privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்...

குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…

-

தினான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலை வழக்குகளில் ஒன்றான குல்பர்க் சொசைட்டி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, நீதி வழங்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைத்தான் தந்திருக்கிறது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த 66 இந்து மதவெறியர்களுள் 36 பேர் விடுவிக்கப்பட்டு, 24 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த 24 பேரிலும் 11 பேர் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மீதி 13 பேர் மீது தீ வைத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாகக் கூடி கலாட்டா செய்தல் – என ஒப்புக்குச் சப்பாணியான, மிகக் குறைவான தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுள் 12 பேருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

குல்பர்க் சொசைட்டி
ஆள் அரவமற்று, பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கும் குல்பர்க் சொசைட்டி. (கோப்புப்படம்)

இந்து மதவெறி பாசிச குற்றக் கும்பலுக்கு அதீதமான கருணையைக் காட்டியிருக்கும் இத்தீர்ப்பு, இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வழக்கில் குற்றவாளிகள் சதித் திட்டம் தீட்டியதற்கோ, பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்கோ ஆதாரமில்லை என்று கூறி, அக்குற்றச்சாட்டுக்களை முழுமையாக ரத்து செய்துவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், சங்கப் பரிவாரக் கும்பல் குல்பர்க் சொசைட்டியில் குடியிருந்து வந்த முசுலீம்கள் மீது திட்டமிட்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை, ஏதோவொரு சில வன்முறையாளர்களின் திடீர்த் தாக்குதலாகச் சுருக்கிவிட்டது, இத்தீர்ப்பு.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார இந்து மதவெறி அமைப்புகளும் நரேந்திர மோடி அரசும் இணைந்து குஜராத்தில் நடத்திய முசுலீம் படுகொலை எத்துணை கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தப்பட்டது என்பதற்கு குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு வகைமாதிரி. குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில், ஆதிக்க சாதி இந்துக்கள் அதிகமாக வாழும் சமன்புரா பகுதியில் தனித்தீவாக அமைந்திருந்த முசுலீம் குடியிருப்பான குல்பர்க் சொசைட்டி மீதான தாக்குதல், கோத்ரா சம்பவம் நடந்த மறுநாள் – பிப்ரவரி 28, 2002 – காலையில் தொடங்கி மாலைவரை நீடித்தது. இத்தாக்குதலில் அக்குடியிருப்பில் இருந்த 18 வீடுகள் முற்றிலுமாகக் கொளுத்தப்பட்டதோடு, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் இஷான் ஜாஃப்ரி உள்ளிட்டு 35 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இந்து மதவெறிக் கும்பலை எதிர்த்து நின்ற இஷான் ஜாஃப்ரி, அங்க அங்கமாக வெட்டிச் சிதைக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இவர்களுக்கு அப்பால் அக்குடியிருப்பைச் சேர்ந்த 31 பேரின் கதி என்னவென்பது இன்றுவரை தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. ஆனாலும், அவர்களின் உயிரற்ற உடல்கள்கூடக் கிடைத்துவிடாதபடி கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டனர். கிட்டதட்ட 500 குடும்பங்கள் வசித்து வந்த அக்குடியிருப்பு, இன்று யாருமே வசிக்காத, எரிந்து போன, சிதிலமடைந்த கட்டிடங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும் பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கிறது.

தீஸ்தா செதல்வாத்.
தீஸ்தா செதல்வாத்.

இந்தத் தீர்ப்பு, இப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு மட்டுமல்ல; தனது மகனைப் பறிகொடுத்துவிட்டு, அவன் உயிரோடு இருக்கிறனா, இல்லையா என்பதுகூட நிச்சயமாகத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரூபா மோடி குடும்பத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அநீதியாகும். முதல் அநீதியை, இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இழைத்தது.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து மதவெறி பயங்கரவாதிகள் குல்பர்க் சொசைட்டியைத் தாக்கத் தொடங்கியவுடனேயே, அக்குடியிருப்பைச் சேர்ந்த முசுலீம்களும், முசுலீம் அல்லாத ரூபா மோடியும் அவரது இரு குழந்தைகளும் அக்குடியிருப்பில் வசித்து வந்த இஷான் ஜாஃப்ரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.முதல்வர் மோடியின் அலுவலகத்தையும் போலீசு அதிகாரிகளையும் தொலைபேசி வழியாகப் பலமுறை தொடர்பு கொண்டு, தங்களைக் காப்பாற்றுமாறு கோரினார் இஷான் ஜாஃப்ரி. தாக்குதல் நடந்த அன்று காலை தொடங்கி மதியம் வரை இஷான் ஜாஃப்ரி திரும்பத் திரும்ப தொடர்பு கொண்ட பிறகும், முதல்வர் அலுவலக அதிகாரிகளோ, போலீசு அதிகாரிகளோ அவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. இத்துணைக்கும் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்கு அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அகமதாபாத் நகர போலீசு கமிசனர் அலுவலகம் இருந்தும், மோடி அரசும் அதிகார வர்க்கமும் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சியவர்களை இந்து மதவெறிக் கும்பலின் கைகளில் சிக்கி சாகவிட்டனர்.

குஜராத்தில் நடந்த முசுலீம் இனப் படுகொலையில் மோடி அரசுதான் அடிக்கொள்ளியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா பகுதிகளில் நடந்த படுகொலைகளில் அவரது அரசிற்கு நேரடியான பங்கும் இருந்தது. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மோடி அரசில் அமைச்சராக இருந்த கோத்னானி தளபதியாகச் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டு, அவர் தண்டிக்கப்பட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலையில் மோடி அரசின் பங்கை இஷான் ஜாப்ரியின் தொலைபேசி உரையாடல்கள் அம்பலப்படுத்தின. இந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடியையும், அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடுத்தார், இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி. அவரது கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது.

ஜாகியா ஜாப்ரி
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்கக் கோரிப் போராடிவரும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் நரேந்திர மோடியிடம் விசாரணை என்ற நாடகத்தை நடத்திவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய சாட்சியங்கள் எதுவுமில்லை என அறிக்கை அளித்ததோடு மட்டுமின்றி, “இஷான் ஜாப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான், கலவரக் கும்பல் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று போட்டதாக”க் குறிப்பிட்டு, குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்தார்.

விசாரணையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய உச்ச நீதிமன்றமோ, நரேந்திர மோடியைக் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த ராகவனின் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டு, அதனை குஜராத் மாநில கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. குஜராத் பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் ராகவனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, நரேந்திர மோடி மீது ஜாகியா ஜாப்ரி சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தது.

நரேந்திர மோடி மட்டுமல்ல, அவரது அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரில் ஒருவர்கூட குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படவில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் நகர கவுன்சிலர் பிபின் படேல், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த அதுல் வைத்யா உள்ளிட்ட இரண்டாம் மட்டத் தலைவர்களும், மேகானிநகர் போலீசு நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த கே.ஜி.எர்டா போன்ற அம்புகள் மட்டுமே இப்படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இவர்களுள் பிபின் படேலையும் கே.ஜி.எர்டாவையும் அப்பாவிகள் என நீதிமன்றம் கூறாததுதான் பாக்கி. அவர்கள் இருவரும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுவிட, அதுல் வைத்யா மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் குமார் தோபியை போலீசு இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது.

ஆர்.கே.ராகவன்
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தொடர்புடைய மோடியையும், அவரது அதிகாரிகளையும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன். (கோப்புப்படம்)

“இருபதுக்கும் மேற்பட்ட பங்களாக்களையும், பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் 500 குடும்பங்களையும் கொண்ட மிகப்பெரிய காலனியான குல்பர்க் சொசைட்டி மீது நாள் முழுவதும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை, தீ வைப்பை, படுகொலைகளை வெறும் 24 பேர் மட்டுமே நடத்தியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விந்தையாக இருக்கிறது” என இத்தீர்ப்பின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் இஷான் ஜாப்ரியின் மகன் தன்வீர் ஜாப்ரி.

குஜராத் இனப் படுகொலை குறித்து இரகசியப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்திய “தெகல்கா” வார இதழின் முன்னாள் செய்தியாளர் ஆஷிஷ் கேதான், “இஷான் ஜாப்ரியைக் கொலை செய்ததில் தமக்குப் பங்கிருப்பதை என்னிடம் ஒத்துக் கொண்ட மூன்று பேரில் இரண்டு பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதை”ச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு முயற்சி செய்யவேயில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார், தீஸ்தா சேதல்வாத். குறிப்பாக, குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடந்த சமயத்தில் போலீசு அதிகாரிகளுக்கு இடையே தொலைபேசி வழியாகவும், வயர்லெஸ் வழியாகவும் நடந்த உரையாடல்கள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அவர்கள் அந்தச் சமயத்தில் எங்கிருந்தார்கள், எங்கே போனார்கள் என்ற விவரங்களையெல்லாம் திரட்டி, சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்வைக்கவேயில்லை. குறிப்பாக, இஷான் ஜாப்ரி மோடியின் முதலமைச்சர் அலுவலகம் தொடங்கி பல்வேறு போலீசு அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க முயலாமல், இஷான் ஜாப்ரியின் தொலைபேசி பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு என அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.

இஷான் ஜாப்ரி
அங்க அங்கமாகச் சிதைத்து, பின் எரித்துக் கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரி. (கோப்புப்படம்)

குல்பர்க் சொசைட்டிக்கு மிக அருகாமையில், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலை தாக்குதல் வழக்கில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என நீதிமன்றம் கூறியிருப்பது முரண்பாடு மட்டுமல்ல; முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் உள்நோக்கத்தோடு நீதிமன்றம் நடந்திருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது; தண்டிக்கப்படுபவர்களுக்கு மரண தண்டனையைவிடக் குறைவான தண்டனை தரக்கூடிய விதத்தில் மட்டுமே தீர்ப்பு அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புலனாய்வும், நீதிமன்றத்தின் விசாரணையும் நடந்துள்ளன என்பதைத்தான் இத்தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ள தண்டனைகளும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், இப்படிபட்ட “பரந்த மனப்பான்மை”யை முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வெளிப்படுத்துவதில்லை. அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதபோதும், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம். மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய அப்பாவி யாகுப் மேமன் தூக்கில் தொடங்கவிடப்பட்டார். இந்தத் தண்டனைகளைக் கொண்டாடிய நகர்ப்புற நடுத்தர வர்க்கம், இந்து மதவெறி பயங்கரவாதிகள் சட்டப்படியே தப்ப வைக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்க மறுக்கிறது.

“நீதிக்கான எனது போராட்டம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்; ஆனால், இத்தீர்ப்பைப் பார்த்தவுடன் எனது போராட்டத்தைத் தொடருவது என முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார், வயதையும் மீறிய போர்க்குணத்துடன் ஜாகியா ஜாப்ரி.

நீதியை வழங்க வேண்டிய அரசே காவிமயமாகி, அநீதிக்கும் துரோகத்திற்குமான இடமாகிப் போய்விட்ட நிலையில், ஜாகியா ஜாப்ரி, தீஸ்தா செதல்வாட் போன்றோரின் துணிவுமிக்க போராட்டங்கள்தான் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளாக விளங்குகின்றன.

– செல்வம்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க