vinavu 9th anniversaryட்டாம் ஆண்டின் துவக்க நாளான 17.07.2015 அன்றுதான் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் “மூடு டாஸ்மாக்கை” வீடியோ டீஸர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பச்சையப்பா கல்லூரி மாணவர் போராட்டம், தோழர் கோவன் கைது, தமிழகமெங்கும் போராட்டங்கள், முத்தாய்ப்பாக சென்ற மே 5 போராட்டம் என ஓராண்டிலேயே இந்த கோரிக்கை மக்களின் குரலாக மாற்றப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் டாஸ்மாக் பிரச்சினையே முதன்மையாயக பேசப்பட்டது. இறுதியில் ஜெயா அரசாங்கம் பெயரளவிற்கேனும் தடையை கொண்டு வரும் நிர்ப்பந்தத்தை தோழர்களும், மக்களும் ஏற்படுத்தினர்.

இதற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள், மாணவர்கள், மக்கள், இதர கட்சியினர் அனைவரும் மக்கள் அதிகாரம் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றனர். சிலருக்கோ போலிசின் சித்திரவதையும் பரிசாக கிடைத்தது.

மக்கள் அதிகாரத்தின் இந்த நெடிய போராட்டப் பாதையில் “வினவு” தளமும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறது. அவ்வப்போது வரும் போராட்டச் செய்திகள், வீடியோக்கள், நேர்காணல்கள், கேலிச்சித்திரங்கள், ஆவணப்படம் என்று இந்த ஓராண்டு விறுவிறுப்புடன் இயங்கியிருக்கிறோம்.

தோழர் கோவன் கைதுக்கு காரணமான “ஊற்றிக் கொடுத்த உத்தமி”யை வெளியிட்டமைக்காக வினவு பொறுப்பாளர் தோழர் கன்னையன் ராமதாஸ் மீதும் வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டார். வினவு தளத்தை தடை செய்ய வேண்டுமன்று பா.ஜ.க, அ.தி.மு.கவினர், போலீஸ் அதிகாரிகளோடு தந்தி டி.வி பாண்டேவும் வழிமொழிந்தார். ஆயினும் வினவு முடங்கவில்லை, தோழர் கோவனும் சிறை வாசலில் பிணையில் வெளியே வந்து அதே பாடலை அதே வரியில் பாடினார். இந்திய அளவில் கோவன் கைது பேசப்பட்டு, ஜெயா அரசு தனிமைப்படுத்தப்பட்டது.

குமரி முதல் சென்னை வரை டாஸ்மாக்கை மூடும் இந்த வலிமையான இயக்கத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாத எமது தோழர்களின் வழியில் வினவும் தொடர்ந்து பயணிக்கும்.

இந்த ஆண்டு வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் கட்டுரைகளை  உள்ளடக்கிய புதிய கலாச்சாரத்தின் நூல் ஒரு தலைப்பில் தொகுக்கப்பட்டு மாதந்தோறும் கிரமமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் எமது கட்டுரைகள் அச்சு ஊடகத்திலும் கால் பதித்திருக்கின்றன. தரமான புத்தகக் கட்டமைப்பில் இருபது ரூபாய் விலையில் அரிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் இந்த புத்தகங்கள் மக்களிடம் குறிப்பிடத்தக்க வரவற்பைப் பெற்றிருக்கின்றன.

புதிய ஜனநாயகம் இதழின் பி.டி.எஃப் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பு.ஜ-வை தரவிறக்கம் செய்வோரும், குறிப்பிடத்தக்க கட்டுரைகளை மிக அதிக அளவில் படிப்போரும அதிகரித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆரின் வரலாறு, சமீபத்தில் வெளிவந்த “ஆர்.எஸ்.எஸ்-ஐ தோலுரித்த ரகுராம் ராஜன்” போன்ற கட்டுரைகள் சில சான்றுகள்.

ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்திகள் போடுவதை இந்த ஆண்டு ஒரு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்தோம். அதை இடைவிடாது செய்ய முடியவில்லை என்றாலும் முடிந்த அளவு வெளியிடுகிறோம். சில பதிவுகள் இலட்சத்தை தாண்டியும் படிக்கப்பட்டன. பிறகு கேலிச்சித்திரம், களச்செய்திகள் ஆகியவற்றுக்கு தனிப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவையும் கிரமமாக செயல்படுகின்றன.

வினவு யூடியூபில் இந்த ஆண்டு கணிசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. கோவன் கைது காலத்தில் யூடிபின் பார்வையாளர் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்திருந்தது. காட்சி ஊடக்தின் வலிமையினையும், தொழில் நுட்பத்தினையும் இந்த ஆண்டில் கற்றுக் கொண்டோம் எனலாம். அம்மாவின் மரண தேசம் ஆவணப்படம் படப்பிடிப்பு முடிந்தும் படத்தொகுப்பிற்காக எமது வேலைச்சுமையால் இரண்டு மாதங்கள் தள்ளிப் போனது. பிறகு கோவன் கைதை ஒட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது. குடி என்பது ஒரு தனிநபரின் உரிமை என நினைத்திருந்தேன், இந்த ஆவணப்படத்தை பார்த்து அதை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படுவதை ஆதரிக்கிறேன் என்று ஒருவர் கருத்து தெரவித்திருந்தார்.

இந்த ஆண்டு கணிசமான நேரடி ரிப்போர்ட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஜே.என்.யூ கட்டுரைகள் – நேர்காணல்கள், உடுமல சங்கர் கொலையுண்ட கிராமத்தின் கள ஆய்வு போன்றவை வாசகரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நாங்களும் நேரடி கள ஆய்வில் குறிப்பிடத்தக்க அனுபவங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இவையன்றி வழமையான அரசியல் – பண்பாட்டுத் துறையில் பல்வேறு தரமான கட்டுரைகள் இவ்வாண்டு எழுதப்பட்டிருக்கின்றன. “காக்கா முட்டை, விசாரணை” போன்ற திரைப்பட விமரிசனங்கள் காத்திரமான வரவேற்பை பெற்றன. சமூகரீதியான பார்வையை அறிமுகம் செய்வதில் எமது கட்டுரைகள் பயன்பட்டிருக்கும் என நம்புகிறோம்.

இருப்பினும் செய்ய வேண்டிய பணிகளும் நிறைய காத்திருக்கின்றன. அன்றாடம் கடந்து போகும் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளை எம்மால் முழுவதும் எழுத முடியவில்லை. மார்க்சியக் கல்வி, கேள்வி பதில் போன்ற நிலுவையில் உள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி – வீச்சுக்கு ஏற்ப செயல்படும் கட்டமைப்பை இன்னும் அடையவில்லை. இவையெல்லாம் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றுவோம் என்று நம்புகிறோம்.

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!  என்றொரு கட்டுரை 2008 நவம்பரில் வெளியிட்டிருந்தோம். ஐ.டி துறை ஆட் குறைப்பு, தொழிற்சங்கம் இல்லாமை குறித்து பேசிய அந்தக் கட்டுரைக்கு ஐ.டி துறை நண்பர்களிடமே எதிர்ப்பு அதிகமிருந்தது. பலர் மறுமொழி பெட்டியிலேயே விதம் விதமாக விவாதித்தார்கள். ஐ.டி துறையில் யூனியன் சாத்தியமில்லை, தேவையில்லை என்றார்கள். இந்தக் கட்டுரையை அன்று சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விரும்பியும் பகிர்ந்தும் இருந்தார்கள்.

இன்று 2016-ம் ஆண்டில் ஐ.டி துறை தொழிற்சங்க உரிமையை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு சாதித்திருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை பல்லாயிரம் பேரால் படிக்கப்பட்டும், 1500க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல்வேறு ஐ.டி துறை நண்பர்கள் இச்செய்தியினை பகிர்ந்தனர். இத்தகைய மாற்றம் எட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நடந்திருக்கும் போது சமூக மாற்றம்,புரட்சி குறித்து நண்பர்கள் சோர்வடையத் தேவையில்லை. வாருங்கள், எங்களுடன் இணையுங்கள்!

மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை எனும் கள ஆய்வுக் கட்டுரை 2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வாசகர்களிடம் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை இன்றுதான் உரியவர்கள் பார்த்திருக்கின்றனர். தற்செயலாக இன்று காலைஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருந்த போது இதே கட்டுரையை ஒரு நடத்துநர் இரண்டு நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். பல நடத்துநர்கள், ஓட்டுநர்கள் அதை பகிர்ந்திருந்தார்கள். அவருக்கு ஒரு நட்பு அழைப்பு கொடுத்ததும் ஏற்றுக் கொண்டார்.

“வினவு” உரியவர்களுக்காக வேலை செய்கிறது, உரியவர்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறோம்.

அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்!

நட்புடன்
வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்திற்கு நன்கொடை தாருங்கள்!