privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

-

தமிழகத்தை பாலைவனமாக்கி, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
தருமபுரியில் மக்கள் அதிகாரம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Exif_JPEG_420

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகள் கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, தற்போது அதற்கான ரூ 5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அணைகட்டும் வேலையில் இறங்கியுள்ளது. இதனை கண்டித்து தருமபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகாரம் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டது. இத்திட்டம் நிறைவேற்றினால் தமிழகம் பாலைவனமாக்கப்படும் என்ற அபாயத்தை உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான பிரசுரத்தை பேருந்து, கடைவீதி, குடியிருப்பு, அலுவலகம், மக்கள் கூடும் இடம் என பரவலாக பிரச்சாரத்தை மேற்கொண்டு 23-08-2016 அன்று தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

methane-project-protest-01ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் கந்திலி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். “கர்நாடக அரசு அணைகட்டி விட்டால் தமிழகத்திற்கு நீர் வராமல் பாலைவனமாக்கப்படும். இதன் மூலம் அங்கு மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றி பன்னாட்டுக்கம்பெனிகள் கொள்ளையடிக்கும். எனவே பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்துக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக முறியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் தேவேந்திரன் பேசுகையில், “கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணைக்கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயகளுக்கு மட்டும் பாதிப்பு என்று பார்க்க முடியாது. இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. எனவே தமிழக மக்களின் பிரச்சினை. இப்பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை. ஏனென்றால் துளியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் சுயநல போக்குடனே இருந்து வருகின்றனர். எனவே தமிழக மக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். அந்த வகையில் மக்கள் நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து மக்கள் அதிகாரம் போராடி வருகிறது, இதற்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

methane-project-protest-04அடுத்தபடியாக தமிழக மக்கள் கட்சி தலைவர், வழக்கறிஞர் கோவிந்தராஜ் உரையாற்றினார். அவர் தனது உரையில் “தமிழகத்திற்கு தண்ணீர் இல்லாமல் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் காய்ந்து கொண்டிருக்கிறது, இதை பார்த்து அன்றாடம் விவசாயிகள் வேதனை பட்டு கொண்டிருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் சட்டமன்றத்தில் பேசுகிறார்களா? என்றால் இல்லை. அன்றாடம் நாடகத்தை நடத்துகிறார்கள். மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு யாராவது இருக்கிறார்களா? இனியும் இவர்களை நம்பி நாம் ஏமாறப் போகிறோமா? வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு எந்த அரசியல் கட்சியும் கொடுக்கவில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேலாக சம்பளம் வாங்கிக்கொண்டு பங்களா, சொகுசு கார் என வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களுக்கு ஏழைகளின் கஷ்டம் பற்றி தெரியாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் நாம் கேள்வி கேட்க முடியும் என்று வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு உறுதுனையாக இருந்து வெற்றிக்கு வழிவகுத்தது மக்கள் அதிகாரம்தான். அனைவரையும் கேள்வி கேட்கவேண்டும் என கற்றுக்கொடுத்திருக்கிறது மக்கள் அதிகாரம். எனவே தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக, மேக்கேதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் மக்கள் அதிகாரத்தோடு பல அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட்டத்தை கட்டி எழுப்புவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

methane-project-protest-09மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் உரையாற்றுகையில், “கர்நாடக அரசு அணை கட்டுவதால் தமிழகத்தில் ஒருகோடி மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல 7 கோடி மக்களுக்குமான உயிராதாரமான பிரச்சினை. தாளடி, சம்பா, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா பூமி இன்று ஒருபோகம் கூட விளைவிக்க முடியாமல் தவிக்கிறது. கடன் தொல்லைக்கும், தற்கொலைக்கும், எலிக்கறி சாப்பிடும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சினை தீர்க்க இந்த அரசமைப்பால் முடியவில்லை. இது வரை எத்தனையோ கமிட்டிகள், ஆணையங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் அமைத்தும், இடைக்காலதீர்ப்புகள், இறுதித்தீர்ப்புகள் என வந்தும் இப்பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியாமல் தோற்று போய் உள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதி மன்ற தீர்ப்புக்ககு இணையானது. நீதி, நியாயத்தை உறுதிபடுத்துவதுதான் நீதி மன்றங்களின் கடமையாக இருக்கவேண்டும். கிராமப்புறங்களில் நாட்டாமைகள்கூட தம் தீர்ப்பு நடைமுறைபடுத்துவதை உறுதிசெய்கிறார்கள். ஆனால் உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை கர்நாடகா அவமதிப்பதை பற்றி துளியும் அக்கறையின்றி தீர்ப்பு சொல்வதோடு தன்கடமை முடிந்து விடுகிறது என எண்ணி தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கெசட்டில் வெளியிட்டதை தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட செயலலிதா, இன்று தண்ணீர் பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து வெட்கப்படாமல் கடிதம் எழுதுகிறோம், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறோம் என்கிற பேரில் நாடகம் ஆடுகிறார். செயலலிதா சட்டத்தை மதித்து நடப்பவர் போல நாடகம் ஆடுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கிலே அவர் சட்டத்தை எப்படி மதித்தார் என்பது உலகத்திற்கே தெரியும்” என அம்பலப்படுத்தி பேசினார்.

methane-project-protest-06“பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அடைந்து விடும் என பொய்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் மேக் இன் இந்தியா என்றெல்லாம் சவடால் அடித்தார். டெல்டா விவசாயிகள் உற்பத்திசெய்வது மேக் இன் இந்தியா இல்லையா?” என கேள்வி எழுப்பி அம்பலபடுத்தினார்.

“அதிகமாக ஓட்டுப்போட்டு போடும் மிக பெரிய ஜனநாயகநாடு இந்தியா. இதில் பங்கெடுத்து மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றுகூறிய அனைத்து கட்சிகளும் பதில் சொல்லியே தீரவேண்டும். ஓட்டுப்போடுவது மட்டும்தான் ஜனநாயகமா? அப்படி என்றால் காஷ்மீரில் முதலில் அவசரமாக வாக்கெடுப்பு நடத்தி அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் பார்க்கலாம்” என ஜனநாயத்தின் பித்தலாட்டங்களை அம்பலபடுத்தினார்.

“உயிர் வாழ்வதற்கும் வாழ்வுரிமை பாதுகாப்பதற்கும், பெறுவதற்கும் தான் ஜனநாயகம், சட்டம் என்பதெல்லாம். இதனை பறிப்பதற்கு அல்ல. எனவே சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்து விட்டது. இதற்கு சிறந்த உதாரணம் டாஸ்மாக். எனவே இந்த அரசமைப்புக்கு வெளியே நின்று போராட வேண்டும். இன்றைக்கு எப்படி வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற்றார்களோ அந்த அனுபவத்தை எடுத்துக்கொண்டு போராடவேண்டும்.

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்த அரசமைப்பை மாற்ற ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து போராடும் போதுதான் உரிமைகளை மீட்டெடுக்க முடியும். இதற்கு வருகிற விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுத்து தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களிடையே தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்திற்கெதிராக போராடவில்லை என்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை பதியவைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி.
8148573417