privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

-

1. நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! – மக்கள் அதிகாரம்

pp-kaveri-side-bar‘எங்கள் இரத்தத்தை வேண்டுமானால் தருகிறோம்; தண்ணீர் தரமுடியாது’ என்று சாகிறான் கன்னடன். ‘தண்ணீருக்காக உயிரையும் கொடுக்கிறேன்’ என்று கொளுத்திக் கொள்கிறான்., தமிழன். இம்மாதிரிப் போக்குகள் வளரலாம், தவிர குறையாது. ஆகவேதான் வருங்காலத்தில் தண்ணீருக்காக உலகப் போரை வெடிக்கலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது அதனால், தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்து விடுமா? இனியாவது நாம் நிம்மதிப் பெருமூச்சு விட முடியுமா? முடியாது!

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாதவாறு தண்ணீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டுக்குத் தனிச் சிறப்பான, சிக்கலான பிரச்சினை. துறைமுகமில்லாத நாட்டைப் போல, தனக்கு மட்டுமே உரிய நீராதாரங்கள் இல்லாதது தமிழ்நாடு; இது தனது விவசாயம், தொழில், குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறு, சிறுவாணி-பவானி, காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை நம்பியே இருக்கிறது. இந்த நீராதாரங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து தொடங்குகின்றன. அவற்றின் வடிகால் பகுதியாகவுள்ள தமிழகத்தின் உரிமை சட்டப்படியானது; நியாயமானதுதான்.

ஆனாலும், தமிழகம் வாதாடி, போராடிப் பெற வேண்டியுள்ளது. புதிய அணைகள், தடுப்பணைகள் கட்டியும் பல்வேறு விதங்களில் நீர்வரத்து தடுக்கப்படுகின்றது; மறுக்கப்படுகின்றது. அதனால் அண்டை மாநில மக்களுடனான முரண்பாடும் மோதல்களும் தீராதவையாகவும் அதிகரித்துவரும் பிரச்சினையாகவும் உள்ளது. இந்த நிலைக்கு என்னதான் காரணம்? என்னதான் தீர்வு?

இதில் அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, இங்கும் கண்டும் காணாமல் விடப்படும் பல உண்மைகள் உள்ளன. நீர் ஆதாரங்களும் நீர்நிலைகளும் தெரிந்தே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. முல்லைப் பெரியாறிலும் குடகுவிலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுற்றுலாத்தலங்களும், நட்சத்திர விடுதிகளும், கோடைக்கால மாளிகைகளும், காபி தோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. மழைப்பொழிவு குறைவதோடு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அருகி வருகின்றன.

அந்நியப் பெரும் ஆலைகளுக்கும், சூயஸ், கோக், பெப்சி போன்ற அந்நிய தண்ணீர் கார்ப்பரேட்டுகளுக்கும் நீர்நிலைகள் தாரை வார்க்கப்படுகின்றன. பெருநகரங்களில் அமைக்கப்படும் நட்சத்திர நீர்க் கேளிக்கை விடுதிகள், குவியும் பலவகைத் தொழில்கள், கட்டுமானங்கள் புதிய குடியேற்றங்கள் போன்றவைக்காக பெருமளவு தண்ணீர் திருப்பி விடப்படுகின்றது. மேலும், ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகளில் ஆலைக் கழிவுகள், பெருநகரக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வரன்முறையில்லாத மணற்கொள்ளையால் அவை நாசமாகின்றன. ஆக்கிரமிப்புகளால் அவை காணாமல் போகின்றன. தூர்வாராமல் நீர்வழித் தடங்கள், ஆறுகள், கண்மாய்கள் என நீர்நிலைகள் பலவும் மேடு தட்டிப் போயுள்ளன.

வளர்ச்சிக்கானவை, வேலை வாய்ப்புக்கானவை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் இந்த நாசகார வேலைகளைச் செய்கின்றன. இவற்றால் நாம் வளர்ச்சியடைந்தோமா? விவசாயம் சீரழிந்து போனது, வேலையில்லாத இளைஞர்கள் நகரத் தெருக்களில் விசிறியடிக்கப்பட்டார்கள். விவசாயம், தொழில் இரண்டுமே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

செல்வம் குவிக்கும் உலகப் பணக்காரர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளின் வரிசையில் 12-வது இடத்தை இந்த நாடு பிடித்து விட்டது. இந்த வளர்ச்சி அம்பானி, அதானி, டாடா, மிட்டல் போன்ற பனியா, பார்சி, சேட்டுகள்-ஜெயின்கள்-மார்வாடிகளுக்குத்தான். அந்நிய, ஏகாதிபத்திய, பன்னாட்டு, நாடுகடந்த நிதிமூலதன மற்றும் தொழிற்கழகங்களுக்குத்தான். இவர்களோடு நாட்டின் நீர், நிலம், காடுகள், மலைகள், கனிம வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கொள்ளையடிக்கும் கிரிமினல் குற்றக் கும்பல்களுக்குத்தான். பன்னாட்டு கம்பெனிகளால் ரசாயனக் கழிவுகளும் மருத்துவக் கழிவுகளும் பேராபத்தை விளைவிக்கும் அணுக் கழிவுகளும் கப்பல் மூலம் கன்டெய்னர்களில் கொண்டு வந்து நம் மண்ணில் கொட்டப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் நமது மக்களுடைய எதிரிகளின் நலன்களுக்காகத்தான் வகுக்கப்படுகின்றன. மற்றபடி, இயற்கை வளங்களை பாதுகாத்து, பராமரித்து விவசாயிகளின், மக்களின் தேவைகளுக்காகத் திட்டமிடப்படுவதோ, செயல்படுத்தப்படுவதோ கிடையாது.

நதிநீர் பங்கீடுகளில் தமிழகத்தின் சட்டபூர்வமான, நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசோ தனது அரசியல் நலன் கருதி, கண்டும் காணாமல் இருந்து ஓர வஞ்சனை செய்கிறது. அதேசமயம் தமிழகத்துக்கு எதிராக மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலைகள், அணுக்கழிவுகளைக் கொட்டும் நியூட்ரினோ கிடங்கு போன்ற அழிவுத் திட்டங்களை அடாவடியாகத் திணிக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வடமொழித் திணிப்பு, உயர்கல்வி, உயர் வேலை வாய்ப்புகளை பறிக்கும், கைப்பற்றும் சதிகளையும் செய்கிறது. தமிழக அரசும், நீதிமன்றங்களும் இதற்கு உடந்தையாக உள்ளன.

அண்டை மாநில அரசுகளிடம் நதிநீர் உரிமைகளுக்காகப் போராடுவதாக நாடகமாடும் ஆட்சியாளர்கள் இங்குள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் பராமரிக்கும் கடமைகளைக் கைவிட்டு அவற்றை நாசமாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். காவிரியிர் நீர் வந்தாலும் விவசாய நிலங்களுக்குப் போய்ச் சேராது. தமிழ்நாட்டுக்கு நதிநீர் உரிமைகளை மறுக்கும் கேரளத்துக்கும், கர்நாடகத்துக்கும் ஆந்திராவுக்கும் தினமும் ஆயிரக்கணக்கில் இங்கிருந்து ஆற்று மணல் கடத்தப்பட்டு அவை குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. முள்காடுகளால் மூடிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களிலிருந்து தொடங்கும் ஆறுகளை நம்பியே உள்ள தமிழ்நாட்டில் கிரானைட் கொள்ளையர்களால் கால்வாய்கள், கண்மாய்கள் மூடப்பட்டன. நீர்ப் பிடிப்புப் புறம்போக்குகள், ஏரிகள், கண்மாய்கள், குளம் – குட்டைகள் தனியார் கல்வி மற்றும் வீடு-வீட்டுமனை முதலைகளாலும், அரசு-அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சீரழிவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணமே ஏற்கனவே ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான்- அரசுக் கட்டமைப்பும்தான். அவர்களிடமே போய் மனு கொடுத்து, மன்றாடி எதையும் சரி செய்துவிட முடியாது. அவை அனைத்தும் தோற்றுப் போய் விட்டன. மக்களுக்கு எதிரானவையாகி விட்டன. இந்த ஆக்கப் பணிகளை எல்லாம் ஏற்கனவே இலஞ்ச ஊழல் சாக்கடையில் சிக்கி நாறும் அரசியல் வாதிகள், அரசு அதிகார வர்க்கத்தை நம்பிச் செய்ய முடியாது.

மத்திய அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராக தமிழகத்தின் நியாய உரிமைக்காக விடாப்பிடியாகப் போராட வேண்டும்.

அதேசமயம் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள், நீர் நிலைகள், புறம்போக்குகள், ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள் மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். காடுகள் வளர்ப்பு, மழைநீர்ப் பெருக்கம், மண் அரிப்புத் தடுப்பு, ஆறுகள் – ஓடைகளின் நீர் வழித்தடங்கள், ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, அவையும் புதிய தடுப்பணைகளும் நீர்நிலைகளும் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். உள்ளூர் மக்கள் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களை கண்காணிக்கவும் தவறு நடந்தால், மக்களே தண்டிக்கும் உரிமையும் அவர்களுக்கே வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம் என்கிறோம்.

உங்கள் ஊரில் நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பு, ஏரி, குளம், கண்மாய் தூர் வாராமல் இருப்பது; ரசாயன சாயப்பட்டறை, சாக்கடை கழிவுகளால் சிதைக்கப்படும் ஆறுகள் பற்றிய தகவல்களை எங்களிடம் தாருங்கள். அவற்றுக்கு எதிராகக் கரம் கோர்ப்போம்!

pp-kaveri-banner

தகவல்

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுச்சேரி
அலுவலகம் : எண் 16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை – 83
தொடர்புக்கு : 99623 66321 மின்னஞ்சல் : ppchennaimu@gmail.com

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்போம்! மோடி அரசின் வஞ்சகத்தை முறியடிப்போம்! – உசிலையில் ஆர்ப்பாட்டம்

ன்றைய சூழ்நிலையில் அரசு துறைகள் அனைத்தும் அதனதன் வேலையைச் செய்யாமல், தோற்றுப்போய் எதிர்மறை சக்திகளாகி மாறி வருகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக கர்நாடக அரசு தீர்ப்பை அமல்படுத்தாமல், மதிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதோடு, பெங்களூரில் கர்நாடக இனவெறியர்களால் தமிழர்களை தாக்கி, பஸ்களை தீயிட்டு கொளுத்தியது, மத்திய அரசு வேடிக்கை பார்க்குது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை  உசிலை பஸ் நிலையம் எதிரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். குருசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் தோழர் மோகன், மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் நாகராசன் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க அமைப்பினர்கள், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு அய்யனார் குளம் ஒருங்கிணைப்பாளர், உசிலை விடுதலை சிறுத்தைக் கட்சிகள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் சந்திரபோஸ் தனது தலைமை உரையில், “டெல்டா மாவட்ட விவசாயிளையும் நிலங்களையும் திட்டமிட்டே இந்த அரசு அழித்து வருகிறது. மீத்தேன், கெயில்குழாய் திட்டம் நிறைவேற்றுவதற்காக விவசாயிகளை வெளியேற்ற கட்டப் பஞ்சாயத்து நடத்தும் மத்திய, மாநில அரசுகள் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் காவிரி நீரைக் கொண்டு வருவதற்கு தடையாக உள்ளன. தமிழ்நாட்டில் கண்மாய்களையும், ஏரிகளையும் தூர்வாராத அரசு காவிரிநீரை எப்படி கொண்டு வரும். கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையே கண்மாய்களை அழிக்க துணை போகிறது.

மக்களிடம் கலவரம் செய்தே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கையை வைத்துள்ள பி.ஜே.பி, நாகராஜன் (ஆர்.எஸ்.எஸ் கருங்காலி) போன்ற நபர்களை வைத்து இனவெறியைத் தூண்டிவிட்டு தமிழர்களை தாக்கியுள்ளார்கள். டெல்டா மாவட்டப் பகுதிகளில் விவசாயிகளிடம் நிலத்தை எடுப்பதற்காக கட்டப் பஞ்சாயத்து நடத்திய பி.ஜே.பி, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் ஓட்டுக் கட்சிகளை இனியும் நம்பிப் பயனில்லை, நம் உரிமையை மீட்க போராட்டம் ஒன்றுதான் தீர்வு” என்று பேசினார்.

தென்மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தனது உரையில்… “தமிழகத்திற்கு வரும் நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகின்றன. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை 1892-ல் மைசூர் அரசு வரையறை செய்துள்ளது. அன்றுமுதல், இன்றுவரை காவிரியில் தமிழகத்திற்கான உரிமை தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு மதிக்காமல் மீறுகிறது. இல்லாத தண்ணீரை நாம் கேட்கவில்லை. அணை கர்நாடகாவில் இருந்தாலும் இயற்றப்பட்ட விதிகளின்படி நீரின் அளவைப் பொறுத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத்தான் கேட்கிறோம். தீர்ப்பை அமல்படுத்த வக்கற்ற பி.ஜே.பி அரசு கருங்காலிகளை தூண்டிவிட்டு பெங்களூரில் தமிழக லாரி ஓட்டுநரையும், பேருந்துகளையும் தாக்கி தீயிட்டு கொளுத்தி வருகிறது.

லாரி ஓட்டுநர்களை அடித்தவர்களை தேடிப்பிடித்து அடிக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழகத்திற்கு வரும் கர்நாடக பேருந்துகளை, நபர்களை தாக்குவது சரியான தீர்வு இல்லை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக புதிய அணைகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் நீர் சேகரிப்பு என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. ஆறுகளின் நீராதாரம் மணல். அந்த மணலை மணற்கொள்ளையர்கள் வரைமுறை இல்லாமல் அள்ளிக் கொள்வதற்கு அரசு அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து மக்களின் எதிர்நிலை சக்திகளாக மாறி விட்டன. மனித மிருகங்களாக மாறிவிட்ட அதிகாரிகளையும் மணல் கொள்ளையர்களையும் செருப்பால் அடித்து மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம். தமிழகத்தில் பி.ஜே.பி-யை இயங்க விடாமல் செயலிழக்கச் செய்வதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார்.

சிவகங்கை மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராசன் தனது உரையில்

“கர்நாடக இனவெறியர்களின் தாக்குதலுக்கு தமிழ்நாடே எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் எதற்காக தேவையில்லாமல் போராட்டம் நடத்துறீங்க, கடல்நீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாமே என்று மொன்னைத்தனமாக பேசி வருகிற மாமாக்காரன் சு.சாமிக்கு எட்டுக் கோடி மக்களின் செருப்பை காணிக்கையாக்குவோம்.

நடந்தாய் வாழி காவேரி என்று புராணங்களிலே கூறியுள்ளது போல் காவிரி ஓடி வந்தால் நாடு செழிக்கும். அண்டை நாடுகளில் இருந்து வரும் நதிநீரை யாரும் நிறுத்துவது இல்லை. உலக நதிநீர் பங்கீட்டு குழுமம் வரையறை வைத்து முறைப்படி கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், கோக், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு ஆறுகளை தாரைவார்த்து கொடுத்ததால் தண்ணீர் காசுக்கு விற்கும் சரக்காக மாறி விட்டது. நம்ம தண்ணீரை நாமே காசு கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு இந்த அரசு தள்ளியுள்ளது. அதாவது நம்ம செருப்பைக்க ழற்றி நம்மையே அடிக்கிறான். இந்த அரசுக் கட்டமைப்பு முறை தவறி விட்டது. இனியும் நாம் அதை சுமக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கி எறிந்து விட்டு புதிய ஜனநாயகம் படைப்போம். அதற்கு மக்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடுவதே தீர்வு” என்று கூறினார்.

தேனி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தனது உரையில்

“இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் காவிரி நதிநீர் பிரச்சனையில் நம்முடைய எதிரி யார் என்று விளக்குவதற்காக நடத்தப்படுகிறது. காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை வழங்கு என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் உள்ள அப்பாவி விவசாயிகளை யாரும் தமிழர்களை தாக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தவில்லை. இனவெறி பிடித்த கலவரத்தை தூண்டியே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள்பிடித்து வந்து இந்த இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கரும்பு விவசாயத்திற்காக எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லக் கூடிய கர்நாடக அரசு பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளை அழித்து அதில் அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி, பல பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது. ஏரிகளை அழித்து கரும்பு விவசாயிகளை வீதிக்கு விரட்டியுள்ளது. 270-க்கும் மேற்பட்ட லாரிகளில் தமிழகத்துக்கு வரும் காய்கறிகள் தடைபட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் இருக்கும் மத்திய அரசுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ்நாடிடல் இருந்து நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவோம்! மத்திய அரசை முடக்குவோம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்பவர்களை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க