privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமீண்டும் மனுதர்ம ஆட்சி ! முறியடிப்போம் ! பு.மா.இ.மு பேரணி – கருத்தரங்கம்

மீண்டும் மனுதர்ம ஆட்சி ! முறியடிப்போம் ! பு.மா.இ.மு பேரணி – கருத்தரங்கம்

-

மீண்டும் மனுதர்ம ஆட்சி! மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் பார்ப்பனர்கள் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

ன்பார்ந்த மாணவர்களே,

manu-rule-rsyf-conference-rsyf-banner-1’சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி’ – இது ஆரிய-பார்ப்பன இந்துத்துவா சித்தாந்தம். ‘காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி ’ – இது தனியார்மய – தாராளமய கொள்கை. ‘கல்வி என்பது ஒரு நுகர்வு பொருள்; சர்வதேச அளவில் விற்கவும் வாங்கப்படவுமான ஒரு பண்டம். கல்வி நிறுவனங்கள் கல்வி எனும் நுகர்வு பொருளை விற்பவர்கள், மாணவர்கள் நுகர்வோர்கள்’ – இதுதான் நாட்டை மறுகாலனியாக்கும் காட்ஸ்-ன் சட்டம். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் இந்திய அரசு 1994-ல் காட் எனும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதை நிறைவேற்ற அமைக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம் (WTO) என்ற பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கான அமைப்பு. இந்த அமைப்பின் ஒரு அங்கம்தான் சேவைத்துறைகளை வர்த்தகமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம்.

ஆரிய – பார்ப்பன இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கம் ஆகிய இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகம்தான் புதிய கல்விக் கொள்கை (2016). இந்த புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான கருவிதான் மோடி அரசின் ’திறன்மிகு இந்தியா’(SKILL INDIA).

கல்வியை நுகர்வுபொருளாக்கும் புதிய கல்விக் கொள்கை!

பயிற்றுவித்தல், பாடத் திட்டம், உயர்கல்வி அனைத்திற்கும் பொது நுழைவுத்தேர்வு (NEET, JEE) என்பதன் மூலம் கல்வித்துறை தொடர்பான மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. பல்கலைக்கழக சிண்டிகேட்டுகள், செனட்டுகளின் அதிகாரத்தை ரத்து செய்வது; கல்லூரிகளை பல்கலைக்கழகங்களிலிருந்து பிரித்து அவற்றை திறன் சார்ந்த சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது; நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; NET­-அல்லாத உதவித் தொகை ரத்து, லிங்டோ கமிட்டி பரிந்துரைப்படி கல்லூரி வளாகங்களில் போலீசு நிலையங்களை அமைப்பது; மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பது; ஐ.ஐ.டி, என்.ஐ.டி கட்டண அதிகரிப்பு, சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வுக் கழகங்களையும், ஐ.ஐ.டிகளையும் சுயநிதி அமைப்புகளாக்குவதன் மூலம் அரசுக் கல்வி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தாராளமாக்கப்படுதல், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அனுமதி; தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN அல்லது “இந்தியாவில் கற்பித்தல்” மூலம் இறக்குமதி செய்தல்; இணைய சேமிப்பு கிடங்குகளான MOOC [பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்] போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதல்; கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India” மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல்; ஆன் – லைனில் படிப்பு, தேர்வு என பள்ளி, கல்லூரிகளை ஒழிப்பது, ஆசிரியர்களின் வேலை உரிமையை பறிப்பது என பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் கல்விபெறும் உரிமையை பறித்து கார்ப்பரேட்டுகள் சூறையாட வழிவகுத்துக்கொடுக்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை.

புதிய கல்விக்கொள்கையில் 5-ம் வகுப்பிற்கு மேல் தொழிற்கல்வி என்பதன் மூலம் சாதித் தீண்டாமையை நிலைநாட்டும் குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயல்கிறது. பெண்களுக்கு டி.டி.எச் மூலம் வீட்டிலேயே கல்வி அளிப்பது என்பது ஆணாதிக்க சமூகக் கொடுமையின் கீழ் பெண்களை வைத்துக்கொள்ளும் சதிதான்.

எல்லாம் சமஸ்கிருதமயம் – வேதமயம் – பார்ப்பனமயம்!

manu-rule-rsyf-conference-rsyf-banner-3செத்தமொழியான சமஸ்கிருதத்தை ஆரம்பக்கல்வி முதல் ஐ.ஐ.டிக்கள் வரை தனி பாடமாக்க திட்டமிட்டிருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD). இதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சமஸ்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் பத்து வருடத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. ’’பள்ளி கல்வி, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகவியல் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அனைத்திலும் சமஸ்கிருதத்தை தனி பாடமாக்க வேண்டும்; +2 வரை அனைவருக்கும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவது; ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்தியப்பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி அமைப்புகளில் சமஸ்கிருதத்திற்கு தனிப் பிரிவுகளை உருவாக்க வேண்டும்; இதன் மூலம் ‘சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப விசயங்களோடு தொடர்புபடுத்தி பார்ப்பது, சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக பயிற்றுவிக்க’ வேண்டும்’’ என்று அறிவியலுக்கு புறம்பான புராண – இதிகாச கட்டுக்கதைகளை, மாணவர்களிடம் புகுத்தி அறிவியல் கண்ணோட்டத்தை அறுத்தெரிய முயல்கிறது ஆரிய – பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இந்தியா முழுமைக்கும் உள்ள சமஸ்கிருத வேத கல்வியை நிர்வகிக்க, பட்டம் வழங்க Central board of veda and sanskirit secondary education என்ற தனி அமைப்பை உருவாக்குவது; சமஸ்கிருத வேத பள்ளி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது; சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை உருவாக்குவது; இந்த பாடங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நவீன முறைகளில் எளிமையாக்குவது; இணையவழிக் கல்வி மூலம் கற்பித்தல், குருகுல முறையை கடைபிடிப்பது, B.Ed, D.Ed பட்டயப்படிப்புகளை சமஸ்கிருதத்தில் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கல்வி அமைச்சகம்போல் செயல்படவில்லை. கல்வியை காவிமயமாக்கும் நோக்கம் கொண்ட இந்துத்துவா ராஷ்டிர மேம்பாட்டு அமைச்சகமாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை.

சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் பல்தேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்துராஷ்டிரத்தை நிறுவப்பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ் – மோடி கும்பல். கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சூறையாடுவதற்கெதிராக மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் போராடுவதில் இருந்து திசை திருப்புவதற்காக அவ்வப்போது சாதி-மத கலவரங்களையும் தூண்டிவிடுகின்றது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கூட்டம். அதேசமயம், கல்வியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும், ஆட்சியிலும் சமஸ்கிருதத்தையும், ஆரிய பார்ப்பன வேத கலாச்சாரத்தையும் புகுத்தி பார்ப்பனிய மனுதர்ம சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டத் துடிக்கிறது மோடி அரசு.

தீர்வு என்ன?

புதிய கல்விக் கொள்கை - 2015
புதிய கல்விக் கொள்கை – 2016

இந்தியா என்பது ஒரு நாடும் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனியாட்சியாளர்களால் இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. அவன் வைத்த பெயர்தான் இந்துமதம். அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்து இந்தி இந்தியா எனும் பூனுலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா. இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள் தான் ’தேசபக்த’ ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி இந்துத்துவாவாதிகள்.

இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மையை தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, வழிபாட்டுமொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். சமத்துவ அடிப்படையில் தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் ஒரே தீர்வு.

  • இந்த தீர்வை சாதிக்க மாணவகள் – இளைஞர்கள் சமூகத்தை ஒன்று திரட்டுவோம்!
  • நாட்டை அடிமைப்படுத்தும் காட்ஸ் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!
  • இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கை (2016) முறியடிப்போம்!
  • மறுகாலனியாக்கத்திற்கு மரண அடிகொடுப்போம்!
  • சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனியமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்!

சென்னையில்…. ஆகஸ்டு 30 பேரணி – கருத்தரங்கம்.

manu-rule-rsyf-conference-posterதகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழநாடு.