privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு - நீதிமன்றம்

ஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்

-

“எச்.சி.எல் நிறுவனம் ரமேஷா என்ற ஐ.டி துறை ஊழியரை வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது” என்று சென்னை தொழிலாளர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு வரவேற்கிறது. ஐ.டி துறை ஊழியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும், இந்திய அரசியல் சட்டமும் தொழிலாளர் சட்டங்களும் வழங்கும், அடிப்படை உரிமைகள் இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு, ஐ.டி ஊழியர்கள் ‘எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம்’ என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளது.

எச்.சி.எல்
இந்தத் தீர்ப்பு, ஐ.டி ஊழியர்கள் ‘எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாம்’ என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளது.

திரு ரமேஷா ஆகஸ்ட் 20, 2009 என முன்தேதியிட்டு 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி எச்.சி.எல் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்றார். அதாவது, அவரை வேலைக்கு அமர்த்தி, அவரது பணியை பரிசீலித்து பின்னரே வேலை நியமனம் வழங்கியிருக்கிறது எச்.சி.எல். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சிறப்பான பணிக்கான பாராட்டையும்,ஊதிய உயர்வையும் ரமேஷா ஈட்டினார்.

ஆனால், ஜனவரி 22, 2013 அன்று எச்.சி.எல் ரமேஷாவை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது, எச்.சி.எல்.ஆயிரக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் எதிர் கொள்வதைப் போல அவர் மீது என்ன குறைபாடு என்பதை எழுத்து மூலமாக தெரிவிக்கவோ, அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தவோ செய்யாமல் ரமேஷாவுக்கு வேலை நீக்க உத்தரவை வழங்கியிருக்கிறது எச்.சி.எல்.இந்த சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார், ரமேஷா.

தமக்கு இழைக்கப்படும் அநீதியை சகித்துக் கொண்டு, சட்ட விரோத வேலை நீக்கத்தை மவுனமாக ஏற்றுக் கொண்டு, வேறு வாய்ப்புகளை தேடத் தொடங்காமல் சட்டபூர்வமான தனது உரிமைகளையும்,தனது தொழில்முறை கவுரவத்தையும் போராடி வென்றிருக்கிறார்,  ரமேஷா.  இது போன்ற நிலையை எதிர்கொள்ளும் ஐ.டி ஊழியர்கள் ரமேஷா ஏற்படுத்தித் தந்துள்ள முன் உதாரணத்தை பயன்படுத்தி வேலை நீக்கம், அப்ரைசல் மோசடிகள், தாங்க முடியாத வேலைப்பளு என தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராட முன் வர வேண்டும். இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி எச்.சி.எல் நிறுவனம் ரமேஷாவை மீண்டும் பணியில் அமர்த்துவதோடு 2013-ல் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டது முதல் இன்று வரையிலான முழுச் சம்பளத்தையும், பணித் தொடர்ச்சியையும் அவருக்கு வழங்க வேண்டும்.

டி.சி.எஸ் வேலை நீக்கம்
ஐ.டி ஊழியர்கள் ரமேஷா ஏற்படுத்தித் தந்துள்ள முன் உதாரணத்தை பயன்படுத்தி வேலை நீக்கம், அப்ரைசல் மோசடிகள், தாங்க முடியாத வேலைப்பளு என தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராட முன் வர வேண்டும்.

1947 தொழில்தகராறு சட்டத்தின்படி “எந்த ஒரு துறையிலும் சம்பளத்துக்காக அல்லது வேறு வகை வெகுமதிக்காக உடல் உழைப்பு அல்லது திறன் உழைப்பு, அல்லது திறன் இல்லாத உழைப்பு அல்லது செயல்பாட்டு உழைப்பு, அல்லது எழுத்து வேலை, அல்லது மேற்பார்வை வேலை செய்யும் யாரும்”தொழிலாளர்” ஆவார். மென்பொருள் ஊழியரின் பணி, திறமைகளையும், நுட்ப அறிவையும் கோருகிறது. எனவே, ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒருவர் தொழில்தகராறு சட்டத்தின்படி”தொழிலாளர்” என்று வரையறுக்கப்பட வேண்டும்” என்று இந்தத் தீர்ப்பை வழங்கிய கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எஸ் நம்பிராஜன் உறுதி செய்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு உற்பத்தித் துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி வங்கி,காப்பீடு, ஆசிரியர் போன்ற படித்த பிரிவினருக்கு கிடைத்து வரும் யூனியன் அமைக்கும் உரிமை, சட்ட விரோதமான பணி நீக்கலுக்கு எதிரான பாதுகாப்பு, கூட்டு பேச்சுவார்த்தை உரிமை ஆகியவை ஐ.டி துறை ஊழியர்களுக்கும் உள்ளன என்பதை உறுதி செய்கிறது.

layoff-pushedout
ரமேஷாவும் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப பணி நியமனம், ஊதிய உயர்வு, தேவை தீர்ந்ததும் கழிப்பறை காகிதம் போல தூக்கி எறியப்படுவது என்று அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஐ.டி துறையில், ‘ஊழியர்கள் அனைவரும்”சூப்பர் வைசர்கள்”, “உயர் ஊதியம் பெறுபவர்கள்” எனவே சம்பளம் பெறும் ஊழியர்களாக இருந்தாலும் பிற துறை ஊழியர்கள் சட்டபூர்வமாக அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கு கிடையாது’ என்று முதலாளிகள் பிரச்சாரம் செய்து அதற்கேற்ப தாமே, தமது விருப்பப்படி சில விதிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். பணி நியமன உத்தரவில் தமக்கு சாதகமான பல நிபந்தனைகளை சேர்ப்பது, ஊதிய உயர்வு, பணி உயர்வு, பணியை மதிப்பிடுவது ஆகியவற்றில் ஊழியர்களை தனித்தனியாக பிரித்து அவர்களுக்கிடையே ஆரோக்கியமற்ற போட்டியை ஊக்குவிப்பது என்று ஐ.டி ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளை மறுத்து வந்தனர்.

அது போலவே, ரமேஷாவும் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப பணி நியமனம், ஊதிய உயர்வு, தேவை தீர்ந்ததும் கழிப்பறை காகிதம் போல தூக்கி எறியப்படுவது என்று அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.தொழிலாளர் சட்டங்களின் படியான நிலை ஆணை (standing order) முறையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நிறுவனம் கூறுவது போல ‘திறமையை தொடர்ந்து மேம்படுத்தத் தவறினால் வேலை நீக்கம் செய்யப்படுவார்’ என்ற நிறுவனத்தின் சட்ட விரோதமான நடைமுறை கூட அவருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

layoff-microsoft
அனைத்து ஐ.டி ஊழியர்களும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர் பிரிவில் இணைந்து தம்மையும் நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்த அழைக்கிறோம்.

ரமேஷாவின் விடாப்பிடியான துணிச்சலான போராட்டத்தின் மூலம் தமது ஊழியர்களது திறமைகளையும்,  அனுபவத்தையும் துளிக்கூட மதிக்காமல், அவர்களது குடும்பப் பொறுப்புகளையும், வாழ்க்கை தேவைகளையும் கணக்கில் கொள்ளாமல் வேலையை விட்டு சட்ட விரோதமாக தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் அனைவரும் அமைப்பாக இணைய வேண்டியதன் அவசியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எச்.சி.எல் மட்டுமின்றி, ஐ.டி துறையின் பிற பெரு நிறுவனங்களும் எச்.சி.எல் உடன் திரைமறைவில் இணைந்து, மேல் முறையீடு செய்வது உறுதி. ஊழியர்களை பிளாஸ்டிக் கப் போல பயன்படுத்தி தூக்கி எறிவதை மீண்டும் நிலைநாட்ட பல கோடி ரூபாய் செலவழித்து இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவும், ஊழியர்களின் உரிமைகளை மறுப்பதற்கு ஏற்றவகையில் நிறுவன நடைமுறைகளை மாற்றிக் கொள்ளவும், தேவைப்பட்டால் சட்டத்தையே திருத்தவும் முதலாளிகள் கடும் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக நாஸ்காம் என்ற அவர்களது கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அவர்களது பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக இணைவதே ஒரே வழி. உயர் தொழில்நுட்ப கல்வி, முன்னேறிய தகவல் தொழில் நுட்ப அறிவு, சிறப்புத் திறமைகள் உடைய ஐ.டி ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்துடன் சம உரிமையுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், நிறுவனம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கவும் தமக்கு இருக்கும் உரிமைகளை உறுதி செய்து தமது சுயமரியாதையும், பணி கவுரவத்தையும் நிலைநாட்ட தொடர்ந்து போராட வேண்டும். ஐ.டி ஊழியர்கள் அனைவரும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர்கள் பிரிவில் (NDLF – IT Employees Wing) தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பல பத்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தொழில் தகராறு சட்டத்தின் காலாவதியாகிப் போன நிபந்தனைகளை (ஊதிய வரம்பு,மேற்பார்வை பணி) திருத்துவதும் இதன் மூலமாகவே சாத்தியமாகும்.

layoff-management-3
பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் எதிர்த்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஐ.டி ஊழியர்களும் அமைப்பாக இணைவதே ஒரே வழி.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு டி.சி.எஸ்,வெஸ்டாஸ், சின்டெல் போன்ற நிறுவனங்களில் சட்ட விரோத லே-ஆஃப்களை தடுத்து நிறுத்த நீதிமன்ற போராட்டங்கள், ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம், ஊடகங்களில் பரப்புரை என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ஐ.டி ஊழியர்களின் தொழில் நலன்களுக்காக மட்டுமின்றி, அவர்களையும், ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் கல்வி உரிமை, மருத்துவ உரிமை, நாட்டு வளங்களை பாதுகாப்பது, பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம்,சாதி/மத அடக்குமுறைகளை எதிர்கொள்வது என்று சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் போராடி வருகிறது.

அனைத்து ஐ.டி ஊழியர்களும் பு.ஜ.தொ.மு -ஐ.டி ஊழியர் பிரிவில் இணைந்து தம்மையும் நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்த அழைக்கிறோம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு