privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தருமபுரியில் பா .ம.க-வின் பலம் - நேரடி கள ஆய்வு

தருமபுரியில் பா .ம.க-வின் பலம் – நேரடி கள ஆய்வு

-

கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட் 2

”மொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்.. சின்னய்யா தோத்து போவாருன்னு நாங்களே நினைக்கல.. காலனிக்கார பயலுங்க மொத்தமா காசு வாங்கிக்கினு சூரியனுக்கும் ரெட்டெலைக்கும் குத்திருக்காங்க”

அன்புமணி ராமதாசுக்கு மட்டும் இருக்கும் முதலமைச்சருக்கான சிறப்புத்தகுதிகள்
அன்புமணி ராமதாசுக்கு மட்டும் இருக்கும் முதலமைச்சருக்கான சிறப்புத்தகுதிகள்
படம் நன்றி : anbumani4cm வலைத்தளம்

கூத்தப்பாடி அர்ச்சுனனின் கண்கள் சிவந்திருந்தன… ஆத்திரத்தில் இருந்தார். ஊரைக் கிழித்து நுழையும் சாலையின் இடது புறம் வன்னியர்களின் வீடுகளும் வலதுபுறம் ஆதிதிராவிடர் காலனியும் எம்மை வரவேற்றன. தோற்றத்தில் இரண்டு புறமும் எந்த வேறுபாடுகளையும் காட்டவில்லை. ரேசன் கடையைத் தாண்டியதும் எதிர்பட்ட ஆலமர மேடையில் அர்ச்சுனனும் வேறு சிலரும் அமர்ந்து ஆடு-புலி ஆடிக் கொண்டிருந்தனர்.

”சரிங்க… வன்னியருங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து அன்புமணிக்கே போட்டிருந்தாலும் அவரு ஜெயிச்சிருக்கனுமே?”

”அது தாங்க எங்களுக்கும் புரியல.. வன்னியருங்களே கட்சி மாறி ஓட்டு போட்டு துரோகம் பண்ணிருக்கானுங்க”

“நீங்க பா.ம.கவா?”

“இல்ல பாரதிய ஜனதா.. நாந்தான் இந்த ஊரு கிளைச் செயலாளர்?”

“நீங்க தாமரைக்கு ஓட்டுப் போடலையா?”

“சார்.. உண்மைய சொல்றேன்.. தாமரையெல்லாம் நம்ம ஊருக்கு ஆவாது சார். கீழ்மட்டத்துல இருக்கறவனுங்கள கவனிக்க மாட்றானுங்க. மாவட்டத்துல இருக்கறவனுங்களே மேலேர்ந்து வர்ற காசையெல்லாம் அமுக்கிக்கிறானுங்க.. மத்தவுங்களுக்கு அவுக்க மாட்றானுங்க.. அப்புறம் எப்படி கட்சி வளரும் சொல்லுங்க? அவுங்களே பொழச்சினு இருந்தா போதுமா?”

”வினாயகர் சிலையெல்லாம் கட்சி தானே கொடுக்குது?”

“அட நீங்க வேற சார்.. ஏதோ கட்சி இருக்கேன்றதுக்காக நாங்களே கைக்காச போட்டு வச்சினு இருக்கோம்”

அவரது வட்டத்தில் திமுகவுக்கே அதிக வாக்குகள் விழுந்திருந்தன. ஊரில் உள்ள மற்ற வார்டுகளிலும் தி.மு.க-வே அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நாங்கள் கூத்தப்பாடியின் வன்னியர்கள் பகுதிக்குள் சென்றோம். பரவலாக திமுகவுக்கு வாக்களித்திருந்தாலும் எவரும் வெளிப்படையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை பேச மறுத்தனர். பா.ம.கவுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் வெளிப்படையாகச் சொன்னார்கள். பிற கட்சிகளுக்கு வாக்களித்த வன்னியர்களில் கணிசமானவர்கள் ஒரு பழக்கத்தின் அடிப்படையில் வாக்களித்துள்ளனர். எப்படியும் அன்புமணி ஜெயிக்கத் தான் போகிறார் நாம் ஏன் வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று கருதியிருக்கின்றனர்.

munusamy-nanjappan-inbasekaran
இன்பசேகரனும் (தற்போதைய திமுக வேட்பாளர்), நஞ்சப்பனும் (சி.பி.ஐ வேட்பாளர்) கே.பி முனுசாமியும்(அதிமுக) அன்புமணிக்கு ஓட்டுக் கேட்டு வேலை பார்த்தாங்க…

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அன்புமணி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த நஞ்சப்பன் வென்றிருந்தாலும், அதற்கு முன்பு 2010-ல் நடந்த இடைத்தேர்தலில் பா.ம.கவைச் சேர்ந்த ஜி.கே.எம் தமிழ்குமரன் (ஜி.கே மணியின் மகன்) போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார்.

உத்திரவாதமாக விழப்போகும் சாதி வாக்குகள் மற்றும் முதல்வர் வேட்பாளர் என்கிற நட்சத்திர அந்தஸ்தின் காரணமாக எப்படியும் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்தைத் தெரிவு செய்திருக்க வேண்டும். நாங்கள் கள்ளிபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் திமுக பிரமுகர் சங்கரிடம் பேசினோம்.

“ஒரு முதல்வர் வேட்பாளரையே கவுத்திட்டீங்களே?”

”பென்னாகரம் எங்க கோட்டை அப்படின்னு ஆடினு இருந்தானுங்க.. அந்தக் கோட்டைல நாங்க ஓட்டை போட்டுட்டோமில்லே?”

”போன நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் பகுதியில் அன்புமணிக்கு நிறைய ஓட்டுக்கள் விழுந்ததே? இப்ப எப்படி குறைந்தது?”

“அவருக்கெல்லாம் ஜெயிக்கிற அளவுக்கு செல்வாக்கு கிடையாதுங்க. போன தேர்தல்ல வேற ஒருபிரச்சினை இருந்திச்சி. அது திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க. இதே இன்பசேகரனும் (தற்போதைய திமுக வேட்பாளர்), நஞ்சப்பனும் (சி.பி.ஐ வேட்பாளர்) கே.பி முனுசாமியும்(அதிமுக) அன்புமணிக்கு ஓட்டுக் கேட்டு வேலை பார்த்தாங்க… அப்பால இது கட்சிக்கு தெரிஞ்சு போகவுமே இன்பசேகரனை கொஞ்ச நாளைக்கு கட்சியை விட்டு நீக்கி வச்சிருந்தாங்க. இப்ப சமீபத்துல தான் திரும்ப கட்சிக்குள்ற வந்தாரு…”

தி.மு.கவுக்கு இருந்த குறைந்தபட்ச சொரணை உணர்ச்சி கூட சி.பி.ஐக்கு இல்லை என்பதால் நஞ்சப்பன் நடவடிக்கையின்றி தப்பிக் கொண்டார். சிட்டிங் எம்.எல்.ஏவான நஞ்சப்பன் தனது சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே மதிப்பிழந்து போக, இதுவும் ஒரு காரணம். சி.பி.ஐ கட்சியை சாதிக்கு அப்பால் வைத்துப் பார்த்தே பழகியவர்கள் ஒரு ஆழ்ந்த வெறுப்போடு அவரைக் குறித்துப் பேசினர். அதோடு சேர்த்து நில மோசடி விவகாரம் ஒன்றிலும் அவரது பெயர் அடிபடுகிறது. சாதி சார்பு, ஊழல் முறைகேடு விவகாரங்கள் மற்றும் தொகுதி மக்களை ஐந்தாண்டுகளாக எட்டிப் பார்க்காதது என்று எல்லாம் சேர்ந்து தேர்தலில் வெறும் ஐயாயிரத்தி சொச்சம் வாக்குகளோடு படு கேவலமான தோல்வியை சி.பி.ஐ கட்சிக்கு பரிசளித்துள்ளனர் மக்கள். மேலும் அவரது வெளிப்படையான வன்னிய சாதி சார்ப்பின் காரணமாக பிற சாதி வாக்குகளையும் இழந்திருக்கிறார்.

anbumani vinavu review 1”சாதியைச் சொல்லி ஜெவிச்சி வந்தாரு.. வந்த பின்னால என்னா செய்துட்டாரு?”என்கிறார் கலப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ். கலப்பம்பாடி கன்னடம் பேசும் ஒக்கலிக சமூகத்தவர்கள் நிறைந்த கிராமம். பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கன்னடம் பேசும் ஒக்கலிகா மற்றும் குருபா இனத்தைச் சேர்ந்த சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

”வெறும் ரெண்டு வருசத்துக்கு முன்னே நீங்கெல்லாம் சேர்ந்து தானே அவரை ஜெயிக்க வச்சீங்க?”

“அட ஆமாங்க… நாங்கெல்லாம் போன எம்.பி தேர்தல்ல மாம்பழத்துக்குத் தான் ஓட்டுப் போட்டோம்.. இப்ப சூரியனுக்கு போட்டிருக்கோம்”

“ஏன் அன்னிக்கு மட்டும் பா.ம.க சாதி பார்க்கிற கட்சின்னு உங்களுக்குத் தெரியாதா?”

”தெரியும்.. அன்னிக்கு வி.சி பசங்க ரொம்ப ஆடினு இருந்தாங்க அதனால மாம்பழத்துக்குப் போட்டோம். இன்னிக்கு இவுங்க ரொம்ப ஆடறாங்க.. எலெக்சனுக்கு முன்னே இருபவது வயசுப் பசங்க ஒரு முப்பது நாப்பது பேரு மஞ்ச கொடிய தூக்கிக்கினு பைக்ல ’ஓஓஓ…”ன்னு கத்திட்டே ஓட்டுக் கேட்க வாரானுங்க.. ஊர்ல பொம்பளப் பசங்க இருப்பாங்களேன்னு கூட நினைச்சுப் பார்க்கலை.. ஜெவிக்கிறதுக்கு முன்னேயே இந்த ஆட்டம் போடறாங்களே… ஜெவிச்சி வந்தா என்னா ஆட்டமெல்லாம் ஆட மாட்டாங்க? அதான் சூரியனுக்கு குத்திட்டோம்”

திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க
திவ்யா இளவரசன் பிரச்சினை பத்தி எரிஞ்சினு இருந்த சமயம்.. சாதிக்காரனெல்லாம் ஒன்னு சேர்ந்துகினாங்க

”நீங்கெல்லாம் காசுக்கு சோரம் போயிட்டீங்களாமே..”

“செருப்பால அடி… காசு குடுத்திருந்தாலும் குடுக்காமே போயிருந்தாலும் நாங்க சூரியனுக்குத் தான் போட்டிருப்போம். எங்கள விடுங்க… வி.சிகாரன் மக்கள் நல கூட்டணில தானே இருக்கான்? அவங்க கட்சி ஆளுங்களே காலனிக்கு வந்து சூரியனுக்கு போடச் சொல்லி கேட்னு போனாங்க.. அவங்கெல்லாம் காசுக்கா சோரம் போனாங்க?”

நாங்கள் நாயுடுக்கள் மற்றும் செட்டியார்கள் அடர்த்தியாக வாழும் எர்ரகொல்லனூர், எட்டியாம்பட்டி, கோடியூர் பகுதிகளுக்குச் சென்றோம். அங்கும் ஏறத்தாழ இதே மாதிரியான உணர்வுகளையே பார்க்க முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி வென்றால் வன்னிய இளைஞர்களின் கொட்டத்தை அடக்க முடியாமல் போய் விடும் என்று பிற இடைநிலைச் சாதியினர் வெளிப்படையாகவே அஞ்சுகின்றனர்.

வன்னியர்களில் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிற கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கும் அதே நேரம், இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களில் கணிசமானோர் தீவிர பா.ம.க ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். பா.ம.கவால் எப்படி சாதி இளைஞர்களை குறிவைத்து வளைக்க முடிந்தது?

இது குறித்து அப்பகுதியில் செல்வாக்கோடு செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்டாரச் செயலாளர் கோபிநாத்திடம் பேசினோம். அவர் ஒரு சராசரி வன்னிய இளைஞனின் வாழ்க்கையை விளக்கினார்.

ஒரு படிக்காத வன்னிய இளைஞர் பெரும்பாலும் இருபதுகளின் துவக்கதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்து விடுகிறார். திருமணமான உடனேயே குடும்ப பொறுப்புகள் வந்து சேர்ந்து விடுகின்றது. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. மழையை நம்பி நடக்கும் மானாவரி விவசாயத்தை அநேகமாக வயதானவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் முடித்த வன்னிய இளைஞன் தனது மனைவியோடு பெங்களூரு, கோவை அல்லது திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவையிருப்பதால் வம்புதும்புகளுக்குப் போவதில்லை.

கல்லூரிப் படிப்பு முடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கை வேறு மாதிரியாக உள்ளது. இளங்கலை முடிக்கும் ஒரு மாணவர் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயதில் கல்லூரியில் இருந்து வெளியே வருகிறார். படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கும் தொழில் கட்டமைப்புகள் தருமபுரியில் இல்லை. ஓசூர் அல்லது பெங்களுரில் கிடைக்கும் வேலைகளும் ஐயாயிரத்திற்கும் குறைவான சொற்ப சம்பளத்தோடே வரவேற்கின்றன. அது மாதிரியான வேலைகளில் உடனடியாக சேரவும் மனமின்றி ஊரில் நண்பர்களோடு சேர்ந்து வெட்டியாக ஊர் சுற்றுவது, குடிப்பழக்கத்திற்கு ஆளாவது என்று இருபத்தைந்து அல்லது இருபத்தேழு வயது வரை சில ஆண்டுகளை வீணாக்குகிறார்கள்.

ஆதி திராவிடர் காலனி இளைஞர்களோடு சில்லறையான சச்சரவுகளில் ஈடுபடுவது, பெண்களை கிண்டல் கேலி பேசுவது, இதில் ஏதாவது சலசலப்பு ஏற்படும் போது உள்ளூர் சாதி அமைப்பை பாதுகாப்பிற்காக நாடுவது என்கிற போக்கில் வன்னிய இளைஞர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி இயல்பாக அறிமுகமாகிறது. இந்தப் பகுதி கிராமங்களில் இயங்கும் பா.ம.க கிளைகள் ”கட்சி சீட்டு” நடத்துகின்றன. சில ஆண்டுகளாக இவ்வாறு நடத்தப்படும் ”கட்சி சீட்டினால்” பல கிராமக் கிளைகளில் சில லட்சங்கள் வரை சேர்ந்துள்ளன.

கட்சி ஏதேனும் மாநாடு நடத்தினால் அதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்வதற்கும், போக்குவரத்து செலவுகளுக்கும் இந்த தொகையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூடுதலாக, மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.

 மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.
மாநாடு அல்லது கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அந்த ஊருக்கு அருகிலிருக்கும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது போல் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வெளியூரில் சுற்றும் போது நண்பர்களோடு குடித்துக் கும்மாளமடிப்பது இளைஞர்களை இயல்பாகவே ஈர்த்துள்ளது.
படம் நன்றி : anbumani4cm வலைத்தளம்

மேலும் எங்காவது குடி போதையில் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்கு செல்ல நேர்ந்தால் தன் சார்பாக பேச ஒரு அமைப்பு வேண்டும் என்பதும் இவர்களை பா.ம.கவின் பக்கம் இழுக்கிறது. அடுத்து பொருளாதார ரீதியில் தலித்துகளுக்கும் வன்னியர்களும் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லை. பல்லாண்டுகளாக திட்டமிட்ட ரீதியில் ஊட்டப்பட்ட ஆண்ட சாதிய பெருமிதமும் பொருளாதார எதார்த்தமும் நேருக்கு நேராக முரண்படும் நிலையில், தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் வன்னிய இளைஞர்கள் சாதி ரீதியில் அணி திரள்கின்றனர்.

பளிச் மேக்கப்புடனும் காதில் மாட்டிய ஹெட்போனுடனும் அன்புமணியை “நவீன” கோமாளியாக களமிறக்கிய ராமதாசுக்குத் தன் மகனை நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் நோக்கம் கனவில் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் பேசிய அளவில் இதை அந்தக் கட்சித் தொண்டர்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். எப்படியும் ஒரு தொங்கு சட்டமன்றம் அமையும்; அப்போது நம்மிடம் ஒரு பத்திலிருந்து பதினைந்து சீட்டுக்கள் இருந்தால் சில அமைச்சரவை சீட்டுக்களோடு ஐந்தாண்டுகளுக்கு அற்பமான சில அரசியல் அலப்பறைகளை கூட்டிக் கொண்டும் அரசியல் அதிகாரம் வாரி வழங்கும் வாய்ப்புகளைக் கொண்டு பொறுக்கித் தின்று கொண்டுமிருக்கலாம் என்பதே மருத்துவர் திரு. தமிழ்குடிதாங்கியின் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

அரசியல் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை வாரிசுக்குக் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்று விடுவோமென்கிற ராமதாசின் திட்டம் இந்தத் தோல்வியோடு முற்றாக ஓய்ந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் கிடைத்திருக்கும் ஐந்து சதவீத வாக்குகளும், வன்னியர் ஓட்டுக்களும் ராமதாசின் நாவில் எச்சிலூறச் செய்யப் போதுமானவை. சிறந்த அரசாளுகை, வித்தியாசமான நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என்று ஒப்பனைக்காக ஒட்டியிருந்த மருவை தூக்கிக் கடாசி விட்டு அடுத்த நத்தம் காலனி எங்கே என்று தேடும் முயற்சியில் காடுவெட்டியை களமிறக்குவதற்கான வாய்ப்புகளை நாம் மறுக்க முடியாது.

ஏனெனில் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற கந்தல் துணியைப் போர்த்திக் கொண்டிருப்பது வன்னியர் சாதி சங்கம் தான். வன்னியர்களை சாதி ரீதியாக தனிமைப்படுத்துவது, வாய்ப்பிருந்தால் பிரச்சினைகளின் அடிப்படையில் பிற இடைநிலை ஆதிக்க சாதிகளின் தயவைப் பெறுவது, இதைச் சாதிக்க பொது எதிரியாக தாழ்த்தப்பட்ட மக்களை சித்தரிப்பதும் அதற்கான வழிமுறையாக இந்துத்துவ ‘லவ்ஜிஹாத்தின்’ தமிழ் வடிவமான ”நாடகக் காதலை” முன்னிருத்திக் கட்டுவதுமே ஓட்டுப் பொறுக்கவும் பதவி பொறுக்கவுமான உத்திரவாதமான செயல் தந்திரம் என்பதை ராமதாஸ் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்.

ராமதாஸ் போன்ற சாதி வெறியர்களின் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான களத்தை புதிய பொருளாதார கொள்கைகளே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. புதிய பொருளாதார கொள்கைகள் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை பல்வேறு சமூகத் தட்டுகளிடையே (Social Strata) மட்டுமின்றி மாநிலங்களுக்கிடையேயும் ஒரே மாநிலத்தில் உள்ள பிரதேசங்களுக்கிடையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களை தங்கள் பாரம்பரிய வாழிடங்களில் இருந்து கொத்துக் கொத்தாக பிடுங்கியெறிகிறது. நகர்புறங்களுக்கு மலிவான அத்துக்கூலிகள் வந்து குவிவதை உத்திரவாதப்படுத்த உள்ளூரில் வாழும் வாய்ப்புகளை ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கிறது.

anbumani vinavu review 2”வன்னியர் பெல்ட்” என்று சொல்லப்படும் தர்மபுரி மாவட்டமோ இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டாக உள்ளது. சொந்த மண்ணில் பிழைக்கும் வழிகள் அடைபட்டுப் போயிருப்பதால் விட்டேத்தியான இளைஞர்கள் மிகச் சுலபமாக பா.ம.க போன்ற சாதி வெறி அமைப்புகளிடம் அடைக்கலம் தேடுகின்றனர். பற்றியெறியும் இந்த நச்சுச் சூழலில் டாஸ்மாக் சாராயம் எண்ணை வார்க்கிறது.

புராண காலத்தில் சமூக நீதி பேசிய தி.முக போன்ற திராவிட கட்சிகளோ தாங்கள் பெயரளவிற்குப் பேசிவந்த சமூக நீதி அரசியலின் அடியறுக்கும் வேலையை இந்த தாராளவாதக் கொள்கைகள் செய்வதைப் புரிந்து கொள்ளும் அரசியல் தெளிவின்றி அதையே வளர்ச்சி முன்னேற்றம் என்பதாக முன்வைக்கின்றன. அதுவும் மக்களின் நம்பிக்கையை இழந்திருப்பதால் இந்தச் சுற்றில் ஆம் ஆத்மி வகைப்பட்ட பிரச்சார உத்திகளிலும், பாரதிய ஜனதா துவங்கி வைத்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் அரசியலிலும் நம்பிக்கை வைத்துக் களமிறங்கித் தோற்றுப் போனது தி.மு.க. ஏற்கனவே ஆளும் வர்க்க கட்சியாக சீரழிந்து விட்ட திமுகவிடம் இதற்கு மேல் கேஜ்ரிவாலின் “நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்” உத்தியைத் தவிற வேறெதுவும் இல்லை.

மக்களும் மக்களின் எதிரிகளும் மிகக் கூர்மையாக பிளவுபட்டு நிற்கும் இந்நிலையில் உழைக்கும் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் இப்போக்கினை புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் முறியடிக்கவில்லை என்றால் நத்தம் காலனிகள் தொடர்ந்து எரிக்கப்படும். முன் எப்போதும் சந்தித்திராத சவாலான நீண்ட நெடிய போராட்டம் காத்திருக்கின்றது.

– வினவு செய்தியாளர்கள்.