privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விJNU மாணவர் விஷ்மய் நேர்காணல்

JNU மாணவர் விஷ்மய் நேர்காணல்

-

JNU நேரடி ரிப்போர்ட் 5

”பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளையும், கல்வி முறையையும், கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களையும் இந்துத்துவம் குறி வைப்பது இது முதல் முறை அல்ல. ஒரு நீண்ட தாக்குதல் வரிசை நம்முன் இருக்கிறது.. அந்த அடிப்படையில் ஜே.என்.யு மீதான தாக்குதல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”சரி தான்.. இந்த சண்டையில் நாங்கள் மட்டும் எதிரணியில் நிற்கவில்லை.. எங்கள் வரிசையில் சென்னை ஐ.ஐ.டி, பூனா திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்று நிறைய பேர் நிற்கிறார்கள். ஆனால், இவைகளெல்லாம் வெறும் தாக்குதல் என்கிற நிலையில் தான் உள்ளது. அவர்கள் இறுதி வெற்றியை இன்னமும் அடைந்து விடவில்லை.. மாணவர் சமுதாயம் அத்தனை சுலபத்தில் அவர்களை வெற்றியடைய விடாது”

Comrade Vishmay
AISA அமைப்பின் நீண்ட கால உறுப்பினரான விஷ்மய்

AISA அமைப்பின் நீண்ட கால உறுப்பினரான விஷ்மய் மிக நிதானமாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சன கண்ணோட்டத்தோடும், அது முன்வைக்கும் தேசியத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் அணுகுகிறார். தங்களது போராட்டங்கள் குறித்தும், தற்போதைய நெருக்கடியையும் மிகவும் நம்பிக்கையோடு அலசுகிறார். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தது ஜே.என்.யு வளாகத்தில் அமைந்திருக்கும் நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு நேர் எதிரே இருந்த பூங்காவில்.

பூங்காவிற்கும் அலுவலக கட்டிடத்திற்கும் இடையில் இருந்த பகுதியில் ஜே.என்.யு-வின் சமூக அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பெண்களுக்கான கல்வி மையத்தின் பேராசிரியர் அருணிமா “தேசியம்” குறித்த கற்பிதங்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். சுற்றிலும் சில ஆயிரம் மாணவ மாணவிகள் அமைதியாக அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஹோண்டா தொழிற்சங்கத்திலிருந்து வந்திருந்த ஒருசில தோழர்களும் அந்தக் கூட்டத்தினிடையே காணப்பட்டனர்.

”தோழர், ஒவ்வொரு தாக்குதலின் போதும் அவர்கள் அடுத்த தாக்குதலை நீங்கள் எந்த விதிகளின் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயித்து விடுகிறார்கள். இந்த முறையும் கூட ஜே.என்.யு மாணவர்கள் தங்கள் ”தேசி பக்தியை” உத்திரவாதம் செய்ய வைத்துள்ளார்கள். தேசியம், அரசியல் சாசனம் போன்றவற்றின் புனிதத்தை ஜே.என்.யு ஏற்றுக் கொண்டு விட்டதாக சொல்லலாமா?

”நான் அப்படிக் கருதவில்லை தோழர். எந்த விவாதங்களிலும் இது வரை ‘விலக்கப்பட்டதாக’ புனிதமானதாக கருதப்பட்ட தேசியத்தை நாங்கள் விவாத மேடைக்கு இழுத்து வந்துள்ளோம் என்றே கருதுகிறேன்”

“அப்படியென்றால், நீங்கள் அரசியல் சாசனத்தின் புனிதம், நாட்டின் எல்லைக் கோட்டின் மீது சொல்லப்படும் புனிதம் போன்றவைகளை உள்ளடக்கி அவர்கள் முன்வைக்கும் தேசியம் பற்றிய கற்பிதங்களை எதிர்ப்பீர்கள் என்று எடுத்துக் கொள்ளவா?”

”தோழர், இந்த விவாதங்களில் எமது அமைப்புக்கென்று உள்ள நிலைப்பாடுகளின் வரம்பில் நின்று நான் உரையாடுவேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி விவாதம் என்று வந்த பின் எல்லா முரண்பட்ட கருத்துக்களும் மேடைக்கு வந்தாக வேண்டும் அல்லவா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் தேசியம் பற்றிய கற்பிதங்களும், நாங்கள் சொல்லும் தேசியமும் மட்டுமில்லை, சுயநிர்ணய உரிமையை முன்வைப்பவர்களின் வாதங்களும் கூட விவாத மேடைக்கு வந்தாக வேண்டும் தானே? அனைத்து கருத்துக்களும் மோதிக் கொள்ளும் விவாதத்தின் போக்கில் சரியானது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்”

“சரிசமமாக வைத்து விவாதிக்கும் அருகதை ஆர்.எஸ்.எஸ்-க்கு உண்டா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. அந்த விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. தற்போது சூடாக நகர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினையின் தாக்கத்தில் யு.ஜி.சி ஆக்கிரமிப்பையும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளையும் மறந்து விட்டீர்கள் தானே?”

jnu-discussion“இல்லை.. மாணவர்களின் நினைவுத் திறனை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள் எனில் அதைத் தவறு என்பதைப் புரிய வைப்போம். அவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சூழ்ந்து நின்று தாக்குகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை, அதில் ஏதாவது ஒரு முனையில் அவர்களை முறியடித்து விட்டால் மொத்தமாகச் சரிந்து விடுவார்கள் என்பது. அவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் உள்ளூர பிணைக்கப்பட்டவை. புதிய கல்விக் கொள்கை கல்வி உதவித் தொகையில் கைவைக்கும் திட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.. நாங்கள் யு.ஜி.சி முற்றுகை போராட்டத்தைத் துவங்கினோம்.. மாணவர்களின் கவனத்தைக் ரோஹித்தைக் கொன்றதன் மூலம் கலைக்கப் பார்த்தார்கள், ரோஹித்திடமிருந்து பார்வையை விலக்க ஜே.என்.யு-வில் கால் வைத்துள்ளார்கள். நீங்கள் ஒரு முனையில் அவர்களை வென்று முன்னேறினீர்கள் என்றால் அனைத்துக்கும் மையமாக உள்ள நாக்பூரை அடைவீர்கள்”

”ஜே.என்.யுவின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல் ஓய்ந்த பின் வளாகத்தின் சூழலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்”

“ஜே.என்.யு வளாகம் என்பது இந்த நாட்டிற்குள் தானே இருக்கிறது? எனவே மொத்த நாடும் என்ன நிலைக்குச் செல்கிறதோ அதைத் தான் இந்த வளாகமும் பிரதிபலிக்கும் என்று கருதுகிறேன். எனது யூகம் என்னவென்றால், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது – அந்த வாய்ப்பு நமக்கு மட்டுமின்றி அவர்களுக்கும்(ஆர்.எஸ்.எஸ்) சேர்த்தே கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் அரசியல் சூழலை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் சாத்தியம் எமக்கும், அதில் நாம் தோற்றுப் போனால் பிற்போக்கான பாதையில் செலுத்தும் சாத்தியம் அவர்களுக்கும் உள்ளது. ஆக, இந்தப் பிரச்சினையில் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து, விவாத மேடைக்கு வந்துள்ள தேசியத்தை முழுமையான பரிசோதனைக்கும் அலசலுக்கும் உட்படுத்த வேண்டும். மிக அரிதான சந்தர்பங்களில் தான் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்”

“உங்கள் போராட்டம் இந்த வளாகத்திற்குள் மட்டுமே முடங்கிக் கிடப்பதாக இருக்கிறதே… தில்லி நடுத்தர வர்க்க மனநிலையில் உறைந்து போயிருக்கும் இந்துத்துவ அரசியலையும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு பொதுபுத்தியையும் உங்களால் இந்த வளாகத்திற்குள் இருந்து கொண்டு மாற்றியமைத்து விட முடியும் என்று கருதுகிறீர்களா?”

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தோழர். வளாகத்திற்கு வெளியே நாங்கள் செல்லவில்லை என்பது முழு உண்மையில்லை. அதே போல் வளாகத்திற்கு வெளியே உள்ளவர்கள் எங்கள் அரசியலை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை என்பதிலும் முழு உண்மையில்லை. நீங்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்… ஹோண்டா ஆலைத் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்க வந்துள்ளார்கள். மாருதி தொழிலாளர்களும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்துத்துவம் மக்கள் மத்தியில் விதைத்துள்ள நச்சுக் கருத்துக்களை முழு வீச்சில் எதிர்த்து முறியடிக்கும் அளவுக்கு நாங்கள் மக்களோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஓரளவுக்கு உண்மைதான். மேலும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஏற்கனவே தேசத்தின் புனித பிம்பம் என்கிற நிலைநிறுத்தப்பட்ட ஒரு உளவியல் உதவி செய்கிறது.. நாமோ மக்களின் மனங்களில் ஆழமான படிமங்களாய் உறைந்து விட்ட விசயங்களைக் கையாள்கிறோம். சொல்லப் போனால், நாம் எதிர் திசையில் பயணிக்கிறோம். உண்மை இருப்பது நாம் செல்லும் திசையில் தான் என்பதை மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது மிகவும் கடினமான பணி. இப்போது தானே இவையெல்லாம் விவாதத்திற்கு வந்துள்ளது… போகப் போக நிலைமை மாறும். மோடியின் பொருளாதார தோல்விகள் எழுப்பும் நெருப்பின் மீது தேசியம் என்கிற பட்டுத்துணியைப் போட்டு மூடி விட நினைக்கிறார்கள்.. அது இறுதியில் எமக்கே சாதகமாக முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது…”

“ஆனால், இடதுசாரி சக்திகள் பிளவுண்டு கிடக்கிறதே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டப்பட்ட சக்தியாக இருக்கும் அதே நேரம் அவர்களுடைய தாக்குதல்களை எதிர்கொள்பவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள் அல்லவா?”

“இந்தப் பிளவுகள் ஏற்பட்டதற்கு எப்படி பிரத்யேகமான வரலாற்றுக் காரணங்கள் இருந்ததோ அதே போல் மீண்டும் நாமெல்லாம் ஒரு நாள் இணைவதற்குத் தேவையான வரலாற்றுத் தேவைகளை இந்துத்துத்துவ பாசிசமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

”தமிழ்நாட்டிலிருந்து ஒரு தோழர் வந்து ஜே.என்.யு வளாகத்தில் அமர்ந்து என்னோடு உரையாடுவார் என்றோ, என்னால் அவரோடு சுமார் ஒரு மணிநேரம் முரண்படாமல் பேச முடியும் என்றோ சில வருடங்களுக்கு முன் நான் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டேன். உண்மையில் அவர்கள் நம்மை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களின் கல்லறையைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்”

நாங்கள் பேசிக் கொண்டே மெல்ல பூங்காவில் இருந்து வெளியே வந்தோம்… மாலை மணி ஏழாகியிருந்தது. வானம் வழங்கிய வெளிச்சத்தில் செம்மை ஏறியிருந்தது. மெல்லக் குளிர் பரவத் துவங்கியிருந்தது. அருணிமாவின் உரையை கை தட்டல்களோடு மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்திலும் கேரளத்திலும் தேசியம் என்கிற கற்பிதம் மக்களிடம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதைக் குறித்து பேராசிரியர் அருணிமா பேசிக்கொண்டிருந்தார். பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் தேசியம் குறித்த புரிதலில் ஏற்படுத்தியிருக்கும் செல்வாக்கை விவரித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வடக்கு மற்றும் வடகிழக்கு மாணவர்கள் ஆச்சர்யத்தோடு வரவேற்றுக் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர். விஷ்மய் ஒரு புன்னகையோடு பேசினார்..

“பார்த்தீர்களா தோழர்? முன்பெல்லாம் நாங்கள் இங்கே கூட்டம் போட்டால் சில பத்து மாணவர்கள் தான் வருவார்கள். இப்போது ஆயிரக்கணக்கான மாணவர்களை நம்மை நோக்கித் தள்ளி விட்டுள்ளார்கள். பெரியாரை நாங்கள் கேள்விப்பட்டதோடு சரி. இப்போது அவரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம். இந்துத்துவத்திற்கு எதிரான விவாதங்களில் சாத்தியமான எல்லா ஆயுதங்களையும் எடுக்க நம்மை அவர்கள் நிர்பந்தித்துள்ளார்கள்… இந்தப் போராட்டம் நிச்சயமாக முன்னேறிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்”

இந்த எதார்த்தம் தான் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய சிக்ஷக் மண்டல், அகில பாரதிய வித்யார்த்தி பரிசத், வித்யா பாரதி, இதிகாஸ் சங்கலன் சமிதி போன்ற பரிவார அமைப்புகளைக் கொண்டு கல்வித் துறையை ஆக்டோபசின் கரங்களைப் போல் வளைத்துள்ளது இந்துத்துவ கும்பல். கல்வித் திட்டத்தை மேலிருந்து இந்துத்துவமயமாக்குவது, அதற்கு எழும் எதிர்ப்புகளை ஏ.பி.வி.பி கும்பலைக் கொண்டு கீழிருந்து மடையடைப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு அவர்களே எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் எதிர்ப்புகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இந்துத்துவ கும்பல் கல்வித்துறையின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூரத் தாக்குதல்கள் பல்வேறு முனைகளில் இருந்து தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு புறம், புதிய கல்விக் கொள்கை-2015 என்கிற பெயரில் மோடி அரசு அறிமுகப்படுத்தவுள்ள கல்வித் துறை சீர்திருந்தங்கள் கல்வித் துறைக்குள் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டுக் கொள்ளையர்களும் நுழைய வழிவகை செய்கின்றது. நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் கல்வி வரி என்கிற பெயரில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து தான் அரசு சார்பாக நடத்தப்படும் உயர் கல்வி நிலையங்களும், மற்ற அரசு கல்வி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் படி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்வி வியாபாரக் கூடங்களுக்கும் நமது வரிப்பணம் திசை திருப்பி விடப்படும். மேலும், இடைநிலை பள்ளிக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என்கிற பெயரில் நவீன குலக்கல்வி முறையையும் இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்காக கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு அத்துக்கூலிகளாக மாணவர்களை பிடித்துக் கொடுக்கும் ஆள்பிடி ஏஜெண்டாக தனது அரசு இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைத் தொழிலாளர் சட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் கல்வி வழங்க வேண்டிய கடமையில் இருந்து முற்றாக தனது பொறுப்புகளைக் கைகழுவ உள்ள மோடி அரசு, இன்னொரு பக்கம் அப்படி வழங்கப்படும் கல்வி முழுவதும் காவிமயமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் அவிழ்த்து விடப்படும் அறிவியலுக்குப் புறம்பான உளறல்களின் தொகுப்புகளாக பாட புத்தகங்களை மாற்றி வருகிறது. புராண காலத்தில் விமானம், விநாயகனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, மகாபாரதத்தில் அணுகுண்டு போன்ற புளுகு மூட்டைகளையே இனி வரலாறாக மாணவர்கள் படிக்க உள்ளனர்.

மாணவர்களின் சுயசிந்தனையை ஒழித்துக் கட்டி, அவர்களை இந்து வெறியேறிய மிருகங்களாகவும் கார்ப்பரேட்டுகளின் உழைப்புச் சுரண்டலை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் அடிமைகளாகவும் மாற்றியமைப்பதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டம். பசு ஏன் புனிதம் என்றோ, சம்பூகனைக் கொன்ற ராமனை ஏன் தேசிய நாயகனாக ஏற்க வேண்டுமென்றோ கேள்வி எழுப்புவது தேசியத்தையே மறுப்பதற்கு ஒப்பானதாக சித்தரிக்கப்படுகிறது. ஜே.என்.யு விவகாரத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி போலீசார் சமர்பித்த அறிக்கையில் மாணவர்களின் தேச விரோத செயல்களாக மாட்டுக்கறி தின்பதையும், மகிஷாசுரனை வணங்கியதையும் குறிப்பிட்டிருப்பது வெறும் முட்டாள்தனங்கள் அல்ல. இவையெல்லாம் இனி தேச துரோகங்கள்!

jnu-idea-ex-759மோடி முழு மெஜாரிடியுடன் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் கும்பல் களத்திலிறங்கி விட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக காத்திருந்த திருடனின் கையில் வாக்காளர்கள் மே 2014ல் சாவியைக் கொடுத்தனர். ”வளர்ச்சி” என்கிற முகமூடியை உடனடியாக தூக்கியெறிந்து விட்டு இந்துத்துவ செயல்திட்டங்களை முழுமூச்சோடு அமல்படுத்த துவங்கினர். இதற்கிடையே 50 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்த அடி, தில்லியிலும் பீகாரிலும் கிடைத்த மரண அடி உள்ளிட்ட தோல்விகள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று முதலாளிய அறிஞர்கள் கனவு கண்டனர்.

சர்வதேச ஏகாதிபத்திய மூலதனத்திற்கு தொண்டூழியம் செய்வதை சலசலப்புகளின்றியும் கவனச் சிதறல்களின்றியும் மோடி செய்ய வேண்டும் என்பது முதலாளிய அறிஞர்களின் எதிர்பார்ப்பு. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ மூலதன அடிமைச் சேவகத்திற்கு புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறது. ஒரே கல்லில் கார்ப்பரேட் சேவையையும் காவிமயமாக்கலையும் நிறைவேற்றி விடத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பலைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி தோல்விகளை அவர்கள் இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர். இப்போதைய அதிகாரத்தைக் கொண்டு ஒவ்வொரு துறையாக – அதிலும் குறிப்பாக கல்வித் துறையை – மாற்றியமைத்து விட்டால் அதன் பாதிப்புகள் பல்லாண்டுகளாகத் தொடரும் என்றும் அதன் பலன்களை அறுவடை செய்வது சுலபம் என்று கணக்குப் போடுகிறது,

எனினும், காவி பயங்கரவாதிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு வந்த நெருக்கடியை பு.மா.இ.மு மாநிலம் தழுவிய அளவில் எடுத்துச் சென்று சிறப்பான பதில் மரியாதை வழங்கியதில் பின்வாங்கியது காவி கும்பல். பூனா திரைப்படக் கல்லூரியும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் பணிய மறுத்து இன்றளவும் போராட்ட உறுதியோடு நிற்கின்றன. ஜே.என்.யுவின் சிலிர்ப்பு அடங்கும் முன் அலகாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து கலகக்குரல் எழுகின்றது.

பேராசிரியர் அருணிமாவின் உரை முடிந்து ஹோண்டா தொழிலாளர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். ”செவ்வணக்கம் செவ்வணக்கம்… நக்சல்பாரிக்கு செவ்வணக்கம்!” “ஒன்றே பாதை ஒன்றே பாதை நக்சல்பாரி ஒன்றே பாதை!”. சில மாணவர்களிடம் புழங்கிக் கொண்டிருந்த புரட்சிகர முழக்கங்களை ஆயிரக்கணக்கான மாணவர்களின் குரல்வளையில் திணித்து பெரும் சாதனையைப் புரிந்துள்ளது 56 இன்ச் மார்பு கொண்ட மத்திய அரசு. பாசிசத்தை எதிர்க்கும் இந்தப் போரில் தாம் மட்டும் தனியே நிற்கவில்லை என்பதை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து விட்டனர். மற்ற ஒடுக்கப்படும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை நோக்கி மாணவர்கள் திரும்பியுள்ளனர்.

ஜே.என்.யு மாணவர்களுக்கு மக்களோடு ஐக்கியப்படுவதிலும், பாசிச எதிர்ப்பிலும் ஒளிமிக்க பாரம்பரியம் ஒன்றுள்ளது என்றாலும், இம்முறை அதை மீண்டும் நிரூபிக்க களமிறங்கியுள்ளனர். இந்த முறை ஜே.என்.யு தணித்து விடப்படவில்லை. அறிவித்துறையினர் மட்டுமின்றி நாடெங்கிலும் மாணவர் சமுதாயம் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். வடக்கே தில்லியில் வாலாட்டினால் தென்கோடித் தமிழகத்தின் தேனி மாணவர்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதிர்பார்த்திருக்காது. இந்த முறை புலியின் வாலில் நெருப்பைப் பற்ற வைத்துள்ளனர், அழியப்போவது ராவண ராஜ்ஜியமல்ல – ராம ராஜ்ஜியம் என்பதை உணர்த்தும் ஆவேசத்தில் அணிதிரள்கிறது மாணவர் சமுதாயம்.

Prof Arunima Speaking 550
பேராசிரியர் அருணிமா பேசுவதை கேட்கும் திரளான மாணவர்கள்

பல்கலைக்கழக வளாகங்களுக்குள் இந்துத்துவ திணிப்புகளுக்கு வருகின்ற எதிர்ப்புகளை வளாகங்களுக்கு வெளியே ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கூலிப்பட்டாளங்கள் துணையுடன் எதிர்கொள்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். ஜனநாயகப்பூர்வமான அறிவுத்துறையினரை மொத்தமாக ”தேசவிரோதிகளாக” கட்டமைப்பது, தங்களது ‘உணர்வுகள்’ பாதிக்கப்பட்டதைப் போல் காட்டிக் கொண்டு ஊடகங்கள் வழியாக வெறியூட்டுவது, இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட “பதட்டமான” சூழலைப் பயன்படுத்திக் கொண்டு நேரடியாகவும் தாக்குதல் தொடுப்பது என்ற வழிமுறையைப் பின்பற்றுகிறது சங்க பரிவாரம்.

கல்புர்கி, பன்சாராவைக் கொன்றவர்கள் மட்டுமின்றி தற்போது தில்லியில் கண்ணையாவின் நாக்குக்கும் தலைக்கும் விலை வைத்து போஸ்டர் அடித்துள்ளவர்கள் வரை சொல்லி வைத்தாற்போல் ”சில்லறைக் கும்பல்களாக” (Fringe Elements) இருப்பதும் அதை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தற்செயலானதல்ல. தேசிய ஊடகங்களின் மாமாத்தனங்கள் மக்கள் அறியாதவையல்ல என்றாலும் இம்முறை ஆர்.எஸ்.எஸ் கும்பலே எதிர்பாராத ஒரு பிளவு ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ளாது. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க