privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடி - போராட்டம் - சிறை : வேல்முருகனின் கதை

குடி – போராட்டம் – சிறை : வேல்முருகனின் கதை

-

melapalaiyur-tasmac-warriors
மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள்! (கோப்புப் படம்)

டாஸ்மாக்கை மூடு! ஊரை விட்டு ஓடு! – என்று கடந்த 2015 ஆகஸ்டு 4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்பு பிணையில் விடுதலையாகினர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.

மேலப்பாளையூர் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி. காலனி ஊருக்கு வெளியே உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ வன்னியர் சங்கமோ பெரியளவில் அரசியல் ரீதியில் வளராத காரணத்தால் சொல்லிக் கொள்ளும் படியான சாதி மோதல்கள் ஏதும் இல்லை. இரண்டு சாதி மக்களின் பொருளாதய வாழ்வில் சொல்லிக் கொள்ளும் படியான ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லை. மோதல்களோ முரண்பாடுகளோ இல்லையென்றாலும் விலகியே இருந்த ஊரையும் சேரியையும் ஒன்றாக இணைத்துள்ளது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.

சிறை சென்றவர்களில் வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர். அவருக்கு எந்த அரசியல் முன் அனுபவமும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பை இந்தப் போராட்டத்திற்கு முன் அவர் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூத்த மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்த பெண்ணுக்கு 17 வயது, கூலி வேலைக்குச் செல்கிறார் –நாள் கூலி 150 ரூபாய். மூன்றாவதும், நான்காவதும் பெண்கள்; படிக்கிறார்கள். ஐந்தாவதாக ஒரு பையன், அவனும் படிக்கிறான். வேல்முருகன் கூலி வேலைக்குச் சென்று 300 ரூபாய் சம்பாதிக்கிறார் – அவரது மனைவியும் கூலி வேலைக்குச் சென்று 150 ரூபாய் சம்பாதிக்கிறார்.

வேல்முருகன் சம்பாதித்த காசு அனைத்தையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசாங்கத்துக்கு மொய்யாக வைத்து விடுவதை பல வருட வாடிக்கையாக வைத்திருப்பவர். மனைவி மற்றும் மகளின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்கிறது. வீட்டுக்கு சல்லிக் காசு கூட தராமல் போதையிலேயே சதா காலமும் மிதப்பவர் என்பதால் அவருக்கு ஊரிலும் குடும்பத்திலும் எந்த மரியாதையும் இல்லை. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றும் அவர் போதையில் தான் இருந்துள்ளார்.

டாஸ்மாக்கில் குடித்து விட்டு போதையில் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தனது ஒரே ஊர்க்காரர்களை போலீசு அரட்டி மிரட்டுவதைக் கண்டதும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

வேல்முருகன், விவசாயத் தொழிலாளி - மேலப்பாளையூர், விருத்தாசலம்.
வேல்முருகன், விவசாயத் தொழிலாளி – மேலப்பாளையூர், விருத்தாசலம்.

”அந்த போதையோடயே யோசிச்சி பார்த்தேன் சார்.. இந்த கருமம் பிடிச்ச குடியால வீட்லயும் மரியாதை இல்ல… ஊர்லயும் மரியாதை இல்ல.. அட, இந்தக் கடை இருக்கிறதால தானே குடிச்சி நாசமா போனோம்னு தோணிச்சி.. நேரா போயி போலீசுகாரன் கிட்ட ஒழுங்க கடைய எடுங்கன்னு கத்துனேன். நம்பளையும் தூக்கி வேனுக்குள்ள ஒக்கார வச்சிட்டாங்க. சரி உள்ற போயிட்டு வருவோமேன்னு நானும் ஒக்காந்துட்டேன்”

”சரி உள்ளே போயி போதை தெளிஞ்ச பின்னாடி எப்படி இருந்திச்சி?”

”கையெல்லாம் ஒரே நடுக்கம்… நமக்கு போதை போடலைன்னா ஸ்டெடியாவே இருக்க முடியாதே… தம்ளர்ல தண்ணி ஊத்தி குடிக்க கூட முடியலை… ரொம்ப நாளுக்கப்புறம் குடிக்காம இருந்ததாலே வயித்து வலி வந்திடுச்சி…”

“எப்படி சமாளிச்சீங்க?”

“நான் எங்க சமாளிச்சேன்… கூட இருந்தவங்க தான் வேற வழி இல்ல முருகா…. எப்படியாவது சமாளிச்சிக்கோ அப்படின்னு சொன்னாங்க… முதல்ல சாப்பாடே எறங்கல… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சேன்.. இவங்க டாஸ்மாக் போராட்டம் பத்தி தினமும் பேசுவாங்க.. அதையெல்லாம் இனிமே குடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்… தோ, உள்ள போயி இன்னி வரைக்கும் குடிக்கவே இல்ல சார். இப்பத்தான் பொண்டாட்டி மதிக்கிறா… குடிகார நாயின்னு கேவலமா பாத்த ஊர்க்காரனெல்லாம் இப்பத் தான் சார் மதிச்சி பேசறான்”

Tasmac-still-closed
மூடப்பட்ட மேலப்பாளையூர் டாஸ்மாக் கடை

”ஜெயில், போலீசெல்லாம் பயமா இல்லையா?”

“இன்னாத்துக்கு பயம் சார்? எனக்கு இப்ப வெளிய தான் பயமா இருக்கு. பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”

“சரி… திரும்ப டாஸ்மாக் திறந்தா குடிப்பீங்களா?”

“சார்.. பக்கத்துல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி வச்சிட்டு சாப்பிடுவியான்னு கேட்டா எப்டி சார்? ஆனா நான் திரும்ப டாஸ்மாக் திறக்க விட மாட்டேன் சார்.”

”அது சரி… ஆனா அரசாங்கம் போலீசை அனுப்பி டாஸ்மாக்கை திறக்க வச்சா என்னா செய்வீங்க?”

“உயிரே போனாலும் விட மாட்டேன் சார்… போய் குறுக்கால படுத்துக்குவேன்.. போலீசு என் கழுத்தை மெறிச்சி சாவடிச்சிட்டு போயி திறக்கட்டும்.”

அக்டோபர் 2015-ல் வினவு சார்பாக அங்கே சென்று எடுக்கப்பட்ட ஆவணப்படம் “அம்மாவின் மரண தேசம்”. அதில் வேல்முருகனின் நேர்காணல் இந்த வீடியோவில் முழுமையாக இடம்பெறுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க