privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !

-

“மருத்துவராக விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது; அப்படியே எழுதினாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை; அவை பல்வேறு தில்லுமுல்லுகளும் மோசடிகளும் செய்வதோடு, அக்கல்லூரிகளில் காணப்படும் நன்கொடை, கட்டணக் கொள்ளை மாணவர்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. நாடு முழுவதும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றெல்லாம் காரணங்களை அடுக்கி, இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டி, தகுதியும் திறமையும் மிக்க மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு ) மட்டும்தான் ஒரே வழி எனச் சாமியாடிய உச்சநீதி மன்றம், இத்தேர்வை இந்தக் கல்வியாண்டு தொடங்கியே நடத்த வேண்டும் என்ற கட்டப் பஞ்சாயத்து உத்தரவை கடந்த ஏப்ரல் மாதம் அளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடப்பதோ உச்சநீதி மன்றம் உதார் விட்டதற்கு நேர் எதிராக இருக்கிறது.

neet-1
தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) வெற்றி பெற எங்கள் பயிற்சி மையத்தில் சேருமாறு நடுத்தர வர்க்க மாணவர்களுக்குத் தூண்டில் போடும் விளம்பரம்.

நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,715 இடங்கள் உள்ளன. மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 85 சதவீத இடங்களை அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அகில இந்திய ஒதுக்கீடு போக (15 சதவீதம்) மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவை மாநில அரசுகளின் ஒதுக்கீட்டிற்கு இடங்களைத் தருவதில்லை. அவை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மீதி 85 சதவீத இடங்களையும் தாமே நிரப்பிக் கொள்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீடு இடங்கள்தான் தனியார் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பணங்காய்ச்சி மரங்களாக உள்ளன.

இந்தக் கல்வியாண்டைப் பொருத்தவரை, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான (22,715 இடங்கள்) மாணவர் சேர்க்கை, நீட் தேர்வுக்கு முன்னதாக இருந்துவந்த நடைமுறைப்படி மாநில அரசுகளால் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும், தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை உள்ளடக்கிய 30,000 இடங்களுக்குத்தான் தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) தேர்ச்சி அடைந்துள்ள நான்கு இலட்சம் மாணவர்களும் போட்டியிடுகின்றனர்.

தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, ” அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமின்றி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மைய அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யும். இதன் மூலம் தனியார் கல்லூரிகள் அடிக்கும் நன்கொடை, கட்டணக் கொள்ளையிலிருந்து தப்பித்துவிடலாம்” என நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கனவு கண்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலோ அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு (3,521 இடங்கள்) மட்டும் ஒற்றைச்சாளர முறையில், நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்-தரவரிசை அடிப்படையில், இணையம் மூலம் கலந்தாய்வு நடத்திவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 26,500 இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொறுப்பை அந்தந்த கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களிடமே தந்திரமாக ஒப்படைத்துவிட்டது.

neet-2அதாவது, “அந்தந்த மாநில அரசுகள் விரும்பினால், தமது மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச்சாளரக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம்” எனக் கூறி நழுவிக் கொண்டுவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் கல்வி வள்ளல்களின் செல்வாக்கு இருப்பதோடு, தனியாரின் கொள்ளையும் இலாபமும்தான் அரசின் கொள்கையாக மாறிவிட்டதாலும் தமிழகம் உள்ளிட்டுப் பெரும்பாலான மாநிலங்கள் இந்தக் கலந்தாய்வை நடத்த முன்வரவில்லை.

மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்துவதைக் கைவிட்டுவிட்டதைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும், மருத்துவப் பல்கலைக்கழகமும் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியிருப்பதாகக் கண்ணீர் வடித்த கற்றறிந்த நீதிபதிகளின் மரியாதைக்குரிய மூளையில், தங்களுடைய தீர்ப்பின் விளைவாக மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து, மெடிக்கல் சீட்டில் விலை விசாரித்து அலைபாய்வது கடுகளவும் உரைக்கவில்லை.

நீட் தேர்வில் மாணவர்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என மருத்துவக் கவுன்சில் தனியார் கல்லூரிகளுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் எத்துணை மாணவர்கள் விண்ணப்பித்தனர், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்ன, விண்ணப்பித்த மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதா, தரவரிசையின் அடிப்படையில்தான் மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, சேர்க்கை நடைபெற்றதா என்பதையெல்லாம் கண்காணிப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் எந்தவொரு ஏற்பாடும் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த நிபந்தனை சோளக்காட்டு பொம்மையைவிடக் கேலிக்குரியது.

மாநில அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களிடமும்கூட இலட்சக்கணக்கில் பணம் பிடுங்கத் தனியார் கல்லூரிகள் தயங்கியதே இல்லை; அந்த ஒதுக்கீட்டிலேயே ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அப்பழுக்கற்ற விதத்தில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள் என அப்பாவிகள்கூட நம்பமாட்டார்கள். நீட் தேர்வு மதிப்பெண்ணைக் காட்டிலும், பணப்பெட்டியின் எடைதான் மாணவர்களின் சேர்க்கையைத் தீர்மானிக்கவுள்ள நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதித்திருக்கும் நிபந்தனை தனியார் கல்லூரிகளின் திருவிளையாடல்களை மறைக்கும் முகமூடி தவிர வேறில்லை.

neet-caption-1நீட் தேர்வுக்கு முன்னால், தாங்களே ஒரு மோசடியான தேர்வை நடத்தி, அதில் இலட்ச இலட்சமாய்ப் பணத்தைக் கொடுத்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்து, அவர்களைத் தமது கல்லூரிகளில் சேர்த்து வந்த தனியார் கல்லூரி முதலாளிகளை, அந்தச் சிரமத்திலிருந்து விடுவித்திருக்கிறது, உச்சநீதி மன்றம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வு. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையில் நடத்தும் மோசடிகளுக்கு ஒரு சட்டபூர்வ தகுதியை, பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியும் கொடுத்துவிட்டது.

போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறைவாகவும் உள்ளதால், முதலாளித்துவ “சந்தை” விதி மருத்துவ இடங்களின் ரேட்டை எகிற வைத்துவிட்டது. “கடந்த ஆண்டு 10 இலட்ச ரூபாயாக இருந்த எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஆண்டு கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 21 இலட்சமாகவும்; சிறீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 15 இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளதென்றும், இதற்கு அப்பால், ஒரு இலட்ச ரூபாய் முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை பிற கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்; இவற்றுக்கும் மேலே ஒவ்வொரு கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரையிலும் நன்கொடை வசூலிப்பதாகவும்” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால், மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருக்கும் மாணவர்கள், அத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்பதைவிட, கல்லூரியில் நுழைவதற்கு அவர்களது பெற்றோர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பணமிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மேலும், 26,500 இடங்களைத் தமது பிடியில் வைத்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், அந்த இடங்களில் ஒரு சில நூறு இடங்களை அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் மொய் வைப்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால்கூட, போட்டியிடும் மாணவர்களிடம் கறக்கவுள்ள நன்கொடை மூலம் அவர்களிடம் இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் சேருவதற்கான வாய்ப்பை நீட் தேர்வு திறந்துவிட்டிருக்கிறது.

இதனையெல்லாம் நீதிமன்றங்கள் தடுக்க முன்வரவில்லை எனக் குறைபட்டுக் கொள்வது அறிவீனம். மாறாக, நீதித்துறைதான் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் செக்யூரிட்டி பொறுப்பைக் கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக, கேரள மாநில சி.பி.எம். கூட்டணி அரசு, அம்மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, அவ்விடங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்லூரி முதலாளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், “மாநில அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்துவதை மைய அரசு நிபந்தனையாக விதிக்கவில்லை” எனத் தனியார் கல்லூரிகள் வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, கேரள அரசின் உத்தரவை ரத்து செய்துவிட்டது, அம்மாநில உயர்நீதி மன்றம்.

இந்திய மருத்துவக் கல்வியை உலகத் தரத்துக்குக் கொண்டு செல்லப் போவதாகக் கூறிக்கொண்டு உச்சநீதி மன்றம் நீட் தேர்வை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளால்அம்பலப்பட்டுப் போன இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்கும் வரை, அதனின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி லோதாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி சமீபத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்த 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளுள் உ.பி. மாநிலத்தில் அமைந்துள்ள சரசுவதி மருத்துவக் கல்லூரி, ம.பி.யில் அமைந்துள்ள சாக்ஷி மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை எங்கள் கல்லூரி சரி செய்யவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கும் சேர்த்து அங்கீகாரம் அளித்த கூத்தையும் நடத்தியிருக்கிறது, லோதா கமிட்டி. நாட்டின் மருத்துவர் தேவையை ஈடுசெய்யும் நல்லெண்ணத்தில்தான் இந்த அங்கீகாரத்தை அளித்திருப்பதாகக் கூறி, தனது அயோக்கியத்தனத்திற்குப் பட்டுக்குஞ்சமும் கட்டிவிட்டது.

இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ கமிசனை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள நிதி ஆயோக், தனது பரிந்துரையில், ”இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க தனியார் முன்வருவார்கள். அதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” எனக் கூறியிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத நன்கொடையை ஒழிப்பதற்கு அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் வழி என்பதுதான் இந்தப் பரிந்துரையின் பொருள்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு, தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் ஏழை மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த ”தேசிய” பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை பட்டா போட்டுக் கொடுக்கும் சதித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது. லோதா கமிட்டியும், நிதி ஆயோக்கும் மருத்துவக் கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியிருப்பதுடன், மருத்துவர் தொழிலைக் கருப்புப் பணக் குடும்ப வாரிசுகளின் தனியுரிமையாக மாற்ற முயலுகின்றன. தரமான மருத்துவக் கல்வி, தகுதியான மருத்துவர்கள் என ஆளும் வர்க்கம் போடும் கூச்சலின் பின்னே மறைந்துள்ள உண்மை இதுதான்.

தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், கனிவு பொங்கும் முகத்துடன், சிகிச்சைக்கு எத்தனை ஆயிரம் செலவாகும் என்று நோயாளிகளிடம் கூறுவதைப் பார்த்திருக்கிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில், “ஐயா, தாங்கள் இந்த டாக்டர் பட்டத்தை எத்தனை கோடிக்கு வாங்கினீர்கள்?” என்று நோயாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. பணம் கொடுத்துப் பட்டம் வாங்கும் உரிமையை உத்திரவாதம் செய்திருக்கும் மாண்புமிகு நீதியரசர்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்ற தகவல் அறியும் உரிமையையாவது குடிமக்களுக்கு வழங்கலாம். அதுதானே ஜனநாயகம்!

– ரஹீம்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________