privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகொள்கை பேசும் சமஸ் ! குண்டு வைத்த வாசகர்கள் !!

கொள்கை பேசும் சமஸ் ! குண்டு வைத்த வாசகர்கள் !!

-

smas (6)
இந்து பத்திரிகையின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் – திண்ணை வேதாந்திகளின் அரட்டை வேலைக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

தேர்தலில் வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என இதுவரை இல்லாத அளவுக்கு பலநூறு கோடிகளை தேர்தல் ஆணையம் செலவழித்திருக்கிறது. பிரபுதேவாவை வைத்து கலக்கல் கானா பாட்டு, அஸ்வின் பிரச்சாரம், செல்பீ, டிவிட்டர், பேஸ்புக் என்று ஜனநாயகத்தின் தூண்கள் எல்லாம் பதறியடித்து வேலை செய்கின்றன! தேர்தல் களத்திலோ விந்தியா, நமீதா என கவர்ச்சி அலை வீச கருத்து தளத்திலோ பத்ரி சேஷாத்ரி, பி.ஏ. கிருஷ்ணன், ஜெயமோகன் மற்றும் சமஸ் அடிக்கும் அக்கப்போர்கள் கவர்ச்சி அலையோடு போட்டி போடுகின்றன!

ஆனால் இந்து தமிழ் நாளிதழின் நடுபக்க கட்டுரை ஆசிரியர் சமஸின் ஜனநாயகப்பணி லேசுபட்டதல்ல! சாதிக்கலவரங்களை முன்னின்று நடத்தும் ஆர்.எஸ்.எஸ் இந்துபயங்கரவாதிகள் நினைத்தால் சாதி ஒழிப்பு சாத்தியம் என்று சனாதன தர்மத்தை அமித் ஷாவின் காலடியில் சமர்பித்தவர், தேர்தல் அரசியலை அணுகியிருக்கும் விதம் முற்றிலும் வேறு!

அவருக்கு படியளக்கும் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு, இன்றைய தமிழகத்து இளைஞர்களை அப்டேட்டாக தெறி, சூர்யாவின் 24, கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமண ஆல்பம், அஸ்வினின் நாய் சுகமில்லாமல் போனது, டிவென்டி டிவென்டி கிரிக்கெட், ராமநாடு ரைனோசரஸ் கிரிக்கெட் அணியில் விஜய் சேதுபதியின் பங்கு, கருண் நாயரின் மூன்று அதிஅற்புத பவுண்டரிகள், அஜித்திற்காக கொள்கையை தளர்த்திய சந்தானம் என்று புல் புளோவில் வைத்திருந்தாலும் 05-05-2016 அன்று “அரசியல் பழகு; எது நவயுக புரட்சி?” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் தமிழகத்து இளைஞர்கள் கம்யுனிச புரட்சிகர அரசியல் பேசுகிறார்கள்; இது ‘ஜனநாயகத்திற்கு’ ஆபத்தானது என பதட்டத்துடன் பரிதாப பார்வையுடன் கட்டுரை வரைந்திருக்கிறார்.

எல்லோரும் தேர்தலை நோட்டா, ஊழல் ஒழிப்பு, வேறு வழியில்லை என்ற விதத்தில் அணுகுகிற பொழுது சமஸ் மட்டும் தேர்தலையும் கம்யுனிச புரட்சிகர அரசியலையும் எதிர் எதிராக நிறுத்தி இதுதான் முதன்மையாக தீர்க்க வேண்டிய முரண்பாடு என்று கீழ்க்கண்ட குண்டைப் போட்டிருக்கிறார்.

smas (1)
ஏழைகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன? உழைத்து அம்பானி, அதானி போல முன்னேற வேண்டும்! – சமஸியத்தின் பழமொழி!

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய – பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.

நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.———”

முதலில் திருவாளர் சமஸை ஒருவர் சந்தித்து புத்தகங்களை கொடுத்து ‘புரட்சி’ அரசியலை பேசுகிறார் என்றால் அந்த இளைஞரது இயக்கம் எப்பேற்பட்ட ‘புரட்சி’ இயக்கமாக இருக்க வேண்டும்? தமிழகத்தில் ஓய்வு பெற்ற, வாழவழியற்ற, பெயர்ப்பலகை ‘புரட்சி’ அமைப்புகள் சில இருக்கலாம். இப்பேற்ப்பட்ட கையாலாகாத அப்பாவிகளை வைத்து உண்மையான புரட்சிகர அமைப்புகளை தூற்றுவதே சமஸின் நோக்கம். வைத்தியின் சீடருக்கு மோடிதானே ஹீரோவாக இருக்க முடியும்!

ஆயுதவழிக் கிளர்ச்சி என்று சமஸ் மே-5-2016 அன்று குண்டு போடும் பொழுது கம்யுனிச புரட்சிகர அரசியலை தங்கள் கொள்கையாக ஏற்றுக்கொண்ட மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளிகளும் பெண்களும் கூடவே நிறைய மக்களும் டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று போலிசு ரவுடிகளால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். மார்க்சிய-லெனினியம் எனும் அரசியல் ஆயுதம் ஆளும் வர்க்கத்திற்கு பயங்கரமானது என்பதால் தான் வெறுங்கையுடன் சென்ற தோழர்களை முடியைப்பிடித்து இழுத்தும், நெஞ்சில் மிதித்தும் மண்டையை உடைத்தும், விலா எலும்பை நொறுக்கியும் தாண்டவமாடியது போலீசு எனும் கூலிப்படை. எனினும் இந்த காக்கி கிரிமினல் கும்பலோடு ஒரு மாலை நேர சந்திப்பில் குளிர் குளம்பியை அருந்தி விட்டு “காவல் துறை உங்களது நண்பன்” என்று அடுத்த நாள் எழுதக்கூடியவர்தான் இந்த அப்பாடா டக்கர்.

smas (7)
சமஸின் திண்ணை அரட்டை துறையின் சக அறிஞர் பெருமக்கள் – திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் கிழக்கு பதிப்பகம் பத்ரி

இந்தக் கூலிப்படைதான் சமஸ் உச்சிமுகர்கிற ஜனநாயகம் என்றால் அந்த ஜனநாயகத்தில் வாழும் குடிமக்களின் கதி என்ன? எதுவாக இருந்தாலும் மதுஒழிப்பு எதிராக போராடிய சசிபெருமாள் டவரில் ஏறியதற்கே தீவிரவாதி என்று எழுதிய கூட்டம், இளைஞர்கள் கம்யுனிச புரட்சிகர அரசியலைப்பற்றுவதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களா?

சமஸ் ஆயுத கிளர்ச்சி என்று பீதியுட்டுகிற பொழுது சமூக அமைதிக்கு அவர் கைகாட்டும் சங்கப்பரிவார இந்துபயங்கரவாதிகள் பைப்வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதோ, மஹாராஷ்ட்ரா நாண்டட் பகுதியில் பைப்வெடிகுண்டு தொழிற்சாலையை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வைத்து நடத்துகிறார்கள் என்பதோ, தென்காசி பைப்குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் அத்வானி மதுரை சென்றபொழுது ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தான் பைப்வெடிகுண்டு வைத்தது என்பதோ சமஸ்ஸிற்கு தெரியாத ஒன்றல்ல. தான் பிரச்சாரம் செய்யும் ஜனநாயகத்தில் ஆர்.எஸ்.எஸ் பூக்குண்டுகளைத்தான் போடுகிறது என்று சமஸ் தெரிந்துதான் மதிப்பிடுகிறார். இதைவைத்து சமஸ்ஸை சந்தித்த அந்த புரட்சிகர தோழர் சமஸின்றி வேறல்ல என்றும் சமஸின் நோக்கம் வேறு என்பதையும் எவர் ஒருவரால் எளிதில் இனம் காண முடியும். ஆனால் இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

சமஸ் கம்யுனிச புரட்சிகர அரசியலை ஆயுதம் என்று சுருக்கி பீதியூட்டலாம் என்று நினைக்கிற பொழுது சமஸ்ஸின் கட்டுரைக்கு தமிழ் இந்துவின் வாசகர்கள் அதாவது மக்கள் எப்படி வினையாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு அறியத்தருகிறோம்.

கம்யுனிச தத்துவங்களை என்னவென்று அறிந்திராத வாசகர்கள் சமஸ் போட்ட குண்டை தங்கள் பங்கிற்கு வெடிவைத்து தகர்த்து கம்யுனிச புரட்சிகர அரசியலை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள்.

முகமது ரபீ: வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என வார்த்தை சித்தர் வலம்புரிஜான் கூறுவார். இது,மற்றெவரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப் பொருந்தும். துறவிகள் கூட இன்று கோடீஸ்வர்ர்களாக வாழ்கிறார்கள். ஆசிரமம் நடத்த குட்டித் தீவுகளும், ஆகாயப் பயணத்திற்கு குட்டி விமானங்களும் தரை வழிப்பயணத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்களும் தியானம் செய்ய பஞ்சு மெத்தைகளும் ஏசி மிஷின்களுமாக வலம் வருகிறார்கள்.சர்சைக்குரிய சாய்பாபாவின் தனியறையில் கத்தை கத்தையாக 11.56கோடி பணம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி கண்டெடுக்கப் பட்டுள்ளது. சந்நியாசிகளே இப்படி இருந்தால், சர்க்கார் நடத்துபவர்கள் எப்படி இருப்பார்கள்? உலகின் மிகப்பெரிய ஏழை நாடான இந்தியாவின் நாடாளுமன்றஉறுப்பின்ர்களை எண்ணிப்பாருங்கள் 549 உறுப்பினர்கள் பாதிக்கும்மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். இன்னும்முக்கால்வாசிப்பேர் கணக்கு காட்ட்டாத கோடீஸ்வரர்கள். சாமானிய மனிதர்கள் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே!. நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளை கொண்ட இந்திய நாட்டில் வறுமையின் வலி அறியாதவர்கள் நாட்டுக்கு என்ன செய்வார்கள்?

(ஏழைகள் பொருளாதார காரணத்தால் பயங்கர புரட்சிகர அரசியலில் விழுந்துவிடுகிறார்கள் என்று சமஸ் வாதாடுகிற பொழுது, ரபீக் வறுமையின் வலி அறியாதவர்களால் இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று எதிர் புரட்சி செய்கிறார். நீ சொல்லும் ஜனநாயக யோக்கியதை என்னவென்பதை பார் என்று புள்ளிவிவரங்களால் சிதறடிக்கிறார்!)

smas (5)
ஃபேஸபுக் பக்கத்தில் சமஸ் பகிர்ந்திருக்கும் காந்தி மேற்கோள்! மாற்றத்தின் அங்கமாக இரு! புரட்சியை எதிர்க்கும் பங்காளியாக இரு!

சுந்தர்: அருமையான கட்டுரை சமஸ் ,
35 வயதுக்கும் குறைந்த வயதில் 3ல் 2 பங்கு மக்கள் கொண்ட தேசத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லையேல் புரட்சி என்ற போலி சித்தாந்தம் வளர்வது இயல்பே
விவசாய நிலங்களால் இவ்வளவு இளைர்க்கும் வேலைவாய்ப்பு கிட்டாது என்பதால் தொழில் வளர்ச்சி மட்டுமே விடியலுக்கான வழி

(சுந்தரின் கருத்து நேர்மறையில் சமஸை பாராட்டப் போய் எதிர்மறையில் புரட்சிக்கான காரணங்களை அலச முயல்கிறது. சுந்தருக்கு புரட்சி என்பது போலி சித்தாந்தமாக தெரிந்தாலும் அது எப்படி இயல்பாக வளர்கிறது என்று போட்டுடைக்கிறார்!)

யோவான்: அதானி குழுமம் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை ரூ.72,000 கோடி ‘கற்பனை செய்து பார்க்க முடியாத தொகை’ என்று கூறிய பவன் வர்மா, இது நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் கடனுக்குச் சமமான தொகை இது என்று வெடிவைத்தார்…. உண்மை “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு…

(எந்த இளைஞர் கம்யுனிச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவை பெருமுதலாளிகளின் நாடு என்று சமஸிடம் வாதிடுகிறாரோ அவரையும் அவரது வாதத்தையும் ஆம் அது தான் உண்மை என்று அதானியை வைத்து விளாசித்தள்ளுகிறார் யோவான்!)

உண்மை: //அது காந்தி இந்த உலகுக்குக் கொடுத்த பெருங்கொடை!// இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் பற்றி மேத்திவ் ஹார்ட் எழுதிய ‘the 100’ புத்தகத்தில் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம், 1947 களில், இந்தியாவிற்கு மட்டும் அல்ல, பல நாடுகளுக்கும் அந்த பேரரசு சுதந்திரம் வழங்கியது. அந்த நாடுகளில் காந்தியை போல் யாரும் போரட்டம் நடத்தவில்லை. அந்த பேரரசு அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்ததற்கு, 2 ஆம் உலகப்போரில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பே காரணம்.

(ஏற்கனவே இந்திய புரட்சியாளர்களின் வரலாறு மக்களிடமிருந்து இருட்டடிப்பு செய்யப்ப்பட்டு இந்திய சுதந்திர வரலாறு காந்தி என்று என்னதான் ஆளும் வர்க்கம் கதைத்தாலும் உண்மை போன்ற வாசகர்கள் சமஸ் முன்வைக்கும் காந்தியப் புரட்சி போலியானது மோசடியானது என்று புட்டு புட்டு வைக்கிறார்கள்!)

smas (4)
சமஸின் வசந்த மாளிகளை – இந்த உலகில் சமஸின் நடுப்பக்க கட்டுரைகளை மட்டுமே படிக்க வேண்டும் என்று உத்திரவு போட்டால் அடுத்த விநாடியில் உலகம் முழுக்க அமைதி வந்தே தீரும்!

நாகராஜன்: நீங்கள் கூறுவது மீண்டும் மிதவாதமா அல்லது தீவிரவாதமா என்ற பட்டிமன்றத்திற்கு என்னை ஆழத்துகிறது. காந்திய, நேதாஜிய என்றால் அது காலத்தை பொருத்தது அல்ல என்றே எனக்கு படுகிறது. எனக்கு தெரிந்து 2012இல் நமது தலைநகர் டெல்ஹியில் நடைபெற்ற இரண்டு விஷயங்கள் ஒன்று அண்ணா கசாரே நடத்திய ஊழல் ஒழிப்பு மற்றொன்று நிர்பய போராட்டம் எது எப்படி நடந்து என்பதும், எதற்கு ஒரு மிக விரைவான தீர்வு கிடைத்தது என்பது நாடறிந்த விஷயம். புரட்சியை வேண்டாம் என்று ஒதுக்கும் சமூகம் துருப்பிடிக்க தொடங்கும். புரட்சி மட்டுமே முடிவும் அல்ல. ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கனுமுன்னு ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு.

(வாசகர் நாகராஜின் கருத்து புரட்சியை ஆதரிக்க சுற்றி வளைத்து தனக்கு புரிந்த விதத்தில் முன்வைக்கிறார். இதில் பிரதானமான அம்சம், நிராயுதபாணியாக நின்ற தோழர்களை போலீசு தாக்கும் பொழுது அதற்கு பதிலடியாக என்ன செய்யலாம் என்பதை நாகராஜின் கருத்துகள் முன்வைக்கும் கடைசிவரி இயல்பாக சொல்லிவிடுகின்றன. சமஸ் ஆயுதம் என்று மக்களை பீதியூட்டினால் நாகராஜன் போன்றோர் ஆடுற மாட்டை வேறு எப்படிக் கறப்பது என்று  கேட்கிறார்கள்).

அமேசான்: புரட்சியின் வடிவம் காலத்திற்கு ஏற்றவாறு மறுபிம்பம் எடுக்கவள்ளது. நீங்கள் கூறிய புழுத்துப் போன புரட்சி மறுவடிவம் பெறாத ஒன்று என எனக்குப் படுகிறது. அந்த தோழர் மிகக்கேவலமான உந்துசக்தியால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார் என்பது எவ்வளவு மறுக்கமுடியாத உண்மையோ ? காந்திய சிந்தனையும் புளுத்துபோனது என்பதும் நிதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் இந்திய சாமானியனுக்கு ஏற்ற புரட்சி அஹிம்சை அவ்வளவு தான். நாம் படித்த மன்னிக்கவும், நமக்குள் புகுத்தப்பட்ட கல்வி ஜனநாயகம் என்பது மார்க்ஸ் சொன்னதுபோல் “முதலாளித்துவ சர்வாதிகாரம் ” அவ்வளவே . இந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் தெளிவாகவே அளித்திருக்கிறீர்கள். அஹிம்சையின் கூற்றும் அப்படியே. இருப்பதை விட்டு விட்டு அஹிம்சையை விட சிறந்தது என்னவென்றும் யோசிக்க வேண்டும் அது ஆயுத சாம்ராஜ்யம் கொண்டதாக தன்னைக் காத்துக் கொள்ளத்தக்கதாக சில கோட்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கலாம்.

(அமேசான் எனும் வாசகர் போடுகிற போட்டிற்கு விளக்கம் வேறு தேவையில்லை! சமஸ் கூறுகிற இன்னொரு பயங்கரவாதி இளைஞராக அமேசான் இருக்கக்கூடும்!)

smas (2)
வாக்களிக்கும் கடமையை நினைவுபடுத்தும் சமஸ் – அதே போல தேர்தல் புறக்கணிப்பும் ஜனநாயகக் கடமை என்று தேர்தல் கமிஷன் புரட்சிகர அமைப்புக்களை அழைக்குமா?

பாண்டி: // “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மை வாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய – பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன”//… இதற்கெதிராக ஆயுத புரட்சி ஒன்றே தீர்வு என்ற அவரது பாதை சரியா தவறா என்பது வேறு விஷயம்.. ஆனால் அவரின் கூற்று அப்பட்டமான உண்மை என்பதை மறுத்து விட முடியாதே..? தீர்வுகளைத் தேடுவோம்..

(பாண்டி எனும் வாசகர் பயங்கரவாதம் என்ற பிரச்சாரமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதலில் அந்த இளைஞர் சொல்வது உண்மை என்பதை மறுக்கமுடியாது என்று சட்டைக்காலரைப்பிடித்து கேள்வி கேட்கிறார்.)

இளங்கோ: அந்த இளைஞன் இங்கே அமையும் ஆட்சிகளை பற்றி சொன்னதை சமஸ் அவர்களால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் அதுவே உண்மை.அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டாலும் “சாதிய நில உடைமை ஆதிக்க கட்டமைப்பிலிருந்து அடிமை கூட்டம்” இப்போது முற்றிலும் மீண்டுவிட்டது என்று சமஸ் கருதுகிறாரா?”நோய் நாடி,நோயின் மூலம் நாடி”தீர்வு பெறவேண்டும் என்பதை ஏனோ மறந்து அப்படிப்பட்ட இளைஞர்களை “முதலில் படிப்பை முடியுங்கள்”என்று சொல்வது மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்பதை உணர்வாரா?

(நீ சொல்ற படிப்பு பாழாகுதே என்ற பிரச்சாரம் எடுபடாது என்கிறார் இளங்கோ எனும் வாசகர்.)

ஆர்.எஸ்.ஆர்: ‘உளுத்துப் போன’…எனபதுதான் சரியான பிரயோகம்… ‘உலுத்துப் போன’ என்பது இலக்கணப் பிழை. ஒரு ‘புகழ் பெற்ற’ தமிழ் ‘சிந்தனைக்கூட’ கிழிசலின் முதற்பெரும் சிந்தனையாளர் இத்தகைய தவறு இழைக்கக் கூடாது. …சரி .விஷயத்திற்கு வருவோம். ஒரு கிராமத்து ஏழைப் பையன் படிப்பை கவனிக்காமல் , அரைகுறை புரட்சி அரசியல் இயக்கத்துக்கு வந்து தனது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டது பற்றிய கரிசனம் உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தப் பையன் பரப்பிவரும் கருத்துக்கள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை உண்மை தவிர வேறில்லை. காந்தியின் அஹிம்சை இயக்கத்தால் அல்ல நமது நாடு விடுதலை பெற்றது. அஹிம்சைப் போராட்டம் என்ற உத்தியைப் பயன்படுத்தி, காந்திஜி இந்தியாவெங்கும், நான்கு திசைகளிலும் படித்தவர், படிப்பில்லாதவர், செல்வந்தர், பரம ஏழைகள் , சனாதன ஹிந்துக்கள், இஸ்லாமிய-கிருத்தவ மக்கள், அனைவரும் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியது ஒரு அடித்தளம் மட்டுமே. உண்மையில், நாம் சுதந்திரம் அடைந்த போது , இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயப் பேரரசு முற்றும் வீழ்ந்திருந்தது. .( -> 2)

(காந்தியை வைத்து எத்தனை வடை சுட்டாலும் அனைத்தும் ஊசிப்போனவை என்பது ஆர்.எஸ்.ஆரின் வாதம்)

————————————————————————————————–

smas (3)
சமஸின் கொள்கையை மீறுபவர்களுக்கு காந்தியவாதிகள் அளிக்கும் பரிசு அடி, உதை, எலும்பு முறிவு – படத்தில் மே 5 டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் காந்திய போலிசால் தாக்கப்ப்ட்டவர்கள்!

மேற்கண்ட வாசகர்கள் தவிர தோழர் கலையரசன் அவர்களும் சமஸ்ஸின் கட்டுரையை “அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?” எனும் தலைப்பில் அம்பலப்படுத்தி எழுதியிருந்தார். இதை அவரது வலைத்தளத்தில் படிக்கலாம். எனினும் சமஸின் வாதத்தை தனது பதின்மவயதில் இருந்து ஆளும்வர்க்கமும் நடுத்தர குஞ்சுகுளுவான்களும் ஈழ அரசியலில் எவ்வாறு பயன்படுத்தியிருந்தனர் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். மேலும் இன்றைய தேவையில் சமஸ் போன்றோருக்கு இப்படியொரு கட்டுரை ஏன் தேவைப்பட்டது? என்பதற்கான அரசியல் சூழ்நிலையையும் தன் பார்வையிலிருந்து முன்வைக்கிறார். அவரது கருத்தையும் இங்கு தொகுத்திருக்கிறோம்.

தோழர் கலையரசன்: “ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்…” இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக “பெரியவர்களினால்” சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர்களைப் பாருங்கள்… எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்…” என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் “சமர்த்துப் பிள்ளைகள்”! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் “பரீட்சித்துப்” பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், “கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது” என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

முடிவுரை: சமஸின் கட்டுரையையும், வாசகர்களின் கருத்தையும் தொகுப்பாக படிக்கிற பொழுது சிதைந்துவரும் அமைப்பை எந்தவொரு கருத்தியலாலும் எப்படி முட்டுக்கொடுக்க முடியாது என்பது உண்மையோ அதுபோலவே சிதைந்துவரும் சமூகத்தில் உதித்தெழும் புரட்சிக கருத்துகளும் புரட்சிகர வரலாற்று கடமையும் எழுந்து வருவதை தடுத்துவிடமுடியாது என்று பார்க்கிறோம். இதைத்தான் இயங்கியல் என்கிறோம். எதிரிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கினால் மட்டும் போதாது; அதை எதிரிகளுக்கு நேராக நீட்டுவதில் தான் சோசலிசத்தின் வெற்றியிருக்கிறது என்பதை வாசகர்கள் மெய்பித்துக்காட்டியிருக்கிறார்கள். புரட்சி இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது!

– இளங்கோ

புகைப்படங்கள் நன்றி: சமஸ் (அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றவை)