privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஅவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !

அவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !

-

நினைவுகள் உயிர்பெறும்

(நுங்கம்பாக்கம் – சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே அடிபட்டு இறந்த 4 வடமாநிலத் தொழிலாளர்களின் நினைவாக…)

nungambakkam-workers-killed
காண்போர் இதயத்தின் துண்டுகளாய் கதறிய இருப்புப் பாதையின் கற்கள், தொழிலாளர்களின் ரத்தத்தில் துடித்து அடங்கியது.

ண்டவாளம் விண்டுவிட
அவர்களின்
கடைசி நேர
பரிதாப அலறலில்
காற்று நடுங்கியது.
காண்போர்
இதயத்தின் துண்டுகளாய்
கதறிய இருப்புப் பாதையின்
கற்கள்,
தொழிலாளர்களின் ரத்தத்தில்
துடித்து அடங்கியது.

எச்சரிக்கையாய் அவர்கள்
இருப்புப் பாதையை
கடந்திருக்கலாம்தான்…
எத்தனை எச்சரிக்கைகள்
அவர்கள் வாழ்க்கை நெடுக…

எந்தக் காரணத்தைக் கொண்டும்
இடையில்
ஊருக்குச் செல்லக் கூடாது
என்ற ‘ஏஜென்டின்’ எச்சரிக்கை,

north-indian-construction-workers-3
எந்தப் பணிப்பாதுகாப்பு உரிமையும் கோரக் கூடாது என்ற வேலையின் எச்சரிக்கை

எந்த வேலை கொடுத்தாலும்
சேர்ந்து செய்ய வேண்டும்
என்ற ‘காண்ட்ராக்ட்டின்’ எச்சரிக்கை,

எந்த உத்திரவாதமும் கேட்கக் கூடாது
எந்த கம்பெனியோடும்
நேரடி அடையாளம் கிடையாது
எந்தப் பணிப்பாதுகாப்பு உரிமையும்
கோரக் கூடாது
என்ற வேலையின் எச்சரிக்கை,

எட்டு மணிக்கெல்லாம்
‘ஸ்பாட்ல’ இருக்கனும்
என்ற பணியிடத்து எச்சரிக்கை.

இப்படி,
வாழ்வு நெடுக
பிறர் எச்சரிக்கையாலேயே
வழிநடத்தப்படும் தொழிலாளிக்கு,
வாழ்க்கைப் பற்றிய
தன்னெச்சரிக்கைக்குக் கூட
வழி இல்லாத சூழல்தான் !

சாவின் சத்தம்
நெருங்கும் போதும்
கவனிக்க இயலாமல்
அவர்களைச்
சமன் குலைத்த
வாழ்வின் அதிர்வுகள்
எதுவோ?

voter-id-card
வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் தெரியாத உடல்களை வாக்காளர் அட்டை மட்டும் அடையாளம் காட்டியது.

வாழ்ந்தார்கள்
என்ற அடையாளம் தெரியாத
உடல்களை
வாக்காளர் அட்டை மட்டும்
அடையாளம் காட்டியது.

“அப்படி என்ன அலட்சியம்?
செல்போன் பேசிட்டே போயிருக்கலாம்…
சேர்ந்து ஜாலி அரட்டையாயிருக்கலாம்…” என
சாவுக்கான புறநிலையின் மீது
வரும் சந்தேகம்
அவர்கள்
வாழ்க்கை நிலைமையின் மீது
வருவதில்லை !

சாவு மூட்டையாய்
அவர்களை அழுத்திய
வாழ்வின் அடையாளம்
முதுகுப் பைகளாய்
ஏக்கம் நிரம்பிக் கிடக்கின்றன.

migrant_workers_2
அவர்கள் சாவுக்கு அவர்களே பொறுப்பு ! சரி அவர்கள் வாழ்வுக்கு ?

இரங்கும் உலகம் கூட
எச்சரிக்கிறது,
அவர்கள் சாவுக்கு
அவர்களே பொறுப்பு !

சரி
அவர்கள் வாழ்வுக்கு ?

ஒடிசா, பீகார், ஜார்கண்ட்…
என,
கனிம வளங்கள் ததும்பும் மண்ணில்
கை வைக்கும் அன்னிய முதலாளிகள்
உலகப் பணக்கார வரிசையில்
இடம்பெறும் போது,
மண்ணின் மைந்தர்கள்
வாழ இடம்பெயர்ந்து
அனாதைப் பிணங்களாக
வீழும் நிலைக்கு யார் பொறுப்பு?

அவர்கள்
வாழ இடம்பெயர்ந்ததற்கான
காரணங்களிலேயே
சாக இடம்பெயர்ந்ததற்கான
காரணங்களும் உள்ளதை
உணர்வதற்கு,
இரக்கத்தின் பிடிப்பு மட்டும்
போதாது
வர்க்கத்தின் துடிப்பும் வேண்டும்!

odhisha-ambulance-denied
அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம்

அழுது கதறும் பிள்ளையை
அழைத்துக் கொண்டு
இறந்த மனைவியின் உடலை
தோளிலேயே தூக்கிக்கொண்டு
ஊருக்கு பல மைல் நடக்கும்
ஒடிசாவின் துயரம் கூட,
ரயிலில்
அடித்துத் தூக்கி எறியப்பட்ட
ஒடிசாவின் பிள்ளைகளுக்கு
வாய்க்குமா தெரியவில்லை !

யாருக்கோ உழைத்து,
யாருக்கோ செத்து
ஊருக்கு போகுமோ
பிணங்கள் !

காசில்லாமல் ஏழைகளுக்கு
பிண ஊர்தியும்
அரசிடம் கிடைக்காத நாட்டில்
இலவசமாக
சாவு வருவதற்கு மட்டும்
எந்தத் தடையும் இல்லை!

துடித்து அடங்கிய
இறுதித் தவிப்பில்,
அவர்கள் தாயை
அவர்கள் உறவை
அவர்கள் தாய்மண்ணை
அவர்கள் வர்க்கத்தை
இழந்த
துயரத்தைச் சுமக்க
வார்த்தைகளால் முடியாது
வர்க்கம் வேண்டும் நமக்கு !

north-indian-construction-workers-1
வட மாநிலமாயினும் தென்பகுதி ஆனாலும் சரி… எங்கிருப்பினும் எங்கள் தொழிலாளியே எங்கிறப்பினும் எங்கள் தொழிலாளியே…!

என்ன நினைப்பில்
வழித்தடம் நடந்து
உயிர்த்தடம் இழந்த
தொழிலாளர்களே !

வட மாநிலமாயினும்
தென்பகுதி ஆனாலும் சரி…
கனடாவின் ‘ரெஸ்ட்டாரண்டில்’
வேலை செய்யும்
ஈழத் தமிழனாயிருந்தாலும் சரி,
கத்தாரின் பாலை வெயிலில்
ஆடு மேய்க்கும்
தமிழகத் தமிழனாயிருந்தாலும் சரி,
மணலியின் பாய்லரில்
ரத்தம் கொதிக்கும்
வட மாநிலத் தொழிலாளியாயிருந்தாலும் சரி,

எங்கிருப்பினும்
எங்கள் தொழிலாளியே
எங்கிறப்பினும்
எங்கள் தொழிலாளியே…!

தப்பிக்க எத்தனித்து
அடிபட்டு
விறைத்து நீண்டிருக்கும்
உங்கள் விரல்களை
வர்க்கமாய் பற்றிக் கொள்கிறோம்
இழப்பின் வலியோடு !

செத்த துயரம் பெரியது
வாழ்வின்
மொத்தத் துயரமோ கொடியது!
சாவின் கொடூரத்தில்
நினைவிழந்த
உங்கள் இறப்புக்கு
இப்போதைக்கு ஈர அஞ்சலி!

உங்களுக்கு வழங்கப்பட்ட
வாழ்வின் கொடூரங்களுக்கு
மலர் வளையம்
வைக்கப்படும்பொழுது
உங்கள் நினைவுகள்
உயிர்பெறும் !

– துரை சண்முகம்