privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கபாலி தலித் படமா ? வாசகர் விவாதம்

கபாலி தலித் படமா ? வாசகர் விவாதம்

-

கபாலி படம் குறித்து வினவில் விமரிசனமும், இரு கட்டுரைகளும் வெளியாகின. இணையத்தில் சில சாதி வெறியர்கள் இப்படத்திற்கு குறிப்பாக இயக்குநர் ரஞ்சித்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டியும், தினமணி போன்ற பார்ப்பனிய ஊடகங்களின் கருத்தை வைத்தும் சிலர் கபாலியை தலித் போராளி படமாக சித்தரிக்கிறார்கள். இது தொடர்பாக வாசகர்கள் இருவர் தெரிவித்த கருத்துக்களும் அதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதிலையும் இங்கே பதிவு செய்கிறோம். நேரமிருந்தால் இது குறித்து முழுமையாக எழுதுகிறோம். நன்றி.

– வினவு

பாலி விமர்சனம் படித்தேன். வினவில் இப்படியொரு அபத்தமான விமர்சனம் வருமென்று நான் நினைக்கவில்லை. அவ்வளவு மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டால் பிறகு ஏன் அதற்கு விமர்சனமெழுத வேண்டும்? இதுவரை அப்படி எழுதியதேயில்லையே?

கபாலியாயை வெறும் கபாலியாக மட்டுமே பார்ப்பதற்கு வினவெதற்கு? அதற்கு செஞ்கிஸ்கான்கள் போதும். சில காட்சிகள் தவிர இப்படத்தின் பல காட்சிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற விசயத்தைக் காண்பதற்கு வினவு தவறிவிட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன்.

படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான். தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’? ரஜினியின் படத்தை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்துப் பார்ப்பது ரஜினியின் ரசிகர்கள்தான். பொதுவான ரசிகர்களல்ல. ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது. ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன்.

படம் வெளிவந்த நாள் அதிகாலை 8.00 மணிக்கெல்லாம் அலைபேசிக்குள் படம் வந்துவிட்டது. நெரிசல் இல்லாதபோதும் படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களல்லாத சினிமா ரசிகர்களுக்கு கபாலி பிடித்துள்ளது என்பதுதான் இதற்குக் காரணம். ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன?

கபாலி சொல்லும் பதில் அல்லது பஞ்ச் வசனங்களுக்கான கேள்விகளைக் கேட்டவர்கள் காந்தியிலிருந்து மாம்பழம் ஊடாக மதயானைக்கூட்டம் வரையிலும் இருப்பவர்கள்தான் என்பது வினவிற்குப் புரியவில்லையா?

– குருசாமி மயில்வாகனன்.

__________

இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:

குருசாமி மயில்வாகனன்,

பாலி மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டு ஏன் விமரிசனம் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.அது மோசமான படமென்பது உங்களது கருத்தில்லை என்றால் அது ஏன் நல்ல படமென்றுதான் நீங்கள் விவாதிக்க வேண்டும். மாறாக ஏன் எழுதுகிறீர்கள் என்றால் அது மொக்கை படமென்பதை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அடுத்து உங்களைப் பொறுத்த வரை கபாலி மிக நல்லபடம் என்பது அடுத்த வரிகளிலேயே வருகிறது. அதுதான் உங்களது உண்மையான கருத்தென்றால் முதல் வரிகள் தவறு.

அடுத்து இந்த படம் மரண மொக்கை என்பதையோ, மட்டமான மொக்கை என்பதையோ நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. படமே அப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் விமரிசனமும் உணர்த்துகிறது.தமிழ் சினிமாவில் எல்லா போலீஸ் ஸ்டேசன் காட்சிகளிலும் அம்பேத்கர் படம் தவறாமல் இருக்கும். இது வரை உங்களது கண்ணுக்கு ஏன் அது தட்டுப்படவில்லை? கபாலியை விட பல போலிஸ் படங்களில் அதிக முறை அம்பேத்கர் படமாக வந்து போகிறார்.ஆகவே இப்படியெல்லாம் அபத்தமாக குறியீடு ஆய்வு செய்யாதீர்கள்.

ரஜினி ரசிகர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை கபாலி டிக்கெட்டே முதல் நாட்களில் கிடைக்கவில்லை. எல்லாம் ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விற்கப்பட்டதால் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இது வினவின் கட்டுரையிலேயே வருகிறது. ஐ.டி நிறுவனங்களில் வசூல் செய்தவர்கள் சசிகலா கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகிறது என்று ரசிகர்களையெல்லாம் ஆதிக்கசாதியாக்கி விட்டீர்கள். உண்மையில் ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களுக்கு தலித் ரசிகர்கள் அதிகம். பா.ம.க ரஜினி படப்பெட்டியை எடுத்து படத்தை ரலீஸ் செய்ய தடை ஏற்படுத்தியது, பா.ம.க பகுதிகளில் விஜயகாந்த் வெற்றி பெற்றது எல்லாம் அப்படித்தான்.

வில்லேஜ் தீமில் அம்பேத்கர் படமுண்டா என்று அப்பாவியாக கேட்டிருக்கீர்கள். பாராளுமன்றத்திலேயே அம்பேத்கர் உண்டு. அதற்கு மோடி மாலை போட்ட போட்டோவும் உண்டு. உடனே பா.ஜ.க வில் அம்பேத்கர் இருப்பதால் அது தலித் கட்சி என்று அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

மற்றபடி உங்களைப் போன்றவர்கள் அர்த்தமற்ற இந்த குறியீடுகளை வைத்து கபாலி படம் எனும் தேவர் சாதி வெறி கும்பல் வழிப்பறி செய்த கொள்ளையை, ரஜனி எனும் பா.ஜ.கவின் பிராண்ட் அம்பாசிடரின் இமேஜை ஆதரிக்கிறீர்கள். இல்லையேல் அத்தகைய தலித் போராளி படமான கபாலியை எதற்காக்க தேவர் சாதி வெறி சசிகலா கும்பல் வெளியிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவு தேவர் சாதி சசிகலா கும்பல் புத்திசாலி அல்ல என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்நாட்டில் அடிமைகளாக வாழ்வதும் புத்திசாலிகளாக இல்லை என்ற காரணத்திலாகி விடும். சாதி ஒடுக்குமுறை என்பது அறிவார்ந்து அல்ல, பொருளாதாரத்தை சார்ந்து சமூக ரீதியாக ஒடுக்குவது. நேரமிருப்பின் காபாலி அக்கப்போர்களை வெளுத்து வாங்கும் வண்ணம் எழுதும் எண்ணமுண்டு.

இறுதியில் காபாலி எனும் முன்னாள் தொழிற்சங்க தலைவர் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவனாக உலா வந்து 1 கோடி ரூபாய் பென்ஸ் காரில் வந்து சோபாவில் தேய்ந்து போன வசனங்களைப் பேசினால் உங்களைப் போன்றவர்கள் ரஜினி ரசிகர்களா மாறுகிறீர்கள் என்றால் உண்மையான ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல். அவர்களை திருத்த முடியும். மற்றவர்களை சிரமம்.

உங்கள் நிலை குறித்து பரிதாபப்படுகிறோம். நன்றி

பின் குறிப்பு:

//தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’?//

மயில் வாகனன், கபாலியில் மறைந்திருக்கும் பல்வேறு கம்ப சூத்திரங்களை கண்டிபிடித்து விட்டு மேற்க்ண்ட வரியின் சூட்சுமம் புரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. முடிந்தால் கட்டுரையை மீண்டும் படித்து விட்டு அந்த வரி நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் வேறு மாதரி இருப்பதையும், அது தரும் பொருள் என்னவென்பதையும் கண்டுபிடியுங்கள். இல்லையேல் கபாலி காய்ச்சலிருந்து நீங்கள் இன்னமும் விடுபடவில்லை என்றாகிவிடும்.

____________________

மயில்வாகனனுக்கு அளிக்கப்பட்ட வினவு பதில் குறித்து வாசகர் சுகதேவ் விமரிசக்கிறார்:

ம்பேத்கர் படத்தை போலீஸ் நிலையங்களில் காட்டும் போது எழாத எதிர்ப்பு கபாலியில் காட்டிய போது ஏன் எழுகிறது? ‘எனக்கு ஒரு கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம். டாங்கு டக்கர டொய்’; ‘கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு; காலத்தின் கையில் அது இருக்கு’ என்பவை தான் தனது திரைப்படங்களில் ரஜினிகாந்த் பேசி வந்த ‘அரசியல்’. அவற்றிலிருந்து நகர்ந்து கபாலியில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும்.

கபாலியில் ரஜினி பேசிய வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரஜினியினுடையவை அல்ல. அவை கபாலியினுடையவை. அதனால் தான் ஒரு புத்திசாலி ரசிகனால் கபாலியுடன் ஒன்றுபட முடியவில்லை. தலித் அதிகாரம் பெறுவது தொடர்பான ஒரு கனவின்பம், கபாலி. இதனை கற்பனாவாதம் என்று எளிதில் நிராகரிக்கலாம். ஆனால் இப்படம் பார்ப்பவருக்கு வழங்கும் தற்காலிக கர்வம் முக்கியமானது. இதனை தினமணி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நபர்களால் எக்காரணம் கொண்டும் புரிந்து கொள்ள இயலாது. நீங்களும் அந்த ஜீப்பில் ஏறிக் கொள்வது எதற்காக?

இப்படத்தை மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்திருப்பது தெரியவில்லையா? தேவர்சாதி வெறி தயவில் தலித் விடுதலையா? என்று கேட்பது ஒரு மாய நியாயம். கபாலி அல்ல; ஜோக்கர் படத்தை கூட மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்ய முன்வரலாம். காரணம் மக்களுடைய கோபாக்கினையின் எல்லையை புரிந்து கொண்டுள்ளது ஆளும்வர்க்கம். கோவன் கைது செய்யப்பட்டதை பா.ஜ.க எதிர்த்தது. இதை எப்படி புரிந்து கொள்வது? ‘மோடிக்கு பூங்கொத்து கொடுக்கும் ஜெயா’ படம், பாடல் காட்சிகளில் இருந்ததால் பாடலை ஏற்க முடியவில்லை என்று தமிழிசை விளக்கினார். ஆனால், அதன் பிறகும், முரளிதரர் ராவ் ஒரு பேட்டியில், கோவன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பேட்டி கொடுத்தார்.

பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்து சென்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய நினைக்கவில்லை. காரணம், எந்த பெரிய நெருக்கடியையும் அரசு உணரவில்லை. கபாலியை ஸ்பான்ஸர் செய்வதிலும் மன்னார்குடி மாபியாக்களுக்கு இந்த உத்தி தான் இருக்க முடியும். எனவே அதனை விமர்சிக்கின்ற அதே நேரம் இப்படத்தை தனியாக அலசுவதும் தேவையாகிறது. கபாலி விமர்சனத்தில் இந்த இரண்டாம் கடமையை செய்வதில் நேர்மைத் திறம் வெளிப்படவில்லை.

– சுகதேவ்.

______________

இதற்கு வினவு சார்பில் அளிக்கப்பட்ட பதில்:

சுகதேவ்,

மெய்நிகர் உலகின் மாயைகள் மெய்யுலகில் இல்லை என்பதை புரிய வைப்பது சிரமம். கபாலி படத்திற்காக ஆதிக்க சாதி சங்கங்கள் எவையும் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமோ, மறியலோ, திரையரங்க முற்றுகையோ ஒன்று கூட நடத்தவில்லை. காரணம் இந்தபடம் தலித் படமோ, தமிழர் படமோ, மலேசியாவில் பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் படமோ இல்லை. இல்லவே இல்லை. இது ஒரு அப்பட்டமான மசாலா. இதை இயக்குநர் ரஞ்சித்தே பல நேர்காணல்களில் கூறுகிறார்.

இணையத்தில் சில சாதிவெறியர்கள் எதிர்ப்பதை வைத்து படமே தலித் போராளி படம் என்று கருதுவது சகிக்க முடியாத பிழை. இணையத்தில் அப்படி சிலர் எதிரப்பு தெரிவிப்பது என்பது இதுதான் என்றில்லை, பல்வேறு விசயங்களில் நடக்கிறது. மெய்யுலகத்தில் ‘கலப்பு மணங்கள்’ குறித்து ராமதாஸ் முன்வைத்து பேசும் சாதி வெறி கருத்துக்களே தமிழகத்தின் ஆதிக்க சாதி அல்லது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களது கருத்து. நிலைமை இப்படி இருக்க கபாலி படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இது வரை ஓடியது என்றால் ராமதாஸ் மற்றும் தமிழக ‘பெரும்பான்மை’ மக்கள் திருந்தி விட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

கபாலியில் ரஜினி பேசியது அரசியல் வசனங்கள் என்று ஏதாவது ஒன்றையாவது தாங்கள் சொன்னால் விவாதிப்பது பலனளிக்கும். ரிக்ஷாக்காரனாக, விவசாயியாக எம்.ஜி.ஆர் பேசாதா வசனமா, லியாகத் அலிகான் உதவியுடன் விஜயகாந்த் பேசாதா புரட்சியா?……அதனால்தான் கபாலி படம் துக்ளக் சோவிற்கும் பிடித்திருக்கிறது.

கபாலி படத்தை வைத்துத்தான் தினமணியை இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாறாக தினமணியின் பார்ப்பனிய திமிரை கண்டித்து வினவில் மட்டுமே ஏராளமான கட்டுரைகள் உண்டு. இன்றைக்கும் கபாலியை வியந்தோதுவார் நாளைக்கே தினமணி வைத்தியுடன் நட்புறவு கொண்டு நடுப் பக்க கட்டுரை எழுதுகிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதுவார்கள். மாறாக தலித் மக்கள் அசைவம் உண்பதால்தான் ரேப் செய்கிறார்கள் எனும் வைத்தியை கண்டித்து இணையத்தின் காபாலி ஆதரவு முற்போக்காளர்கள் எவர் எழுதியிருக்கிறார்கள?

மேலும் ஒரு விசயத்தை சரியான முறையில் நாங்கள் விமரிசிப்பதையும், தவறான முறையில் மற்றவர் விமரிசிப்பதையும் இணை வைத்து பேசுவது கண்டனத்திற்குரியது. அழகிப் போட்டியை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமும், இடது சாரிகளின் நோக்கமும் ஒன்றா? இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியைத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், முசுலீம் மதவெறி அமைப்புக்களும் ஒன்றா? எங்கள் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் சாதி வெறியர்களின் முதுகில் அமர்ந்து கொண்டு சிலர் பேசும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இல்லை வினவு எப்படி தலித் விரோத ஆதிக்க சாதி வெறி பத்திரிகை என்று நிருபியுங்கள், விவாதிக்க காத்திருக்கிறோம்.

கோவன் கைதை பா.ஜ.க எதிர்த்தது என்பது கலப்படமில்லாத முழுப்பொய். ஆரம்பத்தில் எதிர்ப்பதாக பேசிய தமிழிசைக்கு கண்டனங்கள் குவிந்த பிறகு அவர் தனது எதிர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார் (அதாவது முதலமைச்சரை இழிவு படுத்தி  கோவன் பாடியது தனது கவனத்திற்கு வரவில்லை என்றார்). மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க டி.வி நிலையை விவாத வித்வான்கள் வினவு மற்றும் ம.க.இ.கவை தடை செய்ய வேண்டும் என்று எழுதி பேசியிருக்கிறார்கள். அடுத்து பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்துச் சென்றிருக்க முடியும் என்பது உங்களது தவறான பார்வை. இதற்கு பா.ஜ.க தயவு இருப்பதால்தான் நீங்கள் சுதந்திரமாக எழுதி பேசி உலாவுகிறீர்கள் என்றே நேரடியாக சொல்லலாம்.

உங்களது வாதப்படி சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் கூட பா.ஜ.கவின் கருணை என்று விளக்கமளிக்கலாம். மோடி நினைத்திருந்தால் அம்பேத்கர் வாசகர் வட்டத்தை நாடு கடத்தியிருக்கலாம் என்று கூட நீங்கள் மதிப்பிடலாம். ஆனால் அந்த தடை நீக்கம் என்பது தமிழகத்தில் எழுந்த மாபெரும் எதிர்ப்பின் விளைவு அல்லது வேறு வழியில்லாத நிலை என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. முழு இந்தியாவும் பல்வேறு அமைப்புக்களும் அதற்காக்க குரல் கொடுத்தன, போராடின. புரட்சிகர அமைப்புக்களும் தீவிரமாக போராடின.

எல்லா சமூக மாற்றங்களும், போராட்டங்களும் ஆளும் வர்க்கங்களின் கருணையால் நடப்பதில்லை. உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணம். ஊத்திக் கொடுத்த உத்தமி பாட்டை பாடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் பிணையில் விடுதலையாகி அங்கேயே அதே பாட்டை வரிமாறாமல் பாடினாரே அது ஏன்? ஜெயாவின் கருணையா இல்லை அந்த பாசிஸ்டை அஞ்சாமல் எதிர்க்கும் புரட்சிகர அமைப்புக்களின் நெஞ்சுரமா? இல்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு முற்போக்காளர், பத்திரிகையாளர், பத்திரிகை, மற்ற கட்சிகள் யாராவது ஜெயலலிதாவை ஒரு பாசிஸ்டு என்று எழுதவோ, ஒரு வாரம் தமிழகத்தில் இயக்கமோ நடத்தவோ சொல்லுங்கள் பார்ப்போம்!

இன்றைக்கும் தமிழகத்தில் ஜெயாவை எதிர்ப்பதில் அஞ்சாமல் செயல்படும் ஒரே இயக்கம் எதிர்க்கட்சி எமது அமைப்புக்கள் மட்டுமே. இதில் நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்பதை பெருமையாக சொல்லவில்லை. மற்றவர்கள் கோழைகளாக இருக்கிறார்களே என்று வருத்தத்துடனே பதிவு செய்கிறோம்.

கபாலி ஏன் ஒரு தலித் படம், ஆதிக்க சாதி எதிர்ப்பு படம் என்பதற்கு காத்திரமான ஒரு விமரினத்தையோ, கருத்தையோ இது வரை யாரும் எழுதி நாங்கள் பார்க்கவில்லை. அனைத்துமே ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே முன்வைக்கின்றன. இரண்டாவதாக இயக்குநர் ரஞ்சித் பேசும் சில அரை குறை முற்போக்கு கருத்துக்களை வைத்து கபாலியை முன்வைக்கிறார்கள். நாங்கள் கேட்பது கபாலி படத்தில் எங்கே தலித்துக்களின் வாழ்வோ, வசனமோ, குறியீடோ இருக்கிறது என்பது மட்டுமே!

கபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறார். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சயம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி!

பின்குறிப்பு: இந்தியாவில் சாதி ஒழிப்பு எனும் சமூக மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ்-தான் செய்ய முடியும் என்று எழுதிய திருவாளர் சமஸ் – தி இந்துவின் ஆசிரியர்களுள் ஒருவர் – கபாலி படத்தை ஆதிக்க சாதி எதிர்ப்பு படமாக உணர்கிறார், வாழ்த்துகிறார்!