privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்டாஸ்மாக் - பாலியல் வன்முறை : திருச்சி கூட்ட உரைகள்

டாஸ்மாக் – பாலியல் வன்முறை : திருச்சி கூட்ட உரைகள்

-

அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல்! தலைமுறையை சீரழிக்கும் டாஸ்மாக்! தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 17.07.2016 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.

அதில் நடந்த உரையாடல்கள் :

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
தோழர் தர்மராஜ்

அரசிற்கு என்றுமே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கை கிடையாது. கொள்ளையடிப்பவர்களுக்கு துணைபோவது, கொள்ளையடிப்பது இதுவே அரசின் வேலை. நாம் தள்ளாடினால் தான் ஆட்சியாளர்கள் ஸ்டெடியாக கொள்ளையடிக்க முடியும். இளைஞர்கள் திட்டமிட்டே சீரழிக்கப்படுகிறார்கள். ஆபாச பாடல் பாடிய சிம்புவை கவுரவிக்கும் அரசு தான், மூடு டாஸ்மாக் பாடல் பாடினால் தேசதுரோக வழக்கில் கைது செய்கிறது. இந்த டாஸ்மாக் அரசு போதையில் இருந்து தமிழகத்தை விடுவிக்கப் போவதில்லை. அந்த வகையில் தமிழகத்தை போதையில் இருந்து மீட்கவும், குடிகார சமூக விரோதிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருக்க கூடிய பல்வேறு துறையினரும் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து கலந்துரையாட அழைப்பு விடுத்து தன் தலைமை உரையில் பேசினார்.

Dr சென்னியப்பன், MD Dh., இதய நோய் சிறப்பு மருத்துவர்

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
Dr சென்னியப்பன்

மது மனிதர்களின் இதயத்தை மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கினார். அவரது பேச்சு பார்வையாளர்களுக்கும், சக பேச்சாளர்களுக்கும் இதயத்தின் அவசியம் பற்றியும் அதை சீராக இயங்கவிடாமல் மதுவை ஊற்றி கொள்ளும் அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையில் இவரது உரை அமைந்தது. அவரது உரையில் இருந்து சில துளிகள்…

மது அருந்தும் பலர் சொல்லும் போது மது அருந்துவதால் இதயத்திற்கு நல்லது. அதனால் குடிக்கிறேன் என்கிறார்கள். ஆனால், உண்மையில் பார்க்கும் போது மது அருந்துபவர்களுக்கு தான் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறது. நம் இதயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது. இதயம் என்பது 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும். மது குடிப்பதால் இரத்தக் குழாய் மூலம் போவது தடைபடுகிறது. இதனால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டவுடன் இரத்தத்தை வெளியில் அனுப்பும் தசைகள் செயலிழந்து விடும். எனவே இதயம் செயலிழந்து விடும். இதை சரிசெய்ய வேண்டுமானால் இதயத்தை மாற்றுவது மட்டுமே தீர்வு ஆகும்.

புகை பிடித்தல், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், மன அமைதி இல்லாமை போன்ற காரணத்தினால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் மது அருந்தும் போது புகை பிடிப்பார்கள்.

GLR

சர்க்கரை நோய் இருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு கட்டாயம் மாரடைப்பு வரும். மது அருந்துபவர்களுக்கு செரிமானம் ஆவது நின்றுவிடும். இரத்தழுத்தம் உள்ளவர்கள் மது அருந்தினால் கெட்ட கொழுப்பு மேலே ஏறும். உடனே மாரடைப்பு ஏற்படும். மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கட்டாயம் மாரடைப்பு ஏற்படும். மது அருந்தினால் கொழுப்பு அதிகமாகி வயிறு சாதாரன அளவை விட பெரிதாக இருக்கும். மேலும் மது அருந்துவதால் மனசுமை அதிகமாகும். எனவே மாரடைப்பு ஏற்படும்.

நாடித்துடிப்பு என்பது மது அருந்துபவர்களுக்கு சீராக இருக்காது. இதயத்திற்கான ஒரு கதவு பூட்டப்பட்டுவிடும் பிறகு மரணம் நிச்சயம். இதை தடுக்க மது அருந்துவதை நிறுத்த வேண்டும். காய்கள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மாரடைப்பை தடுக்க உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவையான இதயம் இன்றைய அரசின் இலாப வெறிக்காகவும், தனது கொள்ளைக்காகவும் நாசமாக்கப்படுவதை கண்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் சிந்திக்கவும், மதுவிற்கு எதிராக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற போராட்ட உணர்வை தூண்டும் வகையிலும் மருத்துவரின் உரை அமைந்தது.

ம.ப. சின்னதுரை, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலர்

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
ம.ப. சின்னதுரை

மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும் என முத்தாய்ப்பாக தொடங்கினார். காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் சாராயக்கடை நடத்துபவர்கள் விழிப்புணர்வு பேரணி செல்வதா என்று தான். முதலில் விதி மீறல் கடைகளை மூட வேண்டும். அரசு என்பது மக்களின் நலனில் எதையும் செய்வதில்லை. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்களை தண்டிக்கிறது. ஆனால் உற்பத்தி செய்பவனை தடுப்பதில்லை. அதே போல் தான் டாஸ்மாக்கிலும்.

என் கடமையை நான் செய்தேன். உரிமையோடு போராடுகிறேன். நீராதாரத்தை காப்பாற்ற கூட எங்கள் ஊரில் பொது நல அமைப்புகளுடன் இணைந்து போராடி வெற்றி பெற்றோம். அதே போல் இதற்கும் போராடுவோம். கட்டாயம் மாணவர்கள் போராட வேண்டும். இளைஞர்களுடன் இணைந்து போராடுவதில் எனக்கு மகிழ்ச்சி என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அவர் பேசியது மட்டுமல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து போராட்டத்திலும், போலீசாரின் அனைத்து நெருக்குதலையும் தாண்டி கலந்து கொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்.

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
திரு மதியழகன்

திரு மதியழகன், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலர்

மது அருந்துபவர்களுக்கு மது குடித்தவுடன் 10 பேரை அடிக்கும் அளவிற்கு வீரம் வந்தது போல் திமிருவார்கள். அந்த நேரத்தில் அவன் முழு சுய நினைவை இழந்து பெண்களை பார்த்தாலே காம கொடூரனாக மாறி பாலியல் கொடுமை செய்கிறான். இதை எதிர்த்து கட்டாயம் போராட வேண்டும் என ரத்தின சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

 

பேராசிரியர் முனைவர் மணிமேகலை, Msc, M.Phil, ph.D

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
பேராசிரியர் முனைவர் மணிமேகலை

கலந்தாய்வுக் கூட்ட தலைப்பில் 3 காரணம் உள்ளது. அதில் அறிவியல் பூர்வமான காரணம் என்பது தான் டாக்டர் சென்னியப்பன் பேசியது. இப்பொழுது உள்ள மாணவர்களிடம் சமூக சிந்தனை என்பதே இல்லை. அது அற்று போய் முழுக்க சுய நலம் என்பது மட்டுமே தான் உள்ளது. இப்பொழுது உள்ள கல்வி முறையும் சுய ஒழுக்கத்தை கற்றுத் தருவதில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளாமல் எதிரி போல் ஆகி விடுகின்றனர். ஏனென்றால் குறைவான சம்பளம், வேலை நிரந்தரம் இல்லாமை, தனியார் பள்ளிகள் போன்ற காரணம். எனவே ஐக்கியம் இல்லாமல் மாணவனே ஆசிரியரை குத்தி கொள்கிறான். ஒரு வகுப்பை 2 வருடம் படிக்கிறான். மேலும் ஆங்கில மோகம் அடிமை புத்தி என்பது தான் உள்ளது. வரலாறு மாணவர்களுக்கு தெரிவதில்லை. வரலாற்றை மறந்தால் அந்த சமூகமே அழிந்துவிடும். நமக்கு அரசு செய்யும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரானது தான். இலவசத்தின் பின் ஓடாமல் நாம் நம் உரிமைக்காக போராட வேண்டும். அரசு சாராயம் விற்க, கள்ளச்சாராயம் பெருகும் என்ற பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. மிடாஸ் கம்பெனியே அம்மா உடையது தான். நாம் தான் போராட வேண்டும். இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

பத்திரிக்கையாளர்  சி.ய. ஆனந்தகுமார், B.A B.L M.S.W. Journalism

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
பத்திரிக்கையாளர் சி.ய. ஆனந்தகுமார்

ஆண்களின் முன் பெண்களின் மீதான வன்முறையை பற்றி பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்த கூட்டத்தில் ஆண்கள் அதிகம் உள்ளனர்.

டெல்லியில் நிர்பயா கொலை செய்யப்பட்டபின் எடுத்துக் கொண்டால் அதற்கு பின் இன்னும் அதிகப்படியான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. நாம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்களிடம், மாணவிகளிடம் பேசினால், தன் அப்பா மீது பயங்கர கோபமாக உள்ளனர். ஏனென்றால் பல பேரின் அப்பாக்கள் குடிகாரர்களாக உள்ளனர். தன் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது இல்லை. என் அப்பா போல் நான் இருந்துவிடவே கூடாது என்று பல மாணவர்கள் சொல்கிறார்கள்.

இந்தியா முழுவதிலும் 22 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். ஒரு நாளைக்கு 2 பெண்கள் வீதம் இதுவரை 1556 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சமூகம் முழுக்க முழுக்க ஆணாதிக்க சமூகமாக உள்ளது. இந்த சமூகம் பெண்ணை வெறும் சதை பிண்டமாக மட்டும் தான் பார்க்கிறது. பெண்களைப் பொருத்தவரை அதிக இரக்ககுணம் உடையவர்களாகவே உள்ளனர். எனவே ஒரு ஆண் என்னை நீ விரும்பவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன் என்ற உடனே பெண்கள் இரக்கப்பட்டு தன்னையே அவனுக்கு கொடுத்து விடுகின்றனர். இதை பயன்படுத்தி ஆண்கள் என்னவேண்டுமானாலும் செய்கிறார்கள். இந்த அளவிற்கு ஒரு சமூதாயமே ஒரு காரணமான போதையையும், இணையதள சீரழிவுகளையும் எதிர்த்து போராடி முறியடிப்பது மட்டுமே தமிழகத்தை போதையில் இருந்தும், பெண்களை சீரழிவுகளில் இருந்தும் மீட்க முடியும் என கூறினார். இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும் கூட அதை பொருட்படுத்தாமல் உரக்க பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

திரு சீனிவாசன், B.Com. B.L., திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர்

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
திரு சீனிவாசன்

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் எங்களுடன் கலந்து கொண்ட மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழர்களுக்கு முதலில் நன்றி.

இன்றைய தலைமுறையே சீரழிந்து விட்டது. அதற்கு காரணம் டாஸ்மாக். மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டத்திற்கு முதல் வெற்றி என்னவென்றால் 500 கடையை மூடுகிறேன் என்று அரசு ஒத்துக் கொண்டது தான். டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாரயம் பெருகும் என்று அரசு சொல்லி சோசியல் டிரிங்க் காக அரசு மதுவை பரிமாறுகிறது. அரசு அனைத்திலுமே மக்களின் நலனை துளியும் பார்க்காமல் அரசின் நலனை மட்டும் தான் அரசு பார்க்கிறது. எங்களுக்கு ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடையை மூடிய பெருமை உள்ளது. பள்ளி வளாகம் அருகில் சூப்பர் மார்கெட் இதற்கு இடையில் டாஸ்மாக் கடை. இதில் குடிகாரர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போகும் பெண்களை கிண்டல் செய்தனர்;. குடித்துவிட்டு வம்பிழுத்தனர். இதை வைத்து வழக்கு போட்டு கடையை எடுத்தோம். அரசு வைத்திருக்கும் விதிமுறை அடிப்படையில் இல்லமால் தான் அரசே டாஸ்மாக் கடை வைத்துள்ளது. அரசும், அரசில்வாதிகளும் சேர்ந்து செய்யும் தொழில் டாஸ்மாக். இதுதான் சமூக சீர்கேடு.

சென்னையில் HAPPY HOURS என்று பாரில் உள்ளது. அங்கு பெண்கள் காலையில் இருந்து மாலை வரை எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக குடிக்கலாம். குறிப்பாக இது ஜோடியாக வருபவர்களுக்கு மட்டும். எனவே ஆண்கள் சலுகை விலையில் குடிக்க பெண்களை கூட்டிச் சென்று நிறைய பெண்கள் குடிகாரர்களாக மாறியுள்ளனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.

திருமணம் செய்த ஆண் தன் குடும்பம் என்று சிந்தித்து தன் குடும்பத்திற்காக உழைப்பது, குடும்பத்தை பராமரிப்பது என்ற திறனே அற்று முழுக் குடிநோயாளியாக மாறியுள்ளான். 500 கடை மூடப்பட்டது என்பது பொய்யானது. இரண்டு கடை இருந்த இடத்தில் ஒரு கடை மூடி உள்ளார்கள் என்றால் அது கடை மூடல் கிடையாது. மது வாங்க இரண்டு வழிகள் இருந்ததில் ஒரு வழியை அடைத்து விட்டு அனைவரும் செல்ல மற்றொரு வழி அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

ஒரு குவாட்டர் விலை ரூ 900. ஏனென்றால் மது ரூ 150. குடித்துவிட்டு சாலையில் வண்டி ஓட்ட போலீசிடம் கொடுக்கும் அபராதம் ரூ 750. மொத்தமாக ரூ 900. தினமும் ஒருவன் குடிக்காக செலவழிக்கிறான்.

மேலும் முக்கியமான ஒரு பிரச்சனை உள்ளது. கொடைக்கானலுக்கு நம் பிள்ளைகளோ அல்லது நாமோ பாதுகாப்பில்லாமல் தனியாக செல்லக் கூடாது. ஏனென்றால் அங்கு போதை காளான் என்று ஒன்று உள்ளது. அதை விற்பனை செய்யவே தனி கூட்டம் உள்ளது. அதை ஆம்லெட்டில் போட்டுக் கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டால் முழு போதையாகி கொடைக்கானலை விட்டே திரும்பி வரமுடியாது. அதுபோல் நிறைய பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கு அந்த போதை காளான் விற்பனை கும்பல் மீது அரசு போடும் வழக்கு கஞ்சா விற்பனை. இது வேறு போதை அது வேறு போதை. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக மக்கள் அதிகாரம் போராட வேண்டும். கட்டாயமாக நானும் கலந்து கொள்வேன் என்று கூறினார்.

சமூக சிந்தனையாளர் ஜெயராமன், அ.பெ.கா, புதுக்கோட்டை

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
சமூக சிந்தனையாளர் ஜெயராமன்

நம் சமூகமே முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. 13 வயது மாணவன் கூட இன்று சீரழிக்கப்பட்டு உள்ளான். ஓட்டுக் கட்சிகள் கூட ஆட்சிக்கே வராதவர்கள் கூட என்னை ஆட்சிக்கு கொண்டு வா, நான் டாஸ்மாக் கடையை மூடுகிறேன் என்றார்கள். அவர்கள் நோக்கம் கடையை மூடுவது அல்ல. ஒருவாரம் கடையை மூடினாலும் குடிகாரர்கள் குடிப்பார்கள். ஏனென்றால் உற்பத்தி என்பது நிற்கவில்லை. அரசின் நடவடிக்கை என்பது மிகவும் கேவலமாக உள்ளது. எய்ட்ஸ் என்றால் என்வென்றே தெரியாத 6 வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்துகிறார்கள். இவர்களுக்கு தகாத உடலுறவு, சரியான உடலுறவு என்றால் கூட என்னவென்று தெரியாது. ஆனால் இதை கற்றுக் கொடுத்து மாணவனை சீரழிப்பது போல் உள்ளது அரசின் வேலை. அரசின் நோக்கம் என்பது டாஸ்மாக்கை மூடுவது அல்ல. மக்களை சீரழிப்பது. மதுவினால் ஏற்படும் விளைவுகளை நாம் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். நீதிமன்றத்தினாலே தடுக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த சமூகம், இதுவொரு வன்முறை கலாச்சாரமாக உள்ளது. பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்கிறது என்றால் அதை கற்றுக் கொடுப்பதே சினிமா தான் என்று பேசினார்.

தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக் குழு உறுப்பினர்

மூடு டாஸ்மாக் - திருச்சி கலந்தாய்வு கூட்டம்
தோழர் காளியப்பன்

63 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை தான் அதிகரித்துள்ளது. 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அன்டாக்குள் வெட்டிப் போட்டார்கள். டெல்லியில் நிருபயா வழக்கில் இதுவே இறுதியாக இருக்கட்டும் என்று பேசினார்கள். இன்று சுவாதி பற்றி பேசுகிறார்கள். இன்னும் அடுத்து என்று தான் போகும். ஆனால் தீர்வு என்ன?

ஏகப்பட்ட சட்டங்கள் வந்தும் எதுவும் செயல்படவில்லை. ஒரு பெண்ணை கான்ஸ்டபிள் முதல் ஏடிஜிபி வரை மொத்தம் 25 பேர் மாறி மாறி நாள் கணக்காய் பாலியல் வன்கொமை செய்துள்ளனர். இது நிரூபணமான உண்மை. ஆனால் தண்டனை என்பது 2 காவலர்கள் ஒரு உதவி ஆய்வாளர் மீது மட்டும் தான். மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தண்டனை கிடையாது.

டாஸ்மாக்கை மூட நம் தீர்வு என்ன? அதிகாரத்தை கையில் எடுத்து நாம் மூட வேண்டும் என்பது தான். மக்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பாமல் போராடியதால் தான் சில கடைகள் கூட மூடப்பட்டது. 500 கடைகள் மூடுவேன் என்று ஜெ அரசு சொன்னது போங்கு என்று கோவன் பாடினார். இன்று அது உண்மையானது. உண்மையிலேயே வெறும் 81 கடை தான் மூடப்பட்டது. மேலும் இரண்டு மணி நேரம் நேர குறைப்பது என்பது இல்லை. நாட்டில் உள்ள நீதிமன்றமே பெண்களுக்கு எதிராக உள்ளது. பெண்களை குற்றவாளியாக்கி, உண்மையான குற்றவாளிகளை விடுவிக்கின்றனர்.

மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசு தான். இதற்கெல்லாம் தீர்வு மக்களே தங்கள் கையில் அதிகாரத்தை எடுத்து போராட வேண்டும். காவல்துறையை ஒழித்தாலே நாட்டில் பல சதவிகித குற்றத்தை குறைக்க முடியும் என கூறி தனது தொகுப்புரையை நிறைவு செய்தார்.

இடையிடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் அனைவரையும் மேலும் உற்சாகப்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தகவல்
மக்கள் அதிகாரம், திருச்சி
94454 75157

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க