாசிசமாகி வரும் இந்த அரசுக் கட்டமைப்பு எப்போதடா கிடைக்கும் வாய்ப்பு என இருக்கையில் பொருத்தமாக கோவைக் கலவரமும் அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பும் நடந்தது. அது நிகழ்ந்த நாள் முதல் ஏறத்தாழ இருபத்தாறு வருடங்களாக கோவையில் ஒழுங்கு விதிகள் அமலில் இருக்கிறதாம். அதனால் குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான கண்ணப்பன் நகரில் அனுமதி தர முடியாது, மாற்று இடத்தில் பண்ணிக் கொள்ளுங்கள் என காவல் துறை கூறிக் கொண்டிருக்க, நாம் முடிவை மாற்றத் தயாரில்லை என கூறிவிட்டோம்.

அனுமதி கேட்ட நாள் முதல் ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள் இரவு வரையில் மாவட்ட அமைப்பாளருக்கு தொடர்ச்சியாக அலை பேசியில் அழைத்து ரத்தினபுரி துடியலூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு வசன பாணிகளில் பேசிக் கொண்டே இருந்தனர். கேமரா நேசன், செல்ஃபி நோயால் பீடிக்கப்பட்ட பிரதமர் மோடி வேறு வருவதாகவும் அதனால் பாதுகாப்புக்கு ஆள் பற்றாக்குறை எனவும் தேர்தல் காலம் எனவும் என்ன காரணம் சொல்லி நிறுத்துவது என்று தெரியாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

kovai-kannappan-nagar-demo-posterஆர்ப்பாட்டம் மாலை ஐந்து மணிக்கு என்று கூறியிருந்தோம். சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தோம். இருப்பினும் மதியம் 1 மணி முதலே காவல் துறையினர் அங்கே முகாம் இட்டிருந்தனர். நான்கு மணியளவில் 6 பேருந்துகள் 6 ஜீப்புகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் முன்பு தடுப்புகளை போட்டு அவற்றை கயிறு கொண்டு இறுக்கிக் கட்டி முழுவதும் மறைத்து இரு புறமும் இருபது இருபது காவலர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

குடிக்க வருவோரையெல்லாம், ‘கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க, அப்புறமா போலாம்’ எனக் கூறி தடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தே யாரும் டாஸ்மாக் பக்கம் கூட வரவில்லை.

நாம் அந்தப் பகுதியில் நேரடியாக செய்த பிரச்சாரத்தை விட, ஒட்டிய சுவரொட்டிகள் செய்த பிரச்சாரத்தை விட நாம் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை விட, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நின்று கொண்டு ரத்தினபுரி, துடியலூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களும் பெரியநாயக்கன்பாளையம் டி‌எஸ்‌பி யும் இதர போலீசாரும் செய்த பிரச்சாரமே அதிகம்.

“எதுக்கு இத்தன போலீஸ் நிக்குது?” ‘எதுக்கு இத்தன போலீஸ் நிக்குது?’ எனக் கேட்டுச் சென்றவர்களே அதிகம்.

kovai-kannappan-nagar-demo-1ஆக, இப்படியாக அந்த நாற்சந்தியில் நின்று கொண்டு எந்தப் பக்கம் இருந்து வருவார்கள் என நான்கு திசையிலும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுமார் ஐம்பது காவலர்கள் அது போக போக்கு வரத்துக் காவலர்கள் இவர்களுக்கும் பின்னர் உளவுத் துறை ஏழெட்டு பேர் என பயங்கரமான தயாரிப்புகளுடன் வந்து நமக்காக காந்திருந்தனர். திட்டமிட்டபடி ஐந்து மணிக்கு நமது தோழர்கள் டாஸ்மாக்கிற்கு எதிர்புறம் உள்ள சந்தில் இருந்து பதாகைகளை ஏந்திக் கொண்டு தோழர் நந்து தலைமையில் முழக்கம் இட்டவாறே வந்தனர்.

இந்தக் காட்சியை பார்த்தவுடன் பத்திரிக்கையாளர்களும் போலீசும் தட தட வென சட்டைப்பைகளை பிடித்துக் கொண்டே நம்மை நோக்கி ஓடி வந்து சுற்றி வளைத்து நின்று கொண்டனர். தாமாகவும், காவல் துறையினராலும் திரட்டப்பட்ட மக்கள் நான்கு சாலைகளிலும் நின்று கொண்டு இந்தக் காட்சியை பார்த்துக்
கொண்டிருந்தனர். சிறிது நேர முழக்கத்திற்கு பின்பு கைதான 30 தோழர்கள் அருகிலிருந்த வெங்கடேஸ்வரா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிறகு இரவு வரை, ‘ரிமாண்டு தான் நீங்கல்லாம்’, ‘இதெல்லாம் ஆர்ப்பாட்ட ஸ்பாட்டே அல்ல’ ‘சிறப்பு சட்டம் இருக்கிறது’ என்றெல்லாம் பல்வேறு வசனங்களை கூறிவிட்டு எட்டரை மணி வாக்கில் விடுவித்தனர்.

kovai-kannappan-nagar-demo-3அதன் பின்னர் பகுதிக்கு வந்து விசாரித்ததில், மதியம் முதலே பல்வேறு கடைகளில் போலீஸ் நேரடியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. அதாவது, “இந்த ஆர்ப்பாட்டம் நடத்த போறவங்க யாரு”? “எங்கிருந்து வரப் போறாங்க”? என்றெல்லாம் கேட்டுள்ளனர். இது போக நாம் கைதாகி சென்ற பின்னர், விடுவிக்கப்படும் வரை அதே இடத்தில் நின்று கொண்டு கண்காணித்துக் கொண்டே இருந்துள்ளனர். மேலும் இரண்டு குரூப்புகளாக “மக்கள் அதிகாரம்” தோழர்களே வந்து போராட்டம் செய்யப் போகிறார்கள் என்றும் அதற்காகவே காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அது வரையிலும் அங்கிருந்தவர்களுக்கு தேநீர், பலகார செலவுகளுக்கு அந்த டாஸ்மாக் கடையின் பார் ஓனராம்.

“இவங்க தான் ஏற்கெனவே, சாய்பாபா காலனியில் டாஸ்மாக் கடையை உடைச்சவங்க, உன் கடையையும் உடைச்சாலும் உடைப்பாங்க”, என மென்மிரட்டல் விடுத்ததாகவும் பேச்சு உலாவுகிறது. தேநீர் பலகாரம் மட்டும்தானா அல்லது சாராயக் கடையில் சட்டம் ஒழுங்கை காத்ததற்கு மேற்படி எதுவுமா..? என்பது அந்த காவலர்களுக்கே வெளிச்சம்.

இது வரை கண்ணப்பன் நகருக்கு அந்நியமாய் தெரிந்த அமைப்பு இப்போது மக்களோடு ஒரு படி நெருக்கம் கூடுதலாகியிருக்கிறது. இது ஒரு உறுதியான பிணைப்பாக கூடிய விரைவில் மாறும். அனுபவக் கூட்டத்தில் ஒரு தோழர் கூறியபடியே, இந்த வருடத்திற்குள் டாஸ்மாக்கிற்கு எதிர்பதமாய் அகராதியில் மக்கள் அதிகாரம் ஏறும். இன்னும் சில வருடத்திற்குள் மக்கள் அமைப்பென்றாலே மக்கள் அதிகாரம் என்ற பொருள் பெறும்.

மக்கள் அதிகாரம்
கோவை