privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

கோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

-

புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களால் கடந்த 24-08-2016 அன்று கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலைய நுழை வாயிலில் நடைபெற்றது.

new-education-policy-kovai-demo-01அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதற்காக கோவை மாவட்ட பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் உமா மீது ஒரு வழக்கு, அனுமதி கேட்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரின் மீதும் ஒரு வழக்கு எனப் பதிந்து கருத்து சுதந்திரம் எனும் தமது ஒப்பனை கலைந்த விகார முகத்தை மீண்டும் ஒருமுறை காவல் துறை காட்டியுள்ளது.

கோவை மாவட்ட ம.க.இ.க செயல் வீரர் தோழர் மணிவண்ணன் இறப்பிற்கு கோவை வந்திருந்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒரு கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. “கோவை என்பது குட்டி காஷ்மீரம் போல. இங்கு மட்டும் போலீசுக்கு தனி சட்டம், தனி விதிமுறைகள் அதையொட்டிய அடக்குமுறைகள்”. மேற்கண்ட கூற்றின் நடைமுறை விளக்கமே இந்த வழக்குகள்.

new-education-policy-kovai-demo-05மேற்கண்ட அதே இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர் மருதையன், “ம.க.இ,க.விலேயே அதிக முறை சிறை சென்ற தோழர்களில் மணிவண்ணனும் ஒருவர், சுமார் 25 முறை சிறை சென்றிருக்கிறார்” எனக் கூறினார். அவர் 25 தடவைகளிலும் கோவை சிறையைத்தான் கணிசமான முறை பார்த்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை.

ஆக, இப்படி அடக்குமுறைக்கு பெயர் போன கோவை மாவட்டம் தனது இந்த காவல்துறை பாசிசத்துக்கான அடிச்சுவட்டில் முன் சென்ற காலம் என்பது ஆர்‌.எஸ்‌.எஸ் தீவிரவாதிகளும் மத வெறிக் காலிகளும் காவல் துறையுடன் இணைந்து நடத்திய 1998 கலவரத்தில் இருந்து துவங்குகிறது இதன் கேடு கெட்ட வரலாறு. 1998 துவங்கி இதுகாறும் சுமார் 18 ஆண்டுகளாக தொடர்கிறது. சுவரொட்டி ஒட்டத் தடை, தெருமுனைக் கூட்டம் நடத்தத் தடை, பஸ் பிரச்சாரம் செய்ய தடை, பகுதிப் பிரச்சாரம் செய்யத் தடை. வழக்கு வழக்கு வழக்கு என்று சுருங்கச் சொன்னால் இது ஒரு குட்டி காஷ்மீரம் தான்.

new-education-policy-kovai-demo-07இந்த சிறப்பு நிலைமைதான் மத வெறியர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஜனநாயக அமைப்புகளின் நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை வழக்கு மிரட்டல் போன்ற பல்வேறு வகைகளில் ஒடுக்குகிறது. ஜக்கிக்கு, சி‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் நிறுவன முதலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதும் இதே காவல் துறைதான். அதே ஜக்கியால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ – அது மதுரையை சேர்ந்த காவலராகவே இருக்கட்டுமே – அவர்களையும் மேற்கண்ட பாசிச முதலாளிகளை எதிர்த்துப் போராடினால் அவர்களை ஒடுக்குவதும் இதே காவல் துறைதான். மேற்கு தொடர்ச்சி மலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு, நொய்யலை நோயாளியாக்கி ஐ‌.சி‌.யு வில் கிடத்தியிருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் இதே காவல் துறை தான். அதே மேற்குத் தொடர்ச்சி மலைக்காக, நொய்யலுக்காக, சிறுவாணிக்காக போராடுபவர்களை நசுக்கி ஒடுக்குவதும் இதே காவல் துறைதான்.

new-education-policy-kovai-demo-09பு.மா.இ.மு-வின் மேற்கண்ட ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்காமல் நடத்துவது என்ற முடிவின் படி அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். சுவரொட்டியை பார்த்தவுடன் சுமார்-10க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் அழைத்து, “எங்கு செய்யப் போகிறீர்கள் எனக் கூறுங்கள். நாங்க உங்களுக்கு பர்மிஷன் தர மாட்டோம்னு சொல்லிருக்கோமா.. ஏன் இப்பிடிப் பண்ணுகிறீர்கள்?” என கேட்டு டார்ச்சர் செய்வது, “இன்ஸ்பெக்டர்கிட்ட சும்மா அனுமதி மாதிரி எழுதிக் கொடுத்திருங்க.” என்பன போன்ற இடையூறுகளை தாண்டி அந்த வலிய பிரச்சினைக்கான எளிய எதிர்ப்புக் குரல் 24-08-2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது. மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற பின்பு கொடி, முழக்கத் தட்டிகள் பதாகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்கின்றனர். வழக்கு போடுவதாக அறிவிக்கின்றனர். ஆக, இவர்கள் அனைத்து முனைகளிலும் அத்துமீறி நடப்பார்களாம். நாம் அனைத்திற்கும் தகவல் சொல்லி இவர்களுக்கு முறையாக அழைப்பு கொடுத்து நடக்க வேண்டுமாம். போராட்டம் கருவாகும் போதே காவல் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டாக வேண்டும் என்பது தான் இங்கு சொல்லிக் கொள்ளும் ஜனநாயகத்தின் நடைமுறை வடிவம்.

new-education-policy-kovai-demo-08அதிலும், இறுதியாக ரேஸ்கோர்ஸ் காவல் துறை ஆய்வாளர் மண்டபத்திற்கு வந்து பேசியது காவல் துறை அதிகாரிகளின் வழக்கமான நயவஞ்சகமான தேன் தடவிய மிரட்டலுக்கு ஒரு வகை மாதிரி. “நீங்க செய்வதெல்லாம் நல்ல விஷயம் தான். நானும் சின்ன வயசில இது மாதிரி இருந்து வந்தவன் தான். நீங்க என்ன பண்ணாலும் சொல்லிட்டு பண்ணுங்க. நாங்களும் இதையெல்லாம் நல்லதுன்னு நினைக்கிறோம். இருந்தாலும், என் உயிர் போன்ற காவல்துறையை நீங்க இதே போல் அலைக்கழித்தால் கண்டிப்பாக ரிமாண்டுதான். மேலதிகாரிங்க சொல்லியும் நாங்க உங்களை வழக்கோடு விடுறோம். எழுதி வச்சுக்கோங்க, இன்னொரு முறை இது போல செய்தால் சிறைதான்.” என்று பகிரங்கமாகவே மிரட்டினார்.

போராட்டக் கொதிகலனாய் பாட்டாளி வர்க்க உலைக்களமாய் இருந்த தொழில் நகரான கோவையை காயடித்ததில் போலிகளான சி‌.பி‌.ஐ, சி‌.பி‌.எம்.க்கு பிரதான பங்கு இருக்கிறது. போராட்டம் என்பதையே அறிமுகப்படுத்தாத ஒரு தலைமுறையை இங்கு உருவாக்கியதன் விளைவுதான் இது. இதை மாற்றுகையில் நம் பக்கம் ஏற்படும் சேதாரம் தவிர்க்கவியலாதது. மரபு ரீதியிலான போராட்ட வடிவங்களை தாண்டி கோவையில் நடந்த இந்த போராட்டம் என்பது கோலியாத்தை நோக்கி தாவீது வீசிய ஒற்றைக் கல். இதை நிச்சயமாய் வளர்த்தெடுப்போம். அன்று, பேசிப்பார்க்கட்டும் இதே உயிர் போன்ற காவல் துறையின் மேன்மையை பறை சாற்றும் கஞ்சி போட்ட வசனங்களை !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க