privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

-

ரியானா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் சாதிவெறிக் கும்பல், பிற சாதியினரைக் குறிவைத்து நடத்திய தீ வைப்பு, சூறையாடல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட வன்முறை வெறியாட்டம், சாதி என்பது எத்தகையதொரு பேரழிவு சக்தி என்பதையும், இந்த அட்டூழியங்கள் அனைத்தையும் நியாயப்படுத்தும் சுயசாதி பெருமிதம் மனித நாகரிகத்துக்கே எதிரானது என்பதையும் மீண்டுமொருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறது.

jat-riots-gutted-cars
ஜாட் சாதிவெறியர்களால் எரிக்கப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்

தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரி ஜாட் சாதியினர் நடத்திய போராட்டம், தன்னெழுச்சியாக வன்முறை வடிவத்தை எடுத்துவிட்டதைப் போலச் சித்தரிப்பதெல்லாம் உண்மையை மூடிமறைப்பதாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, ஜாட் சாதியினர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றபோதும், கடந்த பிப்ரவரி மாதம் அச்சாதியினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் இலக்கு இட ஒதுக்கீடு சலுகை அல்ல. அதற்கும் மேலாக, அரியானா மாநிலத்தில் தமக்குள்ள சமூக, அரசியல் மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதுதான்.

அரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி., இராசஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜாட் சாதியினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வந்தாலும், அரியானாவில்தான் அவர்கள் மற்ற சாதியினரைவிட அதிக எண்ணிக்கையிலும், அடர்த்தியாகவும் வசித்து வருகின்றனர். அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் 27 சதவீதம் ஜாட் சாதியினராக இருப்பதோடு, 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் ஏறக்குறைய முப்பது தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக ஜாட் சாதியினர்தான் உள்ளனர். 1966-ல் அம்மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை அம்மாநிலத்தை ஆண்ட பத்து முதலமைச்சர்களுள் ஏழு முதலமைச்சர்கள் ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

jat-riots-gutted-shops-2
ஜாட் சாதிவெறியர்களால் எரிக்கப்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்

நிலவுடமை வர்க்கமான ஜாட் சாதியினரிடம்தான் அம்மாநிலத்தின் நான்கில் மூன்று பகுதி விவசாய நிலங்கள் குவிந்திருப்பதாகவும்; அச்சாதியினரில் வெறும் 10 சதவீதம் பேர்தான் நிலமற்றவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆராய்ந்த கே.சி.குப்தா கமிசன், “அம்மாநில அரசின் உயர் பதவிகளில் 17.82 சதவீதமும், கீழ்நிலைப் பதவிகளில் 40 முதல் 50 சதவீதமும் ஜாட் சாதியினரால் நிரம்பியிருப்பதாக”க் குறிப்பிடுகிறது.

இப்படி ஆதிக்க சாதிகளுள் ஒன்றாகவும், அரசியல்-பொருளாதார செல்வாக்கும் கொண்டதாகவும் உள்ள ஜாட் சாதியினர், குறிப்பாக 1990-களில் மண்டல் கமிசன் அறிக்கை அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இப்போது தம்மைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு சலுகையை அளிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இட ஒதுக்கீடு சலுகையைப் பெற்றுள்ள ஆஹிர், குஜ்ஜார், லோதா, சைனி, யாதவ் உள்ளிட்ட பிற ஆதிக்க சாதி மேட்டுக்குடி வர்க்கத்துடன் போட்டியிடுவதுதான் ஜாட் மேட்டுக்குடி வர்க்கத்தின் நோக்கம். விவசாயத்தின் அழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஜாட் சாதியினரை இவர்கள் தம் பக்கம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று, தனித்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. அரசில் ஜாட் சாதியினரின் பங்கு முன்பு இருந்ததை விட வெகுவாகக் குறைந்தது. ஜாட் சாதியைச் சேராத மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக்கப்பட்டார். கட்சியின் முக்கிய பதவிகளிலும் ஜாட் அல்லாத பிற ஆதிக்க சாதியினர் அமர்த்தப்பட்டனர்.

other-castes-against-jats
ஜாட் சாதியினருக்கு எதிராக மற்ற 35 ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்.

உ.பி.யில் ஜாட் சாதியினரைத் திரட்டி முசுலீம்களுக்கு எதிரான முசாஃபர் நகர் கலவரத்தை நடத்திய பா.ஜ.க., அரியானாவில் ஜாட் சாதியினரைப் புறக்கணித்ததற்கு, அம்மாநில சட்டசபைத் தேர்தலில் ஜாட் சாதியினரைவிடப் பிற ஆதிக்க சாதியினர் பா.ஜ.க.விற்கு அதிக அளவில் வாக்களித்திருப்பதும்; ஜாட் சாதியினர் இன்னமும் காங்கிரசு மற்றும் அகில இந்திய லோக் தளக் கட்சியின் வாக்கு வங்கியாக இருப்பதும் காரணங்களாகக் கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மைய ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, ஜாட் சாதியினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் ஆணையை வெளியிட்டது. இந்த ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ரத்து செய்தது. மேலும், அரியானா மாநிலத்தில் ஜாட், சீக்கிய ஜாட், பிஷ்னோய், தியாகி, ரோர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினருக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கும் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகையை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இந்தப் பின்னணியில்தான் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஜாட் சாதி சங்கங்கள் கடந்த பிப்ரவரியில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கின. இப்போராட்டம் பா.ஜ.க. அரசிற்கும், தனது மேலாதிக்கத்திற்கு சவலாக எழுந்திருக்கும் பிற ஆதிக்க சாதியினருக்கும் பாடம் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலாக நடத்தப்பட்டது.

jat-riots-khattar-gharoed
ஜாட் சாதிவெறியர்களால் முற்றுகையிடப்படும் அரியான மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார். (உள்ளே: மனோகர் லால் கட்டார்.)

“ஜாட் அல்லாத 35 சாதிகளுக்கு எதிராக ஜாட்” எனப் பொருள்படும், “35 க்கு எதிராக ஒன்று” என்ற சாதிவெறியைத் தூண்டிவிடும் முழக்கத்தை முன்வைத்து இக்கலவரத்திற்கு ஜாட் சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் உதிரிகளும் திரட்டப்பட்டனர். இந்த 35 சாதிகளுள், சைனி மற்றும் பஞ்சாபியர்கள் இக்கலவரத்தின்பொழுது குறிவைத்துத் தாக்கப்பட்டனர். மேலும், தாகுர், பனியா, பார்ப்பனர், வால்மீகி ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களும் குறிவைத்து அழிக்கப்பட்டன.

குஜராத் இனப்படுகொலையின்போது முசுலீம்களின் வீடுகளும், கடைகளும் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு தாக்கப்பட்டதைப் போலவே அரியானாவிலும் நடந்திருக்கிறது. ஒரே தெருவில் இருக்கும் ஜாட் சாதியினருக்குச் சொந்தமான கடைகள், வீடுகள், வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, அதே தெருவில் உள்ள பிற சாதியினரின் சொத்துக்கள் ‹றையாடப்பட்டு, தீ வைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. பிற சாதியினரின் வீடு உள்ளிட்ட சொத்துக்களை, கடை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலம் அவர்களை உள்ளூரிலேயே அகதிகள் போன்ற நிலைக்குத் தள்ளும் திட்டத்தோடு ஜாட் சாதிவெறிக் கும்பல் இக்கலவரத்தை நடத்தியிருக்கிறது.

21 மாவட்டங்களைக் கொண்ட அம்மாநிலத்தின் எட்டு மா-வட்டங்கள், கலவரம் நடந்த இருபது நாட்களும் ஜாட் சாதிவெறியர்களின் முற்றுகையின் கீழ் கொண்டுவரப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரை வான்வழியாகத்தான் கலவரப் பகுதிகளில் இறக்க முடிந்தது என்பதிலிருந்தே இந்தக் கலவரம் ஒரு உள்நாட்டுப் போரைப்போல நடத்தப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பான போலீசிலும், சிவில் நிர்வாகத் துறையிலும் ஜாட் சாதியினர் நிரம்பியிருந்தது, ஜாட் சாதிவெறியர்களுக்குப் பக்கபலமாக அமைந்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை, ஜாட் சாதிவெறியர்கள் பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் கொள்ளையிடுவதற்கும், தீயிட்டுக் கொளுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர். இந்த அட்டூழியத்திற்கு போலீசே பாதுகாப்புக் கொடுத்தது.

பானிபட் மாவட்டத்தில், டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முர்தால் எனும் ஊரில் சாலைகளில் தடையரண்களை ஏற்படுத்தி வாகனப் போக்குவரத்தை முற்றிலும் முடக்கிய ஜாட் சாதிவெறியர்கள், வாகனங்களில் இருந்த பெண்களைப் பாலியல்ரீதியில் சீண்டியுள்ளனர்; பத்து பெண்கள் பக்கத்திலுள்ள வயல்வெளிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் கும்பலாகப் பாலி-யல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ளனர். “குடும்ப கௌரவம் சந்தி சிரித்துவிடும்; அதனால் புகார் கொடுக்க வேண்டாம்” என போலீசே பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தி இக்குற்றத்தை மறைத்துவிட முயற்சி செய்தாலும், அதனையும் மீறிக் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இது குறித்து போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.

இந்தப் புகார்கள் பத்திரிகைகள் வாயிலாக அம்பலமானதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியான உயர்நீதிமன்றம் இதனைப் பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இனிமேலும், இக்குற்றத்தை மறைக்க முடியாது என்ற நிலையில், அரியானா அரசு முர்தாலில் நடந்துள்ள கும்பல் பாலியல் வன்புணர்ச்சி குறித்து விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது.

“கலவரம் தீவிரமாக நடந்த எட்டு மாவட்டங்களில் மட்டும் பிற சாதியினருக்குச் சொந்தமான 2,000 கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள், 371 வாகனங்கள், 30 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 75 வீடுகள், 50 உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 23 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களும், மத நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 கட்டிடங்களும் ‹றையாடப்பட்டிருக்கின்றன.

jat-riots-prakash-sings-committeeபொதுச் சொத்துக்களை எடுத்துக் கொண்டால், 7,232 சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு, அவை பிற்பாடு திருடிச் செல்லப்பட்டுவிட்டன. 45 அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 29 போலீசு நிலையங்களும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 160 வாகனங்களும் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளன. போலீசுநிலையங்களிலிருந்து 170-க்கும் மேற்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன” என இக்கலரவம் குறித்து ஆய்வு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் சிங் கமிட்டியின் அறிக்கை சேதாரங்கள் குறித்துப் பட்டியல் இட்டிருக்கிறது. இந்தக் கலவரத்தில் அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாயாகும் எனக் குறிப்பிடுகிறது, தரகு முதலாளிகளின் சங்கமான அசோசெம்.

மேலும், உள்துறைச் செயலர் பி.கே.தாஸ் உள்ளிட்டு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டி.ஜி.பி. யஷ்பால் சிங்கால் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள், சிவில் துறையைச் சேர்ந்த 21 உயர் அதிகாரிகள், போலீசு துறையைச் சேர்ந்த 59 அதிகாரிகள் ஆகியோர் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், ஜாட் சாதிவெறியர்களுக்கு ஒத்துழைப்புக் கொ-டுத்திருப்பதையும் இக்கமிசனின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரியானாவில் ஜாட் சாதியினரை கட்டுக்குள் வைக்க சைனி உள்ளிட்ட பிற ஆதிக்க சாதிகளுக்குக் கொம்புசீவிவிட்ட பா.ஜ.க., ஜாட்டுகள் கலவரத்தில் இறங்கியவுடன், பீதியடைந்து ஒதுங்கிக் கொண்டது. ஜாட்டுகள் நடத்திய கலவரத்தை அரசுப் படைகளைக் கொண்டு ஒடுக்கினால், அதனின் பின்விளைவுகளை எதிர்வரும் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதுடன் ஒரு உள்நாட்டுப்போரை ஒத்த சூழலை எதிர்கொள்ள நேரும் என்றும் பா.ஜ.க. அஞ்சியது. எனவே, பா.ஜ.க மாநில அரசு, ஒருபுறம் கலவரத்தின்பொழுது கைது செய்யப்பட்ட ஜாட்டுகளை உடனடியாகப் பிணையில் விட்டுவிட்டு, இன்னொருபுறம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் அளவிற்கு நட்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

***

ன்றைய நவீன சமூகத்தில், சாதி என்பது, ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த மேல்தட்டுக் கும்பலின் நலனுக்கோ அல்லது இந்து மதவெறி அரசியல் உள்ளிட்ட ஆளும் வர்க்கங்களின் அரசியல் நலன்களுக்கோ மட்டும்தான் பயன்பட்டு வருகிறது. பொதுவாக சாதிவெறித் தாக்குதல் என்பது முதன்மையாக தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் தாக்குதலாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, அரியானாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பது ஜாட் சாதிதான்.

வன்னிய சாதிவெறியர்கள் தலைமையில் நடைபெற்ற நத்தம் காலனி தாக்குதல் தமிழகத்தில் ஒரு எடுத்துக்காட்டு. முசாபர்பூரில் ஜாட் சாதிவெறியையே இந்து வெறியாக மாற்றி, இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தது பாரதிய ஜனதா. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களையும் இசுலாமியர்களையும் தாக்கும்போது, அதனை ஆதரித்த, அல்லது நமக்கென்ன என்று ஒதுங்கி நின்ற மற்ற சாதியினருக்கு பாடம் கற்பித்திருக்கிறது தற்போது அரியானாவில் ஜாட் சாதியினர் நடத்தியிருக்கும் வெறியாட்டம். பிற சாதியினரின் சொத்துகளைக் குறிவைத்து அழித்து அவர்களை அகதிகளாக்கியிருப்பது மட்டுமல்ல, நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெண்களையெல்லாம் வளைத்துப் பிடித்து வல்லுறவுக்கு ஆளாக்கியதன் மூலம், சாதி என்பது தன் இயல்பில் ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதைக் காட்டியிருக்கிறது.

தமிழகத்தில் வன்னிய சாதி வெறியர்கள் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நத்தம் காலனித் தாக்குதலை நடத்தி, அதனைப் பயன்படுத்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களை அறுவடை செய்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அன்புமணி, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். அன்புமணியின் தேர்தல் வெற்றிக்குப் பின், பெரும்பான்மைச் சாதி என்ற திமிரில் அந்தத் தொகுதியில் பா.ம.க.வினர் செய்த அடாவடித்தனங்கள்தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அந்த வட்டாரத்தின் வன்னிய சாதி மக்களே கூறுவதை சென்ற இதழ் கட்டுரையொன்றில் பதிவு செய்திருந்தோம்.

சாதி சங்கங்கள் அல்லது சாதிக் கட்சிகள் அச்சாதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் நலனையும் பிரதிநிதித்துவப்படுவதாகக் கூறிக்கொள்வதெல்லாம் கடைந்தெடுத்த மோசடி. சாதியும், சாதி சங்கங்களும் அச்சாதிகளைச் சேர்ந்த ஓட்டுச்சீட்டு அரசியல் பிரமுகர்களுக்கும், கல்வி வியாபாரிகள் உள்ளிட்டு திடீர் பணக்காரர்களாக உருவெடுத்திருக்கும் மேல்தட்டு பிரிவினருக்கும்தான் அவசியமாக உள்ளது.

இக்கும்பல் தமது பலத்தைக் காட்டுவதற்கும், கலவரங்களில் பலியிடுவதற்கும் உழைக்கும் மக்களை அடியாட் படையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. சாதியின் பெயரால் அக்கும்பல் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் நியாயப்படுத்தும் அளவிற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்கிறது. யுவராஜால் கோகுல்ராஜ் கொல்லப்பட்டதைக் கவுண்டர்களும், சங்கர் கொல்லப்பட்டதைத் தேவர்களும், இளவரசன் சாவுக்குத் தள்ளப்பட்டதை வன்னியர்களும் ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை சுயசாதிப் பற்று என்ற தீமையில்தான் உள்ளது.
அரியானாவில் ஜாட் சாதியினர் நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிற சாதியினர், நேரம் கிடைக்கும் சமயத்தில் திருப்பிக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்த அணுகுமுறை சாதி ரீதியான முனைவாக்கத்தைத்தான் தீவிரப்படுத்தும். சாதி, உழைக்கும் மக்களுக்கோ, பொதுவில் சமூகத்துக்கோ எந்தவிதமான நற்பயனையும் தரமுடியாத ஒரு தீமை. அதனால்தான் சாதி கட்டமைப்பை வேரடி மண்ணோடு வெட்டியெறிவது அவசியமாகிறது.

– குப்பன்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க