privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி ?

பிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி ?

-

மேஜர் பார்பரா
மேஜர் பார்பரா

பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படும் George Bernard Shaw (26 July 1856 – 2 November 1950) ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். இன்று அவரது பிறந்த நாள். சென்ற இரண்டு நூற்றாண்டுகளிலேயே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தின் ‘சாதனையை’ புத்தாக்கத்துடன் முன் வைக்கிறது அவரது நாடகத்தின் பகுதி ஒன்று. ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் இந்த நாடகத்தின் பகுதி பிடிக்கும் என்று நம்புகிறோம். – வினவு

பீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டும் அவரது லட்சியம் பேசும் மகன் ஸ்டீபனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமதி. அண்டர்ஸாப்ட் உடனிருக் கிறாள்.

தந்தை: நீ பீரங்கித் தொழிலில் ஈடுபட விரும்புவதாக நான் அறிகிறேன்.

மகன்: நான் வியாபாரத்தில் ஈடுபடப் போவதில்லை. நிச்சயமாக இல்லை.

தந்தை: (கண்களை அகலத் திறந்து மனப்பாரம் குறைந்தவராக) அப்படியானால்….

மகன்: வியாபாரியாகவோ முதலாளியாகவோ விருப்பமில்லை. எனக்குத் தொழில் செய்யும் திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆர்வமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாக ஆவதற்கே விரும்புகிறேன்.

தந்தை: (எழுந்து) என் அருமை மகனே, உன் விருப்பத்தைக் கேட்கும் போது எனக்கு பெரிய மனப்பாரம் இறங்கியது போலிருக்கிறது. இது நமது நாட்டிற்கும் நல்லதாய் முடியும் என்று நினைக்கிறேன். கட்டாயப்படுத்தி இந்தப் பொறுப்பை உன்மீது திணிக்க முயன்று எங்கே நீ ஒப்புக் கொண்டுவிடப் போகிறாயோ என்று பயந்து கொண்டிருந்தேன். (கைகளைப் பிடித்து குலுக்குவதற்காக அவனை நெருங்குகிறார்)

தாய்: (எழுந்து அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து) ஸ்டீபன் அவ்வளவு சொத்து முழுவதையும் இப்படி உதறித் தள்ளிவிட நான் உன்னை அனுமதிக்கப் போவதில்லை.

மகன்: (உறுதியாய்) அம்மா நீங்கள் இன்னும் என்னை ஒரு குழந்தை போலவே நடத்திக் கொண்டு வருவதற்கு ஒருமுடிவு கட்ட வேண்டும். (தாய் அவனது குரலில் இருக்கும் கண்டிப்பைக் கண்டு அதிர்ந்துபோகிறாள்.) நேற்று வரை நான் உங்கள் நோக்கங்களைப் பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவைகளை நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு விட்டேன். ஆனால் நான் இப்போதுதான் உணர்கிறேன்.

இத்தனை வருஷங்களாக நீங்கள் எனக்கு எவைகளை விளக்கிச் சொல்ல வேண்டுமோ அவைகளைச் சொல்லாமல் இருட்டறையில் வைத்த மாதிரி வைத்து விட்டீர்கள். இப்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இது சம்பந்தமாக மேற்கொண்டு ஏதாவது பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டுமென்றால் அது எனக்கும் அப்பாவுக்கும் இடையில்தான் இருக்க வேண்டும். நானும் அப்பாவும்தான் சம்பந்தப்பட்ட ஆண் பிள்ளைகள்.

தாய்: ஸ்டீபன் (அவள் மீண்டும் இருக்கையில் அமர்கிறாள். அவளுடைய கண்களில் நீர் மல்கிக் கொண்டிருக்கிறது.)

தந்தை: (மிகுந்த அனுதாபத்துடன்) இங்கே பார் அன்பே பெரியவர்கள்தான் குழந்தைகள் போல் நடத்தப்படுகிறார்கள்.

மகன்: வருந்துகிறேன். அம்மா. நீங்கள் என்னைக்கட்டாயப்படுத்தி….

தந்தை: (அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு) ஆமாம். ஆமாம். அது சரிதான் ஸ்டீபன். இனிமேல் உன் அம்மா உன் விஷயத்தில் தலையிட மாட்டாள். உன்னுடைய சுதந்திரம் நிலை நிறுத்தப்படும். நீ உன்னுடைய சாவியை உன் கையில் வைத்துக்கொள். அதை நழுவ விடாதே. இதற்காக மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. (இருக்கையில் அமர்கிறார்.)

சரி, தந்தை மகன் என்பது இருக்கட்டும். இப்போது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் நடக்கும் பேச்சுபோல கேட்கிறேன். மன்னிக்க வேண்டும் மகனே, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு இடையே அல்ல, இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையில், நீ உன்னுடைய வருங்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறாய்?

தாய்: நான் நீ சொல்வதை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டேன் ஸ்டீபன். நீ உறுதியாக இருந்தால் உன் எண்ணப்படியே செய்.

(ஸ்டீபன் ஒரு நீதிபதியைப்போல ஒரு தீர்க்கமான முகபாவத்துடன் இருக்கையில் அமர்ந்து கொள்கிறான்.)

பெர்னாட் ஷா மற்றும் லு சுன்
பெர்னாட் ஷா மற்றும் லு சுன்

தந்தை: நீ பீரங்கித் தொழிலை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதுதான் முடிவான விஷயமாகி விட்டதே.

மகன்: அது முடிவாகி விட்டது என்றுதான் நானும் நம்புகிறேன்.

தந்தை: இதோ பார் ஸ்டீபன், பேய் பிடித்தவன் மாதிரி முகத்தில் வெறுப்பைக் காட்டிக் கொள்ளாதே, அது சின்னப் பையன்கள் செய்கிற காரியம். உனக்கு தாராளமாக சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீ என்னையே பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதும் இல்லை. அதற்குப்பதிலாக நீ உன்னுடைய விருப்பம் போல எந்தத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்பினாலும் அந்த உரிமையை நான் உனக்கு தாராளமாகக் கொடுக்கிறேன்.

ஆனால் ஒன்று தெரிந்து கொள். நீ உடனே நாட்டின் பிரதம மந்திரியாக ஆகிவிட முடியாது. ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சிபெற வேண்டும். நீயாக ஏதாவது துறையைப் பற்றி கவனம் வைத்திருக்கிறாயா? இசை, இலக்கியம், ஓவியம், நாடகம் இந்த மாதிரி ஏதாவது?

மகன்: என்னிடத்தில் இலக்கியமோ கலையோ சம்பந்தப்பட்ட இயல்பு ஒன்றும் கிடையாது.

தந்தை: தத்துவ ஞானத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? தத்துவஞானிக்கு நல்ல மதிப்பு உண்டே?

மகன்: தத்துவ ஞானியா? அந்த மாதிரி பாசாங்கு பண்ணும் இயல்பும் என்னிடம் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை.

தந்தை: அப்படியா? சரி. நாட்டின் பாதுகாப்பு சேவை இராணுவம் இருக்கிறது. கப்பற்படை அல்லது விமானப் படை. இதில் ஏதாவதில் சேர விருப்பமா? இல்லையென்றால் தேவாலய திருச்சபை – இதில் மதிப்பும் மரியாதையும் ஏராளமல்லவா? இல்லாவிட்டால் வழக்கறிஞர்- நீதிமன்றம் நல்ல திறமைமிக்க துறைதான். பத்திரிகைகளில் பேர் வரும்.

மகன்: அப்பாநான் சட்டம் படிக்கவில்லை. மேலும் அதற்கெல்லாம் கொஞ்சம் “தூக்கி விட” ஆள் வேண்டும். எனக்கு அப்படித் தூக்கி விடக்கூடிய ஆள் யாரும் இல்லையே வாதத் திறமையின் வெற்றியெல்லாம் வாதிடுபவனுக்கு நீதிபதியிடத்தில் இருக்கிற செல்வாக்கைப் பொறுத்துத்தான். அதனால் தான் வழக்கறிஞர்கள் கொச்சையாக ”தள்ளிவிடும்” சமாச்சாரங்கள் என்கிறார்கள்.

தந்தை: உன்னுடைய சமாச்சாரம் ரொம்ப சிக்கலான சமாச்சாரமப்பா. ஒரு துறை பாக்கியில்லை. எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது பாக்கியுள்ளது திரை உலகம் தான். (ஸ்டீபன் பொறுமை இழந்தவனாய் நகர்ந்து செல்லப் பார்க்கிறான்) சரி. உனக்குத் தெரிந்த அல்லது நீ விருப்பப்படுகிற ஏதாவது துறை இருக்கிறதா? அப்படியானால் அதையாவது சொல்லப்பா.

பிரிட்டிஷ் பாராளுமன்றம்
பிரிட்டிஷ் பாராளுமன்றம்

மகன்: (எழுந்து அப்பாவைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு) எனக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமையை உணரக்கூடிய சக்தி இருக்கிறது அப்பா.

தந்தை: (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) அப்படியா சொல்லுகிறாய்? வியாபாரம் செய்யும் திறமை இல்லை. சட்டத்தைப் பற்றிய படிப்பு இல்லை. தத்துவ ஞானிக்குரிய பாசாங்கும் தெரியாது.

ஆனால் எல்லா தத்துவ ஞானிகளையும் பேதலிக்க வைக்கக் கூடிய, எல்லா வழக்கறிஞர்களையும் நம்பிக்கையிழக்கச் செய்கிற, எல்லா வியாபாரிகளையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிற அந்த இரகசியத்தைப் பற்றி, அதாவது ”நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேற்றுமை” பற்றி நீ தெரிந்து வைத்திருக்கிறாயே – இந்த இருபத்து நான்கு வயதிலேயே நீ நிச்சயமாக ஒரு மேதைதானப்பா! ஞானிகளுக்கெல்லாம் ஞானி குருக்களுக்கெல்லாம் குரு!. ஒரு நவீன பகவான்.

மகன்: (கோபத்தை அடக்கிக் கொண்டு) நீங்கள் எப்போதும் பிறரை நையாண்டி பண்ணுவதிலே இன்பம் காண்பவர். ஒரு நேர்மையான ஆங்கில கனவான் தன்னுடைய பிறப்புரிமை என்று கூறிக் கொள்கிற இந்த உண்மையைத் தவிர நான் அதிகமாக எதையும் தெரிந்த மாதிரி பாசாங்கு செய்யவில்லை. .

தந்தை: ஒவ்வொருவருடைய பிறப்புரிமையும் அதுதான். உதாரணத்துக்கு இரட்சணிய சேனையின் (ஒரு கிறித்தவ மதக்குழு) அந்தப் பெண் ஜென்னி ஹில்லை எடுத்துக் கொள்வோம். நீ அந்தப்பெண்ணிடம் போய் ஜென்னி நீ தெருவில் நின்று கொண்டு போகிறவர் வருகிறவருக்குப் பூகோளம் அல்லது இலக்கணம் அல்லது கணக்குப் பாடம் நாட்டியம் சொல்லிக் கொடுக்கிறாயா என்று கேட்டுப்பார்.

உடனே நீ அவளைக் கேலி செய்கிறாய் என்றுதான் அவள் நினைப்பாள். ஆனால் அதே ஜென்னி நடுத்தெருவில் நின்று கொண்டு கிறித்துவ மதத்தைப்பற்றியும், ஒழுக்க நெறிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ணுவதற்கு அவளுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று அவள் உணர்ந்து பார்ப்பதில்லை.

ரொம்பவும் நேர்மையானவர்கள் என்று நினைத்துக் கொள்ளும் நீங்கள் எல்லோரும் ஜென்னியைப் போலத்தான், இருக்கின்றீர்கள். உங்களால் பத்து அங்குல துப்பாக்கியினுடைய குண்டு பாயும் வேகத்தை அளவிட்டுச் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மனிதனுடைய மனோவேகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குச் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை எப்படிக்கையாள வேண்டும் என்று தெரியாது. நீங்கள் நேர்மை, சத்தியம், நீதி இவைகளைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டு அதன் காரணமாக ஒருவரையொருவர் கொன்று தீர்க்கிறீர்கள். ஆஹா என்ன தேசம்! என்ன உலகம்!

andrew-undershaftதாய்: (சிரமத்துடன்) ஆண்ட்ரூ அவன் எந்தத் தொழிலைச் செய்தால் நல்லது என்று நீர் நினைக்கிறீர்?

தந்தை: ஓ! அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அதையே செய்யட்டும். அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் ஒரு அரசியல்வாதியின் உண்மையான திறமை. எனவே, அவன் அரசியலை தொழிலாக எடுத்துக் கொள்ளட்டும். அவனை ஒரு வட்டச் செயலாளராக ஆக்கக் கூடிய ஒரு அரசியல் பெரும் புள்ளிக்கு அவன் பிரைவேட் செகரட்டரியாக முதலில் போய்ச்சேரட்டும். பிறகு பாரேன் அவன் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இடம் பிடித்து விடுகிறானா இல்லையா என்று.

மகன்: (மீண்டும் எழுந்து) ஐயா நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். நீங்கள் என் தகப்பனார் என்ற அந்த மரியாதையை நான் மறந்துவிடும்படி நிர்ப்பந்தப்படுத்துகிறீர்கள். என்னுடைய தேசத்தின் அரசாங்கம் கிண்டல் செய்யப்படுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கமாட்டேன். (அவன் கைகளைக்கோட்டு பைக்குள் விட்டுக் கொண்டே கோபமாய் வெளியேறுகிறான்).

தந்தை: (புலி போல சீறிக் கொண்டு) உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா? நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம். நானும் லாசரசும். நீயும் உன்னைப் போன்ற அரை டஜன் கற்றுக்குட்டிகளும் அந்த அரட்டைக்க்ச்சேரி நடைபெறும் பாராளுமன்ற அறைகளில் உட்கார்ந்து கொண்டு அண்டர்ஷாப்டையும் லாசரசையும் ஆள்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறாயா? இல்லை என் நண்பரே இல்லை.

நாங்கள் இலாபம் பெறுவதற்காகத் தான் நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள். எங்களுக்குச் செளகரியமான சமயங்களில் தான் நீங்கள் யுத்தம் நடத்துகிறீர்கள். எங்களுக்கு செளகரியம் – இல்லாத போது – அதாவது எங்கள் தளவாடங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்தபொழுது நீங்கள் உலக சமாதானத்தைப் பற்றிப் பேசுவீர்கள். தளவாட வர்த்தகமானாலும் வேறு எந்தவர்த்தகமானாலும் அதன் பரிமாணத்தையும் உற்பத்தித் திறனையும் நாங்கள் சொல்கிறபடி தான் நீங்கள் நிர்ணயம் செய்வீர்கள்.

உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா? நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம்.
உன்னுடைய தேசத்தின் அரசாங்கமா? நான் தான் உன்தேசத்தின் அரசாங்கம்.

என்னுடைய இலாபத்துக்காக ஏதாவது ஒருபொருள் தேவை என்றால் நீங்கள் அந்தப் பொருள் நாட்டின் நலனுக்காகத் தேவைப்படுகிறது என்று சொல்லிக்கொண்டு எங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து கூட இறக்கும்தி செய்து தருவீர்கள். யாராவது மக்கள் நலம் அது, இது என்று சொல்லிக் கொண்டு எங்களின் இலாபம் குறையும்படியான காரியங்களில் ஈடுபட்டார்களேயானால் நீங்கள் உடனே போலீசையும் இராணுவத்தையும் அழைத்து அவர்களை நசுக்குவீர்கள். உங்கள் சொற்படி கேட்பது போலீசும் இராணுவமும் தான். அதுவும் எங்கள் நன்மைக்காகத் தான்.

உங்களின் இந்த சேவைக்கு கைமாறாக எங்களுடைய பத்திரிகைகளும் வார இதழ்களும் உங்களைத் தீவிரமாக ஆதரிக்கும். உங்களைப் பெரிய அரசியல் விற்பன்னர்கள் என்று கருதும்படி பிரச்சாரம் செய்யும். நீங்களும் அந்தக் கற்பனையில் மகிழ்ந்து போவீர்கள்.

உங்கள் தேசத்தின் அரசா? போ பையா! போ! இடத்தைக் காலி பண்ணு. அங்கே போய் உன்னுடைய அரசியல் குழுக்களோடு மகிழ்ச்சியாய்க் கலந்துரையாடல் பண்ணு. அல்லது ஏதாவது பத்திரிகையை எடுத்து அதில் எழுதப்பட்டிருக்கும் தலையங்கங்கள் அல்லது அரசியல் கட்டுரைகளைப் படி. பற்றி எரியும் பிரச்சினைகள், அல்லது விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள், ஊழல் விவகாரங்கள் பற்றிய காரசாரமான விவாதங்களில் கலந்துகொண்டு அந்த அரசியல் விளையாட்டைப் போய் விளையாடு.

நான் என்னுடைய தொழிற்சாலையின் கணக்கு அறைக்குப் போய் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்து விட்டு அவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப் போகிறேன்.

மகன்: (உதட்டிலே புன்முறுவலுடன் அப்பாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு அவருடைய தோழமையை விரும்பியவனாய்) என் இனிய அப்பா உள்ளபடியே உங்களிடத்தில் கோபப்படுவது என்பது முடியாத காரியம். உங்களை யாரும் வெல்ல முடியாது. உங்களை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

நீங்கள் வெகு கடுமையாக உழைத்துப்பெரும் பணக்காரராகி இருக்கிறீர்கள். அதைப்பற்றி நியாயமாகவே நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்றைய தேதியில் இந்தத் தேசத்தில் பெரும் பணக்காரர்களில் ஒரு முக்கிய புள்ளி நீங்கள் என்கிற விஷயம் உங்களுக்கு ஒரு உன்னத கெளரவத்தைக் கொடுத்திருக்கிறது

உண்மை, உங்கள் பணத்தின் உங்களுடைய கொள்கைகளை ஒப்புக் கொள்கிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நான் பழைய முறையில் இயக்கப்படும் பள்ளிக் கூடத்தில் பயின்று நமது பழைய மரபு பல்கலைக்கழகத்திலேயே பட்டம் பெற்று அந்த முறையிலேயே என் கருத்துகளும் சிந்தனைகளும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் பணம்தான் இங்கிலாந்தின்ஆட்சியை நடத்துகிறது என்று நினைப்பது இயற்கையே. ஆனால் நான் உங்களைவிட அதிகம் கல்வி கற்றவன் என்று சொல்லிக் கொள்ள என்னை அனுமதிக்கவேண்டும்.

தந்தை: அப்படியானால் இங்கிலாந்து தேசத்து ஆட்சியை நடத்துவது எது என்று சொல்ல முடியுமா?

மகன்: பண்பு அப்பா பண்பு!

தந்தை: யாருடைய பண்பு என்னுடைய பண்பா அல்லது உன்னுடைய பண்பா?

மகன்: உங்களுடைய பண்பும் அல்ல என்னுடைய பண்பும் அல்ல. ஆனால் இங்கிலாந்து நாட்டின் அருமையான தேசியபண்பு.

தந்தை: உனக்கு ஏற்ற தொழிலை நான் கண்டுபிடித்துவிட்டேன். நீ ஒரு பிறவிப் பத்திரிக்கையாளன். ஒரு பெரிய வாரப் பத்திரிக்கையை உனக்காக நான் ஆரம்பித்துத் தருகிறேன். ஆமாம்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா
ஜார்ஜ் பெர்னாட்ஷா

பெர்னாட்ஷாவின் மேஜர் பார்பரா எனும் நாடகத்தின் சில பகுதிகள்.
தமிழாக்கம்: பெர்னாட்ஷா தாசன். நன்றி: ’கோடு’ காலாண்டிதழ்

மேற்குலக ‘ஜனநாயக’ நாடுகளின் தேசியப் பண்பை நுட்பமாகவும், எளிமையாகவும், ஒரு அழகான சித்திரமாகவும் உணர்த்துகிறார், பெர்னாட்ஷா. முதலாளித்துவ உலகில் நீதி, அறிவு, ஜனநாயகம், லட்சியம் போன்றவை உண்மையில் எப்படி உலாவருகின்றன என்பதை இப்பாத்திரங்கள் எதார்த்தமாக பேசுகின்றனர். பாராளுமன்ற அரட்டையும், இராணுவப் போரும், தளவாட உற்பத்தியும், உலக அமைதியும், நல்லது – கெட்டதைப் பிரித்தறியும் அறிவுலகமும், விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், தத்துவப் பாசாங்கும், பத்திரிகைப் பம்மாத்தும் – இறுதியில் முதலாளித் தந்தையிடம் சரணடையும் அறிவுஜீவி கலைஞனான மகனது நேர்த்தியான சந்தர்ப்பவாதத்தில் விளக்கம் பெறுகிறது. மீண்டுமொரு முறை படியுங்கள். நாடகம் கேலி செய்யும் “சுதந்திரச் சிந்தனையை” இங்கேயும் நேர்த்தியாக உலாவரும் பல்துறை அறிவுஜீவிக் கனவான்களிடம் சரளமாகக் காணலாம்.

நவ. 2000, புதிய கலாச்சாரம்