privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

-

கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள்!

மிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ் – சத்யஜோதி தம்பதியினர், தனது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்த பின்னர், அவர்களை மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்றும், அவர்களை மீட்டுத் தரும்படியும் அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் கிரிமினல் மோசடிகள் மீண்டும் சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளன.

jaggi-vasudev-3
தனது மகள்கள் இருவரையும் மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்று புலம்பும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ்.

முனைவர் காமராஜ் மட்டுமின்றி, ஈஷா சமஸ்கிருத குருகுலப்பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம்கட்டி சேர்க்கப்பட்ட தனது இருமகன்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டுமகேந்திரன், பொறியாளராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த தனது மகன் ரமேஷை மூளைச்சலவை செய்து ஈஷாயோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஈஷா யோகா மையத்தில் இதுவரை எல்லாம் சரியாக நடந்து வந்ததாகக் கருதியவர்களோ, துணுக்குற்று திரும்பிப் பார்க்கிறார்கள்.

ஈஷா யோகா மையத்தின் மீது இப்போது புகார் சொல்லும் இந்த வர்க்கத்தினர் இந்துக்களாக இருப்பதால், இயற்கையாகவே ஜக்கி போன்ற சாமியார்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய சாமியார்களின் உபதேசங்கள் அறிவியலுக்குப் புறம்பானதாக இருந்தபோதிலும், ஆட்டு மந்தைக் கூட்டமாக அவர்களை ஆதரிக்கிறார்கள். இத்தகைய சாமியார்கள், இந்து மதம் என்பது பிற மதங்களைப் போல ஒரு மதமல்ல, அது வாழ்க்கை முறை, பண்பாட்டு முறை என்று சித்தரிக்கின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வது, காலையில் வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவது, யோகா செய்வது, தியானம் செய்வது, பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி செய்வது முதலானவையெல்லாம் உடற்பயிற்சிகளாகவும் இந்து மதத்துக்கே உரிய பண்பாடாக இருப்பதாகவும் நவீன விளக்கமளிக்கிறார்கள். இவற்றின் மூலம் இந்து நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தினரை ஈர்ப்பது அவர்களுக்கு எளிதாகிறது.

jaggi-vasudev-1
ஜக்கி வாசுதேவ்

தன்னைத் தாராளவாதியைப் போல காட்டிக் கொள்ளும் ஜக்கி, நீங்கள் எந்த மதத்தின் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்கிறார். அதேசமயம், பசுவதைத் தடுப்புச் சட்டத்தைப் பற்றி கேட்டால், கால்நடைகள் நமது செல்வங்கள்; மாடு வளர்ப்பதென்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று மீனுக்கும் தலையும் பாம்புக்கு வாலுமாக ஈரோட்டமான கருத்தின் மூலம் சுற்றிவளைத்து இந்துத்துவத் திட்டத்தை ஆதரிக்கிறார். இத்தகைய சாமியார்கள் யோகம், தியானம், கட்டிப்புடி வைத்தியம் – என பல்வேறு வழிகளிலும் மிதமானதாகவும் நைச்சியமாகவும் இந்துத்துவத்துக்கு ஆதரவான கருத்தியல் அடித்தளத்தை உருவாக்குவதால், இந்துத்துவ அமைப்புகளும் அவர்களை ஆதரிக்கின்றன. இத்தகைய சாமியார்களை வாழ்க்கை நெறிகளைக் கற்பிப்பவர்களாகவும், நன்னெறிகளைப் போதிப்பவர்களாகவும் பார்ப்பன ஊடகங்கள் கௌரவிக்கின்றன.

உலகமயம் திணிக்கும் கொத்தடிமைத்தனம், வேலைப்பளு, உரிமைகள் பறிப்பு முதலான முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு இணங்கி வாழ்வதற்கு யோகா, தியானம் – என இந்து நடுத்தர வர்க்கத்தினரின் மனதைப் பண்படுத்தி சாந்தப்படுத்துவதாலும், இந்துத்துவத்துக்கு கருத்தியல் அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாலும் இத்தகைய சாமியார்கள் ஆளும் வர்க்கங்களால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளார்கள். சிறீசிறீ ரவிசங்கரின் “வாழும்கலை”அமைப்பு நடத்திய விழாவால் யமுனை நதிக்கரையும் சுற்றுச்சூழலும் நாசமாகியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தபோதிலும், பிரதமர் மோடி அந்த விழாவில் பங்கேற்று பாராட்டுகிறார். அரியானாவின் பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்வுக்கு கேபினட் அமைச்சர் தகுதியை வழங்கியுள்ளது. ராம்தேவ்வுக்கு ஏற்கனவே ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரது ஆயுர்வேத நிறுவனத்திற்கு இப்போது மோடி அரசு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கிறது. ஜக்கியைப் பற்றி புகார்கள் வந்துள்ள நிலையில், அவர் நடத்தும் ”கிராமோத்சவ்” விழாவில் மத்திய அமைச்சரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

கோவை - வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

தனியார்மய – தாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள இந்து நடுத்தர வர்க்கத்தினரோ, வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சலுக்குத் தீர்வாக யோகாசனம், தியானம் முதலானவற்றால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று குருட்டுத்தனமாக நம்புகின்றனர். இத்தகைய சாமியார்களின் மையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்கள் யோகா, தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். அதேசமயம், ஜக்கியின் ஆக்கிரமிப்புக்கும் சுற்றுச்சூழல் நாசத்துக்கும் எதிராக அப்பகுதிவாழ் மக்களும் சமூக ஆர்வலர்களும் போராடியபோதிலும், ஜக்கியின் யோகா மையத்தில் நடக்கும் கிரிமினல் மோசடிகள், கொலைகள், அட்டூழியங்களை பற்றி விரிவான ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இவர்கள் அவற்றைக் கண்டும்காணாததுபோல இருக்கின்றனர்.

முற்றும் துறந்த ஒரு சாமியாருக்கு எதற்காக இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்கள், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன – என்று இயல்பாக எழும் கேள்விகூட இவர்களது மனதில் எழுவதில்லை. இத்தகைய சாமியார்கள் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கட்டணக் கொள்ளை நடத்துவதைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவதுமில்லை. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை இத்தகைய சாமியார்கள் நடத்திக் கொண்டிருப்பது இந்த வர்க்கத்தினருக்கு முரண்பாடாகத் தெரியவில்லை. இந்துஸ்தான் லீவர்தான் போன்ற ஏகபோக நிறுவனங்கள்தான் தொழில் செய்ய வேண்டுமா, சாமியார்கள் செய்யக் கூடாதா என்று அவர்களின் கார்ப்பரேட் வர்த்தகத்தை இவர்கள் அங்கீகரித்து ஆதரிக்கவே செய்கின்றனர்.

ஈஷா யோகா மையத்திலிருந்த முனைவர் காமராஜின் இரு மகள்களையும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர், 18 வயதானவர்கள் தங்களது வாழ்வைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என்ற சட்ட விதியைக் காட்டி, ஒருவர் இல்லறத்தையோ, துறவறத்தையோ தேர்ந்தெடுப்பதென்பது அவரது தனிநபர் உரிமை என்றும், அதில் அரசோ, நீதித்துறையோ தலையிட முடியாது என்றும் நீதித்துறை தெரிவித்திருக்கிறது. சாமியாரான பெண்களோ, தங்களது சொந்த விருப்பத்தின் பேரில்தான் இந்த முடிவை எடுத்ததாகப் பேட்டியளிக்கிறார்கள். ஜக்கியிடம் சாமியாராகியுள்ள தனது வாரிசுகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மனநல மருத்துவர் முன்னிலையில் அவர்களை வாக்குமூலம் அளிக்கச் செய்ய வேண்டுமென்றும் முனைவர் காமராஜ் கோருகிறார்.

காமராஜ் போன்ற நடுத்தர வர்க்க மெத்த படித்த மேதாவிகள், தமது சொந்த பாதிப்பிலிருந்து மட்டுமே கார்ப்பரேட் சாமியார்களின் லீலைகளை, மோசடிகளை எதிர்த்தாலும், அந்த வர்க்கத்தின் பெரும்பான்மையினர் இச்சாமியார்களின் தாசர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். நித்யானந்தா போன்றவர்கள் நடிகையோடு கூத்தடித்தாலும் அவனைச் சாமியார் என்கிறார்கள். சங்கராச்சாரி என்ற கிரிமினல் பேர்வழி, ஆச்சாரம் வழுவாத ஒரு பார்ப்பானையே வெட்டிக் கொன்றாலும் பார்ப்பனர்கள் அக்கொலைகாரனை இன்னமும் இந்து மதத்தின் அத்தாரிட்டியாக அங்கீகரிக்கிறார்கள்.

இந்து நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தின் இத்தகைய இயலாமையையும் அறியாமையையும் சாதகமாக்கிக் கொண்டு, ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களோ ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தோடு சட்டத்துக்கு அப்பாற்பட்ட தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

– தனபால்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________