privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை - தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்

தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்

-

1. தஞ்சாவூர்

குடிகாரர்களை நோயாளிகளாக்கி நோயாளிகளை குடிகாரர்களாக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி டாஸ்மாக் கடைகளை உடனே மூடு.

shutdown-tasmac-tnj-demo-01மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு எல்லா இடங்களிலும் நீக்கமற டாஸ்மாக் கடைகளை திறந்து தமிழக மக்களை சீரழிக்கிறது குடிகெடுக்கும் கொலைகார ஜெயா அரசு. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழகத்தில் அதிகமான நோயாளிகள் வரும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று. ஆறு, ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் இங்கு மருத்துவம் பார்க்க வருகின்றனர். அத்துடன் உள்நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் என பல ஆயிரம் பேர் அன்றாடம் வந்து போகின்றனர்.

மேலும், இம்மருத்துவக் கல்லூரியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அரசு ஊழியர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை பல்லாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் குறி வைத்து மருத்துவக் கல்லூரி வாசலிலேயே மூன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து சீரழிக்கிறது, ஜெயா அரசு. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயை குணமாக்கும் இடமாக இல்லாமல் குடிகாரர்களை உருவாக்கும் இடமாக மாறிவிட்டது. உள்நோயாளிகளாக இருக்கும் பலர் குறிப்பாக எலும்பு முறிவு பிரிவு நோயாளிகள் மாவுக் கட்டுடன் டாஸ்மாக் வாசயில் நிற்பது அன்றாடக் காட்சி. மருத்துவப் பணியாளர்களும் குடித்து விட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட போதும், நோயாளிகள் குடிப்பதால் நோய் குணமாவது தடைபடுவதுடன், புதிய நோய்களுக்கும் ஆளாகின்றனர். குடிபோதையுல் இருக்கும் பணியாளர்களால் என்ன ஆபத்து நேரும் என்று சொல்ல முடியாது. மருத்துவர்களது பணி நோய்க்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமல்ல, நோய் குணமடைய தடையாக இருக்கும் சூழலை ஒழிப்பதும் அவர்கள் கடமை. ஆனால், இது பற்றி எந்த அக்கறையும் இன்றி மருத்துவர்களும், நிர்வாகமும் செயல்படுகின்றன. உழைப்பாளி மக்களாகிய நாம் அவ்வாறு இருக்க முடியாது. டாஸ்மாக்கால் அழிவது ஏழை எளிய உழைப்பாளிகள். சொல்லவொண்ணா துயரங்களையும், குடும்பச் சுமைகளையும் தாங்குவது நம்முடைய பெண்கள். எனவே டாஸ்மாக்கை ஒழிப்பது நமது உடனடித் தேவை. உடனடிக் கடமை. குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்தே சாராயம் விற்கும் அரசை எப்படி நம்ப முடியும்?

shutdown-tasmac-tnj-demo-07இன்று அரசுத் துறைகள் அனைத்தும் லஞ்ச ஊழலில் மூழ்கி மக்கள் விரோத சக்திகளாகச் சீரழிந்து விட்டன. மிக அடிப்படையான கல்வி, மருத்துவம், குடிநீர் போனவற்றைக் கூட வழங்கும் தகுதியற்றுப் போனதோடு அனைத்தையும் தனியார் மயமாக்கி, தனியார் கொள்ளையர்களின் அடியாளாக அரசமைப்பே மாறிவிட்டது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேரங்கள் சந்தி சிரிக்கின்றன.

எனவே, உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள ஒரே வழி மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது ஒன்றுதான். சுய சிந்தனை, சுய மரியாதை, பண்பாடு இவற்றை இழந்து டாஸ்மாக் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை மீட்காமல் ஒரு அடி கூட நகர முடியாது. எனவேதான், “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்தை மக்கள் அதிகாரம் முன்னெடுத்து மக்களைத் திரட்டி வருகிறது.

மேலும், ஆறு, ஏழு மாவட்ட மக்களின் உடல்நலனுக்கும், உயிருக்கும் உலை வைக்கும் மருத்துவக் கல்லூரி டாஸ்மாக் கடைகளை உடனே மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம்

உழைக்கும் மக்களே, ஜனநாயகப் பற்றும், மக்கள் பற்றும் கொண்ட பெரியோர்களே, பெண்களே, இளைஞர்களே!

தெரு தோறும் சாராய எதிர்ப்புக் குழுக்களை உருவாக்குவோம்!
உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தை கையிலெடுப்போம், டாஸ்மாக் எனும் சனியனை ஒழிப்போம்!


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முற்றுகைப் போராட்டம்
05-05-2016 காலை 10 மணி
தஞ்சை மருத்துவக் கல்லூரி மூன்றாம் கேட்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

2. விழுப்புரம் அயனம்பாளையத்தில் தொடரும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் “மூடு டாஸ்மாக்கை” என கோரிக்கை வைத்து கடந்த 5-ம் தேதி அன்று டாஸ்மாக் கடை எதிரே அமர்ந்து போராட்டம் நடத்திய கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு போராட்டத்தில் முன்னணியாக இருந்த கிராம மக்களையும், தோழர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.

டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என்று மக்களின் கோபக்கனல் தணியவில்லை. அதன் தொடர்ச்சியாக 06-05-2016 aன்றும் போராட்டகளத்திற்கு மக்களை அழைத்து வந்தது. கிராமத்தின் உள்ளே இருந்து முழக்கமிட்டவாறு சிறுவர்கள், தோழர்கள், பெண்கள் என அனைவரும் டாஸ்மாக் கடை எதிரில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய போலீசு கும்பல் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் கிடைத்த முள் தடி, நொனா மரத்தின் தடி ஆகியவற்றை எடுத்து வந்து போராட்டம் நடத்தும் மக்களை சுற்றி வளைத்துக் கொண்டு, “பெண்களையும், சிறுவர்களையும் அடித்து மண்டையை எல்லாம் உடைத்து விடுவேன், உங்கள் வாழக்கை எல்லாம் வீணாகி போய்விடும்” என்று கூறி ஒரு ரவுடியை போல மிரட்டினார்கள். மருது என்ற உதவி ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியை காட்டி பூச்சாண்டி செய்தார். எதற்கும் அஞ்சாத பெண்களும், சிறுவர்களும் “டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் போக மாட்டோம்” என்று கூறி தங்களது வீரத்தை நிலைநாட்டினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த பதிலை எதிர்பார்க்காத “ரவுடித்துறை” வேறுவழி இல்லாமல் மக்கள் அதிகாரம் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜிடம் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. “தேர்தல் நேரத்தில் இதுபோன்று செய்யாதீர்கள். நாங்கள் உங்களை டாஸ்மாக் மேலாளரிடம் அழைத்து செல்கிறோம். அவரிடம் உங்களுடைய கோரிக்கையை சொல்லுங்கள். நாங்களும் பேசுகிறோம்” என்று வாக்குறுதியளித்தார். அதனை மக்களிடம் கூறியபோது மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஊர் மக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் என 7 பேரை மட்டும் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.

காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சுமார் மூன்று மணி நேரம் கால்கடுக்க தோழர்களையும், மக்களையும் நிற்க வைத்துவிட்டு இரண்டு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தோழர்கள், கிராமத்து மக்கள் அனைவரையும் உள்ளே அழைத்து “இந்த சூழலில் நீங்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல, நீங்கள் போராடினால் நாங்கள் உங்களை ரிமான்ட் செய்ய வேண்டிய நிலை” வரும் என்று மிரட்டினார்கள். “நீங்கள் எங்களை ரிமான்ட் செய்தாலும் மக்கள் அங்கே தொடர்ந்து போராடுவார்கள்” என்று கூறி விட்டு வெளியில் வந்த தோழர்களை நிறுத்தி, “கடைசி வாய்ப்பாக டி.எம்-மிடம் அழைத்து செல்கிறோம் அவரிடம் பேசுங்கள்” என்றனர்.

சரியாக மூன்று மணிக்கு டாஸ்மாக் மேலாளரை சந்தித்து பேசுகையில் தனக்கேயுரிய அதிகாரத் திமிரில் “கடையை மூட முடியாது” என்று கூறினார். அதற்கு தோழர்கள் “மூட முடியாது என்றால் எந்த அடிப்படையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு “மக்களுக்கு இடையூறாக உள்ள கடையை மூடுவோம்” என்று பேட்டியளித்தீர்கள்” என்று கேட்டதற்கு, “பேட்டி கொடுத்தேன். ஆனால், டாஸ்மாக் கடையை மூடுவதற்கான அதிகாரம் எனக்கில்லை. எதுவாக இருந்தாலும் கலெக்டர்தான் முடிவெடுக்க முடியும். நாங்கள் உங்கள் கோரிக்கையை மனுவாக தருகிறோம். ஒரு வாரம் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்” என்று நய வஞ்சகமாக பேசினார்.

“அதுவரை காத்திருக்க முடியாது. இன்றே மூட முடியும் என்றால் மூடுங்கள். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்” என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கூறிவிட்டு வெளியேறினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அரசும், அதிகாரிகளும்,காவல்துறையும் டாஸ்மாக்கை மூடாது என்று நடைமுறை அனுபவங்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளது. எனவே அடுத்த கட்ட போராட்டத்திற்கு கிராம மக்கள் தயாராகி வருகின்றார்கள்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

3. தருமபுரி – பென்னாகரம்

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த டாஸ்மாக்கை மூடும் போராட்டம்.

பென்னாரம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக கடந்த பத்து நாட்களாக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு 02-05-2016 அன்று சுமார் 40 பேரைத்திரட்டி தாசில்தாரிடமும், கலால் அதிகாரியிடமும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மனு கொடுத்தனர். 05-05-2016 அன்று மக்கள் அதிகாரம் மக்களை திரட்டி போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. இதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி டாஸ்மாக்கை பாதுகாக்க, துணைராணுவ படை, அதிரடிபடை, போலீசு, உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து படைகளையும் குவித்து தடுப்பு வேலி அமைத்துக்கொண்டு, மக்களிடையே பீதியூட்டி கொண்டுயிருந்தது.

தோழர்களின் தொடர் பிரச்சாரம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால் போராட்டத்தை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். மேலும் துணைஇராணுவம் மற்றும் உள்ளூர் போலிசு அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டதால் ஏதோ நடக்கப்போகிறது என மக்கள் எதிர்பார்த்து வந்திருந்தனர். இவ்வாறு, சுமார் முக்கால் மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்தை ஆயிரக்கணக்கானோர் நின்று கவனித்தனர். “எங்களுடைய நோக்கமே டாஸ்மாக்கை மூடுவதுதான் அதனால் உடனடியாக டாஸ்மாக் அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்றுகூறி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த பீதியை அடித்து நொறுக்கும் வகையில் களம்இறங்கினர் மக்கள் அதிகாரம் தோழர்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து டாஸ்மாக்கை நோக்கி ஊர்வலமாக சென்ற தோழர்களை போலீசார் உடனடியாக சுற்றி வளைத்துக்கொண்டனர். இருப்பினும் விடாபிடியாக தோழர்கள் முழக்கமிட்டவாறே போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தை ஒடுக்க தோழர்களை கடுமையாக தாக்கியும், மண்டையை உடைத்தும் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச்சென்றும் போலீசு கைது செய்தது. இதனால் பல தோழர்களுக்கு காயம் ஏற்பட்டது.

கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்த போது காயம் அடைந்து இரத்தம் வழிந்த போதும் அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல் காலம் தாழ்த்தியது. போலிசின் பொறுப்புணர்ச்சியை அம்பலப்படுத்தி போலிசிடம் தோழர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். “அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் மட்டுமே முகவரியை தருவோம்” என தோழர்கள் போராடிய பிறகே மருத்துவணைக்கு அழைத்துச் சென்றது போலிசு.

கைதுசெய்கிற போது, “உடனே கைதாகியிருந்தால் காயம் ஏற்பட்டிருக்காது” என எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள் கூறினர். “டாஸ்மாக்கை மூடினால் இந்த போராட்டமே நடந்திருக்காது” என்று தோழர்கள் பதில் கொடுத்த போது, எந்த பதிலும் கூறாமல் மெளனமானது.

ஒரு படி மேலே போய் டி.எஸ்.பி, “குடிப்பவர்களே திருந்தினால்தான் குடியை ஒழிக்க முடியும்” என்றார், இதற்கு, “திருடனே பார்த்து திருந்துவான் என்றால் போலிசு எதற்கு, சட்டம் எதற்கு?” என பதில் அளித்த போது பதில் சொல்ல முடியாமல் சிரித்தவாறே நழுவிக்கொண்டார்.

police-use-toilet-paper
“டாஸ்மாக் போராட்டத்தை ஜெயாவும், ஜெயா போலிசும் எவ்வாறு கொச்சைப்படுத்துகின்றனர்”

மக்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருந்த பிரசுரத்தை பிடுங்கிய போலிசு, அதை தோழர்களை கைது செய்து வைத்திருந்த வைத்திருந்த மண்டபத்தின் கழிவறையில் கொட்டியிருந்தது. இதை பார்த்த தோழர்கள் “டாஸ்மாக் போராட்டத்தை ஜெயாவும், ஜெயா போலிசும் எவ்வாறு கொச்சைப்படுத்துகின்றனர்” என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையில் இதை வினவு இணைய தளத்திற்கு அனுப்பினர்.

பிறகு அன்று மாலை 7 மணிக்கு விடுதலை செய்தனர்.

இப்போராட்டம் பகுதி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. “டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராடினாலே இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்குறாங்க… என்னடா கொடுமை” என்று இளைஞர்கள் காறி உமிழ்ந்தனர். கடையில் கூட்டமாக நின்று கவனித்து கொண்டுயிருந்த சி.பி.ஐ யை சார்ந்தவர்களை பார்த்து அருகிலே இருந்தவர், “நீங்களும் சிவப்பு துண்டுதான் போட்டுயிருக்கிறீங்க, முடிஞ்சா அவங்கள மாதிரி போராடுங்க பார்க்கலாம்” என்று ஆதங்கத்தோடு அவர்களுக்கு உறைக்கும் வகையில் பேசினார். பூக்கடை வைத்திருக்கும் பெண்கள், “அரசாங்கத்துக்கு ஏதாவது சூடு சுரணை இருந்தா மெட்ராஸல பள்ளிகூடத்து பசங்க போராடும்போதே மூடியிருக்கனும்” என்று அரசினுடைய கையாலகதனத்தை அம்பலப்படுத்தினார். மேலும், “போராடினால் இவர்களை போலதான் உறுதியா போராடுணும்” என்று வியந்து பேசியதை பரவலாக காணமுடிந்தது.

எனவே இப்போராட்டமானது பகுதி மக்களிடையே போராட்ட வழிமுறையை கற்றுக்கொடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் சரியான போராட்டம் என்பதனை உணர்த்தியும், புதிய உத்வேகத்தையும்,நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி
8148573417

4. கடலூர் தீர்த்தங்கரை

டலூர் மாவட்டம், தீர்த்தங்கரை கிராமத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தை ஒட்டி டாஸ்மாக் கடை 5-ம் தேதி மூடப்பட்டிருந்தது

 சிதம்பரம் டி.எஸ்.பி சுந்தரவடிவேல் மக்களிடம் பேச்சுவார்த்தை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

5. விழுப்புரம் ஏனாதிமங்கலம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்பது அக்கிராமத்தில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த டாஸ்மாக் கடையால், ஏனாதிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள எரலூர், மேலமங்கலம், புதுப்பாளையம் ஆகிய கிராம மக்களும் பாதிப்படைகிறார்கள் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் அக்கிராம மக்களுடன் மூன்று நாட்கள் தங்கி அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

மகளிர் குழுக்கள் மூலம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என கூட்டிப் பேசிய போது,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்களிடம், இந்த அரசு யாருக்கானது என்பதையும், டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இலக்கு தீர்மானித்து மக்களைக் குடிகாரர்களாக்கும் அரசும், ஓட்டுக்கட்சிகளும் எப்படி கடையை மூடுவார்கள் எனவும் விளக்கிப் பேசப்பட்டது. மேலும், ஓட்டுக்கட்சிகள் தாங்கள் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தும் லஞ்சம், ஊழல் முறைகேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் மக்கள் கேள்வி கேட்காத வகையில் மந்தைகளாகவும், எதையும் யோசிக்காத காட்டுமிராண்டிகளாகவும் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். இவர்கள் எப்படி டாஸ்மாக்கை ஒழிப்பார்கள் எனவும் விளக்கிப் பேசப்பட்டது. எனவே, இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் கடையை மூடமாட்டர்கள், மக்கள் நாம் நினைத்தால் இன்றே கடையை மூட முடியும். இதற்கு கடலூர் மாவட்டம் மேலப்பாலையூர் கிராம மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என உதாரணங்களோடு விளக்கிப் பேசப்பட்டது. இப்போது மதுவிலக்கு எனப் பேசுவது கூட எப்படியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற வெறி தான் காரணம் என்பதையும் விளக்கிப் பேசப்பட்டது.

பிரச்சாரத்தின் போது, தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவன் அவ்வெற்றியை நண்பர்களுடன் கொண்டாட டாஸ்மாக் சாராயத்தைக் கேட்டுள்ளான். கொடுக்க மறுத்த கடை ஊழியரிடம், யார் கொடுத்தாலும் காசு காசு தானே என வாக்குவாதம் செய்து, காசு கொடுத்தா சரக்கு கொடுக்க வேண்டும் என சண்டை போட்டு சாராயம் வாங்கிச் சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளான். பிஞ்சு வயசுலேயே கேட்டுப் போகிறார்கள் என ஒருவர் சொல்லி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

நமது பிரச்சாரம் மக்களிடம் புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், ஏனாதிமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர், தான் இம்முறை எம்.எல்.ஏ சீட்டு கேட்டுள்ளதாகவும், அதனால் அம்மா சாராயத்தை எதிர்க்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்தார். மக்களின் நலனை விட தனது பதவி தான் முக்கியம் என நினைக்கும் ஜெயாவைப் போலவே அவரது அடிமைகளும் இருக்கிறார்கள் என மக்கள் உணர்ந்து கொண்டனர். அக்கிராமத்தின் அதிமுக குண்டர்களோ, நாங்கள் இருக்கும் போது எங்கள் கிராமத்து மக்களுக்கு நல்லது செய்ய நீ யார் என ஜெயாவின் பாசிச குணத்தை அப்படியே வாந்தி எடுத்தனர். அதிமுக அடிமைகள் தாங்கள் ஜெயாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தங்களது நடவடிக்கைகளாலேயே நிரூபித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்து, சுற்றுவட்டார கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கி நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் பேரணியாகச் சென்று மனுவை விழுப்புரம் கோட்டாட்சியரிடம் கொடுத்து, மே-5-ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் இல்லையெனில் மக்களே மூடுவோம் என ஆணையிட்டு வந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வழக்கம் போலவே எருமைமாட்டு தடித்தோல் கொண்ட அரசு அதிகாரிகள் இம்மனுவையும் குப்பைக் காகிதமாக மதித்தனர். ஆனால், மக்கள் ஏற்கனவே அறிவித்த அடிப்படையில் மே-5 ஆம் தேதி காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட கடையை மூட அணிதிரண்டு பேரணியாகச் சென்றனர். டாஸ்மாக் கடையைக் காவல் காக்க போலிசின் பெறும் படை கடையை முற்றுகையிட்டுக் காவல் காத்தது.   போலிசு படையைப் பொருட்படுத்தாமல் மக்கள் முன்னேற, மக்களையும் மக்கள்  அதிகாரத் தோழர்களையும் தடுத்தது போலிசு. நாங்கள் என்ன தவறு செய்தோம், எங்களை எதற்கு தடுக்கிறீர்கள் எனக் கேட்டு மக்கள் போலிசிடம் வாக்குவாதம் செய்தனர். நாங்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி ஏற்கனவே முறையாக கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியாமல் இந்த இடத்தை விட்டு செல்லமாட்டோம் எனச் சொல்லி போராடிய மக்களை பலவந்தமாக கைது செய்தது போலிசு.

ஏற்கனவே, கிராமத்தில் தங்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது மிரட்டிய அ.தி.மு.க குண்டர்கள், மக்கள் போராடும் போது யார் உள்ளூர் வாசிகள், யாரை தனிமைப்படுத்துவது, யாரை மிரட்டுவது என ஆள் காட்டி வேலை செய்து தனது அடியாள் புத்தியைக் காட்டினர்.

நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கோட்டாட்சியர் விளக்கமளிக்க வேண்டும், அது வரை போலிசுக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என்று சொல்லி கைதான மக்களும் மக்கள் அதிகாரத் தோழர்களும் உண்ணாவிரதத்தை அறிவித்தனர். போலிசும் பலவாறு பேசிப் பார்த்தது. ஆனால், மக்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட போலிசு எந்த வழக்கும் போடாமல் மக்களை விடுவிப்பதாக அறிவித்து இடத்தைக் காலி செய்தது.

எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் எங்கள் போராட்டம் ஓயாது என்று அறிவித்த மக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருவெண்ணை நல்லூர் வட்டாரம்