privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சுவாதி கொலை - பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி

சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி

-

.டி ஊழியர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடக பரபரப்பு, உயர்நீதிமன்ற கோமாளித்தனம், குற்றம் சாட்டப்பட்டவர் அதிரடி கைது போன்ற நகர்வுகளைத் தாண்டி இந்தக் கொலைக்கு காரணம் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி
கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி

தமிழக தலைநகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பொது இடமான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ டி துறையில் வேலை செய்யும் தொழிலாளி படுகொலை செய்யப்படுகிறார். கோர்ட் உடனே தலையிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, குற்றவாளியை பிடிக்க துரிதகதியில் போலீஸ் மூலம் விசாரனை செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் குற்றவாளியை பிடித்து ஜெயிலுக்குள் அடைக்கின்றனர். மீடியாக்களும் அந்த நேர பரபரப்பாக இதனை ஒளிபரப்பி தங்களது விளம்பர வருவாயை பெருக்கி கொண்டனர். அதன் பிறகு வழக்கம்போல வேறு பரபரப்பை தேடி நகர்ந்து விட்டனர். அரசு தனது கடமையை முடித்துக்கொண்டதாய் காட்டிக்கொண்டது.

இந்தப் படுகொலையின் பின்னணியில் அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பது பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் பரப்பி வரும் நுகர்வு வெறியும், அதனோடு கூட்டு சேர்ந்துள்ள பார்ப்பனிய ஆணாதிக்க வெறியும் இணைந்த சீரழிவு கலாச்சாரமே. இதன்படி புதிது புதிதாக பொருட்களை நுகர வேண்டும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், இது அறம், இது அறமில்லை என்பதைப் பற்றி கவலையில்லை. இந்தப் போக்கு தேவைக்கு ஏற்ப நுகர்வு என்பதின்றி, நுகர்வுக்கு ஏற்ப தேவை என்றளவில் மாறி நிற்கிறது. உதாரணமாக, லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம். இன்று பல்கி பெருகியிருக்கும் கொள்ளை சம்பவங்களும், கொலைக் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், இதன் பாரதூரமான வெளிப்பாடே ஆகும்.

இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய கலாச்சாரத்தில் பெண் என்பவள் என்றுமே ஆண் நுகரக்கூடிய பண்டமாகவே பார்க்கப்படுகிறாள். ஆணுக்கு அடங்கிய, தனக்கென்று எந்தவொரு அபிலாசைகளும், உணர்சிகளுமற்று வீட்டில் முடங்கி, ஆணின் காம இச்சையை பூர்த்தி செய்து கொள்ளும் பண்டமாகவே உருமாற்றப்படுகிறாள். ஒரு காலத்தில் காதல் தோல்வியுற்ற ஆண் தாடி வைத்துக்கொண்டு, தண்ணி அடித்துக்கொண்டு தேவதாசாக சுற்றி, பிறகு காலப்போக்கில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலை மாறி இன்றைய சூழலில் எனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நிலைக்கு பார்ப்பனிய ஆணாதிக்கத்துடன் கலந்த நுகர்வு வெறி தள்ளியிருக்கிறது.

தன்னை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பது, பெண்ணின் நடத்தையை பற்றி அவதூறு பரப்புவது, பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் பதிவிடுவது எல்லாம் இதனின் வெளிப்பாடே. இந்தப்போக்கு வளர்ந்து தனக்குக் கிடைக்காத பெண்ணை கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களும் பாடல்களும் இதனை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. தனுசின் “Why this kolaveri”, “அடிடா அவள, உதடா அவள, வெட்ரா அவள” முதல் சிம்புவின் “பீப் சாங்” வரை ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது சரியானது என்ற கோணத்திலேயே பாடலாக்கப்பட்டிருந்தது. ஒருபுறம் இப்படி என்றால் மறுபுறம் அப்பெண் காதலை ஏற்று கொண்டால், ஜாதி சங்கங்களும், மத நிறுவனங்களும் ஓடுகாலி என்று பெயர் வைத்து பெற்றோரே அவளை கௌரவ கொலை செய்ய தூண்டுகிறது பார்ப்பனிய உச்சிக் குடுமி கோலோச்சும் இச்சமூகம். எங்கும் பெண்ணின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இந்தப் பிரதான பிரச்சனை பற்றிய புரிதல் இருந்தும் பிரச்னையின் ஆணிவேர் தெரிந்தும், ஏதோ ஒருவனை மட்டும் குற்றவாளியாக நிறுத்துவதன்மூலம் தனது தவறை அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை மூலமாக மறைத்துக் கொள்ள பார்க்கிறது இந்த அரச கட்டமைப்பு.

பார்ப்பனிய நாட்டமைகளால் சூழப்பட்ட கட்டப்பஞ்சாயத்து செய்யும் கோர்ட் அழுகி நொறுங்கி கொண்டிருக்கும் இந்த அரச கட்டமைப்பை தூக்கி நிறுத்த போலிசை உடனடியாக குற்றவாளியை கைது செய்து கேசை முடிக்கும்படி விரட்டுகிறது, கூடவே ‘பொது இடங்கள் அனைத்துமே கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும், அனைத்து இடங்களிலுமே சி.சி.டி.வி காமெராக்கள் பொருத்தப்பட வேண்டும். போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்’ என்கிறது. சி.சி.டி.வி வைத்தால் குற்றங்களை தடுத்து விட முடியுமா? கொலை செய்தவன் என்ன சி.சி.டி.வி இருக்கும் என்று பயந்து போய் முகத்தை மூடிக்கொண்டு வந்தா கொலை செய்தான். தெளிவாக முகத்தை எல்லாருக்கும் காட்டியபடி வந்து கொலை செய்திருக்கிறான். அவனுக்கென்று இந்த அரச கட்டமைப்பின் மீது எந்தவித பய உணர்வோ சிறிதும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடித்தவன் கையோடு சி.சி.டி.வி மற்றும் அதன் ஹார்ட் டிஸ்க் இரண்டையுமே கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டான். இதனை சமூகத்தை பாதுகாக்கும் அம்சமாக நம்மை நம்பவைக்க முயற்சிக்கிறது இந்த அரச கட்டமைப்பு.

வானளாவிய அதிகாரங்களை கொண்டிருக்கும் போலிசுக்கு இன்னும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாது. இது மக்களை மிரட்டி பணம் பறிப்பதற்கு மட்டுமே பயன்படுமே ஒழிய பாதுகாப்புக்கு பயன்படாது. சேலம் வினுப்ரியா தற்கொலையில் நடந்தது என்ன? தற்கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன் தனது மகளின் படத்தை தவறாக மார்பிங் செய்து வெளியிட்ட சுரேஷ் மீது புகார் அளிக்க சென்ற வினுப்ரியாவின் பெற்றோரிடம் இருந்து பணம் பறித்துக்கொண்ட போலீஸ், அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத செயலே அந்த பெண்ணின் உயிரை பலி கொண்டிருக்கிறது. செங்கம் அருகே சாதாரண குடும்ப பிரச்சனையில் தலையிட்டு தந்தையையும், மகனையும் அடித்து நொறுக்கி தங்களது அதிகாரத்தை போலிசு எப்படி நிறுவியது என்பதை காட்டும் வீடியோக்களை நாம் கண்கூடாக பார்த்தோம்.

தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பால் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதையே சுவாதி, வினுப்ரியா ஆகியோரது மரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இருக்கின்ற அரசு கட்டமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று வருகிறது, அதில் பட்டி டிங்கரிங் இனிமேலும் செய்ய முடியாத அளவிற்கு ஓட்டையாகியிருக்கிறது. நுகர்வுவெறி, பார்ப்பனியம், ஆணாதிக்கம், மத அடிப்படைவாதம் போன்ற தீமைகளை ஒழித்துக் கட்டும் சமூக அரசு கட்டமைப்பு இன்றைய தேவையாக எழுந்திருக்கிறது. மக்கள் எழுச்சியினால் காலாவதியான இந்த போலிக்கட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் அதிகாரத்தின் மூலம் புதிய கட்டமைப்பை நிறுவுவதுதான் இதற்கான ஒரே வழி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு,
தமிழ்நாடு

தொடர்புக்கு:
combatlayoff@gmail.com
9003198576

  1. நல்ல பதிவு
    நுகர்வு கலாச்சாரத்தால் சமூக சிரழிவு என்பதில் சந்தேகமில்லை!

  2. இந்த பெர்பியூமை அடித்துக்கொள், வானத்து தேவதைகள் கூட அத்து விழுந்து உன் பின்னால் வருவார்கள். உனது தகுதி தராதரம் பற்றியெல்லாம் கவலை இல்லை.

    இந்த பைக்கை வாங்கி சவாரி செய் ரோட்டிலை சுடச்சுட திருமணமான கையோடு வரும் மணப்பெண்ணும்கூட உன் பின்னால் ஓடிவருவாள்.

    இந்த பேஸ்ட்டால் பல்தேய், அவள் நெருங்கி வருவாள்,

    இந்த ஆடைகளை அணிந்துகொள் அவள் தன்னை மறந்து உன்றை ரசிப்பாள்

    இதென்ன பெரிய பிம்மாதம் இந்த செல்போனை வாங்கிக்கொள் அதை திருடிக்கொண்டு ஓடும் அழகி அதற்காக தன்னையே கெடுக்கவும் தயாராகிவிடுவாள், அவள் உதட்டைத்தூக்கி முத்தத்துக்கு ஏதுவாய் நிற்கையில் நீ லாவகமாக அதைப் பிடுங்கிக்கொள். இது அவளை

    விடவும் உயர்வானது.

    இத்தனையையும் வாங்கி ஒருவளை வளைத்தபிறகு, இரவுமுழுவதும் பேசு, பேசு இந்தியாபேசு, அன்லிமிட்டட் எஸ்.எம்.எஸ், அனுப்பிக்கொண்டே இரு.

    இதை கைப்பற்ற முடியாது ஏங்குபவர்களுக்கு ஊக்கமளிக்கவே நாங்களிருக்கிறோம், அத்தனைக்கும் ஆசைப்படு, இதுதான் வாழும் கலை.

    திருமணமென்றதும் காதலை உதரித்தள்ளு, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் பேணி, சொந்த சாதிக்குள், நாள் நட்சத்திரம்பார்த்து, பேரம்பேசி ஒரு பெரிய தொகையாய் வாங்கிக்கொண்டு பார்பனியத்தை பாதுகாத்துக்கொள்.

    இதோ உன்மனைவி, அவருக்கென்று ஒரே ஒரு சிறுவீடு, அதுதான் அவள் உலகம், உனது ஆயுளின் மொத்த இருப்பையும் செலவளித்தாவது அந்த புறாக்கூண்டை கைப்பற்றிக்கொள்.

    நீ கனவு காண், அதை நாங்கள் நிறைவேற்றிவைக்கிறோம். வீட்டுக்கடன், வாகனக்கடன், நகைக்கடன், சொந்தக்கடன், எல்லாம் உனக்குத்தான், அனுபவி ராஜா அனுபவி,

    கடன்தீர உழைத்ததில் கண்பார்வை போனதா , கவலைப்படாதே நாங்களிருக்கிறோம்.

    அசையாமல் இருந்ததால் தொந்தி பெருத்ததா, கொளுப்பை உருக்க நவீன பெல்ட். உண்டு.

    வாழ் முறை மாற்றத்தால் உறுப்புகள் பழுதா, குறைந்த விலையில் ஏழைகளிடம் திருடிக்கொள்ளலாம்

    அனைத்து விளம்பரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது தொலைக்காட்சியைப்பாருங்கள். Stay tuned…

    இடைஇடையே நீங்கள் எப்படி ஒழுக்கமாக, அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டுமென்று போதித்து எங்கள் ஊடக தர்மத்தைக் காத்துக்கொள்வோம்.

    எங்கள் சேவையை எல்லோரும் பெற அரசாங்கமே தரும் இலவச டிவி, இலவச லேப்டாப்,. இலவச செல்போன், இலவசமாய் வய்பை கனைக்ஷன்.

    இதற்குமேலும் உனக்கு என்னவேண்டும், இனி நீ எடுக்கும் முடிவு உனது சுதந்திரமான ஜனநாயக உணர்விலிருந்து பிறப்பது.

    நீ அவளைக் கொன்றாலோ, அல்லது அவள் வேறொருவனோடு தொடர்புவைத்துக்கொண்டு உன்னைக் கொன்றாலோ அதற்கு நீங்கள்தான் பொருப்பாளிகள். உங்ளை கண்காணிக்கத்தான் CCTV, உங்களுக்கு தண்டனைவளங்கதான் போலீசு நீதிமன்றம், நீதிமன்றம்.

    இதற்கு மேல் உனக்கு என்ன வேண்டும் ? …

    ஆழமாய் நம்பு நீ வாழ்ந்து கொண்டிருப்பது உனது சுய உர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாக சொற்கத்தில். உனது பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் தரும் லட்சிய சமூகத்தில்.

    இதற்கு மேல் உன்குக என்ன வேண்டும்

  3. //தனுசின் “Why this kolaveri”, “அடிடா அவள, உதடா அவள, வெட்ரா அவள” முதல் சிம்புவின் “பீப் சாங்” வரை ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது சரியானது என்ற கோணத்திலேயே பாடலாக்கப்பட்டிருந்தது….//

    தனுஷ்,மற்றும் சிம்பு என்ன? பார்ப்பண(ர்களா?)கலாச்சாரத்தினரா
    இல்லை எந்த ஆதிக்க சாதியையாவது சார்ந்தவர்களா?

    இவர்கள்-கலப்பு திருமணத்தில் உதித்த பொறுக்கிகள்தானே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க