privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மலேரியாவிடம் தோற்கிறது இந்திய 'வல்லரசு' !

மலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ !

-

இந்தியாவில் மலேரியாவால் ஆண்டுதோறும் இறப்பவர் எண்ணிக்கை என்ன? தொண்டு நிறுவனங்கள்  2 லட்சம்  என்றும்,  உலக சுகாதார நிறுவனம் 15,000 என்றும் கூறும் போது, வெறும் 561 பேர் மட்டும்தான் இறப்பதாக இந்திய அரசு கூறுகிறது. ஏழைகளின் எண்ணிக்கையை குறைப்பது போல அவர்களின் இறப்பையும் குறைத்து வேடம் போடுகிறது இந்திய அரசு.

மலேரியா
மலேரியா கொசு

மலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.

மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக 2011-ம் ஆண்டில் 665 கோடிகள் வரை செலவிட்ட இந்திய அரசு 2013-ம் ஆண்டிலோ அதில் பாதியை மட்டுமே செலவிட்டு இருக்கிறது. பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரத்திற்காக 2,68,551 கோடிகள் நிதியாதாரம் ஒதுக்கப்படும் என்று திட்ட ஆணைக்குழு உறுதியளித்தது. ஆனால் அதில் 45 விழுக்காட்டு நிதி தான் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

பிறகு மலேரியாவோ, டெங்குக் காய்ச்சலோ பரவாது?

இந்திய அரசு 2015-ம் ஆண்டிற்குள் 75 விழுக்காடு வரை மலேரியாவை கட்டுப்படுத்தி விடும் என்று தன்னுடைய 2014 ம் ஆண்டின் மலேரியா அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் மலேரியாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 8 லட்சத்தில் இருந்து 2014-ம் ஆண்டு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது.

இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடாரம்
இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடாரம்

மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழும் இந்தியக் கிராமங்களுக்கு மொத்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளில் 20 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. மலேரியாவை ஒழிப்பதற்கான தீர்வுகள் இங்கே பெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு கானல் நீர்தான். இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடம் எனலாம்.

ஆனால் உலக சுகாதார நிறுவனமோ மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை மருத்துவமனைகளில் இருந்து மட்டுமே பெற்று தங்களது ஆய்வறிக்கையை வெளியிடுவதாக லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆனால் 90 விழுக்காட்டு மரணங்கள் கிராமங்களில் தான் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் 86 விழுக்காட்டு மரணங்கள் எந்தவித சிகிச்சையுமின்றி குடிசைகளில் அடைபட்டு வெறும் இறப்புச் சான்றிதழை மட்டுமே கோருகின்றன. எனில் மலேரியாவின் மரணங்கள் இந்தியாவில் இலட்சத்தை தாண்டுவது உறுதி!

மலேரியா நோய்க் கிருமிகளுள் பிளாஸ்மோடியம் பால்சிபரும்(P.falciparum) மற்றும் பிளாஸ்மோடியம் விவக்ஸ்(P.vivax) என்ற இரு கிருமிகள் தான் உலகெங்கும் மலேரியா மூலம் மக்களைக் கொல்லுகின்றன. உயிர்க்கொல்லி நோயான மலேரியாவிற்கு எதிராக உயிர்காக்கும் மருந்துகள் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் வீரியம் குறைகிறது. அந்த மருந்துகளும் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. குளோரோகுயின் என்ற மருந்து பி.விவக்ஸ் கிருமிக்கும், ஆர்டிமிசினின் என்ற மருந்து பி.பல்சிபரும் கிருமிக்கும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கபடுகிறது.

யுயு து
ஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார்.

ஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார். ஆர்டிமிசினின் மருந்தை  யுயு து சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து கண்டறிந்தார். சோசலிச சீனாவின் சிறந்த கொடைகளில் ஒன்றான  ஆர்டிமிசினின் மருந்து உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை மலேரிய நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து காத்து வருகிறது.

ஆயினும் மருந்து மட்டுமே போதுமானதா? அரசு மருத்துமனைகளில் தேவையான பணியாளர்கள் இல்லாததாலும், மிக மோசமான உள்கட்டமைப்பு காரணமாகவும் 75 விழுக்காட்டு இந்தியமக்கள் தனியார் மருத்துமனைகளில் ஒதுங்குகின்றனர். ஆனால் இலாபம் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் தனியார் மருத்துமைனைகளில் சிகிச்சையைத் தொடர வழியில்லாமல் முடங்கிவிடுகின்றனர்.

இப்படி நவீனமருத்துவம் ஆகப்பெரும்பான்மையான மக்களை நிராகரித்து விட்ட நிலையில் நோய்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள கணிசமான மக்கள் மாற்று மருத்துவத்தை நாடுகின்றனர்.

மாற்று மருத்துவங்களான சித்தா,ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவங்களோ பார்ப்பனிய புரட்டுக்களிடம் சிக்கி திணறுகின்றன. பார்ப்பனர்களின் புராணப் புளுகுகளை ஆராய்ச்சி செய்ய ஆயுஷ் (AYUSH) என்ற தனி அமைச்சரைவையை உருவாக்கி ஆயிரக்கணக்கான கோடிகளை தண்டமாக்குகிறது இந்திய அரசு. நவீனமருத்துவம் கோரும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் செய்யாமல் அறிவியல் கண்டடைந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பான மரபியலை(Genomics) பெயரில் ஒட்டிக்கொண்டு ஆயுர்ஜீனோமிக்ஸ் (Ayurgenomics) போன்ற அதார் உதார்களை அள்ளிவீசுகிறது.

கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் இந்த நோய்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது.
கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் இந்த நோய்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது.

தாகம்தணிக்கத் தண்ணீர் உட்பட அடிப்படைவசதிகள் மறுக்கப்பட்டு, மருத்துவசதிகள் தீண்டாத தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உள்நாட்டு அகதிகளாக பிய்த்து எறியப்பட்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்கள்தாம் மலேரியாவின் எளிய இலக்குகளாக இருக்கின்றனர்.

தனியார்மய தாராளமய தயவால் 57 விழுக்காடு இந்திய மருத்துவர்கள் மருத்துவத்தகுதிகள் எதுவுமே இல்லாமல் தற்குறிகளாக இருக்கின்றனர். கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் மலேரியா நோய்க்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவத்திற்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைப்பது, முறையான மருத்துவ வழிகாட்டல்களை குடுக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது.

மலேரியாகிருமிகள் (ஒரு இடத்தில்) ஒரு மருந்தை எதிர்க்கும் வலிமையை பெற்றுவிட்டால் அந்த மருந்தை (அந்த இடத்தில்) தொடர்ந்து பயன்படுத்த இயலாது. அது மட்டுமல்லாமல் அந்த மருந்தை போலவே அமைப்பை கொண்ட வேறு மருந்துகளையும் எதிர்க்கும் ஆற்றலையும் அந்த கிருமிகள் பெற்றுவிடும். அதுவே உலகம் முழுதும் பரவும் போது அதை அழிப்பதற்கான ஒரு புதிய மருந்தை தான் கண்டுபிடிக்க வேண்டும்.

தென்கிழக்கு ஆசியநாடுகளான கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பி.பல்சிபரும் கிருமியும், இந்தோனேசியா, கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பி.விவக்ஸ் கிருமியும் இத்தைகைய தன்மையைப் பெற்று விட்டன. தென் அமெரிக்க நாடுகளில் பி.பால்சிபரும் கிருமியை அழிக்கும் குளோரோக்யூன் மருந்தை உலகில் வேறு எந்த நாடுகளிலும் பயன்படுத்த முடியாத வகையில் புதிய அவதாரம் எடுத்துவிட்டது.

மரபணு வரிசைமுறை(Genome Sequencing) மூலம் நோய்க்கிருமிகளின் மரபியல் மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அதை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியான ஆராய்சிகள் ஒருபுறம் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக பி.பால்சிபரும் பெற்றுள்ள மருந்து எதிர்ப்புசக்திக்கு kelch13 மரபணுவில் ஏற்பட்டுள்ள 20 மாற்றங்களே காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்..

urban_poverty
பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது

ஆர்டிமிசினினை தனிமருந்தாக பயன்படுத்தாமல் ஆர்டிமிசினின் கூட்டு சிகிச்சையைப்(Artemisinin Combination Therapy ) பயன்படுத்தும் போது 95 விழுக்காடு வரை நோய்க்கிருமிகள் எதிர்ப்புத் தன்மையை இழந்து விடுகின்றன. ஆர்டிமிசினின் மருந்தை நாம் இழந்து விட்டால் நீண்ட காலத்திற்கு மலேரியா நோயை குணப்படுத்த நம்மிடம் எதுவுமில்லை என்கிறார் மலேரியா ஒழிப்பிற்கான உலக சுகாதாரநிலையத்தின் முன்னாள் இயக்குனர் மருத்துவர் அரட்டா கொச்சி.

ஆர்டிமிசினின் மருந்தை தனிமருந்தாக தயாரித்து விற்ககூடாது என்று 2006-ம் ஆண்டு  ஜனவரி 19 அன்று மருந்துநிறுவனங்களுக்கு உலக சுகாதாரநிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதன்பின்னரும் இலாபமே குறிக்கோளாக கொண்ட இந்திய மருந்துநிறுவனங்கள் ஆர்டிமிசினினை தனிமருந்தாக தயாரித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேரியாவிற்கான உலக சுகாதாநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேரியாவிற்கான நிரந்தரமான தீர்வை அறிவியல் உலகம் விரைவில் கண்டுபிடித்து விடக் கூடும். ஆனால் அந்நோயினை பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது. அதுவரை இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மலேரியாவால் சாகும் போது, அந்த எண்ணிக்கையைக் குறைத்து விட்டு வல்லரசு ஜோரை காண்பிப்பதையே இந்திய அரசு செய்யும்.

– சுந்தரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க