privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்வியாருக்கான அரசு லெனினோடு பேசு !

யாருக்கான அரசு லெனினோடு பேசு !

-

ப்ரல்-22, தோழர் லெனின் பிறந்த நாள். லெனின் பிறந்த நாள் சிறப்பே உழைக்கும் மக்களை நாம் ஏன் பிறந்தோம்? என்று சிந்தித்த வைப்பதுதான்.

லெனின்
லெனின்

1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் ‘அரசு‘ எனும் தலைப்பில் தோழர் லெனின் ஆற்றிய உரை இன்றைய நம் சிந்தனைத் தேவைக்கு நெருக்கமாக உள்ளது. தமிழாக்கமாகவும் வந்திருக்கும் ‘அரசு‘ எனும் இந்நூலை நாம் ஒவ்வொருவரும் பிறப்பின் நோக்கமறிய லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் – கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.

இன்று நம்மைச் சுற்றி தேர்தல் இரைச்சல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…! என்று எல்லா ஓட்டுக் கட்சிகளுமே நா இனிக்க தேர்தல் நேரத்து தேனடைகளாகத் திரிகின்றன. நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் அரசு மக்களுக்கான மாற்றங்களைக் கொண்டுவரும் என பொய்க்கால் குதிரைகளைத் தட்டிவிடுகின்றன. தங்களுக்கான அரசியல் அதிகார வரம்பினைக் கடந்து  கட்சிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பதைப் பார்த்து தேசம் கடந்த பன்னாட்டு நிதிமூலதனம் கோரைப்பல் சுரக்க சிரிக்கிறது. வாய்ப்பேச்சு வக்கணைகளைத் தாண்டி அரசு என்பது வர்க்கம் தொடர்பானது, அரசு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்கானது என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அரசு அனைவருக்குமானது என்பது போல புளுகித் திரிகின்றன ஓட்டுக் கட்சிகள். குறிப்பாக முதலாளித்துவ சமூக அமைப்பில் அது முதலாளி வர்க்கத்துக்கான ஆட்சியதிகார முறைகளை முற்றிலும் உறுதி செய்து கொண்ட சட்ட வரம்பினைக் கொண்டது.

வானத்தை வில்லாய் வளைப்பேன் என்று வேண்டுமானால் ஓட்டுக்கட்சிகள் வாய் வீசலாம். மற்றபடி வர்க்கத்தை வளைத்து வேறோன்றாய் மாற்றுவேன் என்பதற்கு இந்த அரசுக் கட்டமைப்பில் இடமில்லை. அரசின் இந்த வர்க்க ஆதிக்கத்தை மூடி மறைக்கத்தான் பல வண்ண தேர்தல் கட்சிக்கொடிகள். ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கிய பல்லாங்குழிகள் விளையாட்டின் புளியம் விதைகளே ஓட்டுக் கட்சிகள்.

இதை வெகுகாலத்திற்கு முன்பே வரலாற்றுத் தொடர்போடு நமக்கு அடையாளம் காட்டுகிறார். ‘அரசி‘ல்  லெனின், முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் நலனுக்காக மட்டுமே நிறுவப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பை அதன் நிர்வாக இயங்கு விதிகளுக்கு உட்பட்டு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் (அது என்ன ரகசிய காப்பு பிரமாணம்? ஆளும் வர்க்கத்திற்கு கட்டுப்பட்டு இருப்பேன் என்பதன் சட்ட கைக்கட்டுதான் இது!) எடுத்துக் கொண்டு, நான் வந்தால் மக்களுக்கான சமத்துவ நீதி, சமூக நீதி ஆட்சி தருவேன் என்பது பித்தலாட்டத்தின் லட்சிய முழக்கமே.

இந்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளித்துவ சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படைகளை தகர்க்க முடியாது என்பது மட்டுமல்ல அதன் நலனுக்கான தரகர்களே இவர்கள் என்பதுதான் நிலவும் இரட்டையாட்சி முறையின் இயங்கு விதி. அரசு என்பதே அனைத்து மக்களுக்குமானது என்பது ஊரறிந்த பொய் என்பது மட்டுமல்ல, அந்த இயந்திரமே ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவி, குண்டாந்தடி என்பதுதான் வரலாற்று உண்மை. இதை நான் கையில் எடுத்தால் மல்லிகைச் சென்டாக மாறிவிடும் என்பது உலக மகா அயோக்கியத்தனம். இதில் பங்குபெற நான் நீ என்று கட்சி கட்டி, கூட்டணி கட்டி கர்ஜிப்பது எல்லாம் அடிமை முறைக்கு ஆதரவான கித்தாப்புகளே !

அரசு என்பது வர்க்கம் தொடர்பானது என்பதை மூடி மறைப்பதிலிருந்து தொடங்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை எந்த ஓட்டுக்கட்சிகளும் நம்மிடம் அரசியலாக பேசுவதில்லை.  பேசப் போவதுமில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலவும் ‘அரசு‘ எனும் தலைப்பிலான உரையில் நமக்கு புரிய வைக்கிறார் லெனின். இந்தப் புரிதலோடு நம் கையை முறுக்கும் தேர்தலைப் பரிசீலித்தால் நமக்கான அரசியல் செயல்பாடு நமக்கு புரியவரும்.

ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது இரண்டு ஓநாய்களும், ஒரு ஆடும் என்ன சாப்பிடலாம் என்று வாக்களிப்பு மூலம் முடிவு செய்வது. விடுதலை என்பது ஆயுதம் தரித்த ஆடு இந்த வாக்கெடுப்பை எதிர்ப்பது.

அரசியல் என்பது மோடி, சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா…. என நபர்களின் நடத்தையைப் பற்றி பேசுவது, விவாதிப்பது என்பதைத்தான் படித்த காரியக்கார ஊடக அறிவுக் கூலிகள் பரப்பி வருகின்றனர். உரையில் லெனின் சொல்வதைப் போல “அரசு என்பது பற்றிய பிரச்சனை மிக மிகச் சிக்கலும் கடினமுமான ஒன்று;  முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால் ஒருவேளை மற்ற எந்தப் பிரச்சனையையும் விட மிகுதியாகக் குழப்பிவிடப்பட்ட ஒன்றாகும்…“ என்பதுதான் இன்றும் நிலைமை. இதில் மற்ற எல்லோரையும் விட கம்யூனிசத்திற்கு எதிராகவே செங்கொடியை அசைப்பதில் கில்லாடிகளாகி விட்டார்கள் இடதும் வலதும். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கு வேலை செய்யும் கட்சி என்று கூறிக்கொள்வதால் மற்ற ஓட்டுக் கட்சிகளைவிட இவர்களின் மார்க்சிய விரோத போக்கை விசேசமாக கவணப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும் குழப்பத்தை தெளிவிக்க அறிவியல் அணுகுமுறையில் அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி அது கடந்து வந்த சமூகக் கட்டங்களை வரலாற்று தொடர்போடு விளக்குகிறார் லெனின். ஆண்டான் அடிமை, பண்ணையடிமை, முதலாளித்துவம், சோசலிசம் என சமூக உதாரணங்களோடு அரசின் வரலாற்று வளர்ச்சி, தன்மைகளை கற்கத் தருகிறார்.

மக்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல்தான் தீர்வு, இந்த அரசமைப்புதான் ஒரே வழி, ஓட்டு போடுவதுதான் உரிமை என தேர்தலை பெத்தெடுத்தவர்கள் போல பேசித் திரியும் எத்தர்களின் தோலை உரிக்கின்றன நூலின் பகுதிகள், “அரசு எல்லா காலங்களிலும் இருந்ததில்லை என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே? எவ்வெப்போது சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசு தோன்றுகிறது“ என்பதோடு “அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்“ என்ற உண்மைகளையும் உணர்த்துகிறார் லெனின்.

“இந்த அடிப்படை வர்க்கப் பிரிவினை பற்றிய பார்வை நிலையிலிருந்து நீங்கள் அரசு என்பதை ஆராய வேண்டும்“ என லெனின் கற்றுத்தரும் அரசியல் பார்வைதான் இன்றைய நம் காலத்தின் தேவை. மக்களை தனது அரசியலுக்கு ஆள்பிடிக்க ஆளும் வர்க்கம் வற்ப்புறுத்தும் இந்தத் தேர்தல் நேரத்திலாவது மக்களுக்கான அரசியல் பேசாத, போலிக் கம்யூனிஸ்டுகள்தான் விஜயகாந்த் வாயிலிருந்து ‘அதிர்ஷ்டக் கல்லை‘ எடுத்துத் தரப் போகிறார்களாம் ! மாற்றம் பிய்த்துக் கொண்டு அடிக்கப் போகிறதாம் !

தனிக்கட்சிகளின் பெரும்பான்மை வாதமும் –  கட்சிகளுக்கிடையே ஜனநாயக மறுப்பும், ஆட்சியில் கூட்டணி இல்லாததும்தான் நல்லாட்சிக்கு தடையாக இருப்பதாக பசப்புவதும், கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது இந்த அரசமைப்பு நிலைமைகளிலேயே ஒரு மாற்று என்பதும் உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மாற்று அரசியல் அதிகாரத்துக்கான திரட்சியை வேரறுக்கும் வேலையாகும். இது போலி ஜனநாயகம், இதில் மக்களுக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை என்பதை எதிரிவர்க்கம் பொட்டில் அடித்து சொல்லும் தருணத்திலும், தங்களது தனிப்பட்ட தட்டேந்தும் ஜனநாயகத்திற்காக இந்தக் கட்டமைப்புக்கு உள்ளேயே மாற்று அரசியலை நிலைநாட்டுவோம் என்பதும், எதிரி வர்க்கத்திற்கு  சேவை செய்ய நம்மிடம் வந்து ஓட்டு கேட்பதும் எத்தகைய பித்தலாட்டம்!

மக்கள் தயாராக இல்லை, நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நடைமுறைச் சாத்தியம் என்று வித்தகம் பேசுபவர்கள் நடைமுறையில் ஒரு சாராயக் கடைக் கூட போராடித்தான் மூட முடியும் என்று சட்டமன்றத்திற்கு வெளியே மக்கள் சாத்தியமாக்கியதை நடைமுறைப்படுத்தத் தயாராவார்களா?

puthuvai-rsyf-pseudo-democracy-ruling-class-3உழைக்கும் வர்க்கம் தனது வர்க்க நலன்களையும், அரசியல் நோக்கத்தையும் ஈடேற்றிக் கொள்ள இம்மியும் உதவாத இந்தத் தேர்தல் பாதை மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தால் ஆர்பாட்டமாக அறிவிக்கப்படும் வாக்குரிமை, ஜனநாயகம் எனும் பசப்பல்களுக்கு பின்னே இருக்கும் எதார்த்த நிலவரத்தை எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்“ – நூலிலிருந்து தனது “அரசு“ பற்றிய உரையில் விரிவுபட விளக்குகிறார் லெனின், “நிலத்திலும் உற்பத்தி சாதனங்களிலும் தனிச்சொத்து நிலவும் ஒவ்வோர் அரசும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வோர் அரசும் எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மை உடையதாக இருப்பினும் அது முதலாளித்துவ அரசே ஆகும். அது தொழிலாளி வர்க்கத்தையும், ஏழை குடியானவர்களையும் அடி பணிய வைப்பதற்காக முதலாளிகளால் பயன்படுத்தப்படும் இயந்திரமாகும். அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை. அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்றம் என்பதெல்லாம் வெறும் வெளித்தோற்றமே.“ (குடும்பம், தனிச்சொத்து, அரசு…)

முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு உரிய முழு யோக்கியதைக் கூட இல்லாத கார்ப்பரேட்டுகளின் கட்டப் பஞ்சாயத்தான இந்த சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் போய் இவர்கள் மக்களுக்காக மாற்றம் தரப்போகிறார்களாம்.

மக்களிடம் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் அம்பலப்பட்டுப் போன கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக கரைபடாத (இன்னும் கை வைக்க கஜானவே வரல!) விஜயகாந்தை தூக்கி வந்து ஜனநாயகத்தை வாழ வைக்க கூத்தடிக்கிறார்கள், ஒரே குட்டையில் தேறிய மட்டைகள்! விஜயகாந்தே ஏற்றுக் கொள்ளாத ஜனநாயகத்தை விஜயகாந்தே வியக்கும்படி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள் மூல உத்தி, செயல் உத்தி என்று என்னதான் தம் கட்டினாலும் வடிவங்கள் வாழ வைக்காது என்பதுதான் வரலாற்று உண்மை.

ஒரு கோடி இளம் வாக்காளர்களை குறிவைத்து ஏற்கனவே ஆள்பவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ‘மாற்று‘ அரசியல் பேசும் கட்சிகள் எதை மாற்றப் போகிறார்கள்? ஆட்சியையா? அரசையா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசின் தன்மை மாறிவிடுமா? அதன் வர்க்க இருப்பை தகர்த்து விடுவார்களா? நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமலேயே பல உலக வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ளும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை தடை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உண்டா?

கல்வி இலவசம், மருத்துவம் இலவசம் என்று காது குடையும் இவகளின் தேர்தல் அறிவிப்பை ‘காட்ஸ்‘ ஒப்பந்தம் ஏற்குமா? உலக நிதிமூலதனச் சங்கிலியில் இறுக்கப்பட்டிருக்கும் இந்தியாவை உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாமையை, சின்னக் கவுண்டர் ஊர் விலக்கம் செய்து விடுவாரா? யார் வந்தாலும், எந்த வடிவத்தில் சுரண்டினாலும் தேசம் கடந்த பன்னாட்டு நிதிமூலதனத்தின் உத்தரவிற்கு உட்கார்ந்து எழுந்திருப்பதுதான் இவர்களின் கதி!

முதலாளி வர்க்க அதிகாரத்தை அசைக்காமல் ஆட்சி மாற்றத்தால் ஆவது என்ன? அரசு பற்றிய பார்வைதான் அரசியலின் தகுதியைத் தீர்மானிக்கிறது. ஒருபடி மேலே போய் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வடிவங்களையும் பரிசீலிக்கக் கற்றுத் தருகிறார் லெனின், “அரசு” செலுத்தும் ஆதிக்கத்தின் வடிவங்கள் வேறுபடக் கூடும். ஒருவகை வடிவம் நிலவுமிடத்தில் ஒருவிதமாகவும், வேறுவகை வடிவம் நிலவுமிடத்தில் வேறொரு விதமாகவும் மூலதனம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும். ஆனால், வாக்களிக்குத் தகுதிகள்… குடியரசின் ஜனநாயகத் தன்மை… எதுவானாலும் மூலதனத்தின் கரங்களில்தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியர” எவ்வளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிற@தா, அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும், அதிக இரக்கமின்றியும் இருக்கின்றது…“ என்று லெனின் முன்னேறியதாகச் சொல்லப்படும் அமெரிக்கக் குடியரசின் சமூக நிலைமைகளையும் விளக்கிக் காட்டி எதார்த்தத்தை புரியவைக்கிறார்.

வடிவம் மாறினாலும் உள்ளடக்கம் ஒடுக்குமுறைதான் எனும்போது வாயை மாற்றிப் பேசினாலே ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நல்லாட்சி, வளர்ச்சி என்பது முதலாளித்துவ ஆவிகளின் கேலிக்கூத்தாகும். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் நகரவை மன்றங்களும் தேர்தல் அராஜகங்களால் நிரம்பி ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாகி திவாலாகிப்போன நிலையில் இருக்கிறது. போலி ஜனநாயகத்திற்குப் பதில் புதிய ஜனநாயகம் எனும் மக்கள் அதிகாரம் எல்லா மட்டங்களுக்கும் மக்களே தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் கண்காணிக்கவும் தவறு செய்தால் தகுதிநீக்கம் செய்யவுமான ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை அரசியலாக மக்களிடம் முன்னெடுக்க வேண்டிய காலத்தில் ஜெயலலிதாவிற்கு பதில் விஜயகாந்த் என்று சேலையை வேட்டியாக மாற்றினாலே மாற்று என்பது ஏமாற்று அல்லாமல் வேறென்ன?

மக்கள் தயாரில்லை, மக்கள் விரும்புகிறார்கள் என்று மக்களுக்கு பின்னே செல்பவன் தலைவன் இல்லை. லெனினைப் போல மக்களுக்கு முன்னே செல்ல வேண்டும். குறிப்பான தருணத்தை நழுவவிடாமல் மக்களை அரசியல் படுத்த வேண்டும். அதுதான் மக்களுக்கான அரசியல். “அரசு எந்திரமானது எல்லோருடைய நலன்களையும் பாதுகாப்பது, அதற்காக ஏற்பட்டது எனும் முதலாளித்துவ பொய்யை உணர்வுப்பூர்வமான நயவஞ்சகரும் அறிவியல்வாதிகளும் மதகுருமார்களும் மட்டும்தான் ஆதரிக்கிறார்கள் என்றில்லை, பழைய தப்பெண்ணங்களில் உண்மையிலேயே ஒட்டிக்கொண்டு பழையை முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சோசலிசத்திற்கு நிகழும் மாறுதலை புரிந்துகொள்ளாமல் இருக்கும் பெருந்திரளான மக்களும் அவ்வாறே செய்கிறார்கள்…“ என்று மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டிய அரசியல் கடமைகளையும் சேர்த்தே முன்னிறுத்துகிறார் லெனின்.

என்ன நாடாளுமன்றமும் சட்டமன்றமும்?, “மூலதனத்தின் பலம்தான் எல்லாம்; பங்குமார்கெட்டுதான் எல்லாம்; நாடாளுமன்றமும் தேர்தல்களும் வெறும் கயிறாடு பாவையும், கைப்பாவையும் ஆகும்.“ என்கிறார் லெனின். அதுமட்டுமல்ல, அரசும் புரட்சியும் நூலில், “ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க @வண்டும் என சில ஆண்டுகளுக்கு ஒருதரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ பாராளுமன்ற முறையின் மெய்யான சாரப்பொருள்.“ என்கிறார். மேலும், “அரசுக்குரிய மெய்யான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது. இலாக்காக்களும் அமைச்சக செயலகங்களும் படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. பொதுமக்களை ஏய்ப்பதற்கென வாய்பேபச்சு பேசுவதே பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி‘” என்கிறார் லெனின். ‘அது வெஸ்டர்ன் பார்லிமென்டுங்க, நாங்க சொல்றது கேப்டன் சட்டமன்றங்க’ என்று கயிறு திரிக்கிறார்கள் இடது-வலதுகள்.  மற்ற ஓட்டுச்சீட்டு கட்சிகளைவிட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி இப்போது புரட்சிக் கலைஞர் என்று வார்த்தையை வைத்தே வண்டி ஓட்டும் புரட்சித் தயாரிப்பாளர்கள் இடது-வலதுகள். பள்ளி விழுவதற்கு பலன் சொல்வது போல ஒவ்வொரு முதலாளித்துவ கேவலத்திற்கும் சப்பைக் கட்டி தத்துவ விளக்கம் கொடுக்கிறார்கள் இவர்கள். கேப்டன் அணி என்று சொன்னால்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் என்று கம்யூனிச இயக்கத்தையே கேவலப்படுத்தினாலும்… நேற்று முளைத்த தென்னந்தோப்பு சின்னத்தை எங்க சின்ன ஐயா என்று கொஞ்சும் விஜயகாந்து இடது-வலதுக்கு என்ன சின்னம்? என்று கேட்குமளவுக்கு அரசியல் அவமரியாதை செய்தாலும் தாங்கிக்கொள்ளும் ‘தடிப்புக்குப்‘ பெயர்தான் தத்துவ உறுதிபோலும்.

“சுரண்டல் நீடிக்கிற வரையில் சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரபு தொழிலாளிக்கு சமம் என்றோ, அல்லது பசித்த மனிதன் வயிறாற உண்டு கொழுத்தவனுக்கு சமம் என் றோ கூற முடியாது…“ என்று முதலாளித்துவ ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை, இருப்பை மக்களுக்கு புரியவைக்கிறார் லெனின். நாமும் புதிதாக ஒன்றை துணிந்து சொல்லலாம், விஜயகாந்தும் பிரேமலதாவும் இருக்கும்வரை இடது-வலதை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. ஏனெனில் அது அவர்களின் உரிமை!

அன்றாடம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தடையின்றி நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் மக்களின் சார்பாக முக்கிய விவாதமாக மக்கள் பிரதிநிதிகளை பேசி விவாதிக்க, விடைகாண உரிமையில்லாத இந்தத் தேர்தல் பாதை எதை தீர்க்கப் போகிறது?

இந்த நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் பாதை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து அதிகாரமும் மக்களுக்கு வேண்டும் என்பதற்கான அரசியலை தற்போதுள்ள தேர்தல் பாதையில் பெற முடியாது. ஏன் இவர்கள் சொல்லிக்கொள்ளும் நம்பச் சொல்லும் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே அரசின் வர்க்கச் சுரண்டலை தடுப்பதற்கான எந்த உரிமையும் இல்லை. மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்கு வெளியே உள்ளது என்ற எதார்த்த நிலமையை உணர்த்துவதுதான் மக்களுக்கான அரசியல். அந்தக் கண்ணோட்டத்தில் அரசு பற்றி நாம் எவ்வளவுக்கெவ்வளவு புரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் அரசியல் பார்வை கண்ணோட்டம் விரிவடைகிறது. இதை யாரிடம் கற்றுக்கொள்வது? போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் இப்போது எந்த ஜனநாயகத்திற்காக வாக்கு கேட்கிறார்கள்? உண்மையில் இவர்கள் வாழவைக்கப் போவது யாரை? லெனினின் அரசு பற்றிய புரட்சி பற்றிய இந்நூலை கற்க கற்க உண்மையான மாற்று சமூக, அரசியல் பொருளியல் கட்டமைப்பை நிலவும் அரசுக் கட்டமைப்புக்கு வெளியேதான் உருவாக்க முடியும் என்பது புலப்படும். இது வெறும் நூல் மட்டுமா? சமகாலம் வரை சந்திக்கும் அரசு பற்றிய பிரச்சினைகளில் வழிகாட்டும் குரலாக லெனின் உங்களோடு இணைவதையும், நீங்கள் புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கு வருவதையும் தவிர்க்க முடியாது. தொடர்ந்து பேசுங்கள், லெனினோடும் போராடும் மக்களோடும்! கற்க கசடற கம்யூனிசம்; நிற்க அதற்குத் தக!

– துரை சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க