privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !

வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !

-

வருங்கால வைப்புநிதி மோசடிகள்: அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம்!

ற்போதுநடைமுறையில்இருக்கும்தொழிலாளர்நலன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களாலும், தியாகத்தாலும் கிடைக்கப் பெற்றவையாகும். அத்தகைய உரிமைகளில் ஒன்றுதான் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி. குறைந்தபட்சம் 19 ஊழியர்களுக்கு மேலுள்ள ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தில் இருந்து சுமார் 12% தொகையைப் பிடித்தம் செய்து,அதே அளவு தொகையை நிர்வாகமும் தன் பங்காக அளித்து, அவையிரண்டையும் ஒவ்வொரு மாதமும் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் செலுத்த வேண்டும். இத்தொகைக்கு 8.8% வட்டியும்அளிக்கப்படுகிறது. வேலைஇழப்பு ஏற்படும் காலங்களில், அவசியச் செலவுகள் ஏற்படும் காலங்களில், எல்லாவற்றுக்கும் மேலாகப் பணி ஓய்வுக்குப் பிறகு இந்தச் சேமிப்புதான் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆதாரமாக இருந்துவருகிறது.

pf-fraud-bengalure-workers
தேவை ஏற்படும் சமயத்தில் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பதைத் தடை செய்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி பெங்களூரு ஆயுத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

வருங்கால வைப்பு நிதிக்காகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக அரசிடம் செலுத்தாமல், தொழில் நிறுவனங்கள் மோசடி செய்து சுருட்டிக் கொள்வது இந்தியாவில் கேட்பாரின்றி நடந்து வருவது புதிய விசயமல்ல என்றாலும், சமீபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 10,932 நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அரசு மற்றும் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் முன்மாதிரி நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 1,195 நிறுவனங்கள் இத்தகைய திருட்டு, மோசடியில் ஈடுபட்டிருப்பதும், குறிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மட்டுமே சுமார் 4,000 கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் செலுத்தாமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருப்பதும் இந்த மோசடியின் பிரம்மாண்டத்தைப் புட்டு வைக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையைச் சுருட்டிக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், தாம் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல், செலுத்தியது போன்று ஒரு மோசடியான தணிக்கை அறிக்கையைத் தயார் செய்கின்றன. சுருட்டிக் கொண்ட தொகை அனாமத்தாகக் கிடைத்த மூலதனமாகவோ அல்லது கருப்புப் பணமாகவோ மாறிச் செல்கிறது. தொழிலாளர்களோ தமது சேமிப்பு கிடைக்குமா, கிடைக்காத என்ற திரிசங்கு நிலையில் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திருப்பித் தரப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இந்த 4,000 கோடி ரூபாய்தான் பேருந்துகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதரிபாகச் செலவீனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடுகின்றன.

வருங்கால வைப்பு நிதி வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இந்த மோசடி நடைபெற வாய்ப்பில்லை என்பதோடு, இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட முதலாளிகளை, அதிகார வர்க்கத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம். பசுவைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டமிருக்கும் இந்த நாட்டில், இலட்சக்கணக்கானதொழிலாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொள்ளும், நம்பிக்கை மோசடி செய்யும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் கிடையாது.

புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.

போனஸைப் போலவே, வைப்பு நிதிக்கு வழங்கப்படும் முதலாளிகளின் பங்கு, தொழிலாளி ஓய்வுபெறும் நிலையில் கொடுக்கப்படும் பணிக்கொடை, ஓய்வுதியம் ஆகியவையும் தொழிலாளிக்குக் கொடுக்கப்படாத ஊதியத்தின் ஒருபகுதிதானே தவிர, முதலாளியின் கைக்காசிலிருந்து செலவழிக்கப்படுவது அல்ல. ஆனால், தொழிலாளியின் வைப்பு நிதியைத் திருடிக் கொள்ளும் இந்தப் பகற்கொள்ளைக் கூட்டம், இவை அனைத்தையும் தம் மீது சுமத்தப்பட்ட சுமையாக, அதனைத் தியாக உள்ளத்தோடு தாம் சுமக்க முடியாமல் சுமந்துவருவதாக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. மேலும், இந்தச் சுமையை அரசும், தனியாரும் இனியும் சுமக்க முடியாது, அரசின் வருமானத்தில் ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே பெரும் பங்கு போய்விட்டால், மக்கள் நலப் பணிகளுக்குச் செலவு செய்ய முடியாது என்ற மோசடியான வாதங்களை முன்வைத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் கடந்த 2004-ஆம் ஆண்டில் கொண்டு வந்தும்விட்டது.

தொழிலாளர்களின் வைப்பு நிதியைச் சட்டவிரோதமான முறையில் தமது இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட முதலாளிகளை, அந்நிதியைச் சட்டபூர்வமாகவே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது, புதிய ஓய்வூதியத் திட்டம். இது அமலுக்கு வந்த மறுநிமிடமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டன. வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது தமது வைப்பு நிதி முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை ரத்து செய்யப்பட்டது.

பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியைப் பராமரிக்கும் பொறுப்பை அரசு வங்கிகளிடமிருந்து பறித்து, அதனைத் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி.யிடம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனங்கள் அந்த வைப்பு நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கை பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடவும், அச்சூதாட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

தொழிலாளர்களைப் பொருத்தவரை, அவர்களின் வைப்பு நிதியை எந்த நிறுவனத்திடம் பராமரிக்க ஒப்படைப்பது, எந்தத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒப்புதல் தருவது என்ற உரிமை மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது வெட்டப்படும் ஆட்டிற்குத் தலையாட்டி சம்மதம் தெரிவிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை.

இந்து மதவெறிக் கும்பல் பதவிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து ஏறத்தாழ 19,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் கொட்டப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொழிலாளர்கள் தமது வைப்பு நிதியிலிருந்து தேவைப்படும் சமயத்தில் பணம் எடுக்கும் உரிமையை ரத்து செய்து, 58 வயதுக்குப் பிறகுதான் அவர்கள் பணம் எடுக்க முடியும் என்ற மாற்றத்தையும் கொண்டு வந்த மோடி அரசு, தொழிலாளர்களின் சேமிப்பு கரைந்து போகாமல் இருக்கும் பொருட்டுதான் இதனைக் கொண்டுவந்திருப்பதாக நியாயப்படுத்தியது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் இது. உண்மையில், தொழிலாளர்களின் வைப்பு நிதியை எவ்விதத் தடையுமின்றி, நீண்ட காலத்திற்குப் பங்குச் சந்தை சூதாடிகளின் காலடியில் கொட்டும் நயவஞ்சகம்தான் இது.

பெங்களூரைச் சேர்ந்த ஆயுத்த ஆடை பெண் தொழிலாளர்கள், தங்களின் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்துப் பெரும் போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த மாற்றத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது, மோடி அரசு. மேலும், ரத்து செய்யப்பட்ட பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவித்திருக்கிறது. எனினும், புதிய ஓய்வூதிய திட்டம் என்னும் கத்தி தொழிலாளி வர்க்கத்தின் தலைக்கு மேலே இன்னமும் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

கூலி வெட்டு தொழிலாளி வர்க்கத்தின் நிகழ்காலத்தைப் பறிக்கிறது என்றால், வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்களும், மோசடிகளும் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்காலத்திற்குக் குழிபறிக்கிறது.

– சோலை
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க