privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

-

தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன்? இதையே வலிந்து பேசிக் கொண்டிருப்பதால் நீங்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட மாட்டீர்களா என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

இதையே இன்னும் விரித்துக் கூறுகிறார் வாசகர் சுகதேவ்.

“உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணம் இருந்தால் மட்டும் தான் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். உடனடி நலன் சார்ந்த ஒன்றை மட்டுமே அவர்கள் நெருக்கமாக உணர்கிறார்கள். அரசுக் கட்டமைப்பின் செயல்படாத தன்மைக்காக தேர்தல் புறக்கணிப்பில் அமைப்புகள் ஈடுபடலாம். மக்கள் ஈடுபடுவது கடினம்.

ஒரு பிரச்சினையின் நீண்ட பரிமாணத்தை மக்கள் புரிந்து கொள்வது சிரமம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வேட்டந்திட்டை என்ற கிராமத்தில் மக்களின் போராட்டத்தை கடுமையாக நசுக்கி உள்ளது போலீஸ். அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஜூ.வி நிருபரை பார்த்து ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் தான் அவரை அனுப்பி வைத்ததாக சொன்னாராம்.

தேர்தலில் ஈடுபடாத கட்சிகளை மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு கூட பொருட்படுத்துவதில்லை. மக்களுக்கு அவநம்பிக்கை. ஊடகங்களுக்கு சுவாரசியமின்மை. அரசுக்கு கையாள்வது எளிதாக இருக்கிறது. நா.த.க, பா.ஜ.க ஆகியவை பேராபத்தாக தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை தேர்தல் புறக்கணிப்பு உத்தி தடுத்து விடுமா என்று சிந்திப்பது நல்லது. இன்னொரு பக்கம் அரசு மேலும், மேலும் மக்களை வதைத்து வருகிறது. தனது தோல்வியை மறைக்க இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பிக்கப்படலாம். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை அமலில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற ஆணைக்கிணங்க மனித உரிமை பாதுகாப்பு மையத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மையமாக மாற்றியது போன்று மக்கள் அதிகாரமும் அப்படி ஒரு நெருக்கடிக்கு பிறகு முடிவை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்படி செய்தால் அது பெரும் இழப்புக்கு பிறகு எடுக்கும் முடிவாக இருக்காதா?

காஷ்மீர் மக்களாலேயே புறக்கணிக்க இயலாத தேர்தலை இந்தியாவின் பிற பகுதிகள் புறக்கணிக்க இயலுமா?” – சுகதேவ்

“மனித உரிமை“ பெயரை மனித உரிமை அமைப்புக்கள் பயன்படுத்தக் கூடாது எனும் நீதிமன்ற ஆணைக்கிணங்க மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள். இது வெறும் பெயர் மாற்றமே அன்றி கொள்கை மாற்றமல்ல. ஒரு வேளை அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவு போட்டால் அதை ஏற்கத்தானே வேண்டுமென நினைக்கிறார் சுகதேவ்.

இந்த வாதத்தை நீட்டித்தால் ஆளும் வர்க்கம் சட்டபூர்வமாக அனுமதித்தால் மட்டுமே ஒரு நாட்டில் புரட்சி நடத்த நினைக்கும் கம்யூனிசக் கட்சிகளின் விருப்பம் ஈடேறும் என்றாகிறது. அரசு, நீதிமன்றங்களை எதிர்த்துக் கொண்டு என்ன அரசியல் வேலை செய்யமுடியும் என்று ஐயப்படுகிறார் நமது வாசகர்.

முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் நாடுகளில் அந்த “ஜனநாயகம்” வழங்கும் வாய்ப்புக்களை ஒரு புரட்சிகர கட்சி பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. மாறாக அந்த வாய்ப்புதான் மக்களிடையே வேலை செய்யவும், புரட்சியை நிறைவேற்றவும் நிபந்தனை என்று புரிந்து கொள்வது பாரிய பிழை. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களை தூக்கி எறியும் ஒரு மாபெரும் நடவடிக்கையென்றால் அதை ஒருக்காலும் முதலாளித்துவ அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.

எனவே அவர்களது ஜனநாயகம் எந்த அளவு அனுமதிக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மேல் மீறுகிறோம். அந்த வகையில் ஒரு கம்யூனிசக் கட்சி வெளிப்படையாக மட்டுமல்ல இரகசியமாகவும் செயல்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். புரட்சி நடந்த நாடுகளில் கம்யூனிசக் கட்சிகள் மேற்கண்ட இருமுறையிலும் வேலை செய்திருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு விவாதம்நமது நாட்டைப் பொறுத்தவரை இங்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்பது அரசு வடிவத்தில்தான் உள்ளது. சமூக உள்ளடக்கத்திலோ அரை காலனியாதிக்கமும், அரை நிலபிரபுத்துவமுமே நிலவுகிறது. அதனால்தான் இதை போலி ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.

இன்றைக்கு கட்டமைப்பு நெருக்கடியின் காலத்தில் இந்த போலி ஜனநாயகத்தை மக்களே உணர்ந்து கொண்டு பேசுகிறார்கள். அரசு உறுப்புகள் எதையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. கடைசியாக நடந்த பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பி.எஃப் நிதியை முடக்கும் உத்திரவுக்கு எதிராகப் போராடியவர்கள் சாதாரண தொழிலாளிகள் மட்டுமே. அவர்களில் கணிசமானோர் பகுதி நேரத் தொழிலாளிகளும் கூட. இந்த அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வர அவர்கள் மனு தாக்கல், மந்திரிகளிடம் முறையீடு, கலெக்டரிடம் கருணை மனு இன்னபிறவெல்லாம் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்டவர்கள். அதனால்தான் மத்திய அரசு ஒரிரவில் உத்திரவை ரத்து செய்யும் வண்ணம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தினார்கள்.

பி.ஆர். பழனிச்சாமி கிரானைட் கொள்ளை முதல் அம்பானியின் இயற்கை எரிவாயு கொள்ளை வரை அனைத்தையும் இந்த அரசமைப்பே காப்பாற்றுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய தேர்தலில் அ.தி.மு.கவின் ஊழல் பணம் கோடி கோடியாய் கைப்பற்றப்பட்டாலும் அந்தக் கட்சியை தடை செய்ய வேண்டும், குறைந்த பட்சம் தேர்தலிலாவது போட்டியிடத் தடை செய்ய வேண்டும் என்று இங்கே ஏதோ ஒரு ஊடகத்தில் கூட பேசப்படாததற்கு என்ன காரணம்? அதுதான் போலி ஜனநாயகம்.

இருப்பினும் இதெல்லாம் தெரிந்த மக்கள் வாக்களிக்கத்தானே போகிறார்கள் என்று சுகதேவ் கேட்கிறார். ஆம், வாக்களிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அது அவர்களது தலையெழுத்தை மாற்றும் என்றோ, பாரிய மாற்றம் வரும் என்பதாலோ அல்ல. சாதாரண மக்களைப் பொறுத்த வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது என்பது மாதம் ஒரு முறை ஆண்டவனை வழிபடுவது போலத்தான். தனது பிரச்சினைகளை எள்ளளவு கூட சாமி குறைக்காது என்றாலும் இந்த வழிபாடு மாற்ற முடியாத ஒரு சடங்கு போல நிலவுகிறது, அவ்வளவுதான்.

தேர்தல் பரபரப்பு என்பது மக்களைப் பொறுத்தவரை அதிக பட்சம் ஒரிரு வாரங்களுக்கு மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் இந்தத் தேர்தல் அரசியல் குறித்து அதாவது இதுதான் தமது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதாக ஒரு குழந்தை கூட நினைக்காது. இன்னும் எளிமையாகச் சொன்னால் தோற்றுப் போன இந்த அரசு என்பது ஏதோ ரேசன் கார்டு, சாதிச் சான்றிதழ், இலவசங்கள் அளிப்பது போன்ற சில்லறைச் சமாச்சாரங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.

எங்கே தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அந்த உரிமைகளை பெறமுடியாமல் போய்விடுமோ என்பதைத் தாண்டி மக்களுக்கு இந்த தேர்தலின் மீது எந்தக் காதலும் இல்லை. இல்லையென்றால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற முதன்மைத் தேவைகள் இந்த தேர்தல் மாற்றத்தால் மாறிவிடுமா என்று கேட்டுப் பாருங்கள்! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார் கல்வியின் கொள்ளையோ, தனியார் மருத்துவமனைகளின் வழிப்பறியோ முடியாது என்பது தெரிந்த மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை மாபெரும் அரசியல் நடவடிக்கையாக கருதுவதில்லை. நாம் ஏன் கருத வேண்டும்?

முதலாளி என்ற முறையில் பாரிவேந்தர் பச்சைமுத்துவையும், காமடி என்ற பெயரில் நடிகர் கார்த்திக்கையும் தேர்தலுக்காக நேர்காணல் செய்யும் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் போலவோ இல்லை இந்த ஊடகங்கள் கிளப்பும் இப்பேற்ப்பட்ட அக்கப் போர்களில் மண்டிக் கிடக்கும் அரதப்பழசான அபத்தக் காமடிகளை மாபெரும் அரசியல் விவாதமாக கருதும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் போலவோ மக்கள் தேர்தலை அணுகுவதில்லை.

தேர்தலுக்கு முந்தைய மாதத்திலோ, இல்லை தேர்தலுக்கு பிந்தைய மாதத்திலோ மக்கள் யாரும் சீமானின் பிளிறலையோ, வைகோவின் கண்ணீரையோ, ஜெயாவின் ஹெலிகாப்டரையோ, கருணாநிதியின் தேர்தல் அறிக்கை குறித்தோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு துரோகம் செய்கிறார்கள், யார் யார் குறித்து இரகசியங்கள் தெரிவிக்கிறார்கள், தொகுதி கிடைக்காமல் ஜனநாயகம் குறித்து புலம்புவர்கள் யார், எந்த தொகுதியில் யார் வெல்வார்கள், அந்தக் கணிப்பை யார் திறம்பட செய்கிறார்கள் இவைதானே ஒவ்வொரு தேர்தலின் போதும் பரபப்பாக பேசப்படுகிறது? இதில் ஒரு தேசத்தையோ இல்லை அந்த தேசத்து மக்களின் தலைவிதியையோ தீர்மானிக்கும் எதுவுமில்லை.

ஆக மக்களே சடுதியில் மறந்து போகும் தேர்தல் பரபரப்பை சுகதேவ் போன்றவர்கள் கொஞ்சம் தத்துவப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த ‘தத்துவம்’ சமூக இயக்கத்தின் விதிகளை மறந்து விட்டு சென்சேஷனில் சிக்கிக் கொள்கிறது, இதுதான் பிரச்சினை!

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில அறிஞர் பெருமக்கள் எமது தேர்தல் புறக்கணிப்பு குறித்து புள்ளிவிவரங்கள் கேட்பார்கள். அதாவது தமிழகத்தில் எத்தனை சதவீத மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள், தேர்தல் புறக்கணிப்பை எவ்வளவு வருடமாக செய்கிறீர்கள் என்றெல்லாம் மடக்குவார்கள்.

தேர்தல் புறக்கணிப்பை மதிப்பிடும் அளவு கோல் வெறுமனே தேர்தலில் பதியப்படாத வாக்குகளை வைத்து மட்டுமல்ல. ஏனெனில் முந்தைய காலத்தில் இது போலி ஜனநாயகம் என்று நாம் மட்டும் பேசி வந்தோம். அப்போது ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு இந்த அமைப்பு மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தது. இன்று அது துளியளவும் இல்லை. துறை சார்ந்து பார்த்தால் பல்வேறு பிரிவினர்களிடையே இந்த புரிதல் வளர்ந்து வருகிறது.

சட்டத்தை வைத்து பிழைக்கிறார்கள் என்று தூற்றப்பட்ட வழக்கறிஞர்களே இன்று நீதிமன்றங்களையும் ஊழல் நீதிபதிகளையும் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த அளவு நீதித்துறை திவாலாகியிருக்கிறது. வழக்கறிஞரை விடுங்கள், ஒரு ஏழையிடம் கேட்டால் கூட, குமாரசாமி கணக்குதான் நீதிமன்றத்தின் கணக்கு என்பதை சட்டென்று கூறிவிடுவார்.

மாருதி தொழிலாளியோ இல்லை கோவை பிரிக்கால் தொழிலாளியோ இந்த அரசும், நீதித்துறையும் யாருக்கு ஆதரவானது என்று கேட்டால் என்ன சொல்வார்? இந்துமதவெறியர்களையும், ரன்வீர் சேனா போன்ற ஆதிக்க சாதி குண்டர் படைகளையும் விடுதலை செய்து ஏராளமான தீர்ப்புகள் சமீப காலத்தில் வந்துள்ளன. கயர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினரிடமோ இல்லை சுண்டூர் தாழ்த்தப்பட்ட மக்களிடமோ இல்லை முஃசாபர் நகர் முஸ்லீம்களிடமோ இந்த அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறதா என்றால் கோபப்படமாட்டார்களா?

ஜனநாயகத்தின் பாதை
ஜனநாயகத்திற்கு செல்லும் பாதை – கேலிச்சித்திரம் நன்றி Cartoon Movement

ஆனால் இந்த பிரிவு மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்றால் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஏன்? காசுமீரிலேயே தேர்தல் புறக்கணிப்பு சாத்தியமாகாத போது மற்ற பகுதிகளில் எப்படி சாத்தியமாகும் என்று சுகதேவ் கேட்பதை எடுத்துக் கொள்வோம். இங்கே தேர்தல் நடந்து விட்டதாலேயே காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததா பொருளா? இல்லை இலட்சக் கணக்கில் துருப்புக்களை நிறுத்தியிருக்கும் இந்திய இராணுவம்தான் இனி போராட்டம் இல்லை, ஜனநாயகம் வந்து விட்டது என்று காலி செய்து வெளியேறுமா? காஷ்மீர் மாணவி ஒருவரின் நேர்காணலை சுகதேவ் படித்திருப்பார். அதில் இந்த அமைப்பு குறித்து ஏதாவது கடுகளவாவது நம்பிக்கை தெரிகிறதா?

டாஸ்மாக் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். சசி பெருமாள் எதற்காக உயிர் துறந்தார்? ஒரு கடையை இடம் மாற்றவேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவைக் கூட இந்த அரசு செயல்படுத்த மறுத்ததால்தானே? மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டின் மக்கள் உரைகளைக் கேளுங்கள்! வழக்கமாக தோழர்கள் பேசுவதைக் காட்டிலும் வீரியமாக மக்கள் பேசுகிறார்கள். காரணம் இந்த அமைப்பு திவாலாகி வருகிறது என்பதை நடைமுறை அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தேர்தல் பங்கேற்பு – புறக்கணிப்பு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்க வேண்டாம் என்கிறோம்.

அதே நேரம் இந்த தேர்தல் பங்கேற்பினால் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்திருக்கவும் மக்கள் பயிற்று வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் தேர்தல் புறக்கணிப்பையும் விடாது செய்ய வேண்டும். தோற்றுப் போன இந்த சமூக அமைப்பிற்கான மாற்று தோன்றி வளர்வதற்கேற்ப தேர்தல் புறக்கணிப்பும் வீச்சாக நடக்கும். இதைத்தாண்டி இதில் குறுக்கு வழி ஏதுமில்லை.

எவ்வளவு ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்கிறீர்கள் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, டாஸ்மாக் பிரச்சனையை இந்த அமைப்பு முறையால் தீர்க்க முடியாது என்ற உண்மையை மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் கொண்டு வரவில்லையா? அ.தி.மு.க தவிர அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை கொள்கையளவிலாவது ஏற்கவில்லையா? அடுத்த அரசாங்கம் அது அ.தி.மு.க அல்லது தி.மு.க என்று யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது உறுதி என்பதாக இந்த சமூக நிலைமை மாற்றப் பட்டிருக்கிறதா இல்லையா?

தேர்தல் புறக்கணிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதால் என்ன பிரச்சினை? நாம் சொல்லும் கட்டமைப்பு நெருக்கடி ஊடக உலகிற்கும் பொருந்தும். தேர்தல் குறித்த கட்சி மற்றும் வேட்பாளர் செய்திகள் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியிடப்படுகின்றன, பெரும் முதலாளிகளே ஊடகங்களை ஏற்று நடத்துகிறார்கள்..இவையெல்லாம் என்ன? பச்சமுத்துவுக்கு கட்சி இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, ஊடகமும் இருக்கிறது அதே போல வைகுண்டராசனுக்கு, அம்பானிக்கு.. முதலாளி மல்லையா மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். பொதுத்துறை வங்கிகளுக்கு பட்டைநாமம் போட்டுவிட்டு அதிகாரப் பூர்வமாகவே வெளிநாடு செல்பவராகவும் இருக்கிறார்.

அவரது கடன் குறித்த செய்திகள் வந்த போது மல்லையா சவால் விட்டார். தனது விருந்துபுசாரத்தில் புரண்ட பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் பட்டியல் எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று பகிரங்கமாகவே பேசினார். அதை எந்த ஊடகமாவது மறுத்ததா?

தேர்தல் புறக்கணிப்பு விவாதம்இறுதியாக தோற்றுப் போன இந்த அமைப்பு முறையை எப்படி நீக்க வேண்டும் என்பதே கேள்வி. அதில் தேர்தல் புறக்கணிப்பு ஒரு முறை என்கிறோம். மாறாக மக்கள் எப்படியும் தேர்தலில் பங்கேற்பதால் நாமும் பங்கேற்ற வேண்டும் என்றால் அது எங்கே போய் முடியும்?

சந்தர்ப்பவாதம் அங்கேதான் தன்னை தவிர்க்க இயலாமல் ‘நியாய’ப்படுத்திக் கொள்கிறது. எது முடியுமோ அதைச் செய், எது சாத்தியமோ அதை எடுத்துக் கொள் என்பதெல்லாம் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் காரியவாதம். துவக்கத்தில் புரட்சி கூட சாத்தியமில்லைதான். எனவே புரட்சியை மறுக்க இயலுமா? இந்துமதவெறியை எதிர்த்து இந்துக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது என்றால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர் கொள்வது எப்படி? வன்னிய சாதிவெறியை அம்பலப்படுத்தாமல் இளவரசனின் மரணத்திற்கு நீதியை எப்படி பெற முடியும்?

இதனாலெல்லாம் இவை சுலபமான அரசியல் நடவடிக்கைகள் என்று சொல்லவில்லை. கடினமானதுதான். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்கும் வரையிலும் முயற்சியை விடாது தொடரும் போதும் அந்த மாற்றங்கள் நடந்தே தீரும். வெல்ல முடியாத அமெரிக்காவை வியட்நாம் மக்கள் வெல்லவில்லையா? ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்தாலும் சோவியத் யூனியனில் சோசலிசம் குறிப்பிட்ட காலம் வரையிலாவது வெற்றி பெறவில்லையா?

இந்த அமைப்பு திவாலாகி விட்டது, இது ஒரு போலி ஜனநாயகம் என்பதை நண்பர் சுகதேவ் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம். எனில் இதை மக்களிடம் விளக்குவதற்கு தேர்தல் பங்கேற்பு சரியாக இருக்குமா இல்லை தேர்தல் புறக்கணிப்பு சரியா இருக்குமா?