privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சட்டீஸ்கர்: பா.ஜ.க - இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !

சட்டீஸ்கர்: பா.ஜ.க – இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !

-

காட்டு வேட்டை என்ற பெயரில்  இந்திய அரசு பழங்குடியினருக்கு எதிராக நடத்திவரும் போரை மேலும் மூர்க்கமாகியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு. மைய அரசும், மாநில அரசும் பா.ஜ.க-வின் கைகளில் இருப்பது ஒடுக்குமுறையில் கொடூர வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற போலீஸ் அடியாள் அமைப்பை ஆரம்பித்துள்ள அரசு அதைக்கொண்டு காட்டுவேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் சோனி சோரி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார்.

Soni-Sori-1
சோனி சோரி

காட்டுவேட்டை என்ற பெயரில் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருபவர் பழங்குடிப் பெண்ணான சோனி சோரி. கடந்த 2010-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இவர் மீது பொய் வழக்கு சோடித்து கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது சத்தீஸ்கர் அரசு. 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த இவர் தொடர்ந்து அரசின் காட்டுவேட்டை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இம்மாதம் 3-ம் தேதி பஸ்தாரின் மதுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட மலைபகுதியில்  மாவோயிஸ்டுகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தப்பியோடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருந்தார் பஸ்தார் காவல்துறை ஐ.ஜி கலூரி. ஆனால் நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

அதாவது ‘தேசபக்த’ காவல்துறையினர் உயிரை பணயம்வைத்து சுட்டுக்கொண்டதாக கூறியது ஹத்மா கஷ்யப் என்ற பழங்குடி என்பதும்; வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதையும்; அவரது மனைவி உறவினர்களை பத்திரிகைகள் முன்னிலையில் பேசவைத்து அம்பலப்படுத்தினார் சோனி சோரி. பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்ட கணவன் வீடு திரும்பாததை கண்டு 4-ம் தேதி காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அவரது மனைவி கலோ கஷ்யப். அப்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த காவல்துறையினர் பின்னர் 10,000 ரூபாய் கொடுத்து இறுதி சடங்கு செலவுக்கு வைத்துகொள்ள கூறிய கொடூரத்தையும் அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

பாதுகாப்பு படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காக வருகிற மார்ச் 8 பெண்கள் தினத்தன்று பேரணி நடத்தும் ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறர் சோனி சோரி.

soni-sori-attack
சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றொதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கண் திறக்க முடியாத நிலையிலிருக்கும் சோனி சோரி தன்னை தாகியவர்கள் போலீஸ் ஆதரவாளர்கள் என்பதை தெரிவித்துள்ளார். தனனை தாக்கியவர்கள் மதுரம் போலி என்கவுண்டர் விசயத்தை இனி பேசக்கூடாது என்றும், ஐ.ஜி கலூரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் முயற்சிக்ககூடாது எனவும் மீறினால் சோனி சோரியின் குழந்தையையும் இதே கதிக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டியதை பதிவு செய்துள்ளார் சோனி சோரி.

இது ஏதோ தனித்த சம்பவமல்ல. இம்மாதத்தில் பஸ்தார் பகுதியில் செயல்படும் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியமும் , ஜகதால்பூர் சட்ட உதவி மைய வழக்கறிஞர்களும் போலீஸ் மற்றும் சமஜிக் ஏக்தா மஞ்ச் போலீசு அடியாள் இயக்கத்தின் அடக்குமுறைகளை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரசின் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்முறைகள், போலி சரணடைவு சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம். கடந்த ஜனவரி 10-ம் தேதி மாலினி சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு வந்த சமஜிக் ஏக்தா மஞ்ச் அடியாள் அமைப்பினர் ” பஸ்தார் மற்றும் போலீசாரின் இமேஜை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தங்களின் கோபத்தை சந்திக்க நேரிடும்” என்று மிரட்டி சென்றனர். பழங்குடி பெண்கள் மீதான் பாதுகாப்பு படையினரின் பாலியல் வன்முறைகள் குறித்த செய்தியை சில மாதங்களுக்கு முன்னர் வெளிக் கொணர்ந்திருந்தார் மாலினி சுப்பிரமணியம். தன்னை மிரட்டி சென்றவர்களில் மனிஷ் பரக் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா பிரிவின் செயலாளர் என்பதும், சம்பத் ஜா என்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது என்று கூறுகிறார் மாலினி. இந்த நபர்கள் பஸ்தார் சரக ஜி.ஜி. கலூரியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது கேரவன் பத்திரிகை.

தொடர்ந்து இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் ஜக்தால்பூர் போலீசார் இப்பத்திரிகையாளரை தொந்தரவு செய்திருக்கின்றார். ஆயினும் அப்பகுதியிலிருந்து வெளியேறாமல் தொடந்து செயல்படவே கடந்த 8-ம் தேதி சம்ஜித் ஏக்தா மஞ்ச் அடியாட்கள் இவர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

kaluri-with-samajik-ekta-manch
பஸ்தார் சரக ஜி.ஜி கலூரி கொடுத்த விருந்தில் சம்ஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பின் மனிஷ் பிரகா, சம்பத் ஜா. படம் : caravanmagazine

இந்நிலையில் கேரவன் பத்திரிகை சமஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பு குறித்தும், ஜி.ஜி கலூரி குறித்து பல உண்மைகளை கடந்த சில தினங்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்த அடியாள் அமைப்பை இயக்கிவருவதே பஸ்தார் பகுதி ஜி.ஜி கலூரி தான் என்பதும், இந்த அதிகாரி மனிதத்தன்மையற்ற பேர்வழி என்பதையும், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், இப்பகுதியில் பதவி ஏற்றதும் மக்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி வருவதையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அக்கட்டுரை.

சல்வாஜூடும் காலப்பகுதியில் பழங்குடியினரை கொத்து கொத்தாக கொன்றபாதுகாப்பு படையினர் சடலங்களை அப்படியே விட்டு சென்றதையும், தற்போது கலூரி பொறுப்பேற்ற பிறகு அக்கொலைகளை என்கவுண்டர் என்றூ கூறி வெற்றி செய்தியாக வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பத்திரிகைகளுக்கு அறிவிப்பதையும் அம்பலப்படுத்தியது.

பஸ்தார் பற்றிய உண்மைச்செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த சூழலில் தான் மாலினி சுப்பிரணியத்தின் வீடு தாக்கப்பட்டதோடில்லாமல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி மாலினி வீட்டு வேலை செய்யும் பெண்ணை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று விடுவிக்கவில்லை. இந்நிலையில் மாலினி வசிக்கும் வீட்டு உரிமையாளரை மிரட்டி மாலினியை வெளியேற்ற நிர்பந்தித்து வெளியேற்றியிருக்கிறது போலீஸ்.

JagdalpurLegalAidGroup_Guneet_Isha_Shalini_Parijatha
ஜகதால்பூர் சட்ட உதவி மையத்தினர். படம் :thewire

இதே போல பழங்குடியினரில் வழக்குகளை நடத்தி வரும் ஜகதால்பூர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களையும் முடக்கும் நோக்கில் பகுதி பார் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பது , மிரட்டுவது என பல ஆயுதங்களை பிரயோகித்த பிறகு சில தினங்களுக்கு முன்னர் இவ்வமைப்பில் செயல்படுவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தியிருக்கிறது காவல்துறை. ஆக இவர்களையும் தற்போது வெளியேற்றிவிட்டது.

அதானிக்காக அமல்படுத்தப்படும் சட்டப்படியான அடக்குமுறை

ஒரு புறம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசு தனக்கு தடையாக இருக்கும் பெயரளவிற்கான சட்டங்களையும் மதிப்பதில்லை.

சர்குஜா மாவட்டத்தின் கட்பாரா கிராமத்தில் சுரங்க வேலைகளை செய்ய அதானி குழுமம் மற்றும் ராஜஸ்தான் அரசு நிறுவனங்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு அனுமதியளித்திருந்தது சத்தீஸ்கர் அரசு. இதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இங்கு மட்டுமல்ல சத்திஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரங்க வேலைகளுக்காக பழங்குடியினர் விரட்டப்படுவதை எதிர்த்து தீரத்துடன் போராடிவருகிறார்கள். இவர்களுக்கு எதிராகத்தான் பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

வன உரிமை பாதுகாப்பு சட்டப்படி பழங்குடியினரின் பாரம்பரியமான பகுதிகளில் பழங்குடியினரின் ஒப்புதலோடு மட்டுமே இந்நிலங்களை அரசு பயனபடுத்திக்கொள்ள முடியும். அப்படி அரசு அறிவித்த பாரம்பரிய வாழ்விடங்களுள் ஒன்றாக இக்கிராமம் வருகிறது. ஆனால் இக்கிராமத்தினரோ தங்கள் நிலத்தை தரகு முதலாளிகளுக்காக விட்டுத்தர தயாரில்லை.

கிராம சபையின் மூலம் அதானிக்கு நிலத்தைவிட்டுத்தர முடியாது என்று சட்டபூர்வமான வழியை கையாண்டார்கள் இக்கிராம மக்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் அரசு கடந்த ஜனவரி அன்று ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் அப்பட்டமாகவே ” கிரமத்தினர் தங்களுக்கு அளிக்கப்ப்பட்ட உரிமையை சுரங்கம் அமைவதிற்கு எதிராக பயன்படுத்துவதாக” ‘குற்றம்’ சாட்டி அவ்வுரிமைமை பறித்திருக்கிறது. “நிர்வாகம் சுரங்க வேலைகளுக்காக காடுகளை மாற்ற முயன்றபோது ஆட்சியரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நில உரிமையை பயன்படுத்தி பழங்குடியினர் இவ்வேலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர், போராடினர். அதை பரிசீலித்தபோது இந்நிலம் பழங்குடிகளின் உரிமையாக அறிவிக்கப்படும் முன்னரே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது தெரிய வந்ததை அடுத்து பழங்குடியினருக்கு இந்நிலத்தில் மீதான உரிமை நீக்கப்படுகிறது” என்று அவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து செய்திருக்கிறது அரசு. அரசு தான் சொல்லிக்கொள்ளும் குறைந்தபட்ச அறநெறிகளுக்குக்கூட எதிரான மக்கள் விரோத சக்தியாக மாறியிருப்பதையே இது குறிக்கிறது. பெயரளவிற்கான சட்டங்களும் செல்லாக்காசிவிட்ட நிலையில் இந்த அரசை நம்பி பிரயோஜனமில்லை.

தேசதுரோகி என்று சொந்த நாட்டு மக்களை விளிக்கும் பா.ஜ.க மற்றும் இந்திய அரசு இங்கே நடத்தி வரும் பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது? இராணுவம், போலிசு ஒடுக்குமுறை குறித்து எவரும் வாய் திறக்க கூடாது என்பதோடு, அதானிகளை பாதுகாக்க இவர்கள் எவ்வளவு கொடூரத்திற்கும் தயாராகிறார்கள் பாருங்கள்!

பத்திரிகையாளர்கள்,ஜனநாயக சக்திகளை விரட்டியடிக்கபடுவதும்,சல்வாஜுடும் போன்று புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும்,போலி மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் பழங்குடியினருக்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான இறுதி படுகொலைகளுக்கு அரசு தயாராகிவருவதையே காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். பழங்குடிகளுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

– ரவி

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க