privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஒன்பதாம் ஆண்டில் வினவு

-

vinavu 9th anniversaryட்டாம் ஆண்டின் துவக்க நாளான 17.07.2015 அன்றுதான் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் “மூடு டாஸ்மாக்கை” வீடியோ டீஸர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பச்சையப்பா கல்லூரி மாணவர் போராட்டம், தோழர் கோவன் கைது, தமிழகமெங்கும் போராட்டங்கள், முத்தாய்ப்பாக சென்ற மே 5 போராட்டம் என ஓராண்டிலேயே இந்த கோரிக்கை மக்களின் குரலாக மாற்றப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் டாஸ்மாக் பிரச்சினையே முதன்மையாயக பேசப்பட்டது. இறுதியில் ஜெயா அரசாங்கம் பெயரளவிற்கேனும் தடையை கொண்டு வரும் நிர்ப்பந்தத்தை தோழர்களும், மக்களும் ஏற்படுத்தினர்.

இதற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள், மாணவர்கள், மக்கள், இதர கட்சியினர் அனைவரும் மக்கள் அதிகாரம் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றனர். சிலருக்கோ போலிசின் சித்திரவதையும் பரிசாக கிடைத்தது.

மக்கள் அதிகாரத்தின் இந்த நெடிய போராட்டப் பாதையில் “வினவு” தளமும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறது. அவ்வப்போது வரும் போராட்டச் செய்திகள், வீடியோக்கள், நேர்காணல்கள், கேலிச்சித்திரங்கள், ஆவணப்படம் என்று இந்த ஓராண்டு விறுவிறுப்புடன் இயங்கியிருக்கிறோம்.

தோழர் கோவன் கைதுக்கு காரணமான “ஊற்றிக் கொடுத்த உத்தமி”யை வெளியிட்டமைக்காக வினவு பொறுப்பாளர் தோழர் கன்னையன் ராமதாஸ் மீதும் வழக்கு பதியப்பட்டு தேடப்பட்டார். வினவு தளத்தை தடை செய்ய வேண்டுமன்று பா.ஜ.க, அ.தி.மு.கவினர், போலீஸ் அதிகாரிகளோடு தந்தி டி.வி பாண்டேவும் வழிமொழிந்தார். ஆயினும் வினவு முடங்கவில்லை, தோழர் கோவனும் சிறை வாசலில் பிணையில் வெளியே வந்து அதே பாடலை அதே வரியில் பாடினார். இந்திய அளவில் கோவன் கைது பேசப்பட்டு, ஜெயா அரசு தனிமைப்படுத்தப்பட்டது.

குமரி முதல் சென்னை வரை டாஸ்மாக்கை மூடும் இந்த வலிமையான இயக்கத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாத எமது தோழர்களின் வழியில் வினவும் தொடர்ந்து பயணிக்கும்.

இந்த ஆண்டு வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் கட்டுரைகளை  உள்ளடக்கிய புதிய கலாச்சாரத்தின் நூல் ஒரு தலைப்பில் தொகுக்கப்பட்டு மாதந்தோறும் கிரமமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் எமது கட்டுரைகள் அச்சு ஊடகத்திலும் கால் பதித்திருக்கின்றன. தரமான புத்தகக் கட்டமைப்பில் இருபது ரூபாய் விலையில் அரிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் இந்த புத்தகங்கள் மக்களிடம் குறிப்பிடத்தக்க வரவற்பைப் பெற்றிருக்கின்றன.

புதிய ஜனநாயகம் இதழின் பி.டி.எஃப் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பு.ஜ-வை தரவிறக்கம் செய்வோரும், குறிப்பிடத்தக்க கட்டுரைகளை மிக அதிக அளவில் படிப்போரும அதிகரித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆரின் வரலாறு, சமீபத்தில் வெளிவந்த “ஆர்.எஸ்.எஸ்-ஐ தோலுரித்த ரகுராம் ராஜன்” போன்ற கட்டுரைகள் சில சான்றுகள்.

ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்திகள் போடுவதை இந்த ஆண்டு ஒரு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்தோம். அதை இடைவிடாது செய்ய முடியவில்லை என்றாலும் முடிந்த அளவு வெளியிடுகிறோம். சில பதிவுகள் இலட்சத்தை தாண்டியும் படிக்கப்பட்டன. பிறகு கேலிச்சித்திரம், களச்செய்திகள் ஆகியவற்றுக்கு தனிப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவையும் கிரமமாக செயல்படுகின்றன.

வினவு யூடியூபில் இந்த ஆண்டு கணிசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. கோவன் கைது காலத்தில் யூடிபின் பார்வையாளர் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்திருந்தது. காட்சி ஊடக்தின் வலிமையினையும், தொழில் நுட்பத்தினையும் இந்த ஆண்டில் கற்றுக் கொண்டோம் எனலாம். அம்மாவின் மரண தேசம் ஆவணப்படம் படப்பிடிப்பு முடிந்தும் படத்தொகுப்பிற்காக எமது வேலைச்சுமையால் இரண்டு மாதங்கள் தள்ளிப் போனது. பிறகு கோவன் கைதை ஒட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது. குடி என்பது ஒரு தனிநபரின் உரிமை என நினைத்திருந்தேன், இந்த ஆவணப்படத்தை பார்த்து அதை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படுவதை ஆதரிக்கிறேன் என்று ஒருவர் கருத்து தெரவித்திருந்தார்.

இந்த ஆண்டு கணிசமான நேரடி ரிப்போர்ட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஜே.என்.யூ கட்டுரைகள் – நேர்காணல்கள், உடுமல சங்கர் கொலையுண்ட கிராமத்தின் கள ஆய்வு போன்றவை வாசகரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நாங்களும் நேரடி கள ஆய்வில் குறிப்பிடத்தக்க அனுபவங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இவையன்றி வழமையான அரசியல் – பண்பாட்டுத் துறையில் பல்வேறு தரமான கட்டுரைகள் இவ்வாண்டு எழுதப்பட்டிருக்கின்றன. “காக்கா முட்டை, விசாரணை” போன்ற திரைப்பட விமரிசனங்கள் காத்திரமான வரவேற்பை பெற்றன. சமூகரீதியான பார்வையை அறிமுகம் செய்வதில் எமது கட்டுரைகள் பயன்பட்டிருக்கும் என நம்புகிறோம்.

இருப்பினும் செய்ய வேண்டிய பணிகளும் நிறைய காத்திருக்கின்றன. அன்றாடம் கடந்து போகும் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளை எம்மால் முழுவதும் எழுத முடியவில்லை. மார்க்சியக் கல்வி, கேள்வி பதில் போன்ற நிலுவையில் உள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி – வீச்சுக்கு ஏற்ப செயல்படும் கட்டமைப்பை இன்னும் அடையவில்லை. இவையெல்லாம் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றுவோம் என்று நம்புகிறோம்.

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!  என்றொரு கட்டுரை 2008 நவம்பரில் வெளியிட்டிருந்தோம். ஐ.டி துறை ஆட் குறைப்பு, தொழிற்சங்கம் இல்லாமை குறித்து பேசிய அந்தக் கட்டுரைக்கு ஐ.டி துறை நண்பர்களிடமே எதிர்ப்பு அதிகமிருந்தது. பலர் மறுமொழி பெட்டியிலேயே விதம் விதமாக விவாதித்தார்கள். ஐ.டி துறையில் யூனியன் சாத்தியமில்லை, தேவையில்லை என்றார்கள். இந்தக் கட்டுரையை அன்று சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விரும்பியும் பகிர்ந்தும் இருந்தார்கள்.

இன்று 2016-ம் ஆண்டில் ஐ.டி துறை தொழிற்சங்க உரிமையை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு சாதித்திருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை பல்லாயிரம் பேரால் படிக்கப்பட்டும், 1500க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல்வேறு ஐ.டி துறை நண்பர்கள் இச்செய்தியினை பகிர்ந்தனர். இத்தகைய மாற்றம் எட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நடந்திருக்கும் போது சமூக மாற்றம்,புரட்சி குறித்து நண்பர்கள் சோர்வடையத் தேவையில்லை. வாருங்கள், எங்களுடன் இணையுங்கள்!

மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை எனும் கள ஆய்வுக் கட்டுரை 2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வாசகர்களிடம் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை இன்றுதான் உரியவர்கள் பார்த்திருக்கின்றனர். தற்செயலாக இன்று காலைஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருந்த போது இதே கட்டுரையை ஒரு நடத்துநர் இரண்டு நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். பல நடத்துநர்கள், ஓட்டுநர்கள் அதை பகிர்ந்திருந்தார்கள். அவருக்கு ஒரு நட்பு அழைப்பு கொடுத்ததும் ஏற்றுக் கொண்டார்.

“வினவு” உரியவர்களுக்காக வேலை செய்கிறது, உரியவர்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறோம்.

அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்!

நட்புடன்
வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்திற்கு நன்கொடை தாருங்கள்!

  1. ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கும், வினவை விரிவுபடுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுனையாக இருக்கும் மற்ற தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டாவது உங்களுடன் இணைந்து ஊக்கமுடன் பணியாற்ற முயற்சிக்கிறேன்.

  2. ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கு வாழ்த்துக்கள்.

  3. வாழ்த்துக்கள் வினவு. பணிபுரியுமிடத்தில் வினவை படிக்காத நண்பர்களோடு கூடி விவாதிக்காத நாள் இல்லை என்று சொல்லலாம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    கம்யூனிச கல்வியையும் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  4. எவ்வளவோ மாற்று கொள்கை மாற்று கருத்துகள் இருந்தாலும் அரசியல் சமூகம் கலை இலக்கியம் என்று பல தளங்களிலும் மாறுபட்ட கோணத்திலும் அதை பல்வேறு பரிமாணங்களிலும் சிந்திக்க தூண்டுவதில் வினவின் பங்கு மிக முக்கியமானது.உங்களுக்கு சரி என்பதை எந்த சார்புமின்றி இதே நெஞ்சுரத்தோடு என்றென்றும் சொல்ல வேண்டுமென்று வேண்டுகிறேன்.

  5. வாழ்த்துக்கள்!
    வினவின் மூலம் நான் கண்டுகொண்டது……………
    சுமார் 100 பேர் மட்டுமே ஆர்வமாக கலந்துகொள்கிறோம்…கருத்திடுகிறோம்….
    தேர்4…..புரையோடிப் போன தமிழ் நாட்டை, திருத்துவது,,மீள கட்டியமைப்பது…
    பேசாமல் நாம் சந்திர மண்டலத்தில் வடை சுட்டு விற்கலாம்…

  6. மக்கள் போராட்டங்களோடு தொடர்ந்து பயணிக்கும் வினவிற்கு வாழ்த்துக்கள். வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற போராடுவதாய் தெரிவித்துள்ளீர்கள். இந்த ஆண்டு நிறைவேற்றவும் வாழ்த்துக்கள்.

    – குருத்து

  7. வினவு மென்மேலும் வளரவும், பாட்டாளிவர்க்க பாதையில் பீடுநடை போடவும் முதற்கண் எனது வாழ்த்துக்கள்.

    வினவில் வர வர காத்திரமான கட்டுரைகள் வருவதே குறைந்துவிட்டது, பெரும்பாலான சமயங்களில் புதிய ஜனநாயக கட்டுரைகளையே இட்டு நிரப்பிவிடுகிறீர்கள். பு.ஜ கட்டுரைகளை இடுவதை தவறென சொல்வதில்லை, அதே சமயம் பு.ஜ கட்டுரைகளையே மீண்டும் இடுவதென்றால் வினவு எதற்கு? நடுவில் சிலமாதங்கள் புதிய கலாச்சாரமும் வரவில்லை, இப்போது புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப்போல அது வருகிறது. பழைய கட்டுரைகளை புதிய அட்டையில் கொடுப்பதில் என்ன சிறப்பென்று எனக்கு புரியவில்லை. காட்சி ஊடகத்தின் வலிமையை புரிந்து கொண்டோமென சொல்லிவிட்டு, ஏற்கனவே உங்களிடமிருக்கும் ஆயுதங்களை துருப்பிடிக்கச்செய்வது போல்தான் இருக்கிறது உங்களது நடவடிக்கைகள். வாசகர்களை கட்டுரையாளர்களாக தரமுயர்த்தும் ஒரு திட்டமிருப்பதாக முன்பு சொல்லியிருந்தீர்கள், தற்சமயம் அந்த எண்ணத்தை கூட கைவிட்டு விட்டதாக தெரிகிறது. பல்வேறு நபர்கள் பங்களிக்கும்பொழுதுதான் நடை எளிமையாகும், அதிக கட்டுரைகளும் அதன் மூலம் அதிக வாசகர்களும் கிடைக்கும். முக்கியமான விசயங்களில் எழுதப்படும் கட்டுரைகள் ஒரே மாதிரியான நடையில் அமைந்து சலிப்பூட்டும் விதத்தில் அமைந்துவிடுகின்றன, உதாரணமாய் உங்களது அரசு பற்றிய அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல எனும் பு.ஜ தொடர் கட்டுரை, இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் லெனின் அரசும் புரட்சியுமே எவ்வளவோ எளிமையானதாகவும் படிக்க சுவாரசியமாகவும் உள்ளது. கம்யூனிச கல்வி, கேள்வி பதில் என்பதை வருடா வருடம் திட்டமாக சொல்லிவிட்டு நிறைவேற்றாமல் விடுவதற்கு பதிலாக அதை உங்கள் செயல்திட்டத்திலிருந்து எடுத்துவிடலாம். இதில் கம்யூனிச கல்வி என்பதை செயல்படுத்துவதில் ஏன் தாமதம் என புரியவில்லை? இன்றும் பல இளைஞர்களுக்கு கம்யூனிசமென்றால் என்ன என்பது குறித்து பல கேள்விகள் இருக்கிறது. ஆனால் உங்களைப்போன்ற இடதுசாரி அமைப்புகள் கம்யூனிசம் என்பதை ஒரு மறைநூல் போல் வைத்து பாதுகாக்கிறீர்களே ஒழிய அது என்ன என்பதை ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை. வாரம் ஒரு தலைப்பென எழுத சிந்தாந்த புலமையுள்ள ஒருவர் கூடவா அமைப்பில் இல்லை….

    அரசியல் நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாதது, சமூகவலைத்தளங்களின் வீச்சுக்கேற்ப வளரவில்லை என்பதை கவனத்தில் கொண்டிருப்பது நன்று. சமூக வலைத்தளங்களில் குறைந்தது ஒரு லட்சம் நபர்களையாவது பின் தொடரச்செய்வது எனும் இலக்குடன் செயல்படுங்கள். புதிதாக வந்திருக்கும் இரண்டு இணையதளங்கள் கூட ஓரளவு அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் செய்திகளாக பதிந்துவிடுகின்றன நாமோ அதில் இன்னும் பின் தங்கியுள்ளோம், ஏற்கனவே செய்ய இயலாத திட்டங்களோடு இதுவும் சேராமல் இலக்கை விரைவில் அடைய எனது வாழ்த்துக்கள்.

    ஏழாமாண்டு கட்டுரையில் இப்படி சில வரிகள் வந்தது (இது மற்றவரின் எண்ணமாக சொல்லப்பட்டபோதும்) // “உங்களுக்கு இருபெரும் பத்திரிகைகள் இருக்கின்றன, தமிழகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கலைக்குழு உள்ளது, பிரபலமான இணைய தளமெல்லாம் வைத்திருக்கையில் பிரச்சாரம் சுலபம்தானே?”.// – இம்மாதிரியான எண்ணங்கள் உங்களின் மனதிலிருந்தால் அதை உடனடியாக அழித்துவிடுங்கள். இவை அத்தனையின் வீச்சு குறைவு, ம.க.இ.க என்ற பெயரை கூட அறியாதவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். ஊடகங்களின் செல்வாக்கென்ன என கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தீர்கள், ஊரறிந்த ஊடகங்களுக்கே அந்த கதியென்றால் உங்களை போன்றவர்களின் நிலையை எண்ணிக்கொள்ளுங்கள். இதை எதிர்மறையாக சொல்வதாக கருதிக்கொள்ள வேண்டாம், நாம் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வினவினூடான எங்களது உறவு உணர்வு பூர்வமானது, வினவிடம் பிரமாண்டமான வளர்ச்சியை எதிர்நோக்குகிறோம். எனவே விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துகொள்ளுங்கள்.

    வினவிற்க்கு மீண்டுமொருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • அன்புள்ள சீனிவாசன் உங்களது ஆழமான விமரிசனத்திற்கு நன்றி. விரைவில் இதற்கு பதிலளிக்கிறோம்.

    • யோவ் சீனு நம்ம அல்ரெடி பேசுன மாரியே வந்து பேசிட்டேரு.. அதுக்காக ஒரு செல்லக் கிள்ளு.. ஆனா அவதூறையே விமர்சனம் மாரி வைக்கணும்னா ஒம்மட்டதான்யா வந்து பாடம் கத்துக்கணும்.. இனிமே டிபேமேசன் கேசெல்லாம் போட்டுதான் பாக்கட்டுமே.. குறிப்பாக
      1. புதிய மொந்தையில் பழைய கள்.. என்னா ஒரு வில்லத்தனம். யோவ் இவிங்கள இப்படி சொன்னீரே.. அரசும் புரட்சியும் புத்தகம் முதல் பல புத்தகங்கள போடுறதுக்கு இப்போ ராதுகா பதிப்பகம் இல்ல.. உம் வாதப்படி பாத்தால் அதெல்லாம் பழைய கள், புதுமொந்தைதானா
      2. காட்சி ஊடகத்துல போக சொல்றீங்க.. அதாது கோடம்பாக்கத்துல போயி அண்ணன் ரஞ்சித் மாரி யாரயாச்சும் வச்சு அங்கங்க மார்க்சு மாவோ படத்த மாட்டி நானு ரவுடிதானு சொல்ல வைக்க போறீங்களா.. யோவ் உமக்கு ரொம்ப குசும்புய்யா..
      3.அரசும் புரட்சியும் வந்து எளிமையும் சுவாரசியமாகவும் இருக்கிறதா.. யோவ் அது ஒரு சித்தாந்த போராட்டத்தை புரட்சியின் பாட்டில் நெக்கில் வச்சு எழுதியது.. ஆனா அது சுவாரசியமா இருக்கணும்னா ஒன்னு லெனின் சல்லியடிச்சிருக்கணும்.. இல்லன்னா நீங்க தூங்கிருக்கணும்.. நீங்க சல்லியடிக்க மாட்டீங்கள்லா.. அதான் கொஞ்சம் பயம்
      4. நூறு கோடிப் பேருக்கும் வினவுன்னா இன்னாது,, அது இன்னாத்துக்காகவும், இன்னாருக்காவ்வுந்தான் கீது னு அல்லாருக்கும் தெரியுறது தான் புரட்சிக்கு முன் நிபந்தனையா சீனு…
      -நெறயவே சொல்லிருக்கீக.. நொட்டம் இதுக்குமா னு யாரும் வந்துறக் கூடாது பாருங்க..

      • சம்பந்தா சம்பந்தமில்லாம வந்து உளறாதீங்க, முதல்ல ஒழுங்கா கட்டுரையையும், பின்னூட்டத்தையும் திரும்ப நல்லா படிங்க.

      • //இப்போ ராதுகா பதிப்பகம் இல்ல//

        That is for children’s books right? Progress publishers published political books. By the by, do you have Soviet era book collections?

    • அன்புள்ள சீனிவாசன்,

      புரட்சிகர கட்சிகளின் பணிகள் யாவும் அனைத்து துறைகளிலும் பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. ஊடகத் துறையில் – இணைய அரங்கிலும் இன்னும் ஆரம்ப கட்டத்தை கூட நாம் தாண்டவில்லை. வினவில் காத்திரமான கட்டுரைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. அவை அதிகம் வராமல் போவதற்கு ஆட் பற்றாக்குறை, நேரச்சுமை போன்ற தெரிந்த இயலாமைகள்தான் காரணம். அதே நேரம் புதிய ஜனநாயகம் கட்டுரைகள் குறிப்பிட்ட தலைப்பை இன்னும் விரிவாக ஆய்வு செய்து முன் வைக்கின்றன. நீங்கள் தனிப்பட்ட முறையில் பு.ஜ-வை அச்சு இதழில் படிக்கிறீர்களா, தெரியவில்லை. இணைய அரங்கில் பு.ஜ.-வின் ஒவ்வொரு கட்டுரையும் பெரும் வரவேற்பையும் அறிமுகத்தையும் செய்கின்றன. அதை நீங்கள் குறைத்து மதிப்பிடுவது தவறு.

      அடுத்து பு.க குறித்த உங்களது கருத்திலும் உடன்பாடில்லை. இதுவரை வெளிவந்த பு.க நூல்களில் குறிப்பிட்ட தலைப்புகளில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. வினவு, பு.க, பு.ஜவில் வந்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளை யாரும் நினைவு வைத்திருக்கப் போதில்லை. ஆனால் குறிப்பிட்ட தலைப்பு சார்ந்து தேடினால் அதை இந்த தொகுப்பு நூல் தொகுத்து உங்களுக்கு அளிக்கும். மாட்டுக்கறி, கல்வி, பாலியல் வன்முறை, அறிவியல் என்று இந்த நூல்களின் பயன்பாட்டை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

      வாசகரை பங்கேற்கச் செய்வது என்பது முன்பு சொன்னோம். இப்போது அப்படி நிலைமை இல்லை. அப்படி எழுத்து திறமையும், ஆர்வமும், சமூக அக்கறையும் கொண்டோரை ஃபேஸ்புக் வீணாக்கி வருகிறது. நாலு வரிகளை ‘சாமர்த்தியமாக’ எழுதி 40 லைக்கும், 4 ஷேரும் வந்தால் போதும் அவர் விரைவிலேயே விரயமாகி போகிறார். கற்பது, விவாதிப்பது, நடைமுறையில் ஈடுபடுவது எல்லாம் டிஜிட்டல் விளையாட்டில் மறைந்து மங்குகின்றன. இவர்களில் சில விதிவிலக்குகள் இருந்தாலும் விரைவிலேயே அவர்கள் பொதுவிதியில் கரைந்து போகிறார்கள். இருப்பினும் அப்படி எழுதும் ஆர்வம் கொண்டோரை மீட்பது எப்படி என்று பார்க்கவேண்டும்.

      அடுத்து ஒரே மாதிரியான நடை என்று நீங்கள் சொல்வது ஒரு வகையான வாசிப்பின்பம் பற்றிய பிரச்சினையாக தெரிகிறது. சுற்றி நடக்கும் செய்திகள், நிகழ்வுகளை தெரிவிக்கும் செய்திப் பதிவுகளுக்கு நடை ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அதே போல சுய சிந்தனை கொண்ட கட்டுரைகள் அனைத்தும் அவற்றிற்குரிய நடையை கண்டடைகின்றன. பு.ஜவில் சில கட்டுரைகள் சலிப்பூட்டும் விதத்தில் இருப்பதாக தாங்கள் தெரிவிப்பது உள்ளடக்கம் பலவீனமாக இருப்பது குறித்தென்றால் விவாதிக்கலாம். மாறாக உள்ளடக்கம் வீரியமாகவும், நடை தொய்வாகவும் இருக்கிறது என்றால் பரிசீலிப்பது கடினம். இது குறித்து நீங்கள் பு.ஜனநாயகம் ஆசிரியர் குழுவிற்கு மடல் அனுப்பலாம்.

      கம்யூனிச கல்வி எமது அமைப்புகளில் நடைமுறையில் இருக்கும் அவசியமான வேலைகளில் ஒன்று. இதை இணைய வாசகருக்கு எழுதும் கடமை வினவு தளத்தையே சார்கிறது என்பதால் உங்கள் விமரிசனம் முழு அமைப்பையும் நோக்கி போவது சரியல்ல. மேலும் நடைமுறையில் கம்யூனிசம் நோக்கி வரும் புதியவர்களுக்கு மார்க்சிய வகுப்புகளை எடுப்பதும், நடைமுறையில் இல்லாத அல்லது அதற்கு வாய்ப்பற்ற இணைய வாசகர்களுக்கு எப்படி எடுக்க முடியும் என்ற பெரிய கேள்வியும் உண்டு. எனினும் இது எழுதாமைக்கு காரணம் அல்ல. அதே நேரம் வினவோடு நேரடியாக சந்திக்க வரும் நண்பர்களுக்கு இப்பணி கிரமமாக செய்யப்படுகிறது என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறோம். இந்த ஆண்டு கண்டிப்பாக அரசியல் அறிமுக எழுத்துக்களை செய்வோம்.

      ஏழாமாண்டு கட்டுரையில் வந்த வரிகள் குறித்து……. அவை பொதுவில் மற்ற அரசியல் கட்சிகளோடு ஒப்பிட்டு எழுதப்பட்டவை. அவை இன்னமும் உண்மையாகத்தான் இருக்கின்றன. அதாவது இணையத் தளம் என்று எடுத்துக் கொண்டால் தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகளின் தளங்களை விட வினவு பிரபலம்தான். மற்ற கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் போன்றோர் ஃபேஸ்புக்கில் செயல்படுவது போல இணையத் தளங்களில் கட்சியாக செயல்பட முடியவில்லை. மேலும் இந்த வீச்சை தமிழகத்தின் அரசியல் அரங்கில் உள்ள விசயமாகத்தான் எழுதினோம். அதை பொது மக்களின் அரங்காக எடுத்துக் கொண்டு நீங்கள் விமரசிக்கிறீர்கள். அதற்கு இந்த பதிலின் முதல்வரியே பதிலளிக்கிறது என்று நம்புகிறோம்.

      சுருங்கக் கூறின் வினவு தளத்தின் பலம், பலவீனம் இரண்டும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறோம். அதேநேரம் பலவீனம் என்பது எங்களது புறச்சூழலின் வரம்பாக இருப்பதால் பல தருணங்களில் அதை மீறுவது எங்கள் கையில் இல்லை. அதை “நம்” கையாக மாற்றும் போது வெல்ல முடியும். நன்றி

      • வினவில் வாசகர் பங்கேற்பு இன்மைக்கு வினவு கொடுக்கும் விளக்கம் சரியானது இல்லை…வாசகர்களை பங்கேற்க செய்வதில் வினவுக்கு இருக்கும் அத்துணை பிரசனைகளும் கீற்று இணைய தளத்துக்கும் இருக்கவேண்டும் அல்லவா? ஆனால் கீற்றில் வரும் பரந்துபட்ட கட்டுரைகள் பல்வேறு முற்போக்கு கொள்கைகள் (பெரியாரிய,அம்பேத்காரிய,மார்ஸிய) சார்புள்ள எழுத்தாளர்களால் எழுதப்படுகிறது என்பதனை வினவு அவதானிக்கவேண்டும்.. அங்கே கீற்றில் அதன் கட்டுரைகளுக்கு வரும் பின்னுட்டங்களை விட வினவு கட்டுரைகளுக்கு வரும் பின்னுட்டங்கள் மிக அதிகம் தானே? அப்படி என்றால் வாசகர் வட்டம் என்பது கீற்றை விட வினவுக்கு தானே அதிகம்… வாசகர்கள் அதிகம் இருப்பினும் வாசகர்களின் பங்கேறற்பு இன்மைக்கு முகநூல் தான் காரணம், வாசகர்களை முகநூல் லைக் கெடுகின்றது என்று சாக்கு சொல்வதனை விட வினவு தன்னுடைய அக பிரசனைகளை ஆய்வு செய்வது தான் ஒரு மார்சிய இணைய தளத்துக்கு அழகும், சுயவிமர்சன பார்வையும் கூட…

      • வினவில் கம்யூனிச கல்வி தொடர்பான விஷயத்தில் ஒன்பது ஆண்டுகளில் எவ்வளவோ சாதித்து இருக்கலாம்…வினவு கட்டுரைகள் பொதுவெளியில் முற்போக்களர்களுக்கு பெட்டகமாக பயன் அளிப்பது போல .., ஒரு வேலை மார்ஸிய கல்வியை வினவு முன்பே தொடங்கியிருந்தால் அது இளையோருக்கும் ,மாணவர்களுக்கும் பெரிய பயனை கருத்தியல் தளத்தில் அளித்து இருக்கும்… அந்த விஷயத்தில் வினவு தவறிவிட்டது…தவறிழைத்து விட்டது…

        #குறைந்த பச்சம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசகர்களுக்கு புரியும் எளிய நடையில் விளக்கிஇருக்கலாம்…

        #தேசிய இன பிரச்சசினையில் திரு லெனின் அவர்களின் கண்ணோட்டத்தை விளக்கியிருக்கலாம்….

        #திரு ஸ்டாலின் காலத்தில் சோவியத் குடியரசில் நிகழ்ந்த பாரிய மக்கள் நல மாற்றங்களை.., அவர்கள் நாஜிகளை எதிர்கொண்ட வீரத்தை விளக்கிஇருக்கலாம்….

        நன்றி வினவு தோழர்…. இதனை செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறன்றேன்…

  8. Recently,I read about Georges Sorel,French philosopher (1847-1922).Sorel’s was a voluntarist Marxism;he rejected those Marxists who believed in inevitable and evolutionary change,emphasising instead the importance of WILL and preferring DIRECT ACTION.These approaches included general strikes,boycotts,and constant disruption of Capitalism with the goal being to achieve worker control over the means of production.Sorel believed the “energising myth”of the general strike would serve to enforce solidarity,class consciousness and revolutionary elan among the working class.The “myth” that the fascists would appeal to,however,was that of the race,nation,or people as represented by the state. Even Benito Mussolini was inspired by the WILL of Georges Sorel for wrong reasons.Sorel was against the parliamentary system.His famous book was “Reflections on violence”(1908).
    In my opinion,VINAVU,NDLF and MAKKAL ADHIKARAM are following the principles of Georges Sorel.I request Vinavu to respond to my opinion.

  9. Voluntarism is against the dialects between contradictions. So It is in the opposite side of marxism. Apart from that, George Sorel was a typical french example of 2nd international peoples. But his line is differ from kautzky. These peoples are not under the banner of Sorelenism. leave it

  10. வாழ்த்துக்கள் வினவு.

    முன்பே வைத்த கோரிக்கை ஒன்றை மீண்டும் முன்வைக்கிறேன். இந்தியாவில் பொருளாதார தாராளமயத்தின் முக்கிய ஆண்டு 1991. அது கடந்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளன. பல்வேறு வகைப்பட்ட மக்களின் வாழ்வு, 1991 க்கு முன்-பின் என ஒப்பீடு செய்து கட்டுரை தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். பிரபல பத்திரிகை பத்திகளில் இது பற்றி “Good, bad and ugly” என்ற ரீதியில் ஒன்றிரண்டு விஷயங்கள் படிக்கக் கிடைத்தன. வினவு விரிவான தொடர் எழுதினால் நன்றாக இருக்கும். மேலும், நீர்யானைகளை ஆய்வு செய்பவன் எவ்வாறு சமன மனநிலையில் இருப்பானோ அவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட கோஷங்கள் இன்றி இது இப்படி என்ற அறிவியல் ரீதியில் அமைந்தால் கூடுதல் போனஸாக இருக்கும்.

    நன்றி. மீண்டும் வாழ்த்துக்கள்.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க