privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !

-

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து!

நேற்று கேரள கவர்னராக சதாசிவம்!
இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

தத்துவும் சதாசிவமும்
தத்துவும் சதாசிவமும்

பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது “நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது ஜெட்லியின் கட்சிதான் அப்படி நீதிபதிகளை ‘வளைத்து’ வருகிறது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் பா.ஜ.கவின் தேசிய செயலராக இப்பொழுது இருக்கும் அமித்ஷாவை விடுவித்தார். அதற்கு பலனாக தான் அவருக்கு கேரள கவர்னர் பதவி கிடைத்தது என சர்ச்சையானது . மற்றொரு சர்ச்சை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என சதாசிவம் லாபி செய்தார் என பரவலாக பேசப்பட்டது!

”இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரமுகர் சதாசிவம்தான். கடந்த செப்டம்பரில் (2014-ல்) அவருடைய நியமனம் நடைபெற்றபோது 2 முன்னாள் தலைமை நீதிபதிகள் அதை விமர்சித்தனர். அரசியல் நெருக்கடிக்கு ஆளாகாமல் நீதித் துறை செயல்பட வேண்டும் என்பதால், இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல என்றே கருதப்பட்டது.”என எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் குறிப்பிடுகிறார்.

modi_judgesகேரள கவர்னராக நியமனம் குறித்து தனது அதிருப்தியை முன்னாள் கூடுதல் சாலிசிடர் ஜெனரல் கே.வி. விஸ்வநாதன் திறந்த கடிதம் மூலம் சதாசிவத்திற்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், அரசு நிர்வாகத்தில் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களின் கரங்களுக்கிடையே இடைவெளி என்பது ஓய்வுபெற்ற பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக கரங்கள் இடைவெளியை குறைத்து ஆரத்தழுவினால், அது பயங்கர ஆபத்துக்கான எச்சரிக்கை அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதிகளான வி.என். கரே மற்றும் கே.டி. தாமஸ், சட்ட ஆனையத்தின் தலைவர் ஏ.பி. ஷா, மூத்த வழக்குரைஞர்கள் ராஜீவ் தவான் மற்றும் பாலி.எஸ்.நாரிமன் போன்றோர் சதாசிவத்தின் நியமனத்தை விமர்சித்து இருந்தனர். அனைத்திந்திய பார் அசோசியஷேனும் மற்றும் கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் நியமனத்தை கண்டித்திருந்தது.

அமித் ஷாவுடன் சதாசிவம்
அமித் ஷாவுடன் சதாசிவம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதோ ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்!

  • குஜராத் படுகொலைகள் வழக்கில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய சஞ்சீவ்பட் மனுவை தள்ளுபடி செய்தார்
  • மாயா கோத்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைப்பு மற்றும் ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் நீதிபதி தத்து, மாயா கோத்னானிக்கு ஜாமீன் கிடைத்தே தீர வேண்டும் என்பது போல செயல்பட்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • இந்த வருடம் ஜனவரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோடியை சிறந்த தலைவர், நல்ல மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவர் என்று மோடியை புகழ்ந்தார்
  • சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்து மற்றும் சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க ‘கால்குலேட்டர்’ புகழ் குமாரசாமியை பயன்படுத்தியவர்
  • ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தத்துவிடம் புகார் அளித்தார்கள். அதற்கு, ’யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று கூறுவார்கள். கவலைபடாதீர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறது’ என தேர்ந்த பிழைப்புவாதி போல் பதில் அளித்தார்.
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் தத்து எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை. அவர் அளித்த உத்தரவு முறைகேடனாது மற்றும் சந்தேகத்திற்கு உரியது அதனால் இந்த வழக்கை மேலும் அவரே விசாரிக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் 1000 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட மனுவை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.
  • எச்.எல் தத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை ஊடகங்கள் வெளியிடாததை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
  • மதுரையில் வழக்குரைஞர்கள் ரமணா படம் போல டாப் 5 ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டபொழுது மிகவும் துடித்துப்போனவர் தத்து. நீதிபதி கர்ணன் குறித்த ஒரு வழக்கில், சம்பந்தமேயில்லாமல் வழக்குரைஞர்களால் நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று அலறினார்

இப்படி பல குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது தான், தேசிய மனித உரிமை ஆணையர் பதவி கிடைத்திருக்கிறது.

மோடியுடன் தத்து
மோடியுடன் தத்து

நீதிபதிகள் இவ்வாறு பதவிகளை தேடி ஓடுவது என்பது நீதித்துறையின் சுதந்திரதன்மைக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கான மோசமான அடையாளங்கள் சதாசிவம் நியமனமும் அதன் பின் தொடரும் தத்துவின் நியமனமும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நேர்மையாக தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் “ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் என்பது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.” என குறிப்பிட்டார்.

குன்ஹாவின் வரையறைப்படி, பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய முரண் இது!

நிலவுகிற மோடி அரசு அறிவிக்கப்படாத நெருக்கடியை நிலையை நாடெங்கும் அமுல்படுத்திவருகிறது. தனது வானர கொலைகாரப் படைகளை காக்க காவி சிந்தனையுள்ள நீதிபதிகளை நீதித்துறைக்குள் நியமிக்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறது. அவர்கள் எதற்கு? நாங்களே நீங்கள் நினைப்பதை நிறைவேற்றி தருகிறோம் என்பதை தான் கவர்னர் பதவியும், மனித உரிமை ஆணையர் தலைவர் பதவியும் நிரூபிக்கின்றன.

இறுதிச்சுற்று படத்தில் ஒரு வசனம் வரும். ”ஊழல்வாதிகள் உங்களை நான் விசாரிக்கனும், ஆனால், நீங்க விசாரிக்கிற இடத்துல உட்கார்ந்து இருக்கீங்க!” நேர்மையான வழக்குரைஞர்கள் நாம் இப்பொழுது கூண்டில் நிற்கிறோம். அவர்கள் நம்மை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றிணைந்து நீதித்துறையில் ஊழல்வாதிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும் பொழுது மட்டும் தான் அவர்கள் பலம் இழப்பார்கள். இல்லையெனில், நம் அமைதியே அவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை