privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்களாட்சியா மர்ம ஆட்சியா ?

மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?

-

முந்தைய ஜெ. ஆட்சியில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளராக பணியாற்றியவரும், தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தவருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குநராகவும் கனிம வளத்துறையின் ஆணையராகவும் பணியாற்றிய அதுல் ஆனந்த் – ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், கனிமவளத்துறை – சுற்றுச்சூழல்துறைகளின் ஆறு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஜெ. அரசால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

jaya-mafia-rule-1
கடந்த ஆண்டில் “மக்கள் செய்தி மையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், காட்சிக்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர். (கோப்புப்படம்)

ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கான காரணங்களை விளக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ள நிலையில், இந்த உயரதிகாரிகளின் பணியிடை நீக்கத்துக்கு என்ன காரணம் என்பதைக்கூட ஜெ. கும்பல் தெரிவிக்க மறுக்கிறது. இருப்பினும், வைகுண்டராஜன் சம்பந்தப்பட்ட விவகாரம்தான் அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வைகுண்டராஜனோ, ஜெயாவின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது கட்சிக்கு கஜானாவாகவும்,ஜெயா டிவி மற்றும் ஜெ. கும்பலின் மிடாஸ் சாராய நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தவர். கடந்த 2013-ஆம் ஆண்டில் வைகுண்டராஜனின் தாதுமணல் கனிமச் சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய குற்றத்துக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமாரை தூக்கியடித்ததோடு, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அம்மா உத்தரவிட்டார். பின்னர், அம்மாவே நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் தாதுமணல் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ள நிலையில், தாதுமணற்கொள்ளை தொடர்வதற்காகவே அதை வெளியிடாமல் ஜெ. முடக்கி வைத்தார். இருப்பினும், ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்குமிடையே தாதுமணற் கொள்ளையில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், வைகுண்டராஜனை முடக்குவதற்காகவே ஜெ. அரசு தனியார் நிறுவனங்கள் தாதுமணல் எடுக்கத் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

”தாதுமணல் ஏற்றுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தற்போது அவருக்குச் சாதகமாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், நீதித்துறை மற்றும் மைய அரசின் அனுமதியோடு தாதுமணலை பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வைகுண்டராஜன் ஏற்றுமதி செய்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அதுல் ஆனந்தும் ஞானதேசிகனும் இந்த அறிக்கையைத் தயார் செய்ய உத்தரவிட்டு வழிகாட்டியுள்ளனர் என்பதாலேயே அம்மா அவர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்” என்று ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.

இந்த அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தைப் பற்றி எழுதும் ஊடகங்கள், விதிமுறைகள் பின்பற்றப்படாததை விளக்கி அதிகார வர்க்கத்துக்கு அனுதாபம் தேடும் வேலையைச் செய்கின்றன. ஆனால், இந்த அதிகாரிகள் கூட்டம்தான் அம்மாவின் பகற்கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர்கள்.

கடந்த ஆண்டில் “மக்கள்செய்திமையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங்களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும் பிளக்ஸ் பேனர் கட்டி காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் தற்போது ஜெயலலிதா பணியிடைநீக்கம் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் திவாலாக்கும் வகையில், தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி கமிசன் அடிக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குத் தேவையான நிலக்கரியை கூடுதல் விலைக்கு வாங்கி கமிசன் அடிக்கவும் ரூட்டு போட்டுக் கொடுத்தவர்தான் ஞானதேசிகன். அதனாலேயே அவர் அம்மாவின் முந்தைய ஆட்சியில் தலைமைச் செயலாளராக்கப்பட்டார். பிளக்ஸ் பேனரில் காணப்பட்ட அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள முக்கியஸ்தரும், முந்தைய அம்மாவின் ஆட்சியில் முதல்வரின் செயலாளராகவும் இருந்த ராம்மோகன் ராவ், பல்வேறு ஊழல்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அமைச்சர்கள் நடத்தும் பேரங்கள், கைமாறும் தொகை முதலான விவரங்களை ஜெயலலிதாவிடம் தெரிவித்து கங்காணி வேலை செய்ததாலேயே, தற்போதைய ஆட்சியில் அவர் தலைமைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.

jaya-mafia-rule-2இதேபோல, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனை, சட்டம் – ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் ஜெ. அரசு அண்மையில் நியமித்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெ. கும்பலின் வெற்றிக்காக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவை முறையாகச் செய்ததால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதேமுறையில் காரியத்தை முடித்துக் கொடுப்பதற்காகவே அவருக்கு இந்தப் பரிசு அம்மாவால் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் ஆட்சியில் கொள்ளைக்கும் ஊழலுக்கும் ஆலோசனையும் பாதுகாப்பும் அளிக்கும் போயஸ் தோட்டத்து ஏவலாட்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத்தான் பதவி நீட்டிப்பும், பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னென்ன வழிகளில், எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடித்து, ஆட்டையைப் போடாமல் அவர்கள் அம்மாவிடம் முழுமையாகக் கணக்கையும் பணத்தையும் ஒப்படைக்க வைக்கவே போயஸ் கொள்ளைக் கூட்டம் இரவும் பகலுமாக ஒரு கம்பெனி போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஐவர்குழு என்றழைக்கப்படும் அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் உளவுத்துறை மூலம் சோதனை நடத்தி பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்திடம் சேர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இந்த அமைச்சர்கள் மீது வழக்கு இல்லை, விசாரணை இல்லை. இதன் பின்னேயுள்ள பணப்பெட்டி பேரங்கள், இரகசியங்கள் பற்றியும் யாருக்கும் தெரியவில்லை.

தற்போது அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை நாடாளுமன்றத்திலேயே சாடி சவால் விடுகிறார். இதன் பின்னே உள்ள பணப்பெட்டி ரகசியங்கள் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை. சசிகலா புஷ்பா மூலம் ஜெ.வுக்கு எதிராக வைகுண்டராஜன் அரசியல் நடத்துவதாகவும், அதனால்தான் சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. பொதுக்கூட்டத்தில் விமர்சித்தால் எதிர்க்கட்சியினரை அவதூறு வழக்கு போட்டு மிரட்டும் ஜெயலலிதா, ஊடகங்கள் இப்படி எழுதியுள்ள போதிலும் கண்டும்காணாமல் இருக்கிறார்.

ஜெயாவின் ஆட்சியை, இது தி.மு.க. போன்ற குடும்ப ஆட்சி அல்ல, இந்த ஆட்சியில் 2-ஜி போல பெரிய ஊழல்கள் இல்லை, ஜெயலலிதா நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற மாயையைத் திட்டமிட்டே துக்ளக் சோவும் பார்ப்பன ஊடகங்களும் நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன. ஆனால் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு இப்போது பகிரங்கமாக வெளிவந்து, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளை ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கேடுகெட்டதொரு களவாணிக் கும்பலை ஒரு அரசாங்கம் என்று இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பதுதான் தமிழகத்துக்கு மானக்கேடானது.

– குமார்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க