privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் - மாபெரும் வெற்றி

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

-

பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கூறி அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை முற்றுகையிட திரளும் மக்கள்
டாஸ்மாக் கடை முற்றுகையிட திரளும் மக்கள்

தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் முற்றுகை இவற்றைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றி விடுவதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் மண்டல மேலாளர் முற்றுகை, மீண்டும் டாஸ்மாக் கடைகள் முற்றுகை என்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடந்த அனைத்து போராட்டங்களிலும் போலீசின் மூலம் அச்சுறுத்துவது, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவது என்ற நிலையில் துளியும் சோர்வின்றி, எங்களை சீரழிக்கின்ற இரு டாஸ்மாக் கடைகளையும் மூடும்வரை போராடுவோம் என்ற உறுதியுடன் 04-10-2016 அன்று பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரம், மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியின் அணி திரட்டலில் முற்றுகையிட மக்கள் தயாராயினர்.

கடந்த கால போராட்டங்களின் போது கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, காக்கிச் சட்டை போலீசு மூலமும் உளவுத் துறை போலீசு மூலமும், டாஸ்மாக் கடைகளின்  முன்பு நூற்றுக் கணக்கான போலீசை குவித்தும் மக்கள் திரளாமல் தடுக்க எடுத்த முயற்சியில் தோற்றுப் போன அரசு இம்முறை மக்களிடம் தங்கள் தடுப்பு நடவடிக்கைள் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு இரு கடைகளுக்கு மட்டும் கடுமையான பாதுகாப்பு கொடுத்தது.

இரு கடைகளையும் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் திட்டமிட்டபடி 04-10-2016 அன்று காலை 12.00 மணிக்கு தலைமையில் முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் சென்று விடுவார்கள் என்று நினைத்த போலீசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடையை மூடினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறியவர்களை எளிதாக கைது செய்ய முடியவில்லை. பெண்கள் பலரையும் பலவந்தமாக தூக்கிச் சென்றே கைது செய்தார்கள். கைது செய்து மண்டபம் அழைத்து சென்றபோதும் வேனிலிருந்தும் மக்கள் இறங்க மறுத்து விட்டனர். இறங்கி மண்டபத்தினுள் செல்லாமல் மைதானத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். போலீசின் மிரட்டலுக்கும், கெஞ்சலுக்கும் சிறிதும் அடிபணிய மறுத்து மைதானத்திலேயே அமர்ந்து தொடர்ந்தது போராட்டம். வயதான பெண்களை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்க மறுத்து மிரட்டியது போலீசு. மைதானத்தில் அமர்ந்து போராடுவது பொது மக்களுக்கு தெரிந்து விடாதபடி வாசலில் வாகனத்தை நிறுத்தி மறைத்தனர் போலீசார்.

கடையை முற்றுகயிட்ட பெண்கள்
கடையை முற்றுகயிட்ட பெண்கள்

“உருவத்தைத்தானே மறைக்க முடியும், குரலை மறைக்க முடியுமா இவனுகளால” என்று பாட்டி ஒருவர் இயல்பாகக் கூறிக் கொண்டே முழக்கத்தைத் தொடர்ந்தார். மதியம் உணவு உண்ண மாட்டோம் என்று மக்கள் அறிவித்து விட்டனர். இம்முறை பெயர், முகவரி கேட்பதை போலீசாரே தவிர்த்து விட்டனர். கடந்த முறைகளில் மக்கள் தர மறுத்திருந்தனர் என்ற பாடம் அவர்களுக்கு நினைவு வந்திருக்கும்.

உடல்நலம் குன்றியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிஸ்கட்டுகளை வாங்கி வந்திருந்தனர் ஊர் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும். பிஸ்கட்டுகளை கொடுக்க விடாமல் அது ஏதோ வெடிகுண்டு போல தீவிரமாக பாதுகாத்தது போலீஸ். அதையும் மீறி பிஸ்கட்டை கொடுத்து விட்டதால், பயங்கரவாதிகளை கையும் களவுமாக பிடித்து விட்டதாக எண்ணி மிரட்டத் தொடங்கிய போலீசாரிடம், “கொள்ளைக் காரனிடமும், கொலைகாரனிடமும், கற்பழித்தவனிடமும் காட்டாத வீரத்தை பிஸ்கட் கொடுத்தவர்களிடம் காட்டுகிறீர்கள், நாங்கள் குற்றவாளிகள் அல்ல, போராளிகள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தனர், மக்கள்.

“நீங்கள் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு அடங்காதவர்கள்தானே” என்று ஆணாதிக்க திமிரில் வக்கிரமாக பேசிய ஒரு சார்பு ஆய்வாளாரிடம், “உன் வீட்டுப் பெண்களுக்கும் சேர்ந்துதான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் கண்ணியமாக போராடுகிறோம். நீ எப்படி இவ்வாறு பேசலாம், மரியாதையாகப் பேசு” என்று எச்சரித்தனர், பெண்கள்.

மாலை 5.30 மணிக்கு, “உங்களை விடுவித்து விட்டோம்” என்று அறிவித்தனர் போலீசார். “நீங்கள் விடுவித்தாலும் கடையை முடாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சிறையில் அடைத்தாலும் இரு கடைகளையும் அடைக்காமல் வீட்டுக்குச் செல்லப் போவதில்லை” என்று மக்களும் திருப்பி அறிவித்தனர்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் செல்கின்றோம்” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்து சென்று விட்டனர் போலீசார். இரவு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்தது. “நாங்கள் எத்தனை நாளானாலும் இங்கிருந்து போராடுவோம். அதிகாரிகளா, நாங்களா என்று பார்த்து விடலாம்” என்று போராட்டம் வேகமடைந்தது.

மண்டபத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள்
மண்டபத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள்

போராட்டத்திற்கு ஆதரவளித்து மண்டபத்திற்கு வெளியில் நின்ற ஊர் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களை நேரடியாக போராட்டத்திற்குள் வரவழைத்து விட்டது, அதிகாரிகள் போலீசாரின் இந்த நடவடிக்கை. போராட்டம் விரிவடைந்தது. மேலும் பல ஆண்களும், பெண்களும் வந்தனர். இம்முறை முன்னின்று அணிதிரட்டியது வெளியில் நின்று ஆதரவளித்த ஊர் நிர்வாகிகளும், உறவினர்களும், பிரமுகர்களும். போராட்டம் அவர்களுடையதாகவும் மாறியது.

பதறியடித்து ஓடி வந்தனர் விட்டுச்சென்ற போலீசார். அணிதிரண்டு வந்த மக்கள் மண்டபத்தில் உள்ளவர்களுடன் இணைந்து விடாதவாறு தடுத்து விட்டனர். தாசில்தார் வந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், மக்களின் கோபத்தை, ஆத்திரத்தை தடுக்க இயலவில்லை. டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மண்டப வாசலிலேயே முழக்கமிட்டனர், உறுதியுடன் போராடினர். உள்ளாட்சி தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களையும் இழுத்துக் கொண்டது இந்தப் போராட்டம்.

வரமுடியாது என்று ஆணவத்துடன் இருந்த அதிகாரிகளை  வரவழைத்து விட்டது மக்களின் உறுதி. தாசில்தார் வந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். “கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்” என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை கேள்வி கேட்டனர் பெண்கள்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் “அடுத்த ஒரு மாதத்தில் ஒரு கடையையும் அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் அடுத்த கடையையும் இடம் மாற்றி விடுவதாக ஆட்சியர் என்னிடம் உறுதி கூறியுள்ளார்” என்று கூறியும் யாரும் ஏற்கத் தயாராயில்லை. எஸ்.பி நேரில் வந்தாக வேண்டிய சூழல். எஸ்பி ஃபோனில் கூறியதை நேரில் வந்து கூறியும் யாரும் ஏற்கவில்லை.

“நீங்கள் நாளையே மாற்றலாகி சென்று விட்டால் நாங்கள் யாரிடம் போய்க் கேட்போம்? இதற்கு முன்பும் மாவட்ட  டாஸ்மாக் அதிகாரி எழுதிக் கொடுக்கும் போது நானே கடையை மாற்றும் அதிகாரம் பெற்றவர் என்று கூறித்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தார். இன்றுவரை அவர் பதில்கூட சொல்லவில்லை.” “நான் மாவட்ட அதிகாரி கூறுகின்றேன்” என்று எஸ்.பி கூறியதும். “இதற்கு முன்பு எழுதிக் கொடுத்ததும் மாவட்ட அதிகாரிதானே” என்று மக்கள் மடக்கினர்.

“தற்பொழுது இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடுகின்றோம்” என்று கூறிப் பார்த்தார். இரண்டு கோரிக்கையையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை மக்கள். வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை செல்பேசியில் அழைத்து பேசிய எஸ்.பி, “ஒரு கடை இன்றுமுதல் மூடப்படுவதாகவும், இன்னொன்று இன்றிலிருந்து (04-10-206) 30 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்றும் கலெக்டர் கூறி விட்டார்” என்று கூறினார்.

“கலெக்டர் கூறுவதை நாங்கள் எப்படி நம்புவது? எழுதிக் கொடுங்கள். இன்றே மூடுவதாகக் கூறிய டாஸ்மாக் கடையை இப்போதே சீல் வையுங்கள்” என்று கலெக்டரின் வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கினர். எஸ்.பி “இதற்கு நான் பொறுப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் கடிதம் கொடுத்து விடுகின்றேன். நீங்கள் கஷ்டப்பட்டு போராடுவதை புரிந்து கொண்டதால் உங்களுக்கு உதவி செய்யவே நான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்” என்றும் கூறினார். மேலும் இதை ஒலிபெருக்கி மூலம் அனைவரிடமும் பகிரங்கமாக அறிவித்தார்.

“இந்த வாக்குறுதிக்கு மாறாக கடைகள் திறக்கப்பட்டால் நாங்கள் மீண்டும் போராடுவோம்” என்று எஸ்.பியிடம் அறிவித்து விட்டு இரவு 10.30 மணியளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலைந்து செல்லாம்ல உடனே ஒன்று கூடி, “இது முழு வெற்றியல்ல, அரசாங்கம் சொன்னது போல் நடந்து கொள்ளுமா என்று தொடர்ந்து கண்காணிப்போம்! இருகடைகளும் நிரந்தரமாக அகற்றப்படும்வரை தொடர்ந்து போராடுவோம், நாளை கடை திறக்கப்பட்டால் மீண்டும் கடையை முற்றுகையிடுவோம்” என்று முடிவெடுக்கப்பட்டது. மறுநாள் இருகடைகளும் திறக்கப்படவில்லை. 06-10-2016 அன்று எஸ்.பி கூறியபடி ஒரு கடை மூடப்பட்டுள்ளது.

பெண்கள் பெரும்பான்மையாகவும், குறைந்த எண்ணிக்கையில் ஆண்களின் கன்ய குமரி டாஸ்மாக் முற்றுகை (1)பங்களிப்புடன் தொடங்கப்பட்ட போராட்டம் சாதி, மதம், எல்லைப் பிரச்சனை, மக்கள் அதிகாரம் மீதான தீவிரவாத அமைப்பு என்னும் அவதூறுகள் இவை அனைத்தையும் உடைத்து, பெருமளவு ஆண்களையும் இணைத்து, இந்து முன்னணி, கிறிஸ்தவ மத அமைப்புகள் இவற்றின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தி, மக்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரிகளின் ஆட்சியாளர்களின், அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணிய வைப்பதன் மூலமே மக்கள்  தங்கள் உரிமைகளை பெற முடியும் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கின்றது. இதை புரிந்து கொண்டு எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க விடாப்பிடியாக போராடுவது ஒன்றே தீர்வு என்று மக்கள் தயாராகி வருகின்றனர். இதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதால்தான் மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு என்று அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டனர்.

முன்னதாக 21-09-2016 அன்று நடந்த முற்றுகை போராட்டம் பற்றிய செய்தி

ன்னியாகுமரி மாவட்டம், பேயன்குழி – நுள்ளிவிளை பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரு டாஸ்மாக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கூறி, மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் 12-04-2016-ம் தேதி இரு கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தை பற்றி சிறிதும் அஞ்சாமல் நள்ளிரவு வரை விடாப்பிடியாக வீரமிகு போராட்டத்தை பெண்களும், ஆண்களும் நடத்தியதால் தேர்தல் முடிந்ததும் (ஜூன் 20, 2016) இரு கடைகளையும் அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை இருகடைகளும் அதே இடத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

உழைக்கும் மக்களிடம் உள்ள நேர்மையும், வாக்கு நாணயமும், அதிகாரிகளிடமும், அதிகாரவர்க்கத்திடமும் இருக்காது என்பதையும், டாஸ்மாக்கை நமது பகுதியில் இயங்க விடாமல் தங்கள் அதிகாரத்தை போராட்டத்தின் மூலம் நிறுவுவது மூலமே டாஸ்மாக்கை மூட முடியும் என்பதையும் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்ட பெண்களும், ஆண்களும், அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினர். தீவிரவாதிகள் போராடுகிறார்கள், கிறிஸ்தவர்கள் போராடுகிறார்கள், எல்லைப் பிரச்சனைக்காகப் போராடுகிறார்கள் என்று பரப்பிய பொய் அவதூறுகளையெல்லாம் முறியடித்து உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து மீண்டும் 21-09-2016-ம் தேதி பேயன்குழி – நுள்ளிவிளை கடைகளை முற்றுகையிட்டனர்.

போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவே கிராமம் கிராமமாக தெருத்தெருவாக, உளவுத்துறை போலீசார் சுற்றி திரிந்தும் போராட்டத்திற்கு தயாரான திரளான பெண்களையும், ஆண்களையும் தடுக்க இயலவில்லை. போராட்டம் அறிவிக்கப்பட்ட அன்று வழிநெடுக காலை நூற்றுக்கணக்கான போலீசை குவித்து டாஸ்மாக் கடைகள் முன்பு பெண்கள் கூடி விடாதவாறு பெண்களை தடுக்க எடுத்த முயற்சியால் காக்கிச்சடை போலீசாருக்கும் தோல்வியே மிஞ்சியது.

போலீசின் அச்சுறுத்தலையும் மீறி டாஸ்மாக்கடையின் முன்பு திரளான பெண்களும், ஆண்களும் கூடி முற்றுகையிட்டனர்.

“போராட்டத்திற்கு அனுமதியில்லை, கலைந்து செல்லுங்கள்” என்று காவல்துறை அறிவித்தது.

“உங்கள் அனுமதி எங்களுக்கு தேவையில்லை” யென்று போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினர் பெண்கள்.

“உங்கள் பிரதிநிதிகளை கலெக்டரிடம் அழைத்துச் செல்கின்றோம், கோரிக்கையை அவரிடம் கூறுங்கள்” என்று காவல்துறை கூறியது.

“கலெக்டரை நாங்கள் ஏன் சென்று பார்க்க வேண்டும். அவரை வேண்டுமானால் இங்கு வரச்சொல்லுங்கள், நாங்கள் பலமுறை அவரை சந்தித்துவிட்டோம். இனிமேல் சந்திக்க ஒன்றுமில்லை, கடையை மூடுமாறு கலெக்டரிடம் சொல்லுங்கள்” என்று போலீசிடம் கூறிவிட்டனர் பெண்கள்.

சிறிது நேரத்தில் பெண்களையும், ஆண்களையும் கைது செய்து மண்டபத்தில்சிறை வைத்தது போலீசு. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்து அழைத்து சென்ற போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஏராளமான பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை திருப்பி அனுப்பியது போலீசு.

“மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இங்கு வந்து தான் எழுதிக் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கூற வேண்டும். அதுவரை உணவருந்த மாட்டோம், பெயர், முகவரி தரமாட்டோம்” என்று கோரிக்கை வைத்து மண்டபத்திலும் போராட்டம் தொடர்ந்தது.

“கடையை மூடுங்கள் என்று கோரவில்லை. உங்களிடம் கோரிக்கை வைப்பதும் வீண, கடையை நாங்களே மூடிக் கொள்கின்றோம்” என்று தங்கள் கோரிக்கையையும் நிலைப்பாட்டை மண்டபத்தில் காவல் துறையினரிடம் தெளிவுபடுத்தினர் பெண்களும், ஆண்களும்.

மாலை 5 மணியாகியும் அதிகாரிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை.

“நாங்கள் தகவல் கொடுத்துவிட்டோம், தொடர்ந்து முயற்சி செய்கின்றோம், ஆனால் அதிகாரிகள் வர மறுக்கிறார்கள், நாங்கள் என்ன செய்வது, நாங்கள் பலமுறை இரண்டு கடைகளையும் மூடுமாறு அறிக்கை எழுதி அனுப்பியுள்ளோம், இன்று காலையும் கூட கலெக்டருக்கு நிலைமையை தெரிவித்துள்ளோம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வராமல் மீண்டும் மீண்டும் எங்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள், நாங்கள் என்ன செய்வது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

500 கடைகளை மூடப்படும் என்ற அறிவிப்பு வந்த காலகட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்று “எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றீர்களா” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்று கேட்டபோது, “இரு கடைகளையும் மூட வேண்டும் என்று நாங்கள் மேலே எழுதி அனுப்பிவிட்டோம்” என்று அங்குள்ள ஊழியர்கள் கூறினர்.

போலீசார் கூறியது, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியது, அதிகாரி வந்து பதில் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வராதது ஆகிய நிலைமைகளை மண்டபத்தில் வைத்து விவாதித்தனா. பெண்கள் உறுதியாகவும், விடாப்பிடியாகவும், போலீசுக்கு அஞ்சாமலும் கடைகளை நடத்த விடாமல் போராடினால் மட்டுமே டாஸ்மாக் சாராயக்கடைகளை மூட முடியும் என்பதையே அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் நடத்தைகள் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துவதை சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டனர்.

மேலும், “கடையை மூட வேண்டும் என்று அறிக்கை மேலே உள்ளவர்களுக்கு எழுதியதாக டாஸ்மாக் அதிகாரிகளும், போலீசும் கூறுகின்றனர், மேலே உள்ளவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்று அவர்களே கூறுகின்றனர் அப்படியெனில் அந்த மேலே உள்ளவர்கள் யார்? மேலே உள்ளவர்கள் என்றால் சாராய ஆலை முதலாளிகளா? நம்மை சாராய ஆலை முதலாளிகள் தான் ஆள்கின்றார்களா” என்றும் பெண்கள் கேள்வி எழுப்பினர்.

“போலீசுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்! எத்தனை முறையானாலும் போராடுவோம்! குடும்பத்தினரையும், குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு போராடுவோம்! சிறை சென்றும் போராடுவோம்! கடைகளை மூடும் வரை விடாப்படியாக போராடுவோம்” என்று சூளுரைத்து மாலை 6.00 மணியளவில் அன்றையதினம் கலைந்து சென்றனர் திரளான பெண்களும், ஆண்களும்,

“மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் ஏன் போராடுகிறீர்கள், அரசியல் கட்சிகளை அழைத்து போராடுங்கள், எம்.எல்.ஏ-வை கூப்பிடுங்கள்” என்று திட்டமிட்டே உள்நோக்கத்துடன் கூறி வருபவர்களிடம், பிரச்சாரம் செய்பவர்களிடம், “நீங்கள் கூறுபவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக போராட தயாராகவில்லை, மக்கள் அதிகாரம் மக்களுக்கான அமைப்பு, நாங்கள் தான் மக்கள் அதிகாரம்” என்று பதிலடி கொடுத்து அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பெண்கள்.

போராட்டப் படங்கள் : பெரிதாக பார்க்க படங்களை அழுத்தவும்!

போராட்டம் குறித்து வந்த பத்திரிகை செய்திகள்: பெரிதாக பார்க்க அழுத்தவும்

இவண்,
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு,
கன்னியாகுமரி மாவட்டம்.

  1. பெருமையாக இருக்கிறது.
    கூடவே கட்டுக்கடங்காத மகிழ்ச்சியும்.
    மக்கள் திரண்டால் முடியாதது ஒன்றுமே இல்லை என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நிருபித்து காட்டிய குமரி மாவட்ட உழைக்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். களத்தில் நின்று மக்களை ஒருங்கிணைத்து விடாப்பிடியான வெற்றியும் கண்ட தோழர்களுக்கு நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க