privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபோடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !

போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !

-

களச் செய்திகள் – 01/09/2016

1. போடியில் ஜமின்தாரிணி காமுலம்மாள் மேல்நிலைப் பள்ளி (ZKM பள்ளி)-யின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

bodi-zkm-school-demo-2தேனி மாவட்டம் போடி நகரில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவருகிறது ZKM மேல்நிலைப்பள்ளி! அரசு உதவிபெறும் இப்பள்ளியில் சுமார் 4000 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். ஊர்மக்களில் சாதிவாரியாக சிலரை மட்டும் தேர்வுசெய்து, உருவாக்கப்பட்ட கமிட்டிதான் இப்பள்ளியை நிர்வாகம் செய்து வருகிறது! ஆனால், இக்கமிட்டியில் தாழ்த்தப்பட்டோரும், கள்ளர் சாதியினரும் அனுமதிக்கப் படுவதில்லை! பள்ளி நிர்வாகத்தில் அய்யப்பராஜ் என்ற வழக்குரைஞர்தான் நாட்டாமையாக வலம்வருகிறார்!

பெரும்பாலும் கூலி விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில், அரசு விதிமுறைகள் எதற்கும் கட்டுப்படாமல் வரைமுறை ஏதுமின்றி கட்டணக் கொள்ளையடித்து வருகிறது பள்ளி நிர்வாகம்! ஊர்சாதிப் பிரமுகர்களின் செல்வாக்கு, போடி ஜமீனின் பின்னணி காரணமாக பாதிக்கப்படும் யாரும் தட்டிக்கேட்க துணிவதில்லை! தட்டிக்கேட்கும் அதிகாரத்தில் உள்ள DEO, CEO போன்ற அதிகாரிகளோ கமிசன் வசூலிப்பதையே தங்களது கடமையாக கொண்டுள்ளனர்!

இந்நிலையில், மாரிமுத்து என்ற சுமைதூக்கும் தொழிலாளியிடம் அவருடைய மகனை 8-ம்வகுப்பில் சேர்ப்பதற்கு கல்விக் கட்டணமாக 10,500-ம், விடுதிக் கட்டணமாக 5000-ம் ரூபாயும் வாங்கியுள்ளது பள்ளி நிர்வாகம். சேர்ந்த ஒரு வாரத்தில் தன் மகனுக்கு அந்தப்பள்ளி ஒத்துவராததால், அங்கிருந்து வெளியேறி அரசுப்பள்ளியில் தன் மகனை சேர்த்துவிட்ட மாரிமுத்து, 5 நாள் மட்டுமே மகன் படித்த ZKM பள்ளி நிர்வாகத்திடம் சென்று “அய்யா, நான் கட்டிய விடுதிக் கட்டணத்தை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். கல்விக் கட்டணமான 10,500-ஐ மட்டும் திருப்பிக் கொடுங்கள்” என்று தன் வறுமையை எடுத்துச்சொல்லி கெஞ்சிக் கதறியிருக்கிறார்! ஆனால் நிர்வாகமோ “அதெல்லாம் முடியாது” என்று ஈவியிரக்கமின்றி அந்த அப்பாவி தந்தையை விரட்டியடித்து விட்டது!

bodi-zkm-school-demo-4அதன்பிறகு, போடி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் தலையிட்டு கேட்டபோது, பள்ளி நிர்வாக நாட்டாமையான அய்யப்பராஜ், “எங்கள் நிர்வாகத்தில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பது சரித்திரத்திலேயே கிடையாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக்கொள்” என்று திமிராக பேசினார். இதனையடுத்து, பெற்றோர் சார்பில் மாவட்ட கல்விஅதிகாரி மற்றும் சி.இ.ஓ ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தோம். விசாரிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளியின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து விவிமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிபெற்று நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

பதறிப்போன டி.இ.ஓ, சி.இ.ஓ, மற்றும் பள்ளி நிர்வாகிகள் கூட்டம், தங்களின் விசுவாச ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மூலம் தூதுவிட்டு பாதிக்கப்பட்ட சுமைதூக்கும் தொழிலாளியை வீடுதேடிச் சென்றனர்! “உங்கள் பணத்தை வந்து வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள்” என்று கெஞ்சத் தொடங்கினர்! முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!

பாதிக்கப்பட்டது ஒரு மாணவன் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் இதேபோல கொள்ளையடித்திருக்கிறது ZKM பள்ளி! எனவே திட்டமிட்டபடி 24-08-2016 அன்று ஆர்ப்பாட்டத்தை துவங்கினோம். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே சம்பந்தப்பட்ட மாணவனின் தந்தையான மாரிமுத்துவை பகுதித் தோழர்களுடன் பள்ளிக்கு அனுப்பினோம்! மிக மரியாதையாக 10,600 ரூபாயைக் கொடுத்து “உங்கள் நோட்டிசில் 10,500 என்று குறைத்து போட்டு விட்டீர்கள். ஆனாலும் நாங்கள் வாங்கிய தொகையைக் கொடுத்து விடுகிறோம்” என்று நேர்மையின் அவதாரமாகக் கூறி அனுப்பியது நிர்வாகம்!

bodi-zkm-school-demo-3
[மங்கலான புகைப்படம்]
பணம் பெற்ற தந்தை நேராக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அவரை பொதுமக்களிடம் அறிமுகம் செய்து பணம் பெற்ற விவரத்தை அறிவிக்கச் செய்தோம்! இது மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது! ZKM பள்ளி நிர்வாகத்தை யாரும் அடக்க முடியாது என்ற மக்களின் அவநம்பிக்கை அவர்களின் கண்முன்னேயே நொறுக்கப்பட்டது!

மேலும், நமது பிரசுரத்தை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிப் படித்ததுடன், வீட்டிலிருக்கும் தங்கள் பெற்றோருக்கும் கொண்டு சென்றுள்ளனர்! ஆர்ப்பாட்ட நாளன்று, “மேலதிகாரிகள் வந்து கேட்டால் அதிகத்தொகை வசூலித்ததாக யாரும் புகார் சொல்லக்கூடாது” என்று மாணவர்களை மிரட்டியுள்ளது ZKM நிர்வாகம். ஆனால், “நாங்கள் செலுத்திய முழுத்தொகையையும் அதிகாரிகளிடம் சொல்வோம்” என்று தைரியமாக கூறிய பல மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கலந்து கொண்டனர்! ஒரு மாணவன் கண்டன உரையும் ஆற்றினார்!

பணிந்து போகும் வரைதான் அடிமைத்தனம். திருப்பிக் கேட்டு போராடினால் ஆண்டைகள் தப்பிக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது இந்த போராட்டம்.

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்.

2. வேதாரண்யத்தில் ரேஷன் கடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

vedaranyam-ration-shop-pp-demoவேதாரண்யம் பகுதி மக்கள் அதிகாரம், பெண்கள் பாதுகாப்புக் கமிட்டியும், அண்டர்காடு, ஆதனூர் பகுதியில் இயங்கிவரும் அங்காடியில் (ரேஷன்கடை) பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசி மற்றும் மானியவிலை பருப்பு, கோதுமை, சர்க்கரை, போன்ற பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், அளிக்கப்படாததை கண்டித்தும், இனி ஒழுங்கான முறையில் அனைத்து பொருட்களையும் வழங்கும் படி வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு அது தொடர்பான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதிகாரிகளின் பேச்சை ஏற்காத மக்கள் பிரச்சனை சரிபட செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடர்வது என முடிவெடுத்துள்ளனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க