privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் - ஆய்வுக் கட்டுரை - அவசியம் படிக்க !

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !

-

செப்டம்பர் 16, 2016 தேதியிட்ட ஃபிரண்ட்லைன் இதழில் வெளியான நவீன அறிவியல் வரலாறு துறையில் பணியாற்றும் மீரா நந்தா எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு (சாய்வு எழுத்துக்கள் அனைத்தும் மூலக் கட்டுரையில் அழுத்தம் தரப்பட்டவை)

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

ன்றைய உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் நவீன உலகை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அறிவு பாரம்பரியம் எதுவென்றால், அது நவீன அறிவியல்தான். புராதன அரேபிய, இந்திய, சீன நாகரீகங்கள் அறிவியல் தேடல்களில் பங்களித்தன என்பதில் ஐயமில்லை என்றாலும், நவீன அறிவியலின் பிறப்புக்கு வழிவகுத்த புரட்சிகரமான மாற்றங்கள் 16-ம் நூற்றாண்டிலிருந்து, 17-ம் நூற்றாண்டு வரை மேற்குலகில் நிகழ்ந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. நவீன அறிவியலின் அனைத்தும் தழுவிய செயல்முறைகளும், கோட்பாடுகளும், அவற்றின் ஐரோப்பிய தாய் வீட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவின. அத்தகைய பரவல் பெரும்பாலும் காலனிய ஆதிக்கத்தின் உடன் இணைப்பாக நிகழ்ந்தது.

பிளிம்ப்டன் 322
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உள்ள பிளிம்ப்டன் சேகரிப்பில் உள்ள பிளிம்ப்டன் 322. பிதாகரஸ் மும்மைகளை கியூனிஃபார்ம் எண்குறியீடுகளில் காட்டுகிறது. கி.மு 1900-1600 காலகட்டத்திலானது.

நவீன அறிவியல் ஐரோப்பாவில் உதித்தது என்ற உண்மையும், அது மேற்கத்திய நாடுகளின் நாடு பிடித்தல்கள் மூலமாகத்தான் உலகின் பிற பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது என்ற உண்மையும் பெருமைமிக்க கிழக்கத்திய புராதன நாகரீகங்கள் அனைத்துக்கும் வெறுப்புணர்ச்சி எனும் அளவில் ஆழமான மன உளைச்சலை ஏற்படுத்தின. வேறு எந்த நாட்டையும் விட பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பெரும் சுமையை மிக நீண்ட காலம் சுமந்த இந்தியாவில் இந்த மன உளைச்சல் அதிக ஆழமாக உணரப்படுகிறது.

பிரச்சனை இதுதான். நவீன அறிவியலும், அது பிறப்பித்த எண்ணற்ற தொழில்நுட்பங்களும் இல்லாமல் வாழவும் நம்மால் முடியவில்லை, மிகச் செழுமையான, மிகத் திறன் வாய்ந்த இந்த அறிவுப் பாரம்பரியம், என்ன ஆனாலும், ஒரு “மிலேச்ச” பாரம்பரியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. யாருடைய நாகரீகத்தை நாம் எகத்தாளம் செய்கிறோமோ, அந்த மாட்டிறைச்சி உண்ணும், ஆச்சாரமில்லாத, ஆன்மீக மேன்மைகள் கொண்டிராத “பொருள்முதல்வாதிகள்” இயற்கை அறிவைப் பொறுத்தவரையில் நம்மில் தலைசிறந்தவர்களை தோற்கடித்து விட்டார்கள் என்பது நமக்கு எரிச்சலூட்டுகிறது. எனவே, அறிவியலுக்காக ஏங்கியபடி “அறிவியல் வல்லரசு” ஆவதில் பெருமளவு பணத்தை கொட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நவீன அறிவியலின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். அதன் “பொருள் முதல்வாதத்தை”, அதன் “எளிமைவாதத்தை”, “ஐரோப்பிய மையவாதத்தை” கண்டனம் செய்கிறோம். மேற்கத்திய உலகின் பொருள்முதல்வாத முன்துருத்திகளின் அறிவியல் நமக்கு தேவைப்படுகிறது, ஆனால் ஜகத்குரு அந்தஸ்து நமக்கே உரியது என்ற ஆன்மீக உயர்வு மனப்பான்மையையும் நம்மால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

தொடக்கம் முதலே இந்த ஆசையும், வயிற்றெரிச்சலும், உள்ளார்ந்த “ஆரிய” உயர்வு மனப்பான்மையும் கலந்த மரணக் கலவைதான் நவீன அறிவியல்-தொழில்நுட்பத்துடனான இந்திய உறவின் தன்மையாக உள்ளது. பங்கிம்சந்திர சட்டோபாத்யாயா, விவேகானந்தா, தயானந்த சரஸ்வதி, அன்னி பெசன்ட் (மற்றும் சக பிரம்மஞான சபையினர்), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.கோல்வால்கர், இன்னும் எண்ணற்ற பிற குருக்கள், தத்துவஞானிகள், பிரச்சாரகர்கள் என இந்து மறுமலர்ச்சி கால சிந்தனையாளர்களின் எந்த மகத்தான படைப்பையும் படித்துப் பார்த்தாலும், கொதிநிலைக்கு அருகிலான இந்த அறிவியல் வயிற்றெரிச்சலும், கர்வபங்கமும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை எதிர் கொள்ள முடியும்.

வேதங்கள் அறிவியலின் தாயாக

யேல் சேகரிப்பு
யேல் பல்கலைக் கழகத்தில் உள்ள பாபிலோன் சேகரிப்பு, கி.மு 1900 என மதிப்பிடப்பட்டது. கர்ணத்தின் மேலாக எழுதப்பட்டுள்ள 1 24 51 10 என்பது 1+24/60+51/3600+10/2160000 = 1.41421296 என்ற 2-ன் வர்க்க மூலத்துக்கு 9 தசம இடங்களுக்கு துல்லியமாக உள்ளது. கர்ணத்தின் நீளம் 2-ன் வர்க்க மூலத்தை 30-ஆல் பெருக்கிக் கிடைப்பது, 60-ஐ அடியாகக் கொண்ட எண்முறையில் அது 42 25 35 என்று எழுதப்படுகிறது. பாபிலோனியர்களுக்கு சதுரத்தின் கர்ணத்தின் நீளம் பக்க நீளத்தை விட 2-ன் வர்க்க மூலத்துக்கு சமம் என்பதை அறிந்திருந்தார்கள்.

“நவீன அறிவியலை வேதக் கட்டமைப்புக்குள் பொருத்துவதன்” மூலம் இந்துக்கள் அவர்களது தர்ம பாரம்பரியங்களின் “வேறுபாட்டை” (“மேன்மை” என்று புரிந்து கொள்ள வேண்டும்) நிலை நாட்ட வேண்டும் என்ற ராஜீவ் மல்கோத்ராவின் அறிவுறுத்தலில் இந்த வெறுப்புணர்ச்சியின் மிகச் சமீபத்திய வெளிப்பாடு காணக் கிடைக்கிறது. இந்த சாதனையை எப்படி செய்ய வேண்டுமாம்? நமது பண்டைய முனிவர்கள் “ரிஷி நிலையில்” பெற்றுக் கொண்ட “மனித மனத்தினாலோ, சூழ்நிலைகளினாலோ மாசுபடுத்தப்படாத அழிவற்ற, அறுதி உண்மை” யான வேத ஸ்ருதியின் ஒரு ஸ்மிரிதியாக (புலனறிவையும், தர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட மனித கட்டமைப்பு) நவீன அறிவியலை கருத வேண்டும் என்று மல்ஹோத்ரா பரிந்துரைக்கிறார்.

அதாவது, நடைமுறையில், நவீன அறிவியல் கோட்பாடுகளை வேத வகைப்பாடுகளின் ஒரு உட்பிரிவாக மாற்ற வேண்டும். எனவே, உதாரணமாக,

  • ஒரு அமைப்பின் துல்லியமான, அளவிடக்கூடிய வேலை செய்யும் திறனான ஆற்றல் என்ற இயற்பியல் கோட்பாடு, நமது யோக முனிகள் அறிந்திருந்த “ஷக்தி” அல்லது “அறிவார்ந்த ஆற்றலின்” ஒரு உள் வகையாக பொருள்கூறப்பட வேண்டும்.காரணமும் விளைவும் பற்றி ஆய்வு செய்வதால் இயற்பியல் என்ற அறிவியல் பிரிவு மொத்தமும் கர்ம வினை கோட்பாட்டின் “அனுபவவாத” இனங்களாக ஆகி விடும்.டார்வின் கோட்பாடு யோக சூத்திரங்களில் கற்பிக்கப்படும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் வெறும் பொருளாயத வடிவமே

என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

பிதாகரஸ் தேற்றம்
“சௌ பெய்” (சுமார் கி.மு 1000-600)-ல் தரப்பட்டுள்ள பிதாகரஸ் தேற்றத்தின் பட வடிவிலான நிரூபணம்

இந்த வழியில் நாம் நவீன அறிவியலை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம், அதேநேரம் ஆசீர்வதிக்கப்பட்ட நமது ரிஷி அந்தஸ்தின் புனித ஒளியை தக்க வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அது மட்டுமில்லை, அறிவியல் அறிவு என்ற நதியை, வேதங்கள் என்ற கடலில் கலக்க வைத்து விட்டால், இந்து தேசியவாதிகளின் மிக விருப்பமான கனவு நிறைவேறி இந்தியா “ஜகத்குரு” என்ற அந்தஸ்தை அடைந்து விடும்.

உண்மையில், வேத உலகப் பார்வைக்கும், நவீன அறிவியலுக்கும் இடையே நேரடி ஒற்றுமை இருப்பதாகக் கூறிக் கொள்வது இந்து தேசியவாதிகளின் நிகழ்ச்சிநிரலில் ஆரம்ப முதலே இருந்த ஒன்று. அது நமது அறிவியல் வயிற்றெரிச்சலுக்கான மிகவும் புத்திசாலித்தனமான தீர்வு. நவீன அறிவியல் நமது ரிஷிகளுக்கு ஏற்கனவே, எப்போதும் தெரிந்திருந்த வேத ஆன்மீக அறிவியல் என்ற பெருங்கடலில் போய்ச் சேரும் ஒரு சாதாரண துணையாறு மட்டும்தான் என்றால், மேற்குலகுதான் வேதங்களை பார்த்து வயிற்றெரிச்சல் பட வேண்டும். இது காயமடைந்த நமது நாகரீக கர்வத்துக்கு தைலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அறிவியலை கொண்டு போய் வேதங்களுடன் ஒட்ட வைக்கும் உத்தி வேதங்களுக்கு ஒரு அறிவியல் பளபளப்பை பூசுகிறது. இருப்பினும், இறுதிக் கணக்கில், வேதங்கள்-அறிவியலின்-தாய் என்பது ஃப்ளோரிஸ் கோகன் என்ற அறிவியல் வரலாற்றியலாளரின் வார்த்தைகளில் “ஒரு மகத்தான முட்டுச் சந்து”தான். ஏனென்றால், ரிஷிகள் தவிர்த்த சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய முறைகள் மூலம் புதிய கேள்விகளை எழுப்பவோ, புதிய விடைகளை வழங்கவோ எந்தவித திறனும் அற்றது அது.

அறிவியலின் வரலாற்றை திரித்துப் புரட்டுதல்

நவீன அறிவியலை ஒரு ஸ்மிரிதியாக மாற்றி விடும் இந்த செயல்திட்டத்துக்கு உதவியாக இருப்பது அறிவியல் வரலாற்றில் பெரும் அளவிலான, திரும்பத் திரும்ப செய்யப்பட்டு வரும் புரட்டல்கள்தான். இந்தப் புரட்டல்கள் தரவுகளின் மட்டத்திலும் தரவுகளுக்கு பொருள் கூறும் மட்டத்திலும் நடகிறது. பிற சக நாகரீகங்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு பண்டைய இந்தியாதான் முதலில் சாதித்தது என்ற பெருமையை நிலைநாட்ட முயலும் போது அல்லது புராணங்களுக்கு அப்படியே நேரடி பொருள் கற்பிக்கும் போது உண்மைகள் திரித்துப் புரட்டப்படுகின்றன. குவாண்டம் இயற்பியல், கணினி அறிவியல், மரபணுவியல், நரம்பு அறிவியல் முதலான நவீனகால அறிவியலை நமது பழமையான கடந்த கால முனிவர்களுடையதும், தத்துவஞானிகளுடையதும் ஆன சிந்தனைகளாக காட்டுவதன் மூலம் மேலும் அடிமைப்படுத்தும் புரட்டல்கள் செய்யப்படுகின்றன. “வேத அறிவியல்” என்ற பெரும் மாளிகை அத்தகைய புரட்டல்களின் மீது கட்டப்பட்டுள்ளது.

கம்போடிய கல்வெட்டு
இந்த கம்போடிய கல்வெட்டில் “சக்கர சகாப்தம் தேய்பிறையின் 5-வது நாளில் 605-ம் ஆண்டை எட்டியது” என்று பழைய கீமரில் எழுதப்பட்டுள்ளது. (வலது பக்கம்) காட்டப்பட்டுள்ள புள்ளி மனிதன் அறிந்துள்ள சுழியின் மிகப் பழமையான வடிவம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரட்டல்கள் அனைத்தும் நரேந்திர மோடி அரசின் முதல் ஆண்டில் காட்சிக்கு விடப்பட்டன. இப்போது எண்ணற்ற மாநில கல்வித் துறைகளிலும், சிந்தனை குழாம்களிலும், இயக்கங்களிலும் அது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2014-ல் நரேந்திர மோடி நிகழ்த்திய கர்ணன்-விநாயகர் உரையும், ஜனவரி 2015 மும்பை அறிவியல் மாநாட்டின் நிகழ்வுகளும் இப்போது எல்லோருக்கும் தெரிந்தவை. இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும் பெரிய பனிப்பாறையின் கண்ணுக்குத் தெரியக் கூடிய விளிம்பு மட்டும்தான் இந்த உயர் அதிகார நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகள் ஊடகங்களில் அவற்றுக்கான குறுகிய கால இழிபுகழை ஈட்டினாலும், நடைமுறையில் செய்யப்படும் புரட்டல்கள் அறிவியல் வரலாற்றாளர்களின் தீவிரமான சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த அரை உண்மைகளை பிரித்து ஆராய்ந்து, பிற பழங்கால நாகரீகங்களிலிருந்து கிடைத்திருக்கும் சான்றுகளின் ஒளியில் சோதிக்கப்படா விட்டால், அவை மீண்டும் மீண்டும் பரப்பப்படும்.

பின்வரும் பகுதியில் இந்திய அறிவியலின் வரலாறு குறித்த மூன்று செல்ல உரிமை பாராட்டல்கள், தரவுகளின் அடிப்படையில் தேசியவாத கற்பனைகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் வகையில் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த உரிமை பாராட்டல்களில் இரண்டு கணிதத்துடன் தொடர்புடையவை : பழங்கால இந்தியாவின் கயிறு இழுப்பவரும், பலிபீடம் அமைப்பவருமான பௌதாயனர் என்பவர்தான் பிதாகரஸ் கோட்பாட்டின் உண்மையான கண்டுபிடிப்பாளர் என்கிறது ஒன்று. இரண்டாவது, இந்தியாதான் “சூன்யம்” அல்லது சுழியின் பிறப்பிடம் என்ற மிகவும் கொண்டாடப்படும் “உண்மை”. மூன்றாவது உரிமை பாராட்டல் மரபணுவியல் தொடர்பானது; மரபுவழி பண்புகள் பற்றிய பண்டைய இந்தியாவின் புரிதல் தொடர்பானது. (இவற்றையும், தொடர்புடைய மற்ற உரிமை பாராட்டல்களையும் “காவியில் அறிவியல் – அறிவியல் வரலாறு பற்றி கேள்வி எழுப்பும் கட்டுரைகள்” என்ற புத்தகத்தில் நான் பரிசீலித்துள்ளேன். இங்கு தரப்படும் வாதங்களின் வரலாற்று மற்றும் தொழில்நுட்பப் பின்னணியை தெரிந்து கொள்ள அந்த புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்).

பிதாகரஸ் தேற்றம்

நவீன கால துருக்கியை அடுத்த ஒரு தீவில் சுமார் கி.பி 570-ல் பிறந்த சிந்தனையாளர்-கணிதவியலாளர் பிதாகரஸ் இந்தியாவில் பெருமளவு வசவுகளுக்கு ஆளாகிறார். அவரது பெயரிலான தேற்றத்தை அவர் கண்டுபிடித்ததாக தவறாகவும், நியாயமற்றும் உரிமை தரப்படும் ஒரு நபராக அவர் பார்க்கப்படுகிறார். அதை உண்மையில் கண்டுபிடித்தவர், ஒரு பூசாரியும் கைவினைஞரும் கி.மு 800 முதல் கி.மு 200க்குள்ளான காலத்தினதாக கருதப்படும் “பௌதாயன சுல்வசூத்ரங்களை” இயற்றியவருமான நம்ம நாட்டு பௌதாயனர்தானாம். பௌதாயனரின் படைப்பு பிதாகரசின் காலத்துக்கு முற்பட்டதாக இருப்பதால், பிதாகரஸ் இந்தியாவுக்கு வந்து அந்தத் தேற்றத்தை (கூடவே இந்து மறுபிறவிக் கோட்பாடு, சைவ உணவுக் கோட்பாட்டையும்) இந்து சாமியார்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே, பிதாகரஸ் தேற்றத்துக்கு “பௌதாயனர் தேற்றம்” என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது இந்து மையவாத வரலாற்றாசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை. பிதாகரஸ் தேற்றத்தை கண்டுபிடித்த பெருமை மட்டுமில்லை, அந்தத் தேற்றத்துக்கான நிரூபணத்தை முதன்முதலில் தந்தவரும், விகிதமுறா எண்களை முதலில் புரிந்து கொண்டவரும், 2-ன் வர்க்க மூலத்தை முதலில் கணக்கிட்டவரும் என இன்னும் பல பெருமைகள் பௌதாயனருக்கு உரியவை என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு வரலாற்று மாநாட்டில் உரையாற்றிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் இந்த உணர்வுக்குத்தான் உருக் கொடுத்தார்.

சதுர்பூஜா கோயில்
இந்தியாவில் சுழிக்கு முதல் ஆதாரம் கண்டறியப்பட்ட இடம் மத்திய பிரதேசத்திலுள்ள சதுர்பூஜா கோயில். இந்தக் கோயில் இப்போது இருக்கும் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை விடப் பழமையானது, 876-ம் ஆண்டிலானது என்று மதிபிடப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலில் இப்போது வழிபாட்டுத் தலமாக இல்லை.

பௌதாயனருக்கு முதலிடம் கொடுக்கும் மேலே சொன்ன அனைத்து உரிமை பாராட்டல்களும் பொய். இந்தியாவுக்கு அப்பால் பார்வையை செலுத்தி சுல்வசூத்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்டத்தில் மற்ற முக்கியமான நாகரீகங்களில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று பார்க்கும் போது இந்த உரிமை கோரல்கள் காற்றோடு கலந்து மறைந்து விடுகின்றன. பௌதாயனர் பிறப்பதற்கு குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியர்கள் செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான உறவை புரிந்து வைத்திருந்தனர். மெசபடோமியர்கள் (அவர்களது அண்டை பகுதியினரான எகிப்தியர்களும்) ஒவ்வொரு முறையும் யூப்ரடிஸ்-டைக்ரிஸ் , நைல் நதிகள் வெள்ளம் பெருக்கோடி ஏற்கனவே குறித்திருக்கின்ற நில எல்லைகளை அடித்துச் சென்ற பிறகு மீண்டும் எல்லைகளை குறிப்பதற்காக நிலங்களை அளந்தனர். எகிப்திய ஆதாரங்கள் இன்னும் பிற்பட்ட காலத்திற்கானவையாக கிடைத்தாலும், மெசபடோமியர்கள் பிதாகரஸ் தேற்றத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கும், பிதாகரஸ் மும்மை எண்களை கணக்கிட்டிருந்தார்கள் என்பதற்கும், 2-ன் வர்க்க மூலத்தை கணக்கிட கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதற்கும் ஆன ஆதாரங்கள் கி.மு 1800 காலத்திலானவையாக மதிப்பிடப்பட்டுள்ள, பௌதாயனருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சுட்ட களிமண் பலகைகளில் கிடைக்கின்றன.

கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் பராமரிக்கப்படும் முறையே பிளிம்ப்டன் 322, ஒய்பிசி7289 என்ற இரண்டு களிமண் பலகைகள் கியூனிஃபார்ம் எழுத்துக்களின் உலகின் முன்னணி நிபுணரான ஆட்டோ நியூகெபௌவரால் 1940-களில் பொருள் கூறப்பட்டன. அவரும், அவரது சக ஆய்வாளர்களும், பிளிம்ப்டன் இப்போது நாம் பிதாகரஸ் மும்மை எண்கள் என்று அறிவதன் அட்டவணை என்று நிறுவினார்கள். யேல் பலகை, போற்றத்தக்க வகை துல்லியத்துடன் 2-ன் வர்க்க மூலத்துக்கான கணக்கீட்டை காட்டுகிறது. இந்தப் பலகைகள் மட்டுமே பௌதாயனரின் முதன்மை பற்றிய உரிமை பாராட்டல்களில் துளை போடுகின்றன.

மெசபடோமியாவிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவையும் தாண்டினால் சீனர்கள், கன்ஃபூசியஸின் காலத்திலோ (சுமார் கி.மு 600) அதற்கு முன்னரே கூட இந்தத் தேற்றத்தை புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கான நிரூபணத்தையும் கொடுத்திருந்தனர். இதற்கான சீன ஆதாரம் கி.மு 1100-க்கும் கி.மு 600-க்கும் இடைப்பட்ட காலத்தினதாக மதிப்பிடப்பட்டுள்ள “சௌ பெய் சுவான் சிங்” (“காலக் காட்டி மற்றும் வானத்தின் வட்ட பாதைகளுக்கான எண்ணியல் செந்நூல்”) என்ற நூலில் கிடைக்கிறது. பிற்காலத்தில் ஹான் பேரரசு காலத்திய (கி.பி 3-ம் நூற்றாண்டு) கணித நூல்கள், இந்தத் தேற்றத்தை முறைப்படுத்தி கௌ-கு கோட்பாடு என்று பெயர் சூட்டின.

சதுர்பூஜா பதிவு
எண் 270 மையத்தில் தென்பதும் சதுர்பூஜா கோயிலில் காணப்பட்ட இந்தப் பதிவில்தான் இந்தியாவில் “0”-வுக்கான முதல் தடயம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சீனர்களின் சாதனை, நிரூபணம் பற்றிய பிரச்சனையை நம் முன் எழுப்புகிறது. பலிபீடங்களை அமைப்பதற்கான கையேடான சுல்வசூத்திரங்கள் அனைத்து வகையான சிக்கலான வடிவகணித உருவங்களுக்கும் அவற்றின் உருமாற்றங்களுக்குமான மேம்பட்ட, புலமை வாய்ந்த உத்திகளை வழங்குகின்றன. ஆனால், இந்த வடிவகணித விதிகளை நிரூபிக்கவோ, நியாயப்படுத்தவோ அவை முயற்சிக்கவில்லை. மெசபடோமியர்களும், எகிப்தியர்களும் கூட நிரூபணத்துக்கான எந்த தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை.

அப்படியானால், பிதாரகஸ் தேற்றத்தின் முதல் நிரூபணம் எங்கிருந்து வந்தது? பிதாகரஸே அனைத்து வகையான செங்கோண முக்கோணங்களுக்கான பொதுவான நிரூபணத்தை வழங்கினாரா என்பது குறித்து தெளிவில்லை. கிரேக்க மரபில் இதற்கான முதல் தெளிவான நிரூபணம் பிதாகரசுக்கு 3 முழு நூற்றாண்டுகளுக்கு பிறகு வாழ்ந்த யூக்ளிட் இடமிருந்து கிடைக்கிறது. அனைத்து ஆதாரங்களும் பிதாகரஸ் தேற்றத்தின் முதல் நிரூபணமாக மேலே சொல்லப்பட்ட சீன நூலை சுட்டுகின்றன. அது யூக்ளிடுக்கு குறைந்தது 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. யூக்ளிடின் தர்க்கபூர்வமாக வந்தடையும் முறைக்கு மாறாக நிரூபணம் குறித்த சீன சிந்தனை, பொதுக் கோட்பாட்டை புரிந்து கொள்வதாக அமையும் ஒரு காட்சிப் படிவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேற்றத்தின் முதல் இந்திய நிரூபணம் 12-ம் நூற்றாண்டில் பாஸ்கராவிடம்தான் காணப்படுகிறது. சீன அறிவியலின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜோசப் நீதாம் மற்றும் பலர் சுட்டிக் காட்டுவது போல, பாஸ்கராவின் நிரூபணம் சௌ பெய்-ல் தரப்பட்டுள்ள சீன சுவான்-து வரைபடத்தின் “நேரடி மறுபிரதி”யே.

இது அனைத்திலும் பிதாகரஸின் பங்கு என்ன? அவரது புகழுக்குக் காரணமான இந்தத் தேற்றத்தை, சிறு வயதில் சிறிது காலம் எகிப்தியர்கள் மத்தியிலும் மெசபடோமியர்கள் மத்தியிலிருந்தும் செலவிட்டபோது அவர் கற்றுக் கொண்டார் என்பதை கிரேக்க மரபு அங்கீகரிக்கிறது. அவரது கணிதவியல் சிந்தனைக்கு இந்தத் தேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்டத்தின் அடிப்படை நிதர்சனத்தை எண்கள் மற்றும் அவற்றின் விகிதங்களாக புரிந்து கொள்ள முடியும் என்ற அவரது உலகப் பார்வையை விகிதமுறா எண்களின் கண்டுபிடிப்புக்கு இட்டுச் சென்ற இந்தத் தேற்றம் கேள்விக்குள்ளாக்கியது. அறிவியலின் வரலாற்றில் பிதாகரஸின் மகத்தான முக்கியத்துவம் அவரது பெயரைக் கொண்ட தேற்றத்தின் அடிப்படையிலானது அல்ல, மாறாக, இயற்கையை கணிதவியல் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்ற முக்கியமான சிந்தனையின் அடிப்படையிலானது. இந்த புரிதல்தான் யோகான் கெப்ளர், கலிலியோ கலிலி போன்ற நவீன அறிவியலின் முன்னோடிகளின் முன்முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இயற்கையை கணிதமயமாக்குதல் துல்லியமான, அளவுவகைப்பட்ட அளவீடுகள் அடிப்படையிலான பரிசோதனைகளுடன் இணைக்கப்படும் போது, நவீன அறிவியல் என்ற தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக உருவெடுத்தது.

சுழியும் இந்திய மையவாதமும்

இந்தியா, அதாவது பாரதம், உலகுக்கு சுழியை வழங்கியது என்பது இந்து அறிவியல்களின் புனிதப் பசுவாக உள்ளது. நமது பங்களிப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால், உலகம் எண்ணுவதற்குக் கூட அறிந்திருக்காது, உயர் கணிதவியல் கிட்டத்தட்ட சாத்தியமற்று போயிருக்கும், தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடந்திருக்காது என்ற நம்பிக்கையில் பல தலைமுறை இந்தியர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

கலிலியோ கலிலி
கலிலியோ கலிலி – 17-ம் நூற்றாண்டு வானவியலாளர்

சுழி என்ற எண் இந்தியப் படைப்பு என்பது உண்மையிலேயே நிஜம்தானா? சுழி என்பது வேறு எங்கிருந்தும் எந்தத் தாக்கமும் இல்லாமல் இந்து மனதில் குறையின்றி பரிசுத்தமாக தோன்றியதா?

இந்திய அறிவியல் வரலாற்றியலாளர்களின் இயல்பான இந்திய மையவாதத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே இந்தக் கற்பனையை நாம் தொடர்ந்து பராமரிக்க முடியும். “கிரேக்க அற்புதம்”தான் அனைத்து அறிவியல்களின் முதன்மை தோற்றுவாய் என்று கருதும் ஐரோப்பிய மையவாதத்தின் பிரதி பிம்பமான இந்திய மையவாதம், புராதன செவ்வியல் (அதாவது இஸ்லாமியர்களுக்கு முந்தைய) இந்தியா எப்போதுமே வழங்குவதாக இருந்ததாகவும், மற்ற நாகரீகங்கள் ஆர்வத்துடனும் நன்றியுணர்வுடனும் பெற்றுக் கொண்டவையாக இருந்ததாகவும் நம்புகிறது. ஒப்பிடக் கூடிய சம காலகட்டத்தில் இந்தியாவிலும் வேறு ஒரு இடத்திலும் ஒரு கருத்து காணக் கிடைத்தால், நமது இந்திய மையவாத வரலாற்றாசிரியர்கள் அது இந்தியாவிலிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும், அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க முடியாது என்று எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த இந்திய மையவாதம்தான் தசம இட மதிப்புகளுடன் சுழி மதிப்பை வெற்றிடமாக குறித்த சீனாவின் கழி எண்கள் தென்கிழக்காசியா வழியாக கடத்தப்பட்டிருப்பதன் சாத்தியங்களை காண்பதிலிருந்து இந்திய வரலாற்றாசிரியர்களை தடுக்கிறது. சீனாவிலிருந்து தென் கிழக்காசியா வழியாக சுழி கடத்தப்பட்டிருப்பதன் சாத்தியங்களை நீதாம் அவரது “சீனாவில் அறிவியலும் நாகரீகமும்” என்ற நூலின் மூன்றாம் பகுதியில் வாதிடுகிறார். இதற்கு மிக நெருக்கமான ஒரு சாத்தியப்பாட்டை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற கணிதவியல் வரலாற்றறிஞர் லாம் லே யோங் சமீபத்தில் முன்வைத்திருக்கிறார். மிகக் கவனமாக வாதிடப்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த சாத்தியப்பாடு உலகெங்கிலும் உள்ள தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஏற்பைப் பெறுவதோடு, கணிதத்தின் வரலாறு பற்றிய முக்கியமான பாடநூல்களிலும் இடம் பெறுகிறது. இந்தியாவில், இது காதடைக்கும் மௌனத்தைத்தான் எதிர் கொண்டிருக்கிறது.

இட மதிப்பு இல்லாமை

யோகானஸ் கெப்ளர்
யோகானஸ் கெப்ளர் (17-ம் நூற்றாண்டு ஜெர்மன் கணிதவியலாளரும், வானவியலாளரும்

சுழியின் இந்தியத் தோற்றம் பற்றிய வழக்கமான விளக்கங்கள் இரண்டு அசௌகரியமான ஆனால் மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை பூசி மெழுகிச் செல்கின்றன. அவை கி.பி 6-ம் நூற்றாண்டு வரையில் இந்திய எண் முறையில் இட மதிப்பு என்ற கோட்பாடு இல்லை, இரண்டாவதாக சுழிக்கான முதல் நடைமுறை ஆதாரங்கள் இந்தியாவில் இல்லாமல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கிடைத்திருக்கின்றன என்ற இந்த இரண்டு உண்மைகளையும் மேலும் கவனமாகவும், திறந்த மனதுடனும் நாம் பரிசீலிப்போம்.

“இட மதிப்பு” என்றால் ஒரு எண்ணில் அது வகிக்கும் இடத்தைப் பொறுத்து எண்குறியீட்டின் மதிப்பு மாறுகிறது என்று பொருள்படுகிறது. இந்த (தசம இடமதிப்பு) முறையில், ஒரு எண் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், 9 எண்குறியீடுகளாலும், சுழிக்கான ஒரு குறியீட்டாலும் எழுதப்பட்டு விடலாம். பருண்மையான சின்னங்களை – உதாரணமாக 2-க்கான சின்னமாக கண்கள், 3-க்கான சின்னமாக நெருப்பு (மூன்று சடங்குக்கான நெருப்புகள்), 6-க்கான சின்னமாக உறுப்பு (வேதங்களின் ஆறு உறுப்புகள்) முதலியனவற்றை – பயன்படுத்தும் பூத சங்க்யா முறையிலான எண் முறையில் இட மதிப்புக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த எண் சின்னங்கள் பயன்படுத்தப்படும் வரிசை அவற்றின் மதிப்பை தீர்மானிக்கிறது என்ற வகையில் இட மதிப்புக்கான ஆதாரமாக அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த முறை கி.பி 3-ம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டில் இருந்து, 14-ம் நூற்றாண்டு வரையிலான செவ்வியல் சகாப்தத்தில் வானவியலாளர்களாலும், கணிதவியலாளர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூத சங்க்யா பாட்டு வடிவமாக்கவும், மனப்பாடம் செய்யவும் உகந்ததாக இருந்தாலும், கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கவில்லை. கணக்கிடுவதற்கு தேவை எண்குறியீடுகள், சின்னங்கள் அல்ல.

துணைக்கண்டத்தில் பிராமி எண்குறியீடுகள் தோன்றி சுமார் 900 ஆண்டுகள் வரை இந்திய எண்குறியீடுகளில் இடமதிப்பு குறித்த எந்த அடையாளங்களும் தென்படவில்லை. பிராமி எண்குறியீடுகள் அசோகரின் காலத்திற்கு (சுமார் கி.மு 300) அருகில் முதன்முதலில் தென்படுகின்றன அவை படிப்படியாக குப்தர்கள் காலத்தின் இறுதியில் (கி.பி 550) தேவநாகரி எண்குறியீடுகளாக உருப்பெறுகின்றன. புகழ்பெற்ற நானாகாட் குகை பதிவுகள் உட்பட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிராமி பதிவேடுகள் எதிலும் இட மதிப்புக்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. திடீரென்று குப்தர் காலத்தின் பிற்பகுதியில் (பெரும்பகுதி பின்னர் போலி என்று நிரூபிக்கப்பட்ட நிலம் வழங்குவதற்கான தாமிர பட்டயங்களில்) இடமதிப்பு பற்றிய குறிப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன, அதைத் தொடர்ந்து உடனடியாக வெற்றிடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் “சூன்ய பிந்து” அல்லது “சுழி பொட்டு” தோன்றுகிறது. இன்று நாம் அறிந்திருப்பது போன்ற வடிவில் சுழியின் முதல் பதிவு செய்யப்பட்ட ஆதாரம் 876-ம் ஆண்டிலானது என்று மதிப்பிடப்பட்ட குவாலியர் அருகில் உள்ள ஒரு கோயிலில் கிடைக்கிறது (இது குறித்து மேலும் கீழே).

900 ஆண்டுகளாக இடமதிப்பு இல்லாமல் இருப்பது முக்கியமானது, ஏனெனில் எண்களை எழுதுவதற்கான இடமதிப்பு முறை ஏற்கனவே இல்லாமல், சுழிக்கான எண்குறியீடு தோன்றியிருக்க முடியாது. இட மதிப்பு முறையில்தான் எந்த எண்ணும் இல்லாததை குறிக்க ஒரு குறியீடு தேவைப்படுகிறது. (உதாரணமாக, வெற்று இடங்களை சுட்டுவதற்கான சொல்லை பயன்படுத்தாமலே 2004 என்ற எண்ணை சொற்களில் கூறுவது சாத்தியமாகும், ஆனால் 2-க்கும் 4-க்கும் இடையே எதுவும் இல்லை என்பதை குறிக்காமல் அதை எண்குறியீடுகளால் எழுதுவது சாத்தியமில்லை. அப்படி எழுதும்போது சுழி என்ற எண்குறியீடு இல்லாமல், 2004க்கும் 24-க்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாது).

நவீன “இந்து-அரேபிய” முறையிலான குறியீட்டு முறைக்கு கோட்பாட்டு ரீதியில் ஒத்த இடமதிப்புடன் கூடிய முதல் தசம முறை முதல் முதலில் கி.மு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது. இந்த முறை சாதாரண மக்கள் தினசரி வாழ்க்கையில் கணக்கிடும் நடைமுறை வழக்கத்திலிருந்து தோன்றி மேலே அரசு அதிகாரிகள், வானவியல் அறிஞர்கள், துறவிகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினர் மத்தியிலும் பரவியது. அது சுமார் 14 மி.மீ நீளத்திலான சிறு குச்சிகளாலான கணக்கிடும் கம்பிகளை பயன்படுத்தியது. ஏதாவது ஒரு சமதளத்திலும் வரையப்பட்ட நெடுங்கோடுகளில் கம்பிகள் நகர்த்தப்பட்டன. வலமிருந்து இடமாக ஒவ்வொரு நெடுங்கோடும் 10-ன் அடுத்தடுத்த வர்க்கத்தை குறித்தது. 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்குறியீடுக்கும் கம்பிகளின் குறிப்பிட்ட வடிவமைப்பு தரப்பட்டிருந்தது. 10-க்கு அதிகமான எண்கள் கழிகளை இடது நெடுங்கோட்டுக்கு நகர்த்துவதன் மூலம் குறிக்கப்பட்டன. கழிகளின் திசை நெடுந் திசைக்கும், குறுக்கு திசைக்கும் என மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் எண்களை வாசிப்பது எளிதாக்கப்பட்டிருந்தது. நாம் “சூன்ய” அல்லது சுழி என்று அழைக்கும் எண் “காங்” என்று பெயரிடப்பட்டு ஒரு வெற்று நெடுங்கோட்டால் குறிக்கப்பட்டது. சீன கணிதவியலாளர்கள் படிப்படியாக இன்று நாம் அல்ஜீப்ரா சமன்பாடுகள் என்று புரிந்துகொள்பவற்றுக்கு தீர்வு காண இந்த கழி முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர். கணக்கிடுவதற்கான இந்த முறை 12-ம் நூற்றாண்டில் அபாகஸ் முறையால் பதிலீடு செய்யப்படுவது வரை பயன்பாட்டில் நீடித்தது.

இந்தியாவில் சுழியின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள சீன கழி எண்குறியீடுகள் ஏன் முக்கியமானவை என்பது விரைவில் தெளிவாகும். ஆனால், கி.மு 1-ம் நூற்றாண்டு முதலே நாம் விரிவான தொடர்புகள் வைத்திருந்த ஒரு அண்டை நாட்டில், இடமதிப்புடன் எந்த எண்ணும் இல்லாததை குறிக்க வெற்று இடங்களை பயன்படுத்திய ஒரு முழுமையான தசம முறை பயன்பாட்டில் இருந்தது என்பதை அங்கீகரிப்பது முக்கியமானது. தேவநாகரி எண்குறியீடுகளில் 900 ஆண்டுகள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து ஒப்பீட்டளவில் திடீரென்று தசம இட மதிப்பு தோன்றியதற்கு நமது அண்டை நாகரீகத்துடனான தொடர்பு காரணம் என்பது சாத்தியங்களின் வரம்புக்கு உட்பட்டதுதான்.

சுழிக்கான பௌதீக தடயம்

இன்று நாம் அறிந்திருப்பது போன்ற சுழியின் முதல் பௌதீக தடயம் இந்தியாவில் கிடைக்கவில்லை, கம்போடியாவில் கிடைத்தது என்ற இரண்டாவது அசௌகரியமான உண்மைக்கு இப்போது நாம் திரும்புவோம். கம்போடிய தடயம், “சக்ர சகாப்தம் தேய்பிறையின் 5-வது நாளில் 605-வது ஆண்டை எட்டியது” என்ற பதிவுடன் கூடிய கல் தூணிலிருந்து கிடைத்திருக்கிறது. 605-ல் “0” ஒரு புள்ளியால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு 683 ஆண்டிலானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (இந்தப் பதிவுடன் கூடிய தூண் கேமர் ரூஜ் ஆட்சியின் கீழ் தொலைந்து போய் 2013-ல் அமீர் ஏசல் என்ற அமெரிக்க-இஸ்ரேலிய கணிதவியலாளரால் மீள்-கண்டுபிடிக்கப்பட்டது). அதே போன்று சுழியின் இடத்தில் ஒரு புள்ளியை வைத்திருக்கும் பதிவேடுகள் சுமத்ரா, பங்கா தீவுகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கம்போடிய தூணுக்கு சமகாலத்தினதாக மதிப்பிடப்படும் பதிவுகளில் கிடைத்திருக்கின்றன.

இந்தியாவில் சுழிக்கான முதல் பௌதீக தடயம் குவாலியருக்கு அருகில் விஷ்ணுவுக்கு கட்டப்பட்டுள்ள ஒரு சாதர்பூஜா கற்கோயிலில் கண்டறியப்பட்டது. கோயிலின் சுவரில் மீதான பதிவேடு கோயிலுக்கு தானம் செய்யப்பட்ட 270 x 187 ஹஸ்தம் நிலம் பற்றி கூறுவதுடன், கடவுளுக்கு தினமும் 50 மாலைகள் வழங்குவதாக உறுதியளிக்கிறது. எண்கள் நாகரி எழுத்தில் எழுதப்பட்டு, வெற்று இடங்களை குறிக்க சிறிய வெற்று வட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பதிவேடு 876-ம் ஆண்டிலானதாக, கம்போடிய பதிவேட்டுக்கு முழுதாக 2 நூற்றாண்டுக்கு பிந்தையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா சுழியின் பிறப்பிடம் என்றால் சுழிக்கான ஆதாரம் இந்தியாவுக்கு முன்னதாக தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தென் கிழக்கத்திய சுழிகள் இந்தியாவின் தாக்கத்தினால் தோன்றியவை என்று வைத்துக் கொண்டால் கூட அவை ஏன் காலத்தால் முந்தையதாக உள்ளன?

ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் நீதாமால் முன் வைக்கப்பபட்டு லாம் லே யோங் ஆல் உறுதி செய்யப்படுகிறது. தென்கிழக்காசியாவில்தான் “இந்திய கலாச்சாரத்தின் கிழக்கத்திய மண்டலமும், சீன கலாச்சாரத்தின் தெற்கத்திய மண்டலமும் சந்தித்தன” என்கிறார் நீதாம். ஏராளமான வணிகர்கள், அரசு அதிகாரிகள், படைவீரர்கள், புத்த மத பயணிகள், பிட்சுக்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இந்த கலாச்சார தொடர்பு மண்டலம் வழியாக பயணித்திருப்பார்கள். அவர்கள் சீன எண்ணும் கழிகளையும், எண்ணும் பலகைகளையும் – இரண்டுமே கையில் கொண்டு செல்ல வசதியாவை – எடுத்து வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட இந்த எல்லை மண்டலத்தின் குடிமக்கள் அவர்களிடம் ஏற்கனவே வழக்கத்திலிருந்த எண் குறியீடுகளை கணக்கிடும் கழிகளின் தர்க்கத்துடன் இணைத்திருப்பார்கள் என்பது நடந்திருக்கக் கூடியதே. அது இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும், சீன கணக்கிடும் பலகைகளின் வெற்றிடங்கள் ஒரு புள்ளியிலிருந்து வெற்று வட்டமாக மாறி இன்று நமக்கு பழக்கமான சுழியாக ஆகியிருக்கும். “சுழி மதிப்புக்கான எழுத்து சின்னம் ஹான் எண்ணும் பலகைகளின் வெற்றிடத்தின் மீது போடப்பட்ட இந்திய மாலை” என்கிறார் நீதாம். வேறு வகையில் சொல்வதானால், தசம இடத்துக்கும் வெற்று இடத்துக்குமான கோட்பாட்டு அடிப்படை சீனாவில் தோன்றியது; அந்தக் கோட்பாட்டுக்கு இன்று நாம் சுழி என்று அறியும் சின்னத்தை இந்தியா வழங்கியது.

நமது மிகவும் போற்றப்படும் சாதனைகளில் ஒன்றை, நமது மிக மதிக்கப்படும் புகழுக்கான உரிமையை கேள்விக்குள்ளாக்குவதால் இந்த விளக்கம் இந்திய உணர்ச்சிகளை கிளறி விடப் போகிறது. இந்திய ஆதாரங்களில் உள்ள இடைவெளிகளுக்கான விளக்கம் அளிப்பதற்கான மிகவும் பொருத்தமான கோட்பாடு இதுதான். இதை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு மேலும் ஆய்வு செய்வதிலிருந்து நமது இந்தியமையவாதம்தான் தடுத்து நிறுத்துகிறது.

புராணங்களையும் வரலாற்றையும் கலந்து குழப்புதல்

கிரிகோர் மெண்டல்
மரபணுவியலை உருவாக்கிய கிரிகோர் மெண்டல்

அறிவியலின் வரலாற்றை திரித்து புரட்டுவதான மூன்றாவது மற்றும் இறுதி வழக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகள் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு இன்று தெரிந்திருப்பவற்றை இன்னொரு சகாப்தத்த்தைச் சேர்ந்த உரைகளிலும் அறிவியல்களிலும் பொருத்த முயற்சிப்பதன் மூலம் நடைபெறும் திரித்துப் புரட்டல் வகை மாதிரிகளை அது உருவகப்படுத்துகிறது.

நரேந்திர மோடியின் கர்ணன்-விநாயகர் உரையின் உள்ளடக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. மகாபாரதத்தின் கர்ணனை ஒரு செயற்கைக் கருத்தரிப்பு குழந்தையாக மாற்றிய அவர், “அதன் பொருள் அன்றைக்கே மரபணுவியல் இருந்திருக்கிறது” என்றார். விநாயகரின் யானைத் தலை “அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வல்லுநர் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம்” – அத்தகைய வல்லுனர் இரு உயிரினங்களுக்கிடையே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு சமயத்தில் அடித்து விடும் வெற்று வாய்வீச்சுக்களில் ஒன்றாக இந்த உரையை தாண்டிச் சென்று விடலாம். ஆனால், மோடி ஒரு வாழ்நாள் சுயம் சேவக் – புராணக் கதைகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் இடையே எந்த எல்லையையும் மதிக்காத ஷாகா கலாச்சாரத்தின் ஒரு உருவாக்கம். ஷாகா விளக்கங்கள், தற்காலத்திய கருத்துக்கள், குறிக்கோள்கள், ஊக்குவிப்புகள், ஆசைகளை கடந்த காலத்திற்கு கடத்திச் செல்லும் காலப் பிறழ்வுகளால் நிரம்பியவை. இத்தகைய “வரலாறு” இரட்டை சிந்தனையையை தோற்றுவித்து, மகத்தான கடந்தகாலம் பற்றிய பதிவுகளை உருவாக்குவதால் முழுப் பொய்களை விட இன்னும் அபாயகரமானது என்கிறார் எரிக் ஹாப்ஸ்வாம். அறிவியலுக்கு பொருத்தப்படும் போது அது கடந்த காலங்களின் அறிவியலை இன்று நமக்கு தெரிந்திருப்பதன் முன் அறிவிப்புகளாக, முன்னோடிகளாக மாற்றுகிறது.

“[மகாபாரத காலத்தில்] மரபணுவியல் இருந்திருக்க வேண்டும்” என்ற மோடியின் கூற்றை எடுத்துக் கொள்வோம். இது ஏதோ அரசியல்வாதியின் வெற்று வாய்வீச்சு மட்டுமல்ல. இது இந்தியாவில் சாதீய பழக்கங்களை பிறப்பு அடிப்படையில் நியாயப்படுத்தும் நீண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தது. வர்ண கட்டுமானத்திற்கான அத்தகைய சித்தாந்த ஆதரவு, பின்னர் நாஜி கொடூரங்கள் பிறப்பு அடிப்படையிலான “அறிவியலை” இழிவுபடுத்தியது வரை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்கள் மத்தியில் (கற்றறிந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உட்பட) பரவலாக இருந்தது. நமது சம காலத்தில் கூட சக கோத்ர திருமணங்களுக்கு எதிரான காப் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த மரபியல் தர்க்கங்கள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய “மரபணுவியல்” போர்வை அளிப்பது மத மூடநம்பிக்கைகள், பொருளாதார நலன்கள், சாதி, பாலின பாகுபாடுகளின் அடிப்படையிலான ஒடுக்குமுறை பழக்கங்களுக்கு பகுத்தறிவு அடிப்படையை கொடுப்பதாக முடிகிறது.

மரபணு (ஜீன்) கண்டுபிடிப்பதற்கு முன்பு “மரபணுவியல்” இருந்திருக்க முடியாது என்பது தெளிவு. கிரிகோர் மண்டலின் (1822-1884) பணி 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறு ஆய்வு செய்யப்படுவது வரை மரபு வழி பண்புகளுக்கான உறைவிடமான தனித்த ஒரு அலகு மரபணு என்பது அறியப்பட்டிருக்கவில்லை.

மகத்தான சார்லஸ் டார்வின் (1809-1882) கூட எல்லா செல்களாலும் ரத்தத்தில் உதிர்க்கப்படும் “ஜெம்யூல்கள்” எனப்படும் துகள்களின் கலவையின் மூலம் மரபுவழி பண்புகள் கடத்தப்படுகின்றன என்று கருதினார். பின்னர் ஹூயுகோ டி விரைஸ் மற்றும் பிறரால் உறுதி செய்யப்பட்ட மெண்டலின் களைப்பற்ற, பொறுமையான பணி, ஒன்றுடன் ஒன்று கலக்காத தனித்த மரபு அலகுகள் குறித்த கருத்தை தோற்றுவித்தது. இந்த மரபு அலகுகள் குரோமோசோமில் உட்கார்ந்திருக்கின்றன என்பதும், குரோமோசோம்கள் என்பவை இரட்டைச் சுழல்வட்ட டி.என்.ஏ (டி-ஆக்ஸி-ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்பதும் 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.

கறாராகச் சொல்ல வேண்டுமானால், மரபணுக்கள் என்ற கருத்தாக்கத்துக்கு முன்பு “மரபணுவியல்” உலகில் எங்குமே இருந்திருக்க முடியாது. அதனால், மரபுவழி பண்புகள் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று பொருள் இல்லை. எல்லா நாகரீகங்களையும் போலவே பண்டைய இந்தியர்களும் மரபுவழி பண்புகள் பற்றி சிந்தித்திருக்கின்றனர். அந்த சகாப்தத்தின் நிலைமைகளில் அவர்களது மிக “அறிவியல் பூர்வமான” கோட்பாடு ஆயுர்வேதத்தை உருவாக்கிய நூலான சரக சம்ஹிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரக சம்ஹிதையின்படி, எந்த ஒரு உயிருள்ள பிறவியின் உருவாக்கமும் இரண்டு பங்களிப்பாளர்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; தாய், தந்தை, தனது முந்தைய ஸ்தூல சரீரத்தின் மரணத்துக்குப் பிறகு சூக்கும சரீரத்தில் வசிக்கும் ஒரு ஆத்மா என மூன்று பங்களிப்பாளர்களை கொண்டிருக்கிறது. இந்த சூக்கும சரீரம் “கண்ணுக்குத் தெரியாமல் அதன் கர்மாவின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கர்ப்பத்துக்குள் கடத்தப்படுகிறது” என்று எஸ்.என் தாஸ்குப்தா இதை விளக்குகிறார். அதுதான் கர்ப்பப் பையில் கருத் தரித்தலை தொடங்கி வைக்கிறது. குழந்தையின் பிறப்புக்கு உயிரியல் பெற்றோர் அவசியமானவர்கள் ஆனால் போதுமானவர்கள் அல்ல. இறந்து கொண்டிருக்கும் ஒரு நபரிடமிருந்து அனைத்து கடந்த கால நினைவுகள், சம்ஸ்காரங்களுடன் கூடு தாவும் சூக்கும சரீரம்தான் மரபுவழி பண்புகளுக்கான அடிப்படையாக உள்ளது.

இதுதான் மகாபாரத காலத்தில் இருந்த “மரபணுவியல்”. இதற்கும் “மரபணுவியல்” என்று நாம் புரிந்திருப்பதற்கும் இடையே சமதை, தொடர்ச்சி உள்ளது என்ற கருத்துருவாக்கம் நகைப்புக்கிடமானது.

இந்துத்துவா படைவீரர்கள் இது போன்ற அபத்தங்களில் உழல்வதற்கு, பண்டைய இந்து தேசத்துக்கு புகழ் சூட்டுவதைத் தாண்டி இன்னும் ஆழமான, சொல்லப்படாத காரணம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. மரபணுவியலில் ஏற்பட்டுள்ள உண்மையான முன்னேற்றங்கள், கூடு விட்டு கூடு பாயும் ஆன்மா என்ற அவர்களது சரக்கை முற்றிலும் பொருத்தமற்றதாகவும், உயிர் பற்றிய விளக்கத்துக்கு தேவையற்றதாகவும் ஆக்கி விட்டது என்று அவர்களுக்குத் தெரிகிறது. செயற்கை வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயல்படும் உயிரினங்களை உருவாக்கும் செயற்கை உயிரியலின் காலத்தில் நாம் வசிக்கிறோம். பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு “அறிவியல்” என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் தேசியவாதத்தையும் தாண்டிச் செல்கிறது: இந்து மதத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதற்கான இறுதிக்கட்ட தற்காப்பு உத்தி அது.

“மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையேயான போராட்டத்தின் அம்சங்களை மழுப்புவது மதத்தை நியாயப்படுத்துவதற்கான நம்பிக்கையற்ற முயற்சிதான். ஒவ்வொரு முறை மதம் அதன் பாரம்பரிய நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க நேரிடும் போது, அது முன்பு பிடித்து வைத்திருந்த மையத்திலிருந்து பின்வாங்க நேரிடும்போதும் இது கையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.” என்கிறார் புகழ்பெற்ற சிரிய தத்துவஞானி சாதிக் அல் அசம்

இதுதான் இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சலின் உண்மையான தோற்றுவாய்.

மூலக்கட்டுரை, படங்கள் : நன்றி Frontline

தமிழாக்கம்: அப்துல்

  1. இந்துத்துவாவை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று இந்தியாவையும் அவமானப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை . பிளாஸ்டிக் சர்ஜரி ,குளோனிங் போன்ற உளறல்கள் வேறு பூச்சியம் என்பது வேறு .

    1) சுமேரியர்கள் இடமதிப்பு முறையை பயன்படுத்தியது உண்மைதான் . ஏன் பூச்சியத்திற்கு பதிலாக ஸ்பேஸ் விட்டு எழுதினார்கள் . அனால் 60 பேஸ் என்பதால் முழுமை அடையவில்லை

    2) சீனர்கள் ராட் ந்யூமரால்ஸ் பயன்படுத்தியது உண்மைதான் ஆனால் எழுத்துருவாக பதிய தவறினார்கள்

    3) கிரேக்கர்கள் , எகிப்தியர்கள் தசம ந்யூமரால்ஸ் பயன்படுத்தினார்கள் அனால் இட மதிப்பு முறை கண்டுபிடிக்க தவறினார்கள்

    இவர்களுடைய அணைத்து அறிவும் சங்கமமானது இந்தியாவில் தான் . 830 ஆம் ஆண்டில் கல்வெட்டில் வந்த ஆண்டே ஒழிய புழக்கத்தில் வந்த ஆண்டு கிடையாது .

    இந்தியாவில் உள்ள தசம் எழுத்துக்களை புகழ்ந்து 660 ஆம் ஆண்டு செவுரஸ் செபோக் என்கின்ற சிரியா பாதிரியார் பதிவு செய்திருக்கிறார்.

    https://de.wikipedia.org/wiki/Severus_Sebokht#Indisch-Arabische_Zahlen

    இதை A history of mathematics – Uta Merzbach and Carl Boyer புத்தகத்தில் ரஷ்யர்கள் எழுதி உள்ளனர்

    செல்போன் கண்டுபிடிக்காத ஆப்பிள் கம்பெனி எப்படி பல டேகினாலஜிகளை சமயோசிதமாக ஒன்றிணைத்ததோ அது போல இந்தியர்கள் ஏற்கனவே இருந்த சிதறி கிடந்த எழுத்து முறைகளை சரியாக பெளண்ட் செய்திருக்கிறார்கள் .

    தீடீயிரென கணிதம் வந்துவிடவில்லை , கிரேக்கர்களின் வானவியல் முறையை சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து மெருகூட்டி படிக்க விழைந்துள்ளார்கள் . தமிழர்கள் போல யவன ராணி – காதல் – தாமரை மொக்கு கருவண்டு என்று வெறும் கவிதை விரும்பிகளாக மட்டும் அவர்கள் இல்லை

  2. எங்க மத புத்தகத்துல அறிவியல் இருக்குநு ஆரம்பிச்சி வச்சதே இந்த முஸ்லீம்கள் தான் எனென்றால் அவன் மத புத்தகத்துல சொல்லிக்குற மாறி நல்ல கருத்து எதுவும் இல்லை இப்ப இந்து மதத்துக்காரன் ஆரம்பிச்சிட்டான் என் வேத்ததுலயும் அறிவியல் இருக்குனு ஆரம்பிச்சிட்டான் இந்த கட்டுரை எழுதுனவன் வக்காபியா கூட இருக்கலாம்

  3. Why your mind is full of drainage Vinavu?
    Though our country’s image may be spoiled but the Arabians’ name should be high… there is no difference between you and the people who has stolen our number systems.. don’t stand in front of mirror Vinavu

    • Vinavu paid by Pakistan and China, for that they will go to any extent without any kind of morality or shame or honesty. Vinavu one of the shamelessly worst magazines I had ever seen in my life…

      thoooooo

  4. அருமையான கட்டுரை.

    அரவிந்தன் நீலகண்டன் எனும் நபர் தினமணியில் எழுதி வரும் கட்டுரை தொடரை இக்கட்டுரை எழுதியர் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இக்கட்டுரை சொல்லியவை அனைத்தும் அவரது கட்டுரை தொடருக்கு பொருந்து. நவீன அறிவியல் ஆய்வு ஒன்றை எடுத்துக்கொன்று அதற்கு பார்ப்பனிய மூடநம்பிக்கைகளுக்கும் ஒற்றுமை இருக்கிறது என்று அளந்துவிடுவார். உதாரணமாக
    காக்கைகள் பற்றிய நவீன ஆய்வு ஒன்றை எடுத்துக்கொண்டு நம் ஆட்கள் காக்காவுக்கு சோறுவைப்பதற்கும் நவீன அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று வாதிடுவார். அதுமட்டுமல்ல பகுத்தறிவுவாதிகள் கிண்டல் அடிப்பதால் தான் மேற்கண்ட அறிவியல் முடிவை இந்தியர்கள் கண்டுபிடிக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று சிரிப்புமூட்டும் சொந்த ஆய்வு முடிவையும் வைப்பார்.

    ஏம்பா 3000 வருசமாக காக்காவுக்கு சோறு வெச்சியே என்னாத்த கண்டுபிடிச்ச. ஆனா காக்காவுக்கு சோறு வெக்காமலே வேற நாட்டுக்காரன் கண்டுபிடித்துவிட்டானே என்று அவரை பார்த்து யாரும் கேட்பதில்லை. அந்த தைரியத்தில் அடித்து விடுகிறார்.

    நம் நாட்டினர் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டறியாமல் கங்கைகரையிலும் காவிரிக்கரையிலுல் எல்லாவற்றையும் அந்த காலத்திலேயே சொல்லிவிட்டார்கள் என்பது எந்த வகையிலும் பயனளிக்காது. அதோடு எவன் வீட்டு அடுப்பாங்கரையில் மாடு இருக்கிறது என்று மோப்பம்பார்த்துகொண்டிருந்தால் அறியவிலாவது வெளங்குவதாவது.

    கலர் கலரா மோதிரம் போட்டுக்கொண்டு, தோஷம் கழிக்க கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டிருந்த சமூகத்திற்கு அறிவியல் உணர்ச்சி ஊட்டிய திராவிட பகுத்தறிவு இயக்கத்தை இந்த மேதாவி அறிவியலுக்கு எதிரானரவராகவும், எவனும் படிக்க கூடாது என்று கல்வியை மறுத்து அறிவு வளர்ச்சியை தடுத்த பார்ப்பனியத்தை அறிவியலாகவும் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்.

    அப்படிப்பட்ட நபர்களின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பாண்மையையும் போலி பெருமைகள் பேசி அதற்கு மருந்திடும் உளவியலையும் இக்கட்டுரை அருமையாக தோலுரிக்கிறது.

  5. ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் அவர்கள் நாட்டின் அருமை பெருமைகளை பற்றி பெருமை கொள்வார்கள் ஆனால் நம் நாட்டில் மட்டும் தான் இப்படி நம் நாட்டையே கேவலப்படுத்தி பேசுவதில் சிலர் சந்தோசப்படுகிறார்கள்.

  6. நிரய தரவுகலை ஆரய வேண்டியுள்ளது! அருமை. பாரட்டுக்கள்!!!

  7. ..ஏதாவது ஒரு விளக்கத்துடன் பாசம் கொள்ளக் கூடாது. அது உங்கள் விளக்கம் என்பதற்காக அதற்கு சலுகைக் காட்டக்கூடாது. மற்ர விளக்கங்களுடன் நியாயமாக ஒப்பிட்டு உங்கள் வி்ளக்கத்தை நிராகரிக்க காரணங்களை கண்டுப்பிடிக்க முடியுமா என்று பாருங்கள். நீங்கள் கண்டுப்பிடிக்கவில்லையென்றால் மற்றவர்கள் கண்டுப்பிடிப்பார்கள்.

    – கார்ல் சாகன் (By Carl Sagan: Baloney Detection – In The Demon-Haunted World: Science as a Candle in the Dark)

  8. இந்த முதல் பத்தியை படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை:

    Some years ago, I happened to watch an advertisement for Rajnigandha paan masala[3] on TV that struck a nerve with me. This is how it went: A bespectacled young Indian man in a tweed jacket is sitting in a classroom at an American campus where a professor is writing some rather complicated looking mathematical equations on the chalk board. The young man appears bored; he is looking out of the window and doodling on his notepad. Speaking in an exaggerated American drawl, the professor asks how much time the class will need to solve a problem causing all the European and Chinese-looking students to balk at the task claiming the problem is too tough. Muttering racist-sounding epithets, the professor calls upon the desi. The Indian student gets up, takes out a small can of paan masala from his jacket and puts some in his mouth. He then walks up to the board and solves the mathematical problem without a moment’s hesitation. The classroom breaks into cheers. The image of a packet of Rajnigandha paan masala appears on the screen with the following voice-over: “We already knew the answer. Waiting for the question is our culture.” The advertisement ends with a jingle: “With Rajnigandha in your mouth, the world is at your feet.”

    https://social-epistemology.com/2016/01/25/saffronized-science-rampant-pseudoscience-in-vedic-garb-in-the-indian-subcontinent-meera-nanda/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க